கண்டியிலிருந்து பதுளை வரையிலான இரயில் மார்க்கத்தில் ஆங்கிலேயர் காலத்தில் பொருத்தப்பட்ட பழைய தண்டவாளங்களை அகற்றி புதியனவற்றை பொருத்தும் பணிகளை புகையிரத திணைக்களத்தின் பாதை பராமரிப்பு பிரிவு கடந்த வாரம் ஆரம்பித்திருக்கின்றது.
குறித்த மார்க்கத்தில் புகையிரத சேவைகளை ஆரம்பித்தவர்கள் பிரிட்டிஷார். அதற்கான பிரதான காரணம் மலையகப் பகுதிகளில் விளையும் கோப்பி மற்றும் தேயிலையை ஏற்றுமதி செய்வதற்காக கொழும்புக்கு கொண்டு செல்வதாகும். தமக்கு வருமானத்தை தரும் பெருந்தோட்டப் பயிர்களை அடிப்படையாகக்கொண்டே 1867 ஆம் ஆண்டு
கண்டியிலிருந்து பதுளை வரையிலான புகையிரத பாதையை உருவாக்க பிரிட்டிஷார் தீர்மானித்தனர். 1885 ஆம் ஆண்டு நானுஓயா வரை பணிகள் நிறைவடைந்திருந்தன. அங்கிருந்து நுவரெலியா இராகலை வழியாக உடபுசல்லாவை வரை ஒரு மார்க்கமும், பதுளை வரை ஒரு மார்க்கமுமாக பணிகள் முன்னெடுக்கப்பட்டன. 1894 ஆம் ஆண்டு பண்டாரவளை இரயில் நிலைய பணிகள் பூர்த்தியடைந்தன. அங்கிருந்து பதுளை வரையான புகையிரத பாதை பணிகள் நிறைவடைய 30 வருடங்கள் சென்றன. இவ்வாறு கண்டி –பதுளை புகையிரத பாதை பணிகள் 1924 ஆம் ஆண்டு முடிவுற்றன.
தற்போது நானுஓயா –உடபுசல்லாவை மார்க்கத்தில் புகையிரத மார்க்கம் இருந்ததற்கான எந்த அடையாளங்களும் இல்லை. கண்டி –பதுளை மார்க்கத்தில் 1960 களில் புதிய தண்டவாளங்கள் பொருத்தப்பட்டன. அக்காலப்பகுதியில் தேயிலை தொழிற்றுறை உச்ச இடத்தில் இருந்தது. இம்மார்க்கத்தில் உள்ள பெருந்தோட்டங்களிலிருந்து பெறப்படும் தேயிலை (தூள்) பெட்டிகளில் அடைக்கப்பட்டு, புகையிரதம் மூலமே தலைநகருக்கு கொண்டு செல்லப்பட்டது. இதற்காக சரக்கு புகையிரத சேவைகள் பிரத்தியேகமாக இயங்கின.
கண்டி –பதுளை புகையிரத மார்க்கத்தை உருவாக்க ஆங்கிலேயருக்கு 57 வருடங்கள் எடுத்தன. இது அக்காலத்தில் ஒரு சாதனையாகும். ஏனென்றால் இம்மார்க்கம் பல சிக்கலான மலைப்பிரதேசங்களையும் பள்ளத்தாக்குகளையும் கொண்டது. வீதியமைத்தல், தண்டவாளங்களைப் பொருத்துதல், சுரங்கங்கள் மற்றும் பாலங்களை அமைத்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டவர்கள் தென்னிந்திய கிராமங்களிலிருந்து ஆங்கிலேயரால் அழைத்து வரப்பட்ட தொழிலாளர்களாவர்.
ஒரு தொகுதியினர் பெருந்தோட்டங்களை உருவாக்க இன்னுமொரு பிரிவின் போக்குவரத்து பாதைகளை உருவாக்கி தமது உழைப்பை நல்கினர். தற்போது சுமார் 65 வருடங்களுக்குப்பிறகு கண்டி –பதுளை புகையிரத மார்க்கத்தின் தண்டவாளங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆட்சியாளர்களினால் நாடெங்கினும் அதிவேக மார்க்கங்கள் அமைக்கப்பட்டன. ஆனால் அவர்கள் மலையக புகையிரத மார்க்கங்களையும் பிரிட்டிஷ் காலத்து இரயில் நிலையங்களையும் கண்டு கொள்ளவில்லை. அதே போன்று இம்மார்க்கத்தில் அமைந்துள்ள பெருந்தோட்டங்களில் பிரிட்டிஷார் அமைத்துக்கொடுத்த தொழிலாளர் குடியிருப்புகளையும் கடந்த ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளவில்லை. இப்போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் அதை கடந்து செல்கின்றதா என்று தான் கேட்க வேண்டியுள்ளது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களில் மலையகப் பெருந்தோட்டப்பகுதி வாழ் மக்களுக்கு இது வரை எந்த திட்டங்களும் ஆரம்பிக்கப்படவில்லை. இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடமைப்பு மாத்திரமே தற்போது சில பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மலையக பெருந்தோட்ட மக்களுக்கு கெளரவமான வாழ்க்கையை நாம் அமைத்துக் கொடுப்போம் என ஜனாதிபதி தேர்தல் பிரசார காலத்தில் இப்போதைய ஜனாதிபதி அநுரகுமார நுவரெலியாவில் வைத்து தெரிவித்தார். அவர்களின் வாழ்வாதாரத்துக்கு அடிப்படையாகவுள்ள சம்பளப் பிரச்சினை தீர்க்கப்படும் என பாராளுமன்ற தேர்தல் பிரசார காலத்தில் கூறினார். அவ்வாறான எந்த வாக்குறுதிகளும் இது வரை நிறைவேற்றப்படவில்லை.
நாட்டில் உல்லாசப்பயணிகளின் வருகையை அதிகரிக்க பல திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. அவர்கள் அதிகம் விரும்பி பயணம் செய்யும் புகையிரத மார்க்கமாக கண்டி –பதுளை விளங்குகின்றது. இதனூடே புதிய இரயில்களை சேவைகளில் ஈடுபடுத்தி,உல்லாசப்பயணிகளுக்கு மேலதிக பயண அனுபவங்களை வழங்குவதற்கு தண்டவாளங்கள் மாற்றப்படுகின்றனவா என்று தெரியவில்லை. இயற்கை அழகுடன் கூடிய பெருந்தோட்டப்பகுதி தேயிலை மலைகள் உல்லாசப்பயணிகளை அதிகமாக ஈர்க்கும் பகுதிகளாகும். எனினும் இங்கு வாழ்ந்து வரும் மக்களின் துன்பங்கள் பற்றி அவர்களுக்குத் தெரியாது. அவ்வாறு தெரிந்தாலும் அதை தமது சமூக ஊடகங்களுக்கு பயன்படுத்திக்கொள்பவர்களாகவே இப்போது உல்லாசப்பயணிகளும் விளங்குகின்றனர்.
தமது சமூக ஊடக பக்கங்களுக்கு சிறந்த கரு அல்லது உள்ளடக்கங்கள் (Content) உள்ள இடமாக சில வெளிநாட்டினருக்கு இ லங்கையின் மலையகப் பெருந்தோட்டப்பகுதிகளும் அங்கு வாழ்ந்து வரும் மக்களும் மாறிவிட்டனர்.
மலையக புகையிரத மார்க்கங்களில் நூறு வருடங்களுக்கு முன்பு பொருத்தப்பட்ட இரும்பு தண்டவாளங்களை மாற்றுவதற்கு முன்வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், அப்பிரதேசங்களில் காணப்படும் நூறு வருடங்களுக்கு மேல் பழமையான தொழிலாளர் குடியிருப்புகள் பற்றி சிந்திக்கவில்லை. சகல அம்சங்களிலும் அமைப்பு மாற்றங்களே (System Change) தமது ஆட்சியின் பிரதான இலக்கு என்ற ஆரவாரத்துடன் ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி, நாடு சுதந்திரமடைவதற்கு முன்பிருந்தே தேசிய வருமானத்தில் பங்களிப்பு செய்து வரும் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையில் எப்போது அமைப்பு மாற்றங்களை ஏற்படுத்தப்போகின்றது?
No comments:
Post a Comment