Tuesday, January 17, 2012

இலங்கையில் தேயிலை பரியிடப்பட்டு 145 வருடங்கள்…!







இலங்கையில் வர்த்தக நோக்கத்திற்காக தேயிலை பயிரிடப்பட்டு 2012 ஆம் ஆண்டோடு 145 வருடங்களாகின்றன. முதன் முதலாக 1867 ஆம் ஆண்டு ஜேம்ஸ் டெய்லரால் கண்டி மாவட்டத்தின் லூல்கந்துர எனும் தோட்டத்தில் 19 ஏக்கர் விஸ்தீரணத்தில் தேயிலை வர்த்தக நோக்கத்திற்காக முதன் முதலில் பயிரிடப்பட்டது. ஆங்கிலேயர்களால் பயிரிடப்பட்டாலும் பராமரிப்பில் இத்தனை வருடங்கள் இத்தொழிலில் தம்மை அர்ப்பணித்த தொழிலாளர் வர்க்கத்தினர் பெருமிதத்தோடு பார்க்கப்பட வேண்டியவர்கள். இன்று நாட்டின் தேசிய உற்பத்தியிலும் கணிசமான பங்களிப்பை வழங்கிக்கொண்டிருக்கும் இந்த தேயிலை தொழிற்றுறை குறித்து அண்மைக்காலமாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகள் கவலை தருபவனவாக உள்ளன. பெருந்தோட்டங்கள் சிறு ஏக்கர்களாக பிரிக்கப்பட்டு சிறு தேயிலை தோட்டங்களாக மாறி வருகின்றமை, மற்றும் நிர்வாகங்களால் உரிய பராமரிப்பின்மை , இதன் காரணமாக தொழிலாளர்கள் வேறு தொழிலை நாடுதல் , நிர்வாக அழுத்தங்கள் என பல்வேறு வகையான சவால்களை இன்று இத்துறை எதிர்நோக்கியுள்ளது. எனினும் 145 வருடங்கள் என்று பார்க்கும் போது தேநீர் அருந்துதல் என்ற விடயம் எமது நாட்டை பொறுத்தவரை மரபு வழி அம்சமாகவே உள்ளதை அவதானிக்கலாம். தேயிலை பரியிடாத ஏனைய நாடுகள் தேநீரை இன்று பல்வேறு வகைகளில் ,வடிவங்களில் தயாரித்து நுகர்வோரை கவர்வதில் அக்கறை காட்டுகின்றன. நம் நாட்டை பொறுத்தவரை இது சாத்தியமான விடயமா என்பதை யோசிக்க வேண்டும். உதாரணமாக மேலை நாடுகளில் இன்று எனப்படும் சிறிய தேயிலை பக்கற்றுகளை பயன்படுத்துகின்றனர். அமெரிக்காவில் ice Tea எனப்படும் குளிர் தேநீர் பானம் பிரபலமானது. தற்போது அமெரிக்காவில் மென்பானங்களுக்கு ஈடாக இந்த குளிர் தேநீர் விற்பனையாகின்றமை குறிப்பிடத்தக்கது. இலங்கையிலும் இந்து முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டால் என்ன என்பது இத்துறையோடு தொடர்புடைய சந்தைப்படுத்தல் நிபுணர்களின் கேள்வியாகவுள்ளது.
RTD –Ready to Drink




நாடுகள் பொருளாதார ஸ்திரத்தன்மையை பேணுவதில் அதிக அக்கறை கொண்டியங்குகின்றன. அங்குள்ள தொழில்களும் அப்படியானவை. இதன் காரணமாகவே அங்குள்ள வாழ்வியல் கோலங்களை இயந்திரமயமான வாழ்க்கை என வர்ணிக்கின்றனர். இதன் காரணமாக சடுதியாக தமது காரியங்களை ஆற்றக்கூடிய நிலையில் அம்மக்கள் உள்ளனர். இதன் காரணமாக அருந்துவதற்கு தயாராக உள்ள பானங்களை ( ஆங்கிலத்தில் RTD –Ready to Drink ) இவர்கள் விரும்புகின்றனர். அந்த வகையில் அமெரிக்காவில் இவ்வகை தேநீர் பானங்கள் பிரபலம்.மக்கள் இதை விரும்பி வாங்கி பருகுகின்றனர். அமெரிக்காவில் மட்டுமன்று ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் இன்று இந்த ரக தேநீர் பானங்கள் வரவேற்பை பெற்றுள்ளன. எனினும் போத்தல்களில் அடைக்கப்பட்ட தேநீரை விட அண்மைக்காலமாக ஐஸ் டீ எனப்படும் குளிர் தேநீர் பிரபலமாகி வருகின்றது. இதன் காரணமாக ஏனைய மென்பானங்களின் விற்பனையுடன் போட்டி போடும் நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே உற்பத்தி பொருளை ஒரே வடிவத்தில் எத்தனை நாளுக்கு தான் மக்களுக்கு கொடுத்துக்கொண்டிருப்பது ? ஒரு மாற்றம் வேண்டாமா என்று தான் இந்த முயற்சி . சரி ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவில் தேநீர் இவ்வாறு மறு வடிவம் பெற்று அங்குள்ளோரை கவர்ந்துள்ளது. பிரதானமாக இந்த தேயிலையை உற்பத்தி செய்து உலகம் எங்கும் விநியோகிக்கும் இலங்கை,கென்யா,இந்தியா ,சீனா போன்ற நாடுகளில் ஏன் இந்த முறை பிரபலமாகவில்லை ?எல்லது ஏன் அறிமுகப்படுத்தப்படவில்லை? நான் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டது போல இந்நாட்டு மக்கள் பாரம்பரிய நெறிகளுக்கு பழக்கப்பட்டு விட்டனர். போத்தலில் இருக்கும் தேயிலை தூளை தேயிலை வடியில் இரண்டு கரண்டி போட்டு அதில் சுடு நீரை இட்டு பெறப்படும் சாயத்தண்ணியில் சீனி விட்டு பருகுவது இல்லாவிடின் அதில் பால் கலந்து பருகுவது என இவர்கள் வாழ்க்கை இப்படி போகிறது. சீனாவிலும் கூட மிகப்பிரபலமான கிரீன் டீ தகர டின்களில் அடைக்கப்பட்டே விற்பனை செய்யப்படுகிறது. சீன கிரீன் டீக்கு உலகம் முழுவதும் வரவேற்பிருப்பது நாம் அறிந்ததே. சரி இந்த நாடுகளில் ஐஸ் டீயை அறிமுகப்படுத்தினால் வரவேற்பு இருக்குமா?முதலில் சூடாக நாம் பருகும் தேநீருக்கும் குளிர்பானமாக பருகும் ஐஸ் டீக்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ளல் அவசியம். வழமையாக நாம் பருகும் தேநீரில் சீனியை த்தவிர வேறு எந்த இரசாயன கலவைகளோ செயற்கை தாது பொருட்களோ இல்லை என்பது நிச்சியம். ( தேநீரில் இயற்கையாக உள்ள அதே நேரம் அதிக பக்கவிளைவை ஏற்படுத்தாத ரனின் என்ற நச்சு பதார்த்தம் இதில் அடக்கம்) ஆனாலும் ஐஸ் டீ எனப்படும் போது வர்ணப்பொருட்கள் மற்றும் கார்பனேட் பொருட்கள் கலக்கப்படுவதை தவிர்க்க முடியாது. இயற்கையாக தேநீரில் உள்ள சுவையை கூட்ட அல்லது வித்தியாசப்படுத்த இவை சேர்க்கப்படுகின்றன. இதன் காரணமாக தேநீரானது அதன் இயற்கையான சுவையிலிருந்து விலகிச்செல்கின்றது என்பது கண்கூடு. உலகப்பிரச்சித்த பெற்ற சீனாவின் கிரீன் டீயானது வெறும் சுடு நீரில் வேக வைக்கப்பட்டு சீனியோ அல்லது வேறு எந்த சுவையூட்டியோ சேர்க்காமல் பருகப்படுவதற்கு காரணமே அதன் இயற்கையான சுவையை அனுபவிப்பதற்கு தான். இருப்பினும் மேற்குல நாட்டு மக்களின் உணவு முறை பழக்கவழக்கங்கள் வித்தியாசமானவை என்பது நாம் அறிந்ததே. அமெரிக்காவில் மட்டும் உடனடியாக அருந்துவதற்கு தயாராக இருக்கும் தேநீரின் 2009 ஆம் ஆண்டு சந்தைபுரழ்வு பெறுமதி 9 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது. இந்த வருடம் இது 11 பில்லியனை தொடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. பாருங்கள் வாசகர்களே நமது தொழிலாளர்கள் வியர்வை சிந்தி கடினப்பட்டு 145 வருடங்கள் உழைத்தும் அவர்களுக்கு கிடைப்பதோ வெறும் டஸ்ட் தேயிலை தானே ; ஆனால் அவர்களால் உற்பத்தி செய்யப்படும் தேயிலை உயர் இரகமாக இன்று ஐரோப்பிய நாடுகளின் அரச குடும்பங்களும் ஏனைய உயர் அந்தஸ்த்து உள்ளவர்களும் பருகும் பானமாக விளங்குகிறது. அமெரிக்காவில் மாற்று வடிவம் பெற்று வரவேற்பை பெற்றிருக்கிறது. ஆக மாற்றம் ஒன்று தான் உலகில் மாற்ற முடியாது ஒன்று என்பதற்கு ஏற்ப எல்லாமே மாற்றங்களுக்குட்பட்டு வருகின்றன. எனினும் இலங்கையோ தேயிலை பயிரிடப்பட்டு 145 வருடங்களாகியும் அத்துறையின் பழைய பல்லவிகளையே பாடி வருகின்றது. கொழுந்து பறிப்பவர்களும் இன்று நூறு வருடங்களுக்கு முன்பு உள்ள அதே வடிவிலான ஆடைகளே அணிகின்றனர். நவீன காலத்திற்கு ஏற்ற மாற்றங்கள் இல்லை. ஏதோ இப்போது சிலர் செருப்புகள் அணிந்து செல்கின்றனர். எனினும் இலங்கையில் மிகப்பழைய இன்னமும் உயிர்ப்புடன் இருக்கின்ற பாரிய தொழிலாளர் விசையுடன் செயற்பட்டுக்கொண்டிருக்கின்ற தேயிலை தொழிற்றுறை மாற்றங்களுக்குட்பட வேண்டும் என்பதே பலரினதும் அவா. ஆனால் இதில் எந்த விதத்திலும் தொழிலாளர்களோ தேநீரின் பாரம்பரிய அம்சங்களோ மாறி விடக்கூடாது என்பது முக்கியமானது. ஆகவே புதிய,நவீன யுக்திகளை புகுத்தும் யோசனைகளே இப்போதைய தேவையே ஒழிய இந்த தொழிற்றுறையையும் அதனோடு தொடர்புடைய மக்களின் வாழ்வியல் விடயங்களையும் தொடர்ச்சியாக விமர்சித்து வருவதை உரியோர் நிறுத்திக்கொள்ளல் அவசியம்.
சிவலிங்கம் சிவகுமாரன்

1 comment:

unmaikal said...

சுட்டியை சொடுக்கி படியுங்கள்

---->
புலிகளின் தமிழ்முஸ்லிம் இனஒழிப்பின் ஈரநினைவுகள். பகுதி 3.

ஈழத்தில் புலிகளால் வதைக்கப்பட்ட இன அழிப்பு செய்யப்பட்ட‌ இஸ்லாமியர்கள் குறித்தப் பேச மறுப்பவனும் பேசுவதைத் தடைசெய்பவனும் தான் விரும்பிய குரலில் இஸ்லாமியர்களைப் பேச நிர்ப்பந்திப்பவனும் இஸ்லாமியர்களின் தோழனா அல்லது மூத்த‌ நரேந்திர மோடியா எனத் தோழர்கள் சிந்திக்க வேண்டும்.

இலங்கையில் முஸ்லிம்களுக்கு நடந்திருப்பது என்ன? நடப்பது என்ன? என்பது பற்றி தெளிவாக இந்திய மக்களுக்கு கூற வேண்டியுள்ளது. உண்மை அறியாத மக்கள் கொடூரப் புலிகளுக்கு ஆதரவுக் கொடி தூக்குகின்றனர்
<----