ரஜினி கர்நாடகாவை பிறப்பிடமாகக்கொண்டாலும் அவர் தமிழகத்தின் சூப்பர் ஸ்டாராக நிரந்தரமாக கொண்டாடப்பட்டு வருகின்றார். எனினும் அவர் அரசியலில் பிரவேசிக்காதது அவரது இரசிகர்களை மிகவும் ஏமாற்றத்துக்குள்ளாக்கியது. இப்போது 74 வயதாகும் ரஜினிகாந்த் இதற்குப் பின்னரும் அரசியலில் பிரவேசம் செய்வாரா என்பது தெரியாது. ஆனால் அவரது இரசிகர்கள் இன்னும் அவரது அரசியல் பிரவேசத்தை எதிர்ப்பார்த்துள்ளனர். அந்த இடத்தை கெட்டியாகப் பிடித்துக்கொண்டுள்ளார் கமலஹாசன். கடந்த ஜூன் மாதம் நடந்த மாநிலங்களவை தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன், மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக மாநிலங்களவை உறுப்பினராகத் அவர் தெரிவு செய்யப்பட்டார். இப்போது ராஜ்யசபா எம்.பியாக பதவி ஏற்றுள்ளார்.
‘நான் எப்ப வருவேன் எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது ஆனால் வர வேண்டிய நேரத்தில் வருவேன்’ என பல வருடங்களாக தனது அரசியல் பிரவேசத்தை சினிமா வசனங்கள் வாயிலாக கூறி தனது இரசிகர்களை உசுப்பேத்தி வந்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த். ஆனால் இறுதி வரை அவர் அரசியலுக்கு வரவே இல்லை. தமிழகத்தின் கட்சிகள் மற்றும் தேசிய அளவிலான பாரதீய ஜனதா கட்சி ஆகியவை ரஜினிகாந்தை அரசியல் ரீதியாக அணுகினாலும் அவர் எதற்கும் மசியவில்லை.
அவ்வப்போது தனது படங்களில் அரசியல் ஆசைகளை வசனங்களின் மூலம் வெளிப்படுத்தி வந்தார் ரஜினி. அவர் அரசியலுக்கு வர வேண்டும் தமிழகத்தின் முதலமைச்சராக வேண்டும் என்ற ஆர்வம் அரசியல் கட்சிகளை விட தமிழகத்தில் அவருக்கிருந்த இரசிகர்களுக்கு சற்று அதிகமாகவே இருந்தது. ஏனென்றால் ரஜினி தனது திரைப்படங்களில் வித்தியாசமான ஸ்டைலால் அனைத்து இரசிகர்களையும் கவர்ந்து இழுத்த அதே நேரம் மிகவும் எளிமையாகவும் இயல்பாகவும் தனது வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர். பல கோடி ரூபாய் சொத்துகளுக்கு அதிபதியாக இருந்தாலும் சினிமாவை தவிர்த்து தன்னை ஒரு ஆன்மிகவாதியாக வெளிப்படுத்தியவர்.
சினிமா வேறு வாழ்க்கை வேறு என்பதை பல சந்தர்ப்பங்களில் நிரூபித்தவர். சினிமா மேக்கப்பை தனது நிஜ வாழ்க்கையில் தவிர்த்தவர். படங்களில் தலைக்கு டோபா வைத்து நடிக்கும் அவர் ஏனைய அனைத்து சந்தர்ப்பங்களிலும் அதாவது தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகளில் பங்கேற்கும் போது தனது உண்மையான உருவத்தில் பொதுவெளியில் நடமாடுவதை அவர் விரும்பினார். இந்த இயல்பான அவரது நடவடிக்கைகளே அவரை இரண்டு தலைமுறை இரசிகர்களையும் அவர் பக்கம் இழுத்து வைத்தன.
ரஜினி கர்நாடகாவை பிறப்பிடமாகக்கொண்டாலும் அவர் தமிழகத்தின் சூப்பர் ஸ்டாராக நிரந்தரமாக கொண்டாடப்பட்டு வருகின்றார். எனினும் அவர் அரசியலில் பிரவேசிக்காதது அவரது இரசிகர்களை மிகவும் ஏமாற்றத்துக்குள்ளாக்கியது. இப்போது 74 வயதாகும் ரஜினிகாந்த் இதற்குப் பின்னரும் அரசியலில் பிரவேசம் செய்வாரா என்பது தெரியாது. ஆனால் அவரது இரசிகர்கள் இன்னும் அவரது அரசியல் பிரவேசத்தை எதிர்ப்பார்த்துள்ளனர்.
ரஜினிகாந்தின் அரசியல் பிரவேச தயக்கத்தை பயன்படுத்திக்கொண்டவர் அவரது சமகால சூப்பர் நடிகரான கமல்ஹாசன். தனது தனித்துவமான நடிப்பு மற்றும் சினிமா பற்றிய ஆழ்ந்த அறிவு , நுணுக்கம் போன்றவற்றால் அகில் இந்திய சினிமா இரசிகர்களை மாத்திரமின்றி உலக அளவில் வாழ்ந்து வரும் தமிழர்களை தன் பக்கம் ஈர்த்தவர் கமல்ஹாசன். இதன் காரணமாகவே அவர் உலக நாயகன் என்று அழைக்கப்படுகின்றார்.
தனது திரைப்படங்களில் அரசியல் சார்பான மறைமுக வசனங்களை தவிர்த்து வந்த அவர் ஒரு கட்டத்தில் அரசியலில் குதிப்பதற்கு தீர்மானித்தார். அதற்குக் காரணம் ரஜினியின் அரசியல் பிரவேசம் ஒரு கட்டத்தில் கேள்விக்குறியானதாகும்.
தமிழக மக்கள் இரண்டு விடயங்களில் தமது உயிரையும் கொடுப்பர் என்பது அவருக்கு நன்கு தெரிந்திருந்தது. ஒன்று சினிமா மற்றையது கிரிக்கெட். ஆனால் அரசியல் என்ற விடயத்தில் நிதானித்தே முடிவெடுப்பர் என்பதை அவர் உணர்ந்திருந்தார். இதில் சினிமாவை மையமாகக்கொண்டு அவர்களை அரசியல் பக்கம் இழுக்க கமலஹாசன் தீர்மானித்தார். ரஜினி இனி அரசியலில் பங்கெடுக்க மாட்டார் என்பதை உறுதி செய்து கொண்டே கமலஹாசன் அரசியலில் பிரவேசிப்பதற்கு முடிவு செய்தார் என்பதை உறுதியாகக் கூறலாம். அந்த வகையில் அவர் 2018 ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை உத்தியோகபூர்வமாக தனது ஆழ்வார் பேட்டை இல்லத்தில் ஆரம்பித்தார். கட்சியின் சின்னத்தில் உள்ள 6 கைகள் 6 மாநிலங்களையும், மற்றும் நடுவில் உள்ள நட்சத்திரம் மக்களைக் குறிக்கும். மக்களையும், நீதியையும் மய்யமாக வைத்து தொடங்கப்பட்ட கட்சி மக்கள் நீதி மய்யம் என்று கமல் கூறினார். தேர்தல் ஆணையத்தால் மக்கள் நீதி மய்யத்திற்கு "கை மின்விளக்கு" சின்னம் ஒதுக்கப்பட்டது 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை இலக்கு வைத்தே கமலஹாசன் அரசியல் கட்சியை ஆரம்பித்தார் என்பது அனைவருக்கும் தெரியும். தமிழக அரசியலில் சினிமாவின் ஆதிக்கத்தை நன்குணர்ந்திருந்த கமலஹாசன் தனது இரசிகர்கள் தனக்கு ஆதரவளிப்பார்கள் என்ற நம்பிக்கையில் அவ்வாண்டு சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளர்களுடன் குதித்தார்.
இத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் தலைமையிலான கூட்டணியில் நடிகர் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, பச்சைமுத்து பாரிவேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சி, கே. எம். சரீப்பின் தமிழக மக்கள் ஜனநாயக கட்சிஇ கர்நாடகத்தை சேர்ந்த முன்னாள் முதல்வரும், இந்திய பிரதமருமான தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் இடம் பெற்று இருந்தனர்.
மேலும் இக்கட்சி சார்பில் அதன் தலைவர் கமலஹாசன் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பார் அல்லது தமிழக சட்டமன்றத்தில் பலமான எதிர்கட்சி தலைவராக விளங்குவார் என்று கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் தமிழக மக்கள் நினைத்த போது அனைத்திற்கும் மாறாக கட்சி சார்பில் போட்டியிட்ட அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கூட்டணி கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் தோல்வியைத் தழுவினார்கள்.
மேலும் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தோல்வியைத் தழுவினார். சினிமா வேறு அரசியல் வேறு என்பதை உணர்ந்து கொள்ள கமலுக்கு இத்தனை காலம் எடுத்துள்ளது.
பின்னர் இக்கட்சியின் தோல்விக்கு காரணம் கூறப்பட்டது. கமல்ஹாசன் தேர்தல் பிரசார களத்தில் தமிழக அரசியலில் அதிமுக–பாஜக ஆட்சியை விமர்சித்த அளவிற்கு கடந்த 50 வருட காலமாக தமிழகத்தை ஆண்டு வந்த தி.மு.க ஆட்சியையும், 50 வருட கால மத்திய காங்கிரஸ் ஆட்சியை கடுமையாக விமர்சிக்காமல் போனதாலே அவர்கள் தோல்விக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.
அதைவிட தேர்தல் களத்தில் கமலஹாசன் அ தனது கூட்டணிக்கு கடந்த காலத்தில் இந்தியாவை ஊழலில் தலைக்க செய்த காங்கிரஸ் கட்சியை அழைத்தது, கமலஹாசனின் கட்சி ஆதரவாளர்கள், ரசிகர்கள் மற்றும் பொது மக்களிடையேவும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது என்றும் கூறப்படுகிறது. ஆனால் கமலஹாசன் மீது திராவிட முன்னேற்ற கழகம் ஒரு கண் வைத்திருந்தது. அதற்குக் காரணம் திராவிட கொள்கைகளான நாத்திகம் மற்றும் பகுத்தறிவு போன்ற விடயங்களில் கமலஹாசன் உறுதியான கொள்கைவாதியாக விளங்கியமையாகும். இனி தமிழகத்தில் தனித்து அரசியல் செய்வது சரிபட்டு வராது என்ற முடிவுக்கு கமலஹாசன் வந்தார் என்று தான் கூற வேண்டும். இந்நிலையில் தனது அரசியல் நிலைப்பாட்டில் திடீரென ஒரு முடிவை எடுத்தார் கமலஹாசன்.
கடந்த ஜூன் மாதம் நடந்த மாநிலங்களவை தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன், மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக மாநிலங்களவை உறுப்பினராகத் அவர் தெரிவு செய்யப்பட்டார். இதற்கு தமிழகத்தில் பலத்த விமர்சனங்கள் எழுந்தன. 2021 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் தமிழகத்தின் அனைத்து கட்சிகளையும் ஊழல் அமைப்புகள் என்ற பிரசார் செய்த கமல் இப்போது அவர்களுடன் இணையலாமா என ஊடகங்கள் அவரை வறுத்தெடுத்தன. மக்களுக்காக இந்த முடிவை எடுத்திருக்கிறேன் என்ற ஒரு வார்த்தையில் அனைத்து ஊடகங்களையும் மெளனமாக்கினார் கமல்.
அதையடுத்து வெள்ளிக்கிழமை 25 ஆம் திகதி கமலஹாசன் நாடாளுமன்றத்தில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டு ராஜ்யசபா எம்.பியாக பதவியேற்றுள்ளார். வெள்ள சட்டை, கருப்பு நிற காற்சட்டை அணிந்து நாடாளுமன்றத்துக்கு வருகை தந்த கமல்ஹாசன், தமிழ் மொழியில் உறுதிமொழி எடுத்துக் கொண்டார். மாநிலங்களவையின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் கமல்ஹாசன் எனும் நான், சட்டத்தினால் நிறுவப்பெற்றதான இந்திய அரசியல் சட்டத்தின் மீது உண்மையான பற்றார்வமும்,பற்றுறுதியும் கொண்டிருப்பேன் என்றும், இந்தியாவின் இறையாண்மையையும்,ஒருமைப்பாட்டையும் உறுதியாகப் பற்றி நிற்பேன் என்றும் நான் இப்போது ஏற்கவிருக்கும் கடமையினை நேர்மையாக நிறைவேற்றுவேன் என்றும், விழுமிய முறைமையுன் உறுதிகூறுகிறேன். வணக்கம்" என உறுதி எடுத்து, பதவிப் பிரமாணம் ஏற்றுக் கொண்டார் . கமல்ஹாசனை வாழ்த்தி அவரது கட்சியினர் சமூக ஊடகங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருவதோடு தமிழ் சினிமா கலைஞர்களும் ஏனைய இந்திய சினிமா கலைஞர்களும் கமலஹாசனுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
மறுபக்கம் நடிகர் விஜய் தனது தமிழக முன்னேற்ற கழகம் கட்சியை அடுத்த தேர்தலுக்கு தயார்ப்படுத்தி வரும் நிலையில் தமிழக அரசியல் களம் நடிகர்களால் ஆக்கிரமிக்கப்படும் சூழலை தக்க வைத்து வருகின்றதோ என்று கூறத்தோன்றுகின்றது. ஆனால் தமிழக சினிமாவிலும் அரசியலிலும் சூர்ப்பர் ஸ்டார் ரஜனி காந்துக்கு இருந்த வரவேற்பு கமலஹாசனுக்கு இல்லை என்றாலும் சரியான நேரத்தில் முடிவெடுத்து இன்று ராஜ்யசபா எம்.பியாகியுள்ளார் கமலஹாசன் . அந்த வாய்ப்பை நழுவ விட்டுள்ளார் ரஜினி காந்த். இனி ரஜினி காந்த் அரசியலில் காலடி எடுத்து வைக்க நினைத்தாலும் அவரது இரசிகர்களே அதை மறுப்பர் என்று தான் கூற வேண்டும்.
No comments:
Post a Comment