Monday, September 24, 2012

மலையகம்



 உலகெங்கும் பரவி வாழும் தமிழர்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம்








உலக தமிழ் வழக்கறிஞர் பேரவையின் இணைப்பாளரும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான  புனித தேவ குமாருடனான நேர்காணல்.

132 நாடுகளில் ஏறத்தாள 25 கோடி தமிழ்மக்கள் இன்று வாழ்ந்து வருகின்றனர். சோகமான விடயம் என்னவெனில் இவர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் எந்த ஒரு அமைப்பும் இது வரை உருவாகவில்லை. 


 தமிழகத்தில் கூட ஒரு சிலர் இந்திய வம்சாவளி மக்களைப்பற்றி கதைக்கும் போது பிழைக்கச்சென்றவர்களுக்கு உரிமைகள் எதற்ககு என காது பட பேசுகிறார்கள்

 26 இலட்சம் இந்திய வம்சாவளி மலையக மக்களை இணைக்கவும் அவர்களின் நலன்களை  பேணவும் அகில உலக இலங்கை மலையக தமிழர் நல இயக்கம் என்ற அமைப்பு விருது நகரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.




இன்று தமிழர்கள் இல்லாத இடமில்லை ஆனால் தமிழர்களுக்கென்று ஒரு இடமில்லை என நாம் அடிக்கடி கூறக்கேட்போம் , தமிழர்களுக்கென்று ஒரு இடத்தை உருவாக்குவதை விட அவர்களை ஒன்றிணைப்பதே இப்போதைய தேவை அதன் ஆரம்பகட்ட முயற்சிகளில் நாம் இறங்கியுள்ளோம் என்கிறார் உலக தமிழ் வழக்கறிஞர் பேரவையின் இணைப்பாளரும் சென்னை உயர்நீதிமன்றத்தின்  சட்டத்தரணியுமான எம்.புனித தேவகுமார். இலங்கை வாழ் தமிழர்கள் பற்றிய தகவல்களை திரட்ட கடந்த வாரம் தமிழகத்திலிருந்து இங்கு வந்திருந்த அவருடனான நேர்காணலை தருகிறோம்.

கேள்வி: முதலில் உங்கள் அமைப்பு பற்றி சுருக்கமாக கூறுங்களேன்
பதில்: உலக தமிழர் வழக்கறிஞர் பேரவையின் நோக்கம் சுமார் 132 நாடுகளில் சிதறி வாழும் தமிழர்களை இனங்கண்டு அவர்கள் குறித்த நாட்டின் ஏனைய சமூகங்களுக்கு இணையாக வாழ்கின்றார்களா என்பதை ஆராய்வதோடு  ,அவர்கள் எதிர்நோக்கும் சகல பிரச்சினைகளுக்கும் சட்ட ரீதியான தீர்வை பெற்றுக்கொடுப்பதாகும். உலக அளவில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் வழக்கறிஞர்கள் உள்ளனர். எமது அமைப்பில் சுமார் 1800 பேர் இது வரை உறுப்பினராகியுள்ளனர். நாம் ஒவ்வொரு நாட்டிற்கும் சென்று அங்குள்ள தமிழர்கள் பற்றி தகவல்களை திரட்டுகிறோம்.

கேள்வி: இலங்கை விஜயத்தின் முக்கிய நோக்கம்?
பதில்:  உண்மையைக்கூறப்போனால் பெருமளவு தமிழர்கள் செறிந்து வாழும் நாடுகளில் இலங்கை முக்கிய இடத்தைப்பிடிக்கிறது. இங்கு வடக்கு கிழக்கு மற்றும் மத்திய பிரதேசங்களில் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். முக்கியமாக தமிழகத்துடன் நேரடி தொடர்புகள் உள்ள இந்திய வம்சாவளி மக்கள் பற்றிய தகவல்களை திரட்டவே மலையகம் சார்ந்த பிரதேசங்களுக்கு செல்ல வேண்டி ஏற்பட்டது. எமது முயற்சிகளில் பிரதானமானது இந்தியாவிலிருந்து பல்வேறு சந்தர்ப்பங்களில்  பல காரணங்களுக்காக வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்து சென்ற இந்திய வம்சாவளி மக்கள் தொடர்பான தகவல்களை திரட்டுவதாகும். அதன்படி சுமார் 180 வருடங்களுக்கு முன்பதாக உழைக்கும் வர்க்கமாக இலங்கை வந்த இந்திய வம்சாவளி மக்கள் பற்றிய தகவல்களோடு இங்கிருந்து மீண்டும் தமிழகம் சென்று வாழ்ந்து வரும் மலையக மக்கள் அத்தோடு இலங்கையிலிருந்து சென்று அந்தமான் மற்றும் மொரிஷியஸ் தீவுகளில் வாழ்ந்து வரும் மக்கள் இதே காலகட்டத்தில் தென்னிந்தியாவிலிருந்து மேற்கிந்திய தீவுக்கூட்டங்களுக்கு சென்றவர்கள் மற்றும் மலேஷியா சென்றவர்கள் என அனைவர் குறித்தும் தகவல்களை திரட்டுகிறோம்.

கேள்வி: முதலில் இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்து வரும் தமிழர்கள் பற்றி தகவல்கள் திரட்டப்பட்டதா?

பதில்: இது ஒரு முக்கியமான கேள்வி தமிழர்கள் அனைவரையும் ஒரு அமைப்பின் கீழ் ஒன்று திரட்டும் முயற்சியில் எமது அயலில் உள்ளவர்களை பற்றிய தேடல் முக்கியமானது. எல்லா இடங்களிலும் தமிழர்கள் செறிந்து வாழ்கின்றார்கள் என்று பெருமைபட்டுக்கொள்ளலாமே ஒழிய அருகில் உள்ளவர்கள் பற்றிய அக்கறை அவர்களுக்கு இருக்கின்றதா என்பது தெரியவில்லை. தமிழகத்தில் கூட பல மாவட்டங்களில் வாழ்ந்து வரும் தமிழர்கள் பல்வேறு காரணங்களுக்காக பிரிந்திருக்கின்றனர், அல்லது பிரித்து வைக்கப்பட்டுள்ளனர் எனலாம். ஒரு பிரதேசத்தில் வாழும் தமிழர்களைப்பற்றி மற்றைய பிரதேச மக்களுக்கு தெரிவதில்லை தெரிந்து கொள்ள அக்கறை படுவதில்லை என்று தான் கூற வேண்டியுள்ளது. இங்கு முக்கியமான ஒரு விடயத்தை கூற வேண்டும் தமிழகத்தில் கூட ஒரு சிலர் இந்திய வம்சாவளி மக்களைப்பற்றி கதைக்கும் போது பிழைக்கச்சென்றவர்களுக்கு உரிமைகள் எதற்கு  என காது பட பேசுகிறார்கள் ,இவ்வாறான செயற்பாடுகள் மிகவும் வேதனையானவை, ஆகவே முதலில் தமிழர்கள் தமக்கிடையே புரிந்துணர்வை ஏற்படுத்த வேண்டும். ஆகவே இந்தியாவின் பல மாநிலங்களுக்குச்சென்று தமிழர்கள் என்றால் யார் அவர்களின் வரலாறு என்ன என்பது குறித்து மட்டுமல்லாது ஒன்று திரள வேண்டியதன் அவசியத்தையும் எடுத்து கூறி வருகின்றோம்.

கேள்வி: தமிழர்கள் என்றால் யார்? அவர்களின் வரலாறு என்ன?

பதில்: பல்வேறு சந்தர்ப்பங்களில் தமிழர்களை திராவிட பரம்பரையினர் என்றே வரலாற்றை திரிபு படுத்துபவர்கள் கூறி வந்துள்ளனர். இக்கூற்றை நாம் முற்றாக மறுக்கிறோம், எதிர்க்கிறோம், இது அப்பட்டமான ஒரு பொய். ஆரியர்கள், திராவிடர்கள் போன்று தமிழர்களும் ஒரு பிரிவினர்.எக்காலகட்டத்திலும் தமிழர்களை திராவிடர்கள் என்று கூற முடியாது தமிழ்மொழி  திராவிட மொழி அல்ல. சங்க காலம் தொடக்கம் இக்காலம் வரை தமிழுக்கும் தமிழர்களுக்கும் வரலாறு தனியே உண்டு. இடையில் வந்த அரசியல் கட்சி தலைவர்களும்  சரி ஏனையோரும் சரி தமிழை திராவிட குடும்பத்தில் சேர்த்து விட்டனர். இதை ஆதாரபூர்வமாக எவ்விடத்திலும் நிரூபிக்க தயார். எவரும் எம்மிடம் கேள்வி எழுப்பலாம்.

கேள்வி: இலங்கையில் வாழ்ந்து வரும் மலையக மக்கள் பற்றி?
பதில்: தென்னிந்தியாவிலிருந்து வருகை தந்த மக்கள் கூட்டத்தில் சுமார் 15 இலட்சம் மலையக மக்கள் இலங்கையில் வாழ்ந்து வருகின்றனர் என்பதை அறிந்துள்ளோம். இது தொடர்பாக தகவல்களை திரட்டுவதற்காக ஜ’ன் ,ஜுலை மாதங்களில் நாமக்கல் மற்றும் கொல்லிமலையில் இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மலையக மக்கள் தொடர்பான ஆய்வரங்கம் ஒன்றை நடத்தினோம். இதில் இலங்கையிலிருந்து பலர் கலந்து கொண்டனர் மேலும் சிறிமா சாஸ்த்ரி ஒப்பந்தத்தில் கீழ் அக்காலகட்டத்தில் இடம்பெயர்ந்து பல மலையக மக்கள் இப்பிரதேசத்தில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களில் முக்கியமான பலர் இந்த ஆய்வரங்கத்தில் கலந்து கொண்டு தமது மக்கள் பற்றிய பல உண்மை தகவல்களை தெரிவித்தனர். இது எமக்கு பல வழிகளிலும் பல விடயங்களை அறிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது. மேலும் அந்தமான் மொரிஷியஸ் போன்ற இடங்களில் இடம்பெயர்ந்து வாழ்ந்து வரும் மலையக மக்கள் பற்றிய ஆய்வை மேற்கொள்ள வழிவகுத்தது.


கேள்வி: இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து சென்று இந்தியாவில் வாழ்ந்து வரும் மலையக மக்கள் பற்றி கூறுவீர்களா?
பதில்: இந்தியாவில் தமிழகத்தில் மட்டும் சுமார் 10 இலட்சம் மலையக மக்கள் வாழ்ந்து வருகின்றனர். தமிழகத்திற்கு வெளியே கேரளா ,ஒரிசா மற்றும் அந்தமான் தீவுகளை எடுத்துக்கொண்டால் ஒரு இலட்சம் பேர் இருக்கின்றனர். இலங்கையையும் சேர்த்துப்பார்த்தால் சுமார் 26 இலட்சத்திற்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளி மலையக மக்களை ஒன்றிணைக்க வேண்டிய கடப்பாட்டை நாம் கொண்டிருக்கிறோம். இவர்கள் பல்வேறு துன்பங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். உரிய அடிப்படை வசதிகள் இல்லை அரசாங்கமும் இவர்களை கண்டு கொள்வதில்லை , பாரபட்சம் காட்டப்படுகிறது. இதற்காகத்தான் விருத நகரை தளமாகக்கொண்டு இயங்கும்படியாக அகில உலக இலங்கை மலையக தமிழர் நல இயக்கம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்புக்கு தலைவராக மலையகத்திலிருந்து சென்று அங்கு வாழந்து வருபவரான   பெரியவர் அந்தோணி  விளங்குகிறார், நுவரெலியாவைச்சேர்ந்து பாலகிருஷ்ணன் செயலாளராகவும் சிவகுரு என்பவர் பொருளாளராகவும் இலங்கை கவிஞர் மல்லியப்பு சந்தி திலகர் ஆலோசகராகவும் கடமையாற்றுகின்றார்கள். இந்த அமைப்பின் பிரதான நோக்கம் 26இலட்சம் மலையகத்தமிழர்களை ஒருங்கிணைத்தல் , நலன்களை பாதுகாத்தல் மற்றும் ஏனைய விடயங்கள் பற்றி ஆராய்தல்.

கேள்வி: அந்தமான் தீவுக்கு செவ்றதாக குறிப்பிட்டீர்கள் அங்கு வாழ்ந்து வரும் மலையக மக்களை சந்தித்தீர்களா?
பதில்: ஆம் சந்தித்தோம் மனம் கலங்கினோம். அந்தமானில் கச்சால் தீவு எனும் இடத்தில் இறப்பர் தோட்டங்களில் பெருமளவு தமிழர்கள் இருக்கின்றார்கள் இவர்களில் 50 இலங்கை தமிழர்கள் வசித்து வருகின்றனர். அட்டனைச்சேர்ந்த சுப்ரமணியம் தலவாக்கலையைச்சேர்ந்த பாலையா என்போரை நாம் சந்தித்தோம். 1964 ஆம் ஆண்டு கச்சால் தீவில் மலையக தமிழர்கள் குடியேறினர். இவர்களுக்கு அக்காலத்திலேயே ஒரு குடும்பத்திற்கு 5 ஏக்கர் காணி சொந்தமாக வழங்கப்பட்டது. ஆனால் கல்வி ,வேலை வாய்ப்பு ஆகிய விடயங்களில் பாரபட்சம் காட்டப்படுகிறது. ஆகவே இது தொடர்பில் பொது நல வழக்கொன்றை அங்கு தொடர்வதற்கு ஆலோசித்து வருகின்றோம்.

கேள்வி: அந்தமானை பற்றி கூறுகின்றீர்கள் தமிழகத்தில் மட்டும் மலையக தமிழர்களுக்கு பாரபட்சம் காட்டப்படவில்லையா?
பதில்: உங்கள் கோபம் எமக்கு புரிகிறது நான் இல்லை என்று கூறவில்லை. இன்னமும் கூட சிலோன்காரர்கள் என்ற நாமத்துடன் இந்த மக்கள் அழைக்கப்பட்டு வருகின்றனர். இவர்களின் முன்னோர்களின் பிறப்பிடம் தமிழகம் தான் என்பதை அங்குள்ளோர் ஏற்க மறுப்பது ஆச்சரியமளிக்கிறது. பொருளாதார ரீதியில் பின் தங்கியுள்ளது மட்டுமன்றி , பிறப்பு பதிவு ,சாதி, குடியுரிமை ஆகிய விடயங்களில் இவர்கள் மீது பாரபட்சம் காட்டப்படுகிறது. அரச அதிகாரிகள் கூட இவர்களை புறக்கணிப்பதாக எம்மிடம் வேதனையோடு கூறுகின்றனர். ஆகவே இவற்றை தீர்த்து வைக்கும் இமாலய பொறுப்பை நாம் ஆரம்பித்துள்ளோம். தகவல்களை திரட்டி வருகின்றோம் அவர்களும் ஏனைய இனத்தவர்களின் உரிமைகளை பெற்றுக்கொள்ளும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

கேள்வி: உலக வாழ் தமிழர்களுக்கு என்ன கூற விரும்புகிறீர்கள்?

பதில்: தமிழன் அயல் நாடுகளின் வசித்து வந்தாலும் தமிழனே ஆனால் அயலவன் தமிழர்கள் மத்தியில் வசித்து தமிழ் பேசினாலும் அயலவனே இந்த தத்துவார்த்த கருத்தை ஒவ்வொரு தமிழனும் புரிந்து கொள்ள வேண்டும். இன்று இந்தியாவிலிருந்து பல நாடுகளுக்கு குடிபெயர்ந்து தமிழனின் அடுத்தடுத்த தலைமுறையினர் தமிழை மறந்து விட்டனர், கலாசாரத்தை பின்பற்றுவதில்லை, எம்மை பொறுத்தவரை தேசியம் முக்கியமில்லை அது நாட்டுக்கு நாடு வேறுபடலாம் ஆனால் பிறப்பால் நாம் தமிழர்கள் என்ற விடயத்தை ஒவ்வொரு தமிழனும் உணர வேண்டும். தமிழர்களின் சக்தியை கடந்த கால வரலாற்றை அறியத்தலைப்பட வேண்டும் இதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் இது தான் எமது கோரிக்கை .

No comments: