உயிர்களை அலட்சியப்படுத்துதல்…!
மருத்துவ அலட்சியப்படுத்தல்கள் செயற்பாடானது (Medical negligence) விலை மதிப்பில்லாத உயிர்களை
காவு கொள்ளும் நிலைமைகளை எமது நாட்டில் தோற்றுவித்துள்ளது. இதன் காரணமாக சிறுவர் பெரியோர் என்ற பாகுபாடின்றி அனைத்துத் தரப்பினரும் இன்று எமது நாட்டின் மருத்துவ கட்டமைப்பு மீதான நம்பிக்கையை இழந்து வருகின்றனர். வைத்தியசாலைகளுக்கு
செல்வதற்கு தயக்கத்தோடு கூடிய அச்சத்தை மக்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். இலங்கையின்
சுகாதாரத் துறையின் நம்பகத்தன்மையின் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இறை நம்பிக்கையுள்ளவர்கள் தாம் நம்பும் கடவுளுக்கு அடுத்து கையெடுத்து வணங்கும் பிரிவினராக வைத்தியர்களே காணப்படுகின்றனர்.
ஆனால் தற்காலத்தில் உயிர்களை காக்கும் மருத்துவத் தொழிலை கற்று உறுதிமொழி எடுத்து பணிபுரியும்
சில மருத்துவர்கள் அது குறித்த அக்கறையின்றி செயற்படுவது மிகவும் பாரதூரமான செயலாகும்.
இதற்குப் பிரதான காரணம் மருத்துவ அலட்சியப்படுத்தல்கள் குறித்த
சம்பவங்கள் அரசாங்கத்தினாலும் அலட்சியப்படுத்தப்பட்டு வருவதாகும். பாதிக்கப்பட்ட தரப்பினரின்
குரல்களை வலுவிழக்கச்செய்யும் வகையில் சரியான
காரணங்களை கூறாது இழுத்தடிப்பு செய்து வரும் அதே வேளை, பாதிப்புக்கு காரணமான மருத்துவர்களையும்
அல்லது மருத்துவ குழுவினரை சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க வைக்கும் முயற்சியிலேயே
மருத்துவ துறையினரும் ஈடுபட்டு வருகின்றனர்.
அண்மையில் இரத்தினபுரி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தரம் ஒன்று பயிலும் மாணவி ஒருவரின் பரிதாப மரணம்
மருத்துவ அலட்சியப்படுத்தல் வரிசையில் பத்தோடு பதினொன்றாக சேர்க்கப்பட்டு விட்டதே தவிர
அதற்கான காரணங்கள் குறித்து விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை. மரணமான சிறுமியின்
தந்தையின் கதறல்கள் சமூக ஊடகங்களை ஆக்கிரமித்திருந்தன. காய்ச்சல் காரணமாக தனது மகளை
மேற்படி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார் அவரது தந்தை. சிறுமியை பரிசோதித்த மருத்துவர்,
மருத்துவமனை மருந்தகத்தில் ஒரு மாத்திரயை வாங்கி வரும்படி கூறியுள்ளார். அதன் பிறகு
சிறுமி அனுமதிக்கப்பட்டதுடன் எக்ஸ்ரே பரிசோதனை
மற்றும் இரத்த மாதிரி பரிசோதனைகள் எடுக்கப்பட்டு சேலைன் ஏற்றப்பட்டுள்ளது. மருத்துவர்
சிபாரிசு செய்த மாத்திரையுடன் பனடோல் மாத்திரயும் வழங்கப்பட்டுள்ளது. எனினும் இரவில்
சிறுமியின் உடல் நிலை மிக மோசமடைந்துள்ளது. அவர் அன்றிரவே கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர்
மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
எனினும் மறுநாள் அச்சிறுமி உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எங்கே தவறு நடந்தது எனத் தெரியாமல் அச்சிறுமியின் பெற்றோர்கள் உறவினர்கள் கண்ணீர் விட்டுக்கொண்டிருக்கின்றனர்.
மருத்துவர்களின் அலட்சியப்போக்கினால் உயிரிழந்த பலரின் குரல்கள் வெளிவராமலேயே உள்ளன. ஏனென்றால் ஏழை பெற்றோர்களால்
இதற்கு தகுந்த சட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியாது. அவர்களின் பேச்சு அம்பலத்தில் ஏறுவதில்லை.
ஓரளவுக்கு பண வசதி கொண்ட பெற்றோர்கள் நீதிமன்ற வாசலை மிதித்தாலும் சட்டத்திலுள்ள ஓட்டைகளைப்
பயன்படுத்தி சில மருத்துவர்கள் தம்மை நிரபராதி என நிரூபித்து விடுவர், அல்லது நாட்டை
விட்டு தப்பிச்சென்று விடுவர். மேற்படி மருத்துவ அலட்சியப்படுத்தல் சம்பவங்களுக்கு
பொறுப்பு கூற வேண்டிய இலங்கை மருத்து சங்கமும் அமைதி காப்பது வேதனையானது.
2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஒரு சம்பவத்தில் தமது மூன்று வயது மகனைப்
பறிகொடுத்த பெற்றோரின்
கதை இது. அவ்வாண்டு டிசம்பர் மாதம் தமது மகனின் சிறுநீரக பிரச்சினைக்காக லேடி ரிட்ஜ்வே
மருத்துவமனையில் கிசிச்சைக்காக அனுமதித்துள்ளனர் பெற்றோர். பரிசோதனை அறிக்கைகளின் பிரகாரம்
சிறுவனின் இடது சிறுநீரகம் சரியாக செயற்படவில்லை. ஆனால் வலது சிறுநீரகம் சாதாரணமாக
செயற்படுவதை அறிக்கைகள் உறுதி செய்தன. எனினும் அறுவை சிகிச்சைக்குப்பிறகு சிறுவனின்
நிலைமை கவலைக்கிடமாகியுள்ளது. இது குறித்து பெற்றோர் மருத்துவர்களிடம் கேட்ட போது ஏதேதோ
காரணங்களை கூறி சமாளித்த அவர்கள் இறுதியில் தவறுதலாக இரண்டு சிறுநீரகங்களும் அகற்றப்பட்டுள்ளதை
கூறியுள்ளனர். அதை காட்டும்படி பெற்றோர் கேட்டும் அது சாத்தியப்படவில்லை. இறுதியில்
2023 ஆம் ஆண்டு ஜுலை மாதம் அச்சிறுவன் மரணத்தைத் தழுவியுள்ளார்.
மிகுந்த அதிர்ச்சிக்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகிய பெற்றோர் நீதியின்
மீது நம்பிக்கை வைத்து மருத்துவமனை நிர்வாகத்தின் மீது வழக்கு தொடர்ந்தனர். கடந்த மார்ச்
மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது குறித்த சிறுவனின் மரணத்துக்குக் காரணமான
சகலரையும் கைது செய்யும்படி நீதிவான் உத்தரவிட்டிருந்தார். இதன் பிறகு இலங்கை மருத்துவ
சங்கமானது குறித்த சம்பவத்துக்கு காரணமான வைத்தியரின் மருத்துவ பதிவை எட்டு மாதங்களுக்கு இடைநிறுத்தி வைப்பதாக அறிவித்தது.
இருப்பினும் குறித்த வைத்தியர் அச்சம்பவத்துக்குப்பிறகு அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்து
விட்டார். சிறுவனின் மரணத்துடன் தன்னை தொடர்பு படுத்தும் அறிக்கைகள் ஆதாரமற்றவையென்றும்
குறித்த சத்திர சிகிச்சைக்கு முன்பே தான் அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்வதற்கான ஏற்பாடுகளை
செய்து விட்டதாகவும் அவர் தன் பக்க நியாயத்தை வெளிப்படுத்தினார்.
இங்கு எழுந்துள்ள பிரச்சினை என்னவெனில் மருத்துவ அலட்சியப்படுத்தல்களால்
பாதிக்கப்பட்ட தரப்பினர் முதலில் முறைப்பாடுகளை மேற்கொள்வதற்கு எவ்வாறான வழிமுறைகளை
மேற்கொள்ள வேண்டும் என்ற தெளிவு இல்லாமல் இருப்பதாகும். இதனால் குற்றமிழைத்தவர்கள் நாட்டிலிருந்து தப்பிச்செல்லும் அதே வேளை அவர்களைப் பற்றிய தரவுகளும் வைத்தியசாலை
மட்டத்திலேயே மறைக்கப்படும் அல்லது அழிக்கப்படும் சூழ்நிலைகளும் ஏற்படுகின்றன.
சுகாதார அமைச்சராக பொறுப்பான பதவியிலிருக்கும் போதே கெஹலிய ரம்புக்வெல
தரமற்ற மருந்து இறக்குமதி விவகாரத்தில் சிக்கி பதவியிழந்து இன்று வழக்கு விசாரணைகளை
எதிர்கொண்டிருக்கின்றார். மக்களின் உயிர்கள் மீது பொறுப்பு கூற வேண்டிய அமைச்சரே இவ்வாறு
இருக்கும் போது சுகாதார கட்டமைப்பின் மீது மக்கள் அச்சப்படுவதில் நியாயம் உள்ளது. ஊழல்களுக்கு
எதிரான போக்கை பிரதானமாகக் கொண்டிருக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது மருத்துவ
அலட்சியப்படுத்தல்கள் பற்றி அதிக அக்கறை கொள்ள வேண்டும்