பாராளுமன்ற அரசியலை விட்டு விலகியிருந்தாலும் முன்னாள் எம்.பிக்களில் பலரும் சொகுசு வாகனங்களில் வலம் வருபவர்களாகவும் செல்வத்தில் மிதப்பவர்களாகவும் உள்ளனர். எனவே மாதாந்தம் 68 ஆயிரம் வரையான ஓய்வூதியம் கிடைக்காவிட்டால் உயிரை மாய்த்துக்கொள்வோம் என இவர்கள் எக்காலத்திலும் கூற மாட்டார்கள். பாராளுமன்றத்தின் ஐந்து வருடங்களை பூர்த்தி செய்தவர்கள் ஓய்வூதியம் பெறும் அதே வேளை , ஒரு சில அமர்வுகளுக்கு மாத்திரம் தலை காட்டி சென்றவர்கள் ,வாயே திறக்காமல் சபையில் அமர்ந்திருந்தவர்களுக்கெல்லாம் மூன்று கோடிக்கு மேல் மதிப்புள்ள சொகுசு வாகனங்களை வாங்குவதற்கு தீர்வையில்லாத அனுமதி பத்திரங்கள் வழங்கப்பட்டன என்பது முக்கிய விடயம். இதனால் நாட்டுக்கு ஏற்பட்ட நட்டம்பில்லியன்களை தாண்டும். ஆனால் முன்னாள் எம்.பிக்கள் சிலர் ஓய்வூதிய இரத்துக்கு மெளனம் காத்தாலும் தற்போது அநுர அரசுக்கு எதிராக செயற்படும் மகிந்த உள்ளிட்ட விமல் ,. உதய கம்மன்பில ஆகியோர் இந்த திட்டத்தை எதிர்த்து கருத்துத் தெரிவித்து வரும் அதே வேளை தமது ஆதரவாளர்களையும் இதற்கு எதிராக தூண்டி விட்டு வருகின்றனர்.
எம்.பிக்களுக்கான ஓய்வூதியத்தை இரத்து செய்யும் சட்டமூலம் வர்த்தமானிபடுத்தப்பட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற பெரும்பான்மையை கொண்டிருக்கும் தேசிய மக்கள் சக்தியானது இச்சட்டமூலத்தை நிச்சயமாக நிறைவேற்றும். ஆனால் இதன் மூலம் ஓய்வூதியம் பெறும் முன்னாள் எம்.பிக்கள் மற்றும் மரணத்தைத் தழுவிய எம்.பிக்களின் விதவை மனைவிகள் உட்பட அவர்களின் ஆதரவாளர்களின் எதிர்ப்பை அநுர சம்பாதிக்கப்போகின்றார் என பரவலான கருத்துகள் எழுந்துள்ளன. அதே வேளை மிகவும் சொகுசான வாழ்க்கை வாழ்ந்து வரும் முன்னாள் எம்.பிக்களுக்கு ஏன் ஓய்வூதியம் என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.
ஏனென்றால் எம்.பிகளுக்கு ஓய்வூதியம் உட்பட வேறு பல சலுகைகள் இருப்பது குறித்து மக்களுக்குத் தெரியாது. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் என்பது ஒரு அநாவசியமான செலவு என்பதை உணர்ந்த மக்கள் விடுதலை முன்னணி, தாம் ஆட்சிக்கு வந்தால் ஓய்வூதியம் உட்பட அரசியல்வாதிகளுக்குக் கிடைக்கும் ஏனைய சலுகைகளை இல்லாதொழிக்கப்படும் என்று கூறி வந்தது. தற்போது அதை அமுல்படுத்த முடிவு செய்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உள்ள முழுமையான வரப்பிரசாதங்களை இன்னும் நாட்டு மக்கள் அறிந்து கொள்ளவில்லை என்று தான் கூற வேண்டும். அரசாங்கத்தின் வரப்பிரசாதங்களை தவிர்த்துப் பார்க்கும் போது தமது அதிகாரத்தால் அவர்கள் பெற்று வரும் சலுகைகளை நினைத்துப்பார்க்க முடியாது. இந்நிலையில் தற்போது ஓய்வூதியம் பெற்று வரும் முன்னாள் எம்.பிக்கள் மற்றும் அவர்களின் துணைகள் , குடும்ப உறுப்பினர்கள் என சுமார் ஐந்நூறு பேரின் ஓய்வூதியங்களை இரத்து செய்வதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.
இந்த முடிவுக்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்தது மாத்திரமல்லாது அப்படி நடந்தால் உயிரை மாய்த்துக்கொள்வேன் என தனது பேஸ்புக் பக்கத்தில் அநுர அரசாங்கத்தை பயமுறுத்தியவர் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் சிரேஷ்ட உறுப்பினர் நந்தன குணதிலக்க ஆவார். 1999 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியவர் நந்தன. அதிக வாக்குகள் பெற்றவர்களில் அவர் மூன்றாமிடத்தைப் பெற்றவர். பின்பு மக்கள் விடுதலை முன்னணியிலிருந்து விலகி சுதந்திர கட்சியில் இணைந்தார். 2014 ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்த அவர் கடந்த வருடம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தில் ரணிலுக்கு ஆதரவாக பிரசார மேடைகளில் செயற்பட்டதுடன் அரகலய போராட்டத்தின் பின்னணியில் ஜே.வி.பியினரே செயற்பட்டனர் என மேடைகளில் பகிரங்கமாக குற்றச்சாட்டை முன் வைத்தார்.
தேசிய மக்கள் ஆட்சியமைத்தவுடன் அவர்களின் செயற்பாடுகள் பற்றி விமர்சிக்கும் ஒருவராக நந்தன குணதிலக்க விளங்குகின்றார். முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் பாதுகாப்பு மற்றும் இதர சலுகைகளை குறைக்கும் பட்சத்தில் புலம்பெயர் தமிழர்களினால் அவரது உயிருக்கு ஆபத்து உள்ளதாக அவர் கடந்த வாரம் செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்தமை முக்கிய விடயம்.
இந்நிலையில் ஓய்வூதியம் பற்றி அவர் கூறுகையில் " 68,000 ரூபாய் ஓய்வூதியத்தை வைத்தே நான் வாழ்க்கையை நடத்தி வருகிறேன். வீட்டு வாடகை, பயன்பாட்டுச் செலவுகள் மற்றும் மருத்துவக் கட்டணங்களைச் செலுத்திய பிறகு, தினசரி உணவு மற்றும் பிற செலவுகளுக்கு ரூ. 700 முதல் ரூ. 800 வரை மட்டுமே எனக்கு மிகுதியாகின்றது’ என அவர் தெரிவித்திருந்தார்.
முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகள் மற்றும் எம்.பிக்களின் ஓய்வூதியங்களை இல்லாதொழிப்போம் என தேசிய மக்கள் சக்தியானது நாட்டு மக்களுக்கு தேர்தல் வாக்குறுதிகளை வழங்கியிருந்தமை முக்கிய விடயம். அந்த வகையில் முன்னாள் ஜனாதிபதிகளின் மற்றும், விதவை மனைவிகளுக்கு (ஹேமா பிரேமதாச மாத்திரமே இதில் அடங்குகின்றார்) வழங்கப்படும் உத்தியோகபூர்வ குடியிருப்புகள், மாதாந்திர கொடுப்பனவுகள், செயலக கொடுப்பனவுகள், போக்குவரத்து மற்றும் பிற வசதிகள் மற்றும் விதவைகளுக்கான ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலமானது
தேசிய மக்கள் சக்தியின் அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் கடந்த ஜுலை மாதம் 31 ஆம் திகதி வர்த்தமானிப்படுத்தப்பட்டது. கடந்த 7 ஆம் திகதி பாராளுமன்றத்திலும் சமர்ப்பிக்கப்பட்டது. எனினும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கான ஓய்வூதியம் என்பது அவர்களுக்கான அரசியலமைப்பு உரிமை என்பதால் அதை இரத்து செய்வதற்கான ஏற்பாடுகள் அதில் இல்லை. மேற்படி சட்டமூலத்தை எதிர்த்து பொதுஜன பெரமுன உயர்நீதிமன்றில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. இந்த சட்டமூலம் நேரடியாக தமது தலைவரான மகிந்த ராஜபக்சவை இலக்கு வைப்பதாகவுள்ளதாக மொட்டு கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
ஆனால் சொந்த வீடுகள் இல்லாத வேறு வருமானங்கள் எதுவுமில்லாத எந்த ஏழை அரசியல்வாதியும் இலங்கை நாட்டின் ஜனாதிபதியாக தெரிவாகவில்லை. 1977 ஆம் ஆண்டுக்குப்பிறகு நாட்டில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தெரிவானவர்கள் அனைவருமே மேல் தட்டு வர்க்கத்தினர். அநுரகுமார மாத்திரம் விதிவிலக்கானவராக உள்ளார். ரணசிங்க பிரேமதாசவும் மைத்ரிபால சிறிசேனவும் சாதாரண குடும்பத்திலிருந்து வந்தாலும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட சந்தர்ப்பத்தில் இருவருமே செல்வந்த நிலையில் இருந்தவர்கள் என்பது முக்கிய விடயம். அனைவருக்குமே சொந்த வீடுகள் அதுவும் பிரமாண்டமாக இருந்தன.
ஜே.ஆர்.ஜெயவர்தனவுக்கு வோர்ட் பிளேசில் பிரீமர் என்ற மாளிகை இருந்தது. ரணசிங்க பிரேமதாசவுக்கு சுசரிதா என்ற பிரமாண்ட வீடு இருந்தது. சந்திரிகா அம்மையார் ரொஸ்மீட் பிளேசில் உள்ள தனது மூதாதையரின் மாளிகை வீட்டை ஹோட்டலாக மாற்றி குத்தகைக்கு கொடுத்து விட்டு அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ வீட்டில் வசித்து வருகின்றார். தான் வசிக்கும் விஜேராம வீட்டை விட தனது அம்பாந்தோட்டை மெதமுலன வலவ்வ சிறந்தது என்று கூறியிருக்கின்றார் மகிந்த ராஜபக்ச.
மேலும் மைத்ரிபால சிறிசேனவுக்கு பொலன்னறுவையிலும் கோட்டாபய ராஜபக்சவுக்கு மிரிஹானவிலும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கொள்ளுப்பிட்டியிலும் சொந்தமான பிரமாண்ட வீடுகள் உள்ளன. எனவே தேசிய மக்கள் சக்தி கொண்டு வந்திருக்கும் முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகள் மற்றும் உரிமைகள் இரத்து சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் எந்த முன்னாள் ஜனாதிபதிகளும் ‘நாம் நடுத்தெருவுக்கு வந்து விட்டோம்’ என்று கூற முடியாது. நந்தன குணதிலக்கவை போன்று நாம் எமது உயிரை மாய்த்துக்கொள்வோம் என பயமுறுத்தவும் முடியாது.
ஆனால் நந்தன குணதிலக்க போன்ற விதிவிலக்கான பல எம்.பிக்கள் இருப்பது அரிதானது. தேசிய கட்சிகள் பாராளுமன்றத் தேர்தல்களுக்கு வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் போது அதில் பணமும் செல்வாக்கும் பிரதான இடத்தை வகிக்கின்றன.
அவர்கள் கட்சிக்காக பல கோடிகளை செலவழிக்கும் ஆதரவாளர்களாகவே கடந்த காலங்களில் இருந்திருக்கின்றனர். பாராளுமன்ற அரசியலை விட்டு விலகியிருந்தாலும் அவர்கள் முன்னரைப் போன்றே சொகுசு வாகனங்களில் வலம் வருபவர்களாகவும் செல்வத்தில் மிதப்பவர்களாகவும் உள்ளனர். எனவே மாதாந்தம் 68 ஆயிரம் வரையான ஓய்வூதியம் கிடைக்காவிட்டால் உயிரை மாய்த்துக்கொள்வோம் என இவர்கள் எக்காலத்திலும் கூற மாட்டார்கள். பாராளுமன்றத்தின் ஐந்து வருடங்களை பூர்த்தி செய்தவர்கள் ஓய்வூதியம் பெறும் அதே வேளை , ஒரு சில அமர்வுகளுக்கு மாத்திரம் தலை காட்டி சென்றவர்கள் , வாயே திறக்காமல் சபையில் அமர்ந்திருந்தவர்களுக்கெல்லாம் மூன்று கோடிக்கு மேல் மதிப்புள்ள சொகுசு வாகனங்களை வாங்குவதற்கு தீர்வையில்லாத அனுமதி பத்திரங்கள் வழங்கப்பட்டன என்பது முக்கிய விடயம்.
இதனால் நாட்டுக்கு ஏற்பட்ட நட்டம் பில்லியன்களை தாண்டும். அநுர அரசாங்கத்தின் இந்த நகர்வுகளை மத்திய தர மற்றும் கீழ்த் தட்டு மக்கள் வரவேற்றுள்ளனர் என்பதை அறியக்கூடியதாக உள்ளது. அதே வேளை மக்கள் தெரிவு செய்த பிரதிநிதிகள் கடந்த காலங்களில் எவ்வாறெல்லாம் வரப்பிரசாதங்களை அனுபவித்தனர், இன்னும் எவ்வாறு அனுபவித்துக்கொண்டிருக்கின்றனர் போன்ற விடயங்களையும் இந்த அரசாங்கம் அம்பலப்படுத்தியுள்ளது.
நாட்டு மக்களில் கணிசமானோர் இந்த திட்டத்தை வரவேற்றுள்ளதாகவே தெரிகின்றது. அவர்களின் மெளனம் இதை வலியுறுத்துகின்றது. ஓய்வூதியம் பெறுவதற்கு சிலஅரசியல்வாதிகள் , நாட்டுக்காகவும் தமது தொகுதி மக்களுக்காகவும் என்ன தான் செய்தார்கள் என்ற கேள்விகளும் அவர்கள் மனதில் எழுந்திருக்கக் கூடும்.
ஓய்வூதியம் பெறும் அனைத்து முன்னாள் எம்.பிக்களும் சொகுசு வாழ்க்கை வாழ்பவர்கள் அல்லர். சிலர் இன்னும் ஏதாவதொரு தொழிலில் தம்மை இணைத்துக்கொண்டுள்ளனர். சிலர் நோய்வாய்ப்பட்டுள்ளனர். அவர்களின் நிலைமைகள் பரிதாபகரமானவை.இவ்வாறானவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு வேறு வழியில் ஏதாவது சிறப்பு சலுகைகளை வழங்க முடியுமா என அரசாங்கம் ஆராய வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன.
No comments:
Post a Comment