தகவல் அறியும் சட்டமூலம் ஊடாக பெறப்பட்ட தகவல்கள்
அட்டன் –டிக்கோயா நகர சபையின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் அட்டன் பிரதான பஸ் நிலையத்தில் அமைந்துள்ள இரண்டு மலசல கூடங்களில் பிரதான மலசல கூடத்தின் மோசமான நிலைமைகள் குறித்து கடந்த காலங்களில் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. நாளாந்தம் ஆயிரக்கணக்கானோர் வருகை தரும் அட்டன் பிரதான பஸ் நிலையத்தின் மலசலகூடமானது மனிதர்கள் பாவிக்கும் நிலைமையில் இல்லையென அம்பகமுவ மாவட்ட சுகாதார வைத்தியர் அதிகாரி காரியாலயம், நோர்வூட் பிரதேச செயலகத்தின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட மற்றும் பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவர்கள் என பல்வேறு தரப்பினர் சுட்டிக்காட்டியும் மலசலகூடத்தை சீர்செய்யும் பணிகளில் நகர சபை நிர்வாகம் கடந்த காலங்களில் ஆர்வம் காட்டவில்லை.
மிக முக்கியமாக 2023 ஆம் ஆண்டு மேற்படி நகரசபையானது மாகாண உள்ளூராட்சி ஆணையாளரின் கட்டுப்பாட்டில் வந்த பிறகே சபையின் நிர்வாகத்தின் அட்டன் நகரில் இயங்கிய மலசல கூடங்கள் கவனிப்பாரற்று கைவிடப்பட்டன என்பதே நகர மக்களின் கருத்தாகும். நகர சபை செயலாளர் மற்றும் முகாமைத்துவ குழுவின் நிர்வாக நடவடிக்கைகள் மற்றும் முடிவுகள் நகர கழிவகற்றல் செயற்பாடுகளிலும் நகர சபையின் மலசலகூடங்களை பராமரித்தலிலும் தோல்வியைத் தழுவிய காலகட்டங்களாக விளங்குகின்றன.
இந்நிலையில் பஸ் நிலைய மலசலகூடத்தில் அதிக கட்டணங்கள் அறவிடப்படல், முறையான பராமரிப்பு இல்லாமை, தொடர்ச்சியாக எழுந்த முறைப்பாடுகளுக்கமைய தகவல் அறியும் சட்டமூலம் ஊடாக சில தகவல்களை பெற விழைந்தோம். அதன் மூலம் பெற்ற தகவல்களின் அடிப்படையில் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. நகர சபை நிர்வாகம் உள்ளூராட்சி ஆணையாளரின் நிர்வாகத்தின் கீழ் வருவதற்கு முன்பாக மேற்படி மலசல கூடமானது கேள்வி அறிவித்தலின் மூலம் தெரிவு செய்யப்பட்டவர்களின் பராமரிப்பு காலத்தில் பெற்ற வருமானத்தை விட, செயலாளரின் தலைமையின் கீழ் நியமிக்கப்பட்ட குழுவால் மிகக் குறைந்த வருமானத்தைப் பெற்றிருப்பதுடன் வருமான நட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக கணக்கறிக்கை தெரிவிக்கின்றது.
அதே வேளை 2021 ஆம் ஆண்டு மேற்படி மலசலகூடங்களை பழுது பார்ப்பதற்காக மத்திய மாகாண சபையின் மூலம் ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டாலும் கொவிட் நிலைமைகளை காரணம் காட்டி ஒப்பந்தக் காரர்கள் எவரும் இவ் வேலைத்திட்டத்துக்கு முன்வராத காரணத்தினால் அந்நிதியை பயன்படுத்த முடியாது போய் விட்டதாகவும் நகர சபை தெரிவித்துள்ளது. மேற்படி மலசலகூடங்கள் தொடர்பில் முன் வைக்கப்பட்ட கேள்விகளும் அதற்கு வழங்கப்பட்ட பதில்களும் இங்கு தரப்படுகின்றன.
1) அட்டன் டிக்கோயா நகரசபையின் நிர்வாகத்தின் கீழ் நான்கு (4) மலசல கூடங்கள்இயங்கி வருகின்றன. இவற்றில் அட்டன் பஸ் தரிப்பு நிலையத்தில் இயங்கும் மலசல கூடங்கள் இரண்டு (2) ஆகும்.
2) குறித்த பஸ் தரிப்பு நிலையங்களில் உள்ள மலசல கூடங்களை பராமரிப்பதற்கு2023 ஆம் ஆண்டு வரையே கேள்வி அறிவித்தல் மூலமாக குத்தகைக்கு வழங்கப்பட்டு வந்தன. ஆனால் அதன் பிறகு நகர சபை நிர்வாகத்தின் முகாமைத்துவ குழுவினரின் தீர்மானங்களின் படி குழுவொன்றை நியமித்து மலசல கூட பராமரிப்பு முன்னெடுக்கப்பட்டது.
வருமானம்
2023 ஆம் ஆண்டு கேள்வி அறிவித்தல் மூலமாக மேற்படி மலசல கூடங்கள் குத்தகைக்கு வழங்கப்பட்டதில் அவ்வாண்டு வருமானமாக 99 இலட்சத்து 83 ஆயிரத்து 171 ரூபா 71 சதம் வருமானமாக கிடைத்துள்ளதாக நகரசபை பதில் வழங்கியுள்ளது. அதே வேளை 2023 ஆம் ஆண்டின் இறுதியில் கேள்வி அறிவித்தல் நடைமுறை மாற்றப்பட்டு நகர சபையின் முகாமைத்துவ குழுவால் 22/11/2023 அன்று மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கு அமைய சபையால் நியமிக்கப்பட்ட நபர்களால் மேற்படி மலசல கூடங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
நட்டம்
இருப்பினும் மேற்படி மலசல கூட வருமானத்தில் நகரசபையால் முன்னைய வருமானத்தைப் பெற்றுக்கொள்ள முடியவில்லையென்பதை அறியக் கூடியதாக உள்ளது. அதாவது தற்போது நாள் ஒன்றுக்கு மேற்படி மலசல கூடங்களிலிருந்து சராசரியாக 19,500 ரூபாயே வருமானமாகக் கிடைப்பதாகவும் பயனாளி ஒருவரிடம் 30 ரூபாய் கட்டணம் நுழைவுச் சீட்டாக வழங்கப்படுவதாகவும் பதில் தரப்பட்டுள்ளது. இந்த மலசலகூடங்களை பராமரிக்க இருவர் மாத்திரமே நியமிக்கப்பட்டுள்ளனர். காலை 6 மணிக்கு திறக்கப்படும் மலசல கூடம் மாலை 6 மணிக்கு மூடப்படுகின்றது. இந்த தரவுகளின் படி மாதாந்தம் சராசரியாக 585,000 (ஐந்து இலட்சத்து என்பத்தைந்தாயிரம் ரூபா) வருமானமாகப்பெறப்படுகின்றது.
இதுவே வருடத்துக்கு 7,020,000 ரூபா (எழுபது இலட்சத்து இருபதாயிரம்) ஆகின்றது. ஆனால் நாளாந்தம் 30 ரூபாய் படி விநியோகிக்கப்படும் நுழைவுச் சீட்டின் ஊடாகவே 19,500 ரூபாய் வருமானமாகப் பெறப்படுகின்றது என்ற நகரசபையின் தரவுகளின் படி, நாள் ஒன்றுக்கு மேற்படி மலசலகூடங்களுக்கு வருகை தருவோரின் எண்ணிக்கை 650 ஆக உள்ளது. ஆயிரக்கணக்கானோர் தினமும் வருகை தரும் அட்டன் நகரில், பஸ் நிலைய மலசலகூடத்தை பாவிப்பவர்கள் வெறும் 650 பேர் தானா என்ற கேள்விகளும் எழுகின்றன.
தனியார் மற்றும் இ.போ.ச தரிப்பிட நிலைய தரவுகளின் படி நாள் ஒன்றுக்குஅட்டன் பிரதான பஸ் நிலையத்திலிருந்து 80 இ.போ. ச பஸ்களும் 200 தனியார் பஸ்களும் மாவட்டத்துக்குள்ளேயும் அதற்கு வெளியேயும் சேவைகளில் ஈடுபடுகின்றன. பஸ்களில் பயணம் செய்வோர் தவிர்த்து, மேற்படி பஸ்களின் சாரதிகள், நடத்துநர்கள், பயணிகளை அனுப்பி வைக்க வருவோர், பஸ் நிலைய வளாகம், அதற்கு அருகில் அமைந்துள்ள வர்த்தக நிலைய ஊழியர்கள் என நாள் ஒன்றுக்கு சுமார் ஐயாயிரம் பேர் வரையில் பஸ் நிலைய வளாகத்திற்கு வந்து செல்கின்றனர். இவர்களில் அரைவாசியானோர் வரை மலசல கூடத்தை பாவித்தாலும் இரண்டாயிரத்து ஐந்நூறு பேர் வரை அங்கு வந்து செல்ல வேண்டும் ஆனால் நகரசபையின் வருமான தகவல்களின் அடிப்படையில் அது 650 பேராக உள்ளதை ஆய்வுக்குட்படுத்தல் உரியோரின் பொறுப்பு.
கணக்காய்வு அறிக்கை
இதே வேளை மேற்படி மலசலகூட பராமரிப்பு மற்றும் வருமானம் உட்பட ஏனைய விடயங்கள் குறித்து கணக்காய்வு மேற்கொள்ளப்பட்டதா என்ற கேள்விக்கு, நுவரெலியா தேசிய கணக்காய்வு அலுவலகம் மூலம் கணக்காய்வு மேற்கொள்ளப்பட்டதாக பதில் வழங்கப்பட்டுள்ளது. கணக்காய்வு அறிக்கையின் படி நகரசபைக்கு மலசலகூடங்கள் மூலம் நகரசபைக்கு நட்டமா இலாபமா என்ற கேள்விக்கு நட்டம் என்றே பதில் தரப்பட்டுள்ளது.
அதன் படி நகரசபையின் முகாமைத்துவ குழுவினால் நியமிக்கப்பட்ட இருவரினால் பராமரிக்கப்பட்ட மேற்படி மலசல கூடங்களினால் கணக்காய்வு அறிக்கையின் படி 36,23003 ரூபா (முப்பத்தாறு இலட்சத்து இருபத்து மூவாயிரத்து மூன்று) நட்டம் என தகவல் தரப்பட்டுள்ளது.
பழுது பார்ப்புக்கு ஐந்து இலட்சம்
2019 ஆம் ஆண்டில் பஸ் நிலைய பிரதான மலசலகூடத்தை பழுதுபார்க்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் இருப்புக்கதவுகள், நீர்க்குழாய்கள் பொருத்துதல் மற்றும் பழுது பார்த்தலுக்கு செலவீனமாக 507,562.84 ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அப்பணிகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் நகரசபை தெரிவித்துள்ளது.
2021 ஆம் ஆண்டு மலசல கூடங்களை புனரமைப்பதற்கு மத்திய மாகாண சபையால் பத்து இலட்சம் ரூபாவும் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜங்க அமைச்சின் மூலம் 9,927,854.31 ரூபாவும் ஒதுக்கப்பட்டாலும் கொவிட் காலமாகையால் ஒப்பந்தக் காரர்கள் எவரும் இப்பணியை மேற்கொள்ள முன்வரவில்லையென தெரிவித்துள்ளது நகரசபை.
இதன் காரணமாக மலசல கூட புனரமைப்புக்கு கிடைக்கவிருந்த சுமார் ஒரு கோடியே பத்து இலட்சம் ரூபா நிதி கிடைக்காமலேயே போய்விட்டது. ஆனால் குறித்த நிதியை தக்க வைத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகளை அப்போதைய நகரசபை நிர்வாகம் மேற்கொண்டதா என்பது குறித்த தேடல்கள் அவசியமாகின்றன.
பணிகள் நிறைவடைந்த பின்னர் பட்டியல்கள் முன்வைக்கப்பட்டு அதன் பிறகே நிதி கிடைக்கக் கூடிய வகையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த காரணத்தினால் அப்பணம் சபையின் வங்கிக் கணக்கிற்கு கிடைக்கவில்லையென்றும் கொவிட் தொற்று காரணமாகவே அவ் வேலைத்திட்டம் இடம்பெறாத காரணத்தினால் இந்நிதி பயன்படுத்த முடியாமைக்கு சபை பொறுப்பேற்க முடியாது என்றும் பதில் வழங்கப்பட்டுள்ளது. கணக்காய்வு அறிக்கைகளின் பிரகாரம் 2024 ஆம் ஆண்டு மலசலகூட பராமரிப்பு முறையால் சபைக்கு நட்டம் ஏற்பட்டுள்ளது. அட்டன் நகரை மாற்றியமைப்போம் என்ற வாக்குறுதிகளோடு தற்போது தேசிய மக்கள் சக்தியின் புதிய நிர்வாகம் சபையை பொறுப்பேற்றுள்ளது. தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸும் ஒத்துழைப்பு நல்கியுள்ளது. எனவே இந்த இரண்டு தரப்பினருக்கும் மேற்கூறிய விவகாரத்தில் பொறுப்புள்ளது. புதிய ஆட்சியிலாவது பொது மக்கள் மற்றும் பயணிகள் பாவிக்கத் தக்கவாறு பஸ் தரிப்பிட மலசலகூடம் திருத்தியமைக்கப்படுமா? நகரசபைக்கு நட்டம் ஏற்படாத வண்ணம் பராமரிப்பு முன்னெடுக்கப்படுமா?
No comments:
Post a Comment