Wednesday, September 16, 2009

சி.வியை மறந்த மலையகம்
வீடற்றவன் என்ற நாவலை தீர்க்கதரிசனமாகத்தான் அவர் எழுதினாரே தெரியவில்லை

அவரது அலுவலக அறை இன்று ஒரு குடும்பத்தின் சமையலறையõக காட்சியளிக்கின்றது.

எந்த தொழிலாளர் வர்க்கத்திற்காக இவர் கவி படைத்தாரோ அதே தேயிலைச்செடிகளுக்கு மத்தியில் கைவிடப்பட்ட நிலையில் புற்கள் மண்டி தோற்றமளிக்கிறது சி.வியின் கல்லறைமலையகத்தின் விடிவுக்காய் குரல் கொடுத்தவர்கள் பலர் இன்று மறக்கப்பட்டு வருவது ஒன்றும் புதிய விடயமல்ல. எனினும் பெருந்தோட்டப்பகுதி வாழ் தொழிலாளர்களின் இன்னல்கள் சோகங்களை இலங்கையைத்தாண்டி வெளிஉலகுக்கு தனது அற்புதமான படைப்புக்கள் மூலம் கொண்டு வந்தவர் மூத்த இலக்கியவாதி மக்கள் கவிமணி சி.வி.வேலுப்பிள்ளை ஆவார். செப்டெம்பர் 14 ஆம் திகதி அவரின் 95 ஆவது பிறந்த நாள் நினைவு தினமாகும். படைப்பிலக்கியம்,அரசியல், தொழிற்சங்கம் என பன்முக ஆளுமை நிறைந்த ஒரு அற்புதமான மனிதர் வாழ்ந்து மறைந்த சுவடே தெரியாமல் அமைதியாக இருக்கிறது அவர் பிறந்து வாழ்ந்த வட்டகொடை மடக்கும்பரை தோட்டம். மலையகமும் அதே நிலையில் தான் இருக்கின்றது என்பதை சொல்லித்தெரியவேண்டியதில்லை. வீடற்றவன் என்ற நாவலை தீர்க்கதரிசனமாகத்தான் அவர் எழுதினாரே தெரியவில்லை இறுதியில் அவர் வாழ்ந்து மறைந்த வீட்டிலிருந்தே அவரின் குடும்பத்தினரை வெளியேற்றியது தோட்ட நிர்வாகம்.இன்று அவர் வாழ்ந்து மறைந்த வீட்டின் நிலைமையை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.
எந்த சமூகத்திற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்து வாழ்ந்து மறைந்தாரோ அவர்கள் மத்தியில் அவர் பேசப்படாது இருப்பதை ஜீரணிக்கமுடியவில்லை. அவர் மண்ணில் பிறந்தவன் என்ற அடையாளப்படுத்தல்களுக்கும் அப்பாற்பட்டு ஒரு உயர்ந்த இலட்சிய நோக்கத்தில் தனது வாழ்வை அர்ப்பணித்து வாழ்ந்து மறைந்த அந்த உன்னத மனிதரின் இல்லம் நோக்கிச்சென்றேன். அவர் வாழ்ந்த காலகட்டத்தில் பங்களாவாக காட்சியளித்த அந்த குடியிருப்பு இன்று பல தனித்தனி குடும்பங்களின் வாழ்விடமாக விளங்கியது. இங்கு குடியிருந்த மனிதரைப்பற்றி உங்களுக்குத்தெரியுமா என்றால் உதட்டை பிதுக்குகின்றனர். வீட்டினுள்ளே நுழைந்தால் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. சி.வி வாழ்ந்த வீடா இது ? அவரது அலுவலக அறை இன்று ஒரு குடும்பத்தின் சமையலறையõக காட்சியளிக்கின்றது. பெருந்தோட்டப்பகுதிகளில் விறகு மற்றும் பழைய பொருட்கள் வைக்கும் இடமான அட்டாலில் விறகுகள் நிறைந்து கிடக்கின்றன.
அதைத்தாண்டி அவரின் உறங்கும் அறைக்குச்சென்று பார்த்தால் சுவரில் வெடிப்புகள் விழுந்து இருட்டறையாக காட்சியளிக்கின்றது. மலையக சமூகத்திற்கு வெளிச்சம் கிடைக்க போராடிய பேனா போராளியின் சிந்தனைகள் இந்த அறையில் தான் தோற்றம் பெற்றதோ? சரி அவர் பாவித்த பொருட்கள் தளபாடங்கள் எல்லாம் எங்கே என்று விசாரித்தால் அவரின் குடும்பத்தை இவ்வீட்டிலிருந்து வெளியேற்றும் நடவடிக்கையின் போது அவை தூக்கி எறியப்பட்டன என்றும் அச்சந்தர்ப்பத்தில் ஒவ்வொருவரும் அதை தமது வீட்டிற்கு எடுத்துச்சென்றனர் என்றும் கூறினர். ஒரு சிலரோ அவரது ஆவணங்களை உறவினர்கள் தலைநகருக்கு எடுத்துச்சென்றனர் என்று கூறினர். மற்றுமொருவர் இன்னுமொரு தகவலை சொன்னார். சி.வி பாவித்த மேசையும் அலுமாரியும் அருகில் ஒரு வீட்டில் இருப்பதாகக்கூறினார். ஓடோடிச்சென்றேன் அவ்வீட்டிற்கு , ஒரு அறையில் சி.வி பாவித்த மேசையும் அலுமாரியும் காணக்கிடைத்தன.மேசையை வாஞ்சையுடன் வருடிப்பார்க்கும் போது புல்லரித்தது. தனது படைப்புப்பொக்கிஷங்களை சிருஷ்டிப்படுத்த உதவிய மேசை அல்லவா இது ? அருகில் உடைந்து விழும் நிலையில் அவரது அலுமாரி. பெரும் துயரத்துடன் அங்கிருந்து வெளியேறினேன். அடுத்ததாக நான் சென்ற இடம் மக்கள் கவிஞன் மண்ணுள் உறைகின்ற இடமாகும்.புழுதிப் படுக்கையில் புதைந்த


என் மக்களைப்போற்றும்


இரங்கற் புகழ் மொழி இல்லை
ஊணையும் உடலையும் ஊட்டி


இம் மண்ணை உயிர்த்த வர்க்கு


இங்கே உளங்கசிந்த அன்பும்
பூணுவாரில்லைஅவர்புதைமேட்டிலோர் கானகப்பூவைப்பறித்துப்போடுவாரில்லைஎன்ற வரிகள் தான் ஞாபகத்திற்கு வந்தன. தேயிலைச்செடிகள் மத்தியில் தனது வாழ்க்கையை தொலைத்த எந்த தொழிலாளர் வர்க்கத்திற்காக இவர் கவி படைத்தாரோ அதே தேயிலைச்செடிகளுக்கு மத்தியில் கைவிடப்பட்ட நிலையில் புற்கள் மண்டி தோற்றமளிக்கிறது சி.வியின் கல்லறை.
தன்னை மறைக்கத்தானோ அவ்விறைவனும்தளிர் பசும் புல்லால் தரை மறைத்தனனோ என்ற அவரது வரிகளில் எந்தளவிற்கு உண்மை இருக்கிறது என்பது இங்கு வந்து பார்த்தால் புரிகிறது.
சி.வி.வேலுப்பிள்ளை காலமாகி எதிர்வரும் நவம்பர் 19 ஆம் திகதியோடு 25 வருடங்கள் நிறைவுறுகின்றன. அவரது இல்லத்தை நினைவாலயமாக்கி அவர் பாவித்த பொருட்களை சேகரித்து அங்கு காட்சிப்படுத்த வேண்டும் என்று ஆங்காங்கே சிலர் அவ்வப்போது புலம்புவதோடு சரி அவர் வாழ்ந்த வீட்டையும் அவரது கல்லறையையும் எட்டிக்கூட பார்க்க எவரும் வருவதில்லை.வாடிய ரோசா மலரிதழ் போல வாடியே


அன்னார்வாழ்க்கை கழிந்தது
என்ற அவரது கவி வரிகளை அவருக்கே சமர்ப்பணம் செய்து விட்டு அவரது கல்லறைக்கு அஞ்சலி செய்து அவ்விடம் விட்டு நகர்ந்தேன்.

1 comment:

இறக்குவானை நிர்ஷன் said...

சி.வி யின் வாழ்க்கை குறிப்பையும் விபரங்களையும் அவரது சேவை பற்றியும் பாடசாலை மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டியது கட்டாயமாகும். இல்லாவிடின் இன்னும் கொஞ்ச காலத்தில் சி.வி என்றால் யார் எனக் கேட்கக் கூடும்.

தாமதமான பின்னு}ட்டத்துக்கு மன்னிக்கவும்.