தொழிலாளர்களின் சம்பள விவகாரம் குறித்து ஜனாதிபதித் தேர்தல் அதன் பிறகு இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் தேசிய மக்கள் சக்தி வழங்கிய வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் பாராளுமன்றத்துக்குள் ஒன்றும் வெளியில் ஒன்றுமாக கருத்து வெளியிட்டு வருகின்றனர். கம்பனிகளும் உற்பத்தி அதிகரித்தாலே சம்பளத்தை உயர்த்த முடியும் என்கின்றன. தொழிலாளர்களிடம் சந்தா வாங்கும் தொழிற்சங்கங்களோ இப்போது தோட்ட மக்களை எட்டியும் பார்ப்பதில்லை. தொழிலாளர்களுக்கு எப்போது சம்பளம் அதிகரிக்கப்படும் என்பது குறித்து தேசிய மக்கள் சக்தியின் மலையக பிரதிநிதிகள் தமக்குள் முரண்பட்ட கருத்துக்களை வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சியமைத்து ஒன்பது மாதங்கள் கடந்துள்ள போதிலும் மலையகப் பெருந்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பள விவகாரம் பேசும் பொருளாக மாத்திரமே காணப்படுகின்றது. பாராளுமன்றத்திலும், மேடைநிகழ்வுகளிலும் , ஊடக சந்திப்பின் போதும் 1700ருபாய் சம்பளத்தை நிச்சயமாக பெற்றுதருவோம் என்ற கோரிக்கையினை மாத்திரம் தேசிய மக்கள் சக்தியின் மலையகப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்ட நிறுவனங்களோடும் அல்லது முதலாளிமார் சம்மேளனத்துடனும் எவ்வித பேச்சுவார்த்தைகளையும் அரசாங்க தரப்பில் எவருமே முன்னெடுத்தது போன்று இதுவரையிலும் தெரியவில்லை. இந்நிலையில்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக 2000ருபாய் பெற்று கொடுப்பதற்கு தமது அரசாங்கத்தின் ஊடாக நடவடிகை மேற்கொள்ளபடுமென பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கிட்ணன் செல்வராஜ், அண்மையில் பாராளுமன்ற அமர்வின் போது தெரிவித்திருந்தார்
பிரதிநிதிகளின் கருத்துகள்
அந்தவகையில் மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் 1700ருபாய் சம்பள விடயம் தொடர்பாக அன்மையில் பெருந்தோட்டம் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு சமுக அபிவிருத்தி பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் கூறும் போது அவர் மாறுபட்ட கருத்தொன்றை ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார். மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் 1700ருபாய் சம்பள விடயம் தொடர்பில் பெருந்தோட்ட நிறுவனங்களோடு கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் நிச்சயமாக ஜனாதிபதி ஊடாக தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு வெகுவிரைவில் தீர்வு எட்டப்படும் என்றும் கூறியிருந்தார். ‘ 1700 ருபாய் தொடர்பாக பெருந்தோட்ட நிறுவனங்களோடு கலந்துரையாடலை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது வெகுவரைவில் எமது ஜனாதிபதியின் தலைமையில் தீர்வு வழங்கப்படுமென அவர் உறுதியாக கருத்துத் தெரிவித்திருந்தார்.
நுவரெலியாவில் அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மகளிர் மற்றும் சிறுவர் விவகாரங்களுக்கான அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் இவ்வாறு கூறியிருந்தார்.
‘பெருந்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளமாக 2,000 ருபாய் வழங்கப்பட வேண்டும். அதில் எந்த ஒரு மாற்று கருத்தும் கிடையாது. ஏனென்றால் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கான தேவைப்பாடு அவர்களுக்கு உள்ளது. ஆனால் 1700 ரூபாய் சம்பளத்தை வழங்குவதில் கூட எமது அரசாங்கம் கடினமான நிலைமைகளை எதிர்நோக்கியுள்ளது.
முதலாளிமார் சம்மேனத்துடன் பேச்சு வார்த்தைகளை நடாத்த அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதேவேளை மலையக மக்களுக்கான அடிப்படை வசதிகள் அனைத்தையும் அராசங்கம் வழங்க வேண்டும். ஒரு புறம் வருமான அதிகரிப்பிற்காக சம்பளத்தை பற்றி பேசுகின்ற போது அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கவும் நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். சம்பள உயர்வின் ஊடாக மாத்திரம் அவர்களின் வாழ்க்கைத் தரம் அபிவிருத்தியடையாது. தற்போது அதிகமான தோட்டங்கள் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றன. அதனால் வருமானம் குறைந்துள்ளது. ஆகவே தோட்டங்களை பராமரிப்பதும் அவசியம் எனத் தெரிவித்தார்.
அசாங்க பிரதிநிதிகளின் கருத்துக்கள் இவ்வாறு இவ்வாறு இருக்க முதலாளிமார் சம்மேளனத்தின் சிரேஷ்ட நிறைவேற்று அதிகாரிகளில் ஒருவரான ரொஷான் ராஜதுரை அண்மையில் அட்டனில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பின்வருமாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
‘ பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாட்சம்பளத்தை 1700ருபாவாக அதிகரிக்க முடியும் ஆனால் தேயிலை உற்பத்தித்திறனை அதிகரித்தால் மாத்திரமே அந்த தொகையினை வழங்குவது சாதியமாகும். கடந்த முறை பாரிய சிரமங்களுக்கு மத்தியில் 1350ருபாவை வழங்க இணக்கம் தெரிவித்தோம். எந்த ஒரு நிறுவனங்களிலும் வழங்காத சலுகைகளை நாங்கள் மாத்திரம் வழங்குகிறோம் . தேயிலையின் விலை 2000ருபாவரை அதிகரிக்குமாக இருந்தால் இவர்கள் கோரும் தொகையினை வழங்க முடியும். இன்று சிறுதோட்ட தொழிலளர்களே அதிகமான தேயிலை உற்பத்தியினை மேற்கொண்டு வருகின்றனர் சில தோட்டங்களின் அண்மையில் தொழிலாளர்கள் மாதம் ஒரு இலட்சத்துக்கு மேலான வேதனத்தை பெற்றிருந்தனர்.
தொழிலாளர்கள் தற்போது தொழிலுக்கு வருவது குறைவடைந்துள்ளது. 1700, 2000, 5000,என்ற தொகைகளை கிடைக்கின்ற இலாபத்தை வைத்து தான் கூறமுடியும். சில பெருந்தோட்ட நிறுவனங்களை போல் ஓய்வுதிய கொடுப்பனவுகளை வழங்காமல் தோட்டங்களை மூடவேண்டிய நிலை ஏற்படும். தற்போது தொழிலாளர்கள் குறைவாக காணப்படுகின்றமையால் அதிகமான தேயிலை கொழுந்தினை பறிக்கமுடியும். பொறுப்பான பிரதிநிதிகள் என்ற ரீதியில் சம்பந்தப்பட்ட தரப்பினர் எம்மோடு கலந்துறையாடிய போதே எமது நிலைப்பாட்டினை தெளிவுபடுத்தினோம்.
கடந்த வருடத்தை விட இவ்வருடம் 200ருபாவால் தேயிலையின் விலை குறைவடைந்துள்ளது.நாங்கள் அரசியல் செய்யவில்லை. சிறந்த நிறுவனமொன்றை முன்னெடுத்து செல்லுகின்றோம். எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் இவ்வளவு தொகை தான் வழங்க முடியுமென நாங்கள் அறிவித்துள்ளோம். முடியுமானால் நான் சவால் ஒன்றை முன்வைக்கின்றேன். நாம் ஒரு தோட்டத்தை வழங்குகின்றோம். நாளாந்தம் இரண்டாயிரம் ரூபாய் சம்பளத்தை வழங்கும் அளவுக்கு அதை இலாபகரமாக அரசாங்கத்தால் நடத்த முடியுமா? என்று அரசாங்கத்திடமே கேள்வியெழுப்பியுள்ளார்.
அரசாங்க பிரதிநிதிகளும் கம்பனிகாரர்களும் இவ்வாறு மாறி மாறி கருத்து பரிமாற்றங்களை முன்னெடுக்கும் அதே வேளை தொழிலாளர்களுக்காக குரல் எழுப்ப வேண்டிய தொழிற்சங்கங்களோ அமைதியாக இருக்கின்றன. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உள்ளூராட்சி சபைகளை தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து அமைத்திருப்பதால் அது குறித்து பேசுவதற்கு முடியாதுள்ளது. எதிர்க்கட்சியிலுள்ள மலையகக் கட்சித் தலைவர் பாராளுமன்றத்தில் மாத்திரமே பேசுகின்றனரே ஒழிய தமது தொகுதி பக்கம் எட்டியும் பார்ப்பதில்லை. யார் கூறுவதில் உண்மை உள்ளது என்பதை ஆராய்ந்து கொண்டிருக்காமல் வழமை போல அன்றாடம் வேலைக்குச் சென்று தமது வாழ்வாதாரத்துக்காக கொழுந்து பறித்துக்கொண்டிருக்கின்றனர் தொழிலாளர்கள்.
நாளாந்த சம்பளமாக முதற்கட்டமாக 1700 ரூபாயும் அதன் பிறகு 2000 ஆயிரம் ரூபாவும் வழங்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட எம்.பி கிட்ணன் செல்வராஜ் கூறினாலும் தற்போது அமுலில் உள்ள நாட்சம்பளமான 1350 ரூபாயே அனைத்து தொழிலாளர்களுக்கும் கிடைப்பது குதிரை கொம்பாகவே உள்ளது என தொழிலாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment