Sunday, April 10, 2022

ஜனாதிபதியையும் பிரதமரையும் பாதுகாக்கும் அமைச்சர்கள்

அமைச்சர்கள் அனைவரும் தமது பதவியை இராஜிநாமா செய்து விட்டதாக 4 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வாய் மூலமாகவே அறிவித்திருந்தனர். பின்பு திங்கட்கிழமை 5 ஆம் திகதி அதில் நால்வருக்கு புதிய அமைச்சுப்பொறுப்புகளை வழங்கினார் ஜனாதிபதி கோட்டாபய. நீதி அமைச்சராக விளங்கிய அலி சப்ரிக்கு நிதி அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்ட போது மறுநாளே அவர் அதை இராஜிநாமா செய்தார். நிதி அமைச்சோடு தொடர்புடைய மத்திய வங்கியின் ஆளுநர் கப்ரால், திறைசேரி மற்றும் நிதி அமைச்சின் செயலாளராக விளங்கிய எஸ்.ஆர். ஆட்டிகல ஆகியோரும் இராஜிநாமா செய்திருந்தனர்.

நிதி அமைச்சோடு தொடர்புடைய இத்தனை பதவி நிலைகளும் இல்லாத ஒரு நிலைமை இலங்கை வரலாற்றில் இதற்கு முன்னர் எப்போதும் ஏற்பட்டதில்லை. முழு நாடுமே நிதிப் பிரச்சினையால் துன்புற்று வரும் போது நிதியே இல்லாத ஒரு துறைக்கு யார் தான் பொறுப்பான பதவியை வகிக்க முடியும் என்று இவர்கள் நினைத்தனரோ தெரியவில்லை.
ஆனால் இதில் சுவாரஸ்யமான விடயம் என்னவென்றால் நெடுஞ்சாலைகள் அமைச்சராக பதவியேற்ற குருணாகல் மாவட்ட எம்.பி ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ நாட்டின் தற்போதைய சூழல் குறித்து ஊடகங்களுக்கு பதிலளித்த விதம்.
இந்த அரசாங்கம் நீடிக்குமா, ஜனாதிபதி பதவி விலகுவாரா என ஊடகவியலாளர்கள் கேட்டதற்கு ‘ நாம் ஏன் பதவி விலக வேண்டும் எமக்கு இன்னும் மக்கள் ஆணை உள்ளது, ஜனாதிபதி ஏன் விலக வேண்டும்? அவருக்கு 69 இலட்சம் மக்கள் வாக்களித்துள்ளனர் என சிரிப்புக் காட்டினார்.
"நீங்கள் கூறும் மக்கள் ஆணையும் ஆதரவும் இப்போதும் உங்கள் அரசாங்கத்துக்கும் ஜனாதிபதிக்கும் உள்ளதா" ? என ஊடகவியலாளர்கள் கேட்ட போது ‘ ஏன் இல்லை ? தேர்தல் ஒன்று நடத்தப்பட்டால் அது நிச்சயமாக அனைவருக்கும் விளங்கும். மக்கள் நெருக்கடிகளில் இருக்கின்றனர் என்பதை ஏற்றுக்கொள்கிறோம் அதே வேளை இந்த நாட்டில் சிறு அளவான மக்களே ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்கின்றனர். அவர்கள் அனைவரும் எதிர்கட்சிகளின் ஆதரவாளர்கள்’ என அலட்சியமாக பதிலளித்திருந்தார்.
ஜோன்ஸ்டன் போன்றோர் ஏன் ஜனாதிபதி மற்றும் பிரதமரை பாதுகாக்கின்றனர் என்பதை நாட்டு மக்கள் நன்கறிவர்.
பொது ஜன பெரமுன அரசாங்கத்தில் அங்கம் வகித்து அமைச்சர்களாக விளங்கும் பலரும் கடந்த காலங்களில் ஊழல் மற்றும் ஏனைய குற்றச்சம்பவங்களில் தொடர்புடையோர் ஆவர். ஆனால் அவர்களுக்கெதிரான பல வழக்குகளை சட்டமா அதிபர் திணைக்களம் மீளப்பெற்று வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பல சட்டத்தரணிகள் கடந்த 5 ஆம் திகதி சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். இதை அரசாங்கமே எதிர்ப்பார்த்திருக்காது. நாட்டின் நீதித்துறையே இவ்வாறு இருக்கும் போது நிர்வாகம் வேறு எப்படி இருக்கும்? நீதி அமைச்சர் தனது மனசாட்சிக்கு பதிலளிக்கும் முகமாகவே தனது புதிய பதவியை இராஜினாமா செய்ததோடு தேசிய பட்டியல் உறுப்புரிமையிலிருந்தும் விலகிக்கொள்வதாக ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ஆகவே நாட்டு மக்கள் எப்படி போனால் என்ன, தம்மை சட்டத்தின் பிடியிலிருந்து பாதுகாப்பதற்கு தற்போதைய ஜனாதிபதியும் பிரதமரும் மிகவும் முக்கியம். இதையே ஊழல் மற்றும் ஏனைய குற்றச்சாட்டுகளில் தொடர்புடைய அமைச்சர்கள் விரும்புகின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று முக்கியமான தீர்மானங்களில் ஒன்றாக பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகுவதாக இருந்தது.
அவர் பதவி விலகினால் அமைச்சரவையும் கலைக்கப்படும். அது மீண்டும் நிர்வாக மட்டத்தில் ஒரு நெருக்கடியை உருவாக்கும் என்ற காரணத்தினால் அமைச்சர்கள் அனைவரும் பிரதமர் பதவி விலகக் கூடாது என்றும் தாம் பதவி விலகுவதாக அறிவித்தனர். ஆனால் நாட்டு மக்கள் அனைவராலும் சிறந்த அனுபவமிக்க அரசியல்வாதியாகவும் இரண்டு தடவைகள் ஜனாதிபதியாகவும் பதவி வகித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ச முதன் முறையாக ஒரு தீர்மானம் எடுப்பதில் தவறிழைத்தார். அவர் பதவி விலகியிருந்தால் இந்த அரசாங்கத்தின் மீதான மக்களின் ஆத்திரம் சற்று குறைந்திருக்கும். ஒரு கனவான் அரசியல்வாதியாக எல்லோரும் அவரை புகழ்ந்திருப்பர். ஆனால் அவர் அப்படி செய்யத்தவறியதால் சராசரி அரசியல்வாதியாக தன்னை வெளிப்படுத்தியது மட்டுமின்றி ஊழல் அமைச்சர்களை பாதுகாக்க முடிவெடுத்தார். அதன் எதிர்வினையானது அவரே எதிர்பாராதது. முதல் தடவையாக அவரது தங்காலை கால்டன் இல்லத்தை நோக்கி படையெடுத்தனர் அவரது தொகுதி மக்கள்.
2009 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரு யுத்த வெற்றி கதாநாயகனை பார்க்கச்செல்லும் பெருமிதத்தோடு அவரது தங்காலை இல்லத்தை நோக்கிச்சென்று கொண்டிருந்த மக்கள் முதன் முறையாக அவருக்கு எதிராக கோஷமிட்டனர்.
பிரதமரின் இந்த தவறான முடிவுக்குப்பின்னரே ஜனாதிபதியை மட்டும் வீட்டுக்குப்போகச்சொன்ன நாட்டு மக்கள் அந்த பட்டியலில் மஹிந்த மற்றும் பஸில் ஆகியோரையும் இணைத்து புதிய கோஷத்தை ஆரம்பித்தனர். பிரதமர் மஹிந்தவாலும் ஜனாதிபதி கோட்டாபயவாலும் தமது நிலைப்பாட்டை நாட்டு மக்களுக்கு நேரடியாக கூற முடியவில்லை. அவர்களின் குரலாக வெளிப்பட்டவரே அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ. ஏனென்றால் அவர் ஆளுங் கட்சியின் பிரதம கொறடவாக விளங்குகிறார். இவ்வருடம் ஜனவரி மாதமே அவர் மீதான மூன்று இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுதலை செய்யப்பட்டிருந்தார். ஆகவே அவர் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் விசுவாசமாக இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றார். ஆகவே தற்போது அரசாங்கத்தின் ஊதுகுழலாகி விட்ட இவரே புதன்கிழமையன்று பாராளுமன்றில் எத்தகைய சூழலிலும் ஜனாதிபதி பதவி விலக மாட்டார் என்றும் எந்த எதிர்ப்பையும் நாம் சமாளிப்போம் என்று இவர் சூளுரைத்திருந்தார். இவரைப்போன்றே பல அமைச்சர்கள் வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களும் இனி ஒரு சில நாட்களில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் ஆதரவாக கருத்துக்களை கூற ஆரம்பிப்பர் எனலாம்.
பொருளாதார நெருக்கடிகள் மற்றும் அரசாங்கத்தின் மோசமான நிர்வாகம் போன்றவற்றை அடிப்படையாக வைத்து ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் தற்போது ராஜபக்ச சகோதரர்களின் ஒட்டு மொத்த ஊழல்களை பிரதானப்படுத்தி மாற்றம் பெற்றிருக்கின்றது. தலைநகர் மற்றும் அதற்கு வெளியே ‘ராஜபக்சாக்கள் திருடிய பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும்’ என்ற புதிய தொனியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதை பெரும்பான்மையினத்தவர்களே கூடுதலாக முன்னெடுக்கின்றனர். மஹிந்த ஜனாதிபதியான காலத்திலும் அவரது சகோதரர் கோட்டாபாய பாதுகாப்பு செயலாளராக இருந்த காலத்திலும் இருவர் மீதும் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தற்போது புது வடிவம் பெற்றிருப்பதை காண முடிகின்றது பாராளுமன்றில் நாமே பெரும்பான்மையாக இருக்கின்றோம். எதிரணிகள் முடிந்தால் தமது பெரும்பான்மையை நிரூபிக்கட்டும் பாராளுமன்றை கலைப்பதை பற்றி பேசலாம் என அமைச்சர் தினேஷ் குணவர்தன புதன்கிழமையன்று தைரியமாக பேசியிருந்தார்.
ஆக எதிரணிகள் அனைத்தும் இன்று தனித்தனியே நின்று கத்திக்கொண்டிருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது. இவர்கள் எந்த நிலையிலும் ஒன்று பட மாட்டார்கள் என்பதை ராஜபக்சக்கள் நன்கறிந்து வைத்துள்ளனர். ஜனாதிபதி பதவி விலகினால் அடுத்ததாக யாரால் நாட்டை ஆட்சி நடத்த முடியும் என்ற ஆளும் தரப்பினரின் கேள்விக்கு எதிரணி பக்கமிருந்தும் எந்த பதில்களும் இல்லை.
அனுப அரசியல்வாதியான முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கஇ 3 ஆம் திகதி டைம்ஸ் ஒப் இந்தியாவுக்கு வழங்கிய நேர்காணலில் இப்படி குறிப்பிட்டிருந்தார்,
‘ இன்றைய நெருக்கடிக்கு -யார் காரணம் என விவாதிப்பதில் அர்த்தமில்லை , ஒவ்வொருவரும் ஏனையவர்களை நோக்கி விரல்களை நீட்டுவார்கள். துரதிர்ஸ்டவசமாக பிரச்சினைகளை தீர்க்கும் பழக்கம் இலங்கையர்களிடம் இல்லை, ஆனால் அதற்கான காரணத்தை கண்டறிய முயல்வார்கள்’.
ரணில் கூறுவதில் தவறுகள் இருப்பதாகத் தெரியவில்லை.

No comments: