Friday, March 27, 2009

ஸ்லம்டோக் மில்லியனரும் நான் கடவுளும்*ஸ்லம்டோக் மில்லியனர் பிரதிபலிக்கும் கதை கரு இன்றைய சூழ்நிலையில் இந்தியாவில் (மும்பை) நிஜம் என்ற காரணத்தினால் தான் கூடுதலாக விமர்சிக்கப்படுகிறது. இதே விமர்சனம் இயக்குனர் பாலாவின் நான் கடவுள் திரைப்படத்திற்கும் எழுந்துள்ளது என்பதும் முக்கிய விடயம்.*படத்தின் கதைக்கரு பிரதிபலிக்கும் சில விடயங்களால் நல்ல சினிமா என்ற விடயத்திலிருந்து விமர்சனங்களுக்குள்ளாயிருக்கின்றன இந்த இரு திரைப்படங்களும்.

உலக சினிமாவில் ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி மாதம் எதிர்ப்பார்க்கப்படும் ஒஸ்கார் திரைப்பட விருது வழங்கல் நிகழ்வு இம்முறை ஆசிய கண்டத்தில் அதிகளவாக பேசப்பட்டதற்கு காரணம் இந்தியாவில் படமாக்கப்பட்ட ஸ்லம்டோக் மில்லியனர் திரைப்படத்திற்கு கிடைத்த எட்டு ஒஸ்கார் விருதுகள் மற்றும் தமிழரான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு அதில் கிடைத்த இரு விருதுகள். இது ஒருபக்கம் இருக்க மேற்படி ஸ்லம்டோக் மில்லியனர் திரைப்படத்திற்கு ஒஸ்கார் விருது கிடைத்திருப்பது பற்றி இந்தியாவிலேயே பல விமர்சனங்கள் எழுந்தன. இது பிரிட்டிஷ் இயக்குனர் டொனி பொய்ல் இயக்கிய ஆங்கிலத்திரைப்படம் என்பதால் அதற்கு இசையமைத்த ரகுமானுக்கு கிடைத்த விருதே ஒழிய இது இந்தியத்திரைப்படம் ஒன்றுக்கு கிடைத்த விருதாக கொள்ளமுடியாது என்பது ஆரம்பத்தில் எழுந்த விமர்சனம்.
இதை விட தற்போது இத்திரைப்படம் குறித்து முன்வைக்கப்பட்டிருக்கும் விமர்சனங்கள் பேசப்படவேண்டியவை.மேலும் திரைப்படம் ஒன்றிக்கு அங்கீகரிக்கப்பட்ட விருதொன்று கிடைத்தாலே அதை பார்த்து விட்டு விமர்சிக்கும் கூட்டங்கள் இன்று அதிகமாகிவிட்ட நிலையில் கடந்த வருடம் வெளியான இத்திரைப்படம் குறித்து இவ்வருடமே அதிகமாக பேசப்படுகிறது. உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடாக விளங்கும் இந்தியாவின் மற்றுமொரு முகம் அங்கு நிலவும் வறுமை. வறுமையைச்சார்ந்து இடம்பெறும் அட்டூழியங்கள்,கட்டாய சிறுவர் விபசாரம், சிறுவர்களை முடமாக்கி பிச்சையெடுக்க வைத்தல், அவர்கள் மூலமாக போதை பொருள் விநியோகம் செய்தல் இப்படி கூறிக்கொண்டே போகலாம்.
இந்த சமூக அவலங்களைக்கொண்டு இந்தியாவில் பல மொழிகளில் திரைப்படங்கள் வெளிவந்துள்ளன.அவை பேசப்பட்டனவா என்பதை விட அதன் மூலம் பலன் கிடைத்ததா என்பது குறித்து எவரும் கதைப்பதற்கு முன்வருவதில்லை.ஸ்லம்டோக் மில்லியனர் திரைப்படம் உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு விருதை பெற்றவுடன் அதன் மூலம் பெருமை பட முடியாது என்று எழுந்துள்ள விமர்சனங்களுக்கு காரணம் இது தான். இத்திரைப்படத்தில் சமூக அவலங்கள் யதார்த்தபூர்வமாக காட்டப்பட்டிருப்பினும் கூட இக்கதை இந்தியாவின் குறிப்பாக மும்பை வாழக்கையின் இன்னுமொரு பகுதியை படம்பிடித்து காட்டுகின்றது என்பது இந்த நாட்டுப்பற்றுள்ள விமர்சகர்களின் வாதம்.
திரைப்பட விருது என்பது எடுக்கப்பட்ட விதத்திற்கும் அதில் கையாளப்பட்டிருக்கும் உத்திகளுக்கும் சொல்ல வந்த விடயத்திற்குமே ஒழிய ஒரு நாட்டில் ஓர் இடத்தில் இடம்பெற்ற பெறுகின்ற அவலங்களை வெளிக்கொணர்ந்ததற்கு அல்ல. சம்பவம் ஒன்றை தழுவி எடுக்கப்படும் திரைப்படங்களில் வரலாற்று சான்றுகளை அப்படியே கூற வேண்டிய அவசியம் இல்லை என்பதே யதார்த்தம்.உதாரணமாக டைட்டானிக் திரøப்படத்தை கூறலாம். 1912 ஆம் ஆண்டு டைட்டானிக் என்ற கப்பல் கடலில் முழ்கியது நிஜம்.ஆனால் 1997 ஆம் ஆண்டு ஜேம்ஸ் கமரூன் இயக்கத்தில் வெளிவந்த டைட்டானிக் திரைப்படத்தில் ஜெக் ,ரோஸ் என்ற இரு காதலர்களை சுற்றியே இத்திரைப்படம் பின்னப்பட்டிருந்ததை நாம் அறிவோம்.டைட்டானிக் முழ்கிய சந்தர்ப்பத்தில் இப்படியான கதாபாத்திரங்கள் வாழ்ந்தார்களா என்பதற்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை .இது நெறியாள்கையின் கைவண்ணம்.இத்திரைப்படம் 14 பிரிவுகளில் ஒஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு இறுதியில் 11 விருதுகளை வென்றமை குறிப்பிடத்தக்கது. இதை ஒரு உதாரணத்திற்காக கூறினேன்.
ஆனால் ஸ்லம்டோக் மில்லியனர் பிரதிபலிக்கும் கதை கரு இன்றைய சூழ்நிலையில் இந்தியாவில் நிஜம் என்ற காரணத்தினால் தான் கூடுதலாக விமர்சிக்கப்படுகிறது. இதே விமர்சனம் இயக்குனர் பாலாவின் நான் கடவுள் திரைப்படத்திற்கும் எழுந்துள்ளது என்பதும் முக்கிய விடயம்.
மும்பையின் சுமார் இரண்டு கோடி ஜனத்தொகையில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் ஒதுக்கப்பட்ட இடங்களில் வறுமையின் நிழலில் தான் வாழ்ந்துக்கொண்டிருக்கின்றனர் என்பதே நிஜம். இந்த மக்களின் வாழ்க்கை முறையை நேரில் பார்ப்பதை விட திரைப்படம் வாயிலாக நாம் பார்க்கும் போது எழும் உணர்ச்சி விஸ்வரூபத்தை மனதில் மட்டுமே தேக்கி வைத்துக்கொள்ள முடியும். அந்தளவிற்கு திரைப்படத்தில் அதை வெளிப்படுத்தும் பாங்கும் இருக்க வேண்டும் இது இயக்குனரின் கைகளில் தங்கியுள்ளது என்பது முக்கியம். ஸ்லம்டோக் மில்லியனரில் இயக்குனர் டோனி பெய்ல் கூறியிருப்பதுவும் இதைத்தான். மதக்கலவரம் ,வறுமை ஒரு சமூகத்தின் மீதான அடக்குமுறை என்பவற்றுக்கு முகங்கொடுக்கும் மூன்று சிறுவர்களைப்பற்றிய கதை தான் இது. மதக்கலவரத்தில் அனாதையாகும் சகோதரர்கள் ஜமால் ,சலீம் இவர்களின் பெண் தோழி லத்திகா ஆகியோர் மும்பை சமூகத்தின் என்னென்ன அக்கிரமங்களுக்கெல்லாம் முகங்கொடுத்து பிரிந்து இறுதியில் ஒன்று சேர்வது கதைக்கரு.இதனிடையே மூவரும் கட்டாய பிச்சைக்காரர்களாக்கப்படுவது இதில் லத்திகா சந்தர்ப்ப சூழ்நிலையால் விலைமாதாவது சலீம் கொலைகாரனாவது என பல விடயங்களை சரியாக நகர்த்துகிறார் இயக்குனர்.
இதன் காட்சியமைப்புகளும் கதைக்களமும் கற்பனையே அல்ல நிஜம் தான் என மும்பையில் வாழ்ந்து வரும் இரண்டு கோடி பேரும் கூறுவர். இருந்தாலும் சினிமா என்ற ஜனரஞ்சக ஊடகம் வாயிலாக ஒரு சமூகத்தின் உண்மை நிலை உலகெங்கும் பரவும் போது அதை எதிர்வினை கண்ணோட்டத்தில் பார்க்கும் கூட்டம் தான் இதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று கௌரவ விளக்கம் கூறும். இயக்குனர் டோனி மும்பை சமூகத்தினதோ அதன் இன்னொரு பக்கத்தையோ தோலுரித்து காட்டுவதற்கும் வெளிச்சத்துக்கு கொண்டு வருவதற்கும் இத்திரைப்படத்தை உருவாக்க வில்லை என்பதை சொல்லித்தான் நிரூபிக்கவேண்டியதில்லை. இதற்கு முன்பதாக இவர் Shallow Grave (1994) Train Spotting (1996 A Life Less Ordinary (1997) the Beech (2000)28 Days Later (2002) ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.இதே போல் தான் இயக்குனர் பாலாவின் நான் கடவுள் திரைப்படத்திற்கும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஸ்லம்டோக் மில்லியனர் போல் இத்திரைப்படத்திலும் பாலா விளிம்பு நிலை மனிதர்கள் பற்றிய உண்மை முகத்தை காட்டியிருக்கிறார்.பிச்சைகாரர்களை நாம் தினந்தோறும் காண்கின்ற÷õம்.அவர்களின் வாழக்கை முறை பற்றியும் அவர்கள் ஏன் எப்படி இந்த யாசக வாழ்க்கைக்கு வந்தார்கள் என்றும் நாம் என்றாவது யோசித்தது உண்டா? பிச்சைகாரர்களை உருவாக்கவென்றே ஒரு கூட்டம் இருப்பது எத்தனைப்பேருக்குத்தெரியும்? ஸ்லம்டோக் மில்லியனரில் ஒரு கட்டத்தில் மட்டும் வரும் இந்த விடயம் நான் கடவுளில் முழுக்க வியாபித்துள்ளது.இத்திரைப்படத்தில் வரும் மும்பை தாதாவும் நான் கடளில் வரும் தாண்டவன் பாத்திரமும் ஒரே காரியத்தை செய்பவர்கள். காசியில் உலாவும் அகோரி என்ற இனம் பற்றி நாம் கேள்விப்பட்டது கொஞ்சமே.தம்மை கடவுள் என்று கூறிக்கொள்ளும் இவர்கள் எரியும் பிணத்தை உண்பவர்கள் என்பதை மட்டுமே கேள்வியுற்றுள்ளோம். நான் கடவுளில் இதற்கான தெளிவான விளக்கங்களை பாலா வைத்துள்ளார்.ஆனால் அதே சமயம் இத்திரைப்படத்தில் பிச்சைகாரர்கள் அங்கவீனர்களை பாலா கேவலப்படுத்தியுள்ளார் என் தற்போது குரல்கள் எழுந்துள்ளன. இயக்குனர் டோனி பொய்ல் மும்பை வாழ்க்கையின் இருட்டுப்பகுதிகளை கூறியிருப்பது போல் பாலா பிச்சைகாரர்களின் உருவாக்கம் இதன் பின்னணி குறித்த முகமுடிகளை கிழித்தெறிந்துள்ளார். இந்த உண்மைகளை யதார்த்தபூர்வமாக அவர்களை வைத்தே நெறிப்படுத்தியிருப்பதால் தான் யதார்த்தம் இரசிகனின் நெஞ்சை பிழிகிறது. இது தான் படத்தின் வெற்றியும் கூட. இதே நேரம் சாதாரண நடிகர்களை வைத்து அவர்களை அங்கவீனர்களாகவும் பிச்சைகாரர்களாகவும் தனது படத்தில் பாலா சித்திரித்திருந்தால் அவர் வேறு விதமான விமர்சனங்களை எதிர்நோக்கியிருக்கக்கூடும். ஒரு நல்ல திரைப்படம் மூலம் சமூக அவலங்களை வெளிச்சம் போட்டுக்காட்டும் எந்தவொரு நல்ல கலைஞனும் வர்த்தகமயத்தை நோக்காக கொண்டிருக்க மாட்டான். அவனது எதிர்ப்பார்ப்பு விருதுகளும் அல்ல. டோனி பொய்ல் உண்மையில் இந்திய நாட்டை பற்றி என்ன விடயங்களை தெரிந்து வைத்திருந்தார் என்பது பலரின் கேள்வி, காரணம் இவர் இந்திய நாவலாசிரியர் விகாஸ் ஸ்வரூப்பின் நாவலை தழுவியே ஸ்லம்டோக் மில்லியனரை எடுத்துள்ளார். அதே போல் ஜெயமோகனின் ஏழாவது மனிதன் கதையின் தழுவலே நான் கடவுள். இத்திரைப்படத்தில் பாலா கற்பனையாக எதுவும் கூறவரவில்லை என்பது நல்ல சினிமாவுக்கான வெளிப்பாடாக இருக்கும் அதே வேளை உண்மைகளை ஏற்றுக்கொள்வதில் தானே சிக்கல்கள் எழுகின்றன. இத்திரைப்படத்தில் வரும் அவ்வளவும் பொய் என எவரும் கூறவில்லை. எமக்கு மட்டும் தெரியும் உண்மைகள் பலர் அறிய விஸ்வரூபமெடுக்கும் போது நாமே விமர்சன நிலைக்கு தள்ளப்படுவது நிதர்சனம்.
இந்தியாவைப்பற்றியும் இந்தியர்கள் பற்றியும் இந்தியாவில் உள்ளவர்களுக்கே ஒரு சில திரைப்படங்கள் மூலம் தான் தெரிய வருகின்றது. உண்மை தெரிந்த பிறகு அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் ஒரு சிலருக்கே உண்டு. இது இந்திய நாட்டுக்கும் மட்டும் பொருத்தமானதல்ல இருப்பினும் சினிமாவை இன்னுமொரு மதம் என்ற கண்ணோட்டத்தில் பார்க்கும் நாடு என்ற வகையில் இந்தியா என்று கூற விழைந்தேன்.

(சிவலிங்கம் சிவகுமாரன்)


நன்றி:வீரகேசரி வாரவெளியீடு (22-03-2009)

3 comments:

ஆ.ஞானசேகரன் said...

நல்ல விளக்கம் நண்பரே பராட்டுகள்

kuma36 said...

அட நம்ம ஊர்காரரு, இவ்வளவு நாளா கண்ணுலப்படலையே! வாங்க சார் வந்து கலக்குங்க! இனிமையான வலைப்பதிவு பயணத்திற்கு வாழ்த்துக்கள்.

சிவலிங்கம் சிவகுமாரன் said...

நன்றி ஞானசேகரன் மற்றும் இராகலை கலை உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன் கிடைத்ததா?