யுத்த காலத்தில் ஆயிரக்கணக்கில் மக்கள் அகதிகளாக தமிழகத்துக்கு இடம்பெயர்ந்து சென்றதை ஒரு போர்க்கால சம்பவமாகவே அனைவரும் பார்க்க வேண்டியிருந்தது. ஆனால் இப்போது பஞ்சம் காரணமாக முதன் முறையாக குடும்பங்கள் அகதிகளாக தமிழகத்துக்கு படகுகள் மூலமாக செல்லத்தொடங்கியுள்ளனர். இச்சம்பவம் இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிகளை இந்தியா உட்பட பல நாடுகளுக்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளதுடன் இலங்கைக்கு பல வழிகளில் சங்கடங்களையும் ஏற்படுத்தியுள்ளது எனலாம்
.தமிழக ஊடகங்களும் ராஜபக்சக்களின் ஆட்சி இவ்வளவு கொடுமையானதா என வெறும் வாய்க்கு அவல் கிடைத்தது போன்று தமிழகம் சென்ற அகதிகளிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டு செய்திகளை ஒலிஃஒளிபரப்பி வருகின்றன.
யுத்த காலகட்டங்களில் ராஜபக்சகளின் ஆட்சி பகுதிகளிலேயே அதிகமான தமிழ் மக்கள் அகதிகளாகி தமிழகத்துக்கு படகுகள் மூலம் சென்றடைந்தனர். யுத்தம் முடிந்த பிறகும் கூட அவர்களின் ஆட்சியில் இவ்வாறு அகதிகள் தமிழகத்துக்கு செல்வதற்கு ஆரம்பித்துள்ளமை மனித உரிமை விவகாரங்களில் இலங்கைக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் சம்பவங்களாக இருக்கப்போகின்றன.
மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளிலிருந்து கடந்த வாரம் படகுகள் மூலம் தனுஷ்கோடி கடற்பகுதிக்கு 10 பேர் வரை அகதிகளாக சென்றடைந்துள்ளனர். இதில் மூன்று சிறுவர்கள் உட்பட நான்கு மாத கைக்குழந்தையும் அடங்குகின்றது. இவர்களைத் தவிர்த்து ஏனைய அனைவருக்கும் எதிராக உரிய ஆவணங்களின்றி சட்டவிரோதமாக இந்திய கடற்பரப்புக்கள் நுழைந்தமையை காரணங்காட்டி ராமேஸ்வரம் நீதிமன்றில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. தமது பிள்ளைகளின் உயிர்களை சரி காப்பாற்ற வேண்டும் என்ற காரணத்தினாலேயே தாம் உயிரை பணயம் வைத்து படகுகள் மூலம் வந்ததாக அந்த 10 பேரும் தெரிவிக்கின்றனர்.
மேலும் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் ஆயிரக்கணக்கில் மக்கள் அகதிகளாக வருவதற்கு தயாராக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதால் தமிழகத்தின் தனுஷ்கோடி பகுதி மற்றும் கேரளாவின் விழிஞ்சம் பகுதி கடலோர பாதுகாப்புப்பிரிவினர் தமது கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
அகதிகளை சிறையில் அடைக்க உத்தரவு
இதே வேளை அகதிகள் தொடர்பான தனது கொள்கைகளிலிருந்து இந்தியா இது வரை தளர்வு போக்குகளை மேற்கொள்ளவில்லையென்பது முக்கிய விடயம். யுத்த கால அகதிகளாக தமிழகம் மற்றும் ஏனைய மாநிலங்களில் உள்ள சுமார் நூறு அகதிகள் மறுவாழ்வு முகாம்களில் சுமார் ஒரு இலட்சம் இலங்கை தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். சுமார் 30 வருடங்களுக்கு மேல் ஒரு தலைமுறையை கடந்து வாழ்ந்து வரும் இவர்களுக்கு இந்திய குடியுரிமையை வழங்கக் கோரி பல்வேறு காலகட்டங்களில் சட்ட நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டாலும் அவை சாத்தியப்படவில்லை.
இந்நிலையில் தற்போது புதிய சூழ்நிலையில் நாட்டின் பொருளாதார நெருக்கடியை காரணங்காட்டி தமிழகத்துக்கு அகதிகளாக செல்வோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இவ்வாறு வருபவர்களை சிறையில் அடைக்க உத்தரவொன்றை ராமேஸ்வரம் நீதிமன்றம் விடுத்திருப்பதாகத் தெரியவருகின்றது. தமிழகமெங்கும் உள்ள முகாம்களின் உள்ள அகதிகளின் மறுவாழ்வு பரிசீலிக்கப்படும் என்றும் இனி முகாம்கள் இ இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்கள் என்ற பெயருடன் அழைக்கப்படும் என தமிழக முதல்வர் மு.கா.ஸ்டாலின் கடந்த வருடம் நவம்பர் மாதம் பல தீர்மானங்களை கொண்டு வந்ததுடன் இவர்களுக்கான நலத்திட்டங்களுக்கு பல கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியிருந்தார். இந்நிலையில் தற்போது அகதிகளாக செல்ல ஆரம்பித்திருப்போரை தமிழக அரசு எவ்வாறு அணுகப்போகின்றது என்பது தெரியவில்லை. ஒரு வகையில் இது மு.க.ஸ்டாலினுக்கும் புதிய நெருக்கடியை கொடுத்துள்ளது. அதே வேளை தமிழகம் மற்றும் அதற்கு வெளியே அகதிகளாக வாழ்ந்து வரும் இலங்கை தமிழர்களைப் பற்றி மீண்டும் பேசுவதற்கு ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றும் கூறலாம்.
தற்போதுள்ள புதிய சட்ட ஏற்பாடுகளின் பிரகாரமே சட்டவிரோதமாக ஆவணங்களின்றி இந்திய கடற்பரப்பில் நுழைவோரை சிறையிலடைக்கப்பதற்கான உத்தரவை ராமேஸ்வரம் நீதிமன்றம் வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஏனெனில் இந்த புதிய முறையானது 2021 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதிகளில் அமுலாகியுள்ளது. அதாவது கடவுச்சீட்டின்றி வேறொரு நாட்டின் எல்லைக்குள் பிரவேசித்தல் மற்றும் சட்டவிரோதமாக உள்நுழைதல் ஆகிய இரண்டு பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டு இவர்கள் சிறையில் அடைக்கப்படுகின்றனர். கடந்த வருடம் இவ்வாறு வருகை தந்தவர்கள் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் சிறுவர்கள் இருந்தால் அவர்கள் மறுவாழ்வு முகாம்களுக்கு உரிய பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
இந்தியாவின் உதவிக்கரம்
இலங்கையின் நெருக்கடிக்கு உதவும் வகையில் அண்மையில் இந்தியாவானது நிதியுதவி அளித்திருந்தமை முக்கிய விடயம். அது மனிதாபிமான முறையில் அந்த உதவிகள் வழங்கப்பட்டன. அதே வேளை தமிழகத்தில் தங்கி வாழ்ந்து வரும் இலங்கை அகதிகளுக்கு இத்தனை காலமும் அடைக்கலம் தந்து அவர்களின் வாழ்வாதாரத்துக்கு உதவி வருவதையும் இங்கு சுட்டிக்காட்டுதல் வேண்டும். எனினும் யுத்த காலம் வேறு தற்போதைய சூழல் வேறு என்பதை இலங்கை அரசாங்கம் உணர்ந்து கொள்ள வேண்டும். ஒரு வகையில் இவ்வாறு இலங்கையிலிருந்து அகதிகள் செல்ல ஆரம்பித்திருப்பது இலங்கையின் ஆட்சியில் விழுந்துள்ள கீறல் எனலாம். அருகாமையில் இந்தியா என்ற நாடும் தொப்புழ்க்கொடி மாநிலமாக உள்ள தமிழகமும் இருப்பதால் இலங்கையில் வாழ்ந்து வரக்கூடிய தமிழர்கள்இ தமக்கு நெருக்கடிகள் வரும் காலகட்டங்களில் வேறு தெரிவின்றி அங்கு செல்வதை வழமையாகக்கொண்டிருக்கின்றனர். ஆனால் இந்நாட்டில் வாழ்ந்து வரும் பெரும்பான்மையின மக்களுக்கு வேறு தெரிவுகள் இல்லையென்பதால் தமது எதிர்ப்பை வீதிகளிலிறங்கி அரசாங்கத்துக்கு எதிராக வெளிப்படுத்தி வருகின்றனர். கடந்த வாரம் இடம்பெற்ற ஜனாதிபதி தலைமையிலான சர்வகட்சி மாநாட்டிலும்இ பஞ்சம் காரணமாக தமிழகம் சென்ற அகதிகள் விவகாரம் பேசப்பட்டது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இதை சுட்டிக்காட்டி பேசிய போது இந்த நிலைமைகள் நாட்டுக்கு ஆரோக்கியமானதல்ல என்று பேசியுள்ளார்.
உள்ளூர்
இடப்பெயர்வுகள்
பொருளாதார நெருக்கடி காரணமாக இந்தியாவுக்கு படகுகள் மூலம் அகதிகளாக சென்றமை மட்டுமே இங்கு ஊடகங்களில் பெரிதாக காட்டப்படுகின்றது. ஆனால் இந்த நெருக்கடிகளால் தலைநகரிலிருந்து பெரும்பாலான இளைஞர் யுவதிகள் தமது சொந்த இடங்களுக்கு வந்து கொண்டிருப்பதை எவரும் கண்டு கொள்வதாக இல்லை. தலைநகரில் கட்டுமானப்பணிகளில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள்இ பணிகள் இடைநிறுத்தப்பட்டதால் தமது சொந்த இடங்களுக்கு திரும்பியுள்ளனர். இவர்களின் பலர் மலையகப் பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர். ஆடைத்தொழிற்சாலைகளில் கணிசமானோர் பணிகளிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். பெருந்தோட்டங்களிலுள்ள தமது சொந்த இடங்களுக்கு திரும்பியவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
இவர்கள் சொந்த நாட்டின் அகதிகளாக மாறியுள்ளனர். நாட்டின் சூழ்நிலையானது பல குடும்பங்களுக்குள்ளே முரண்களையும் ஏற்படுத்தியுள்ளது. சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணத்தினால் ஆயிரக்கணக்கான சிறிய அளவிலான ஹோட்டல்கள் இலங்கை முழுதும் மூடப்பட்டுள்ளன. இதில் பணியாற்றியவர்கள் அனைவரும் எங்கே என்று அரசாங்கம் தேடிப்பார்க்கவில்லை. கூறப்போனால் கடந்த 6 மாதங்களில் இவ்வாறு தொழில் இழந்தோரின் தொகை ஒரு இலட்சத்துக்கும் அதிகமாகும். அந்த ஒரு இலட்சம் பேரில் தங்கியிருந்த குடும்ப உறுப்பினர்களின் நிலைமைகள் என்ன என்பதையும் இந்த அரசாங்கம் தேடிப்பார்க்கவில்லை. மக்களுக்கு நிவாரணங்கள் வழங்குவதற்கு ஏற்ப வரவு செலவு திட்டத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என சர்வகட்சி மாநாட்டில் நிதி அமைச்சர் கூறியுள்ளார். முதலில் அவர் சொந்த நாட்டின் அகதிகளுக்குத்தான் இந்த நிவாரணத்தை வழங்க வேண்டியுள்ளது.
No comments:
Post a Comment