Saturday, September 15, 2018


மைதானத்திற்கு உள்ளேயும்
வெளியேயும் இம்ரான் கான்



1997 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இடம்பெற்ற பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் இம்ரான் கானின் பாகிஸ்தான் நீதிக்கான இயக்கம் ஒரு ஆசனத்தைக் கூட பெறவில்லை.1992 ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக்கிண்ணத்தை நாட்டுக்கு பெற்றுக்கொடுத்து விட்டு  96 ஆம் ஆண்டு அரசியல் கட்சியை ஆரம்பித்து அடுத்த வருடமே தேர்தலில் களமிறங்கிய அவருக்குக்கிடைத்த பரிசு அது தான். அச்சந்தர்ப்பத்தில் வெளிநாட்டு ஊடகவியலாளர் ஒருவர் அவரிடம் ‘நீங்கள் ஒரு ஆசனத்தையும் பெறவில்லையே’  என்று கேள்வி எழுப்பினார். அதற்கு இம்ரான் அளித்த பதில் இப்படியாக இருந்தது.. ‘ எனது ஆதரவாளர்கள் வயதில் சிறியவர்கள்  அவர்கள் வளர்வதற்கு சற்று நேரம் கொடுங்கள்’ இப்படியாக இளவயதுடையோரை தன்னுடன் இணைத்து நாட்டின் எதிர்காலத்தைப்பற்றிய புதிய கனவுகளை அவர்கள் மனதில் விதைத்து 22 வருட போராட்டத்தின் பின்னர் இம்ரானுக்குக் கிடைத்த வெற்றியே பிரதமர் ஆசனமாகும். அரசியலில் மட்டுமல்ல தனது கிரிக்கெட் வாழ்க்கையிலும் கூட மைதானத்தில் போராட்டத்தையும் நாகரிகத்தையும் வெளிப்படுத்திய ஒரு பண்பாளராக இம்ரான் கான் விளங்குகிறார்.
ஏனெனில் 1987 ஆம் ஆண்டு உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் முடிவுற்றவுடன் தனது ஓய்வை அவர் அறிவித்திருந்தார். நாடே கலங்கியது. அப்போது பாகிஸ்தானை வழிநடத்திய ஜெனரல் ஸியா உல் ஹக் இம்ரான்கானை அணிக்கு திரும்புமாறு வேண்டுகோள் விடுத்தார். அதை ஏற்று அணிக்கு திரும்பிய இம்ரான் அடுத்த உலகக்கிண்ணத்தை தனது நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து விட்டே ஓய்வை அறிவித்தார்.
இளையோரை இனங்காணுதல்
சரியான நேரத்தில் இளம் வீரர்களை அடயாளம் கண்டு அணிக்கு தேர்ந்தெடுத்ததில் இவருக்கு நிகர் இவரே என அவரை இன்று வரை புகழ்கின்றனர் வசீம் அக்ரம்,வக்கார் யூனுஸ்,ஜாவிட் மியாண்டாட் மற்றும் ரமிஸ் ராஜா ஆகியோர். கல்லூரிகளுக்கிடையிலான ஒரு போட்டியைக்காணச்சென்ற போது வசீமின் வேகப்பந்து வீச்சைக் கண்டு அவரை உடனடியாக தேசிய அணிக்குள் உள்வாங்கினார். மற்றுமொரு உள்ளூர் போட்டியில் மியாண்ட்டையே தடுமாறச்செய்ய பந்து வீச்சாளரை இனங்கண்டு அணிக்கு தெரிவு செய்தார்.அவர் தான் வக்கார் யூனுஸ். அதேவேளை, வக்கார் யூனுஸின் வேகப்பந்தை எந்தவித தடுமாற்றமும் இல்லாது தடுத்தாடிய ஒருவரை அணியின் முதல் வரிசை துடுப்பாட்ட வீரராக்கினார். அவர் தான் இன்ஸமாம் உல் ஹக். அவருடைய தெரிவுகள் எதுவுமே பொய்த்ததில்லை என்கின்றனர் சிரேஷ்ட வீரர்கள். தனக்கு 35 வயதாக இருக்கும் போது 20 வயது வசீம் அக்ரமிடம் தனது வேகம் எடுபடாது என துடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தியவர் இம்ரான். இப்படியாக வசீம், வக்கார், இன்ஸமாமை வளர்த்து விட்டவர் தான் இம்ரான். இவர்கள் மூவருமே பிற்காலத்தில் அணியின் தலைவர்களாக விளங்கி புகழ்பெற்றனர்.   92 ஆம் ஆண்டு உலகக்கிண்ணத்தை அணி கைப்பற்ற காரணமாக இருந்தவர்களில் வசீமும் இன்ஸமாம் உல் ஹக் முக்கியமானவர்கள்.
இறுதிப்போட்டி
1992 ஆம் ஆண்டு இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியும் பலமிக்க இங்கிலாந்து அணியும் மோதின. முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 24 ஓட்டங்களில் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாற களமிறங்கினார் இம்ரான். தலைவனுக்குரிய இன்னிங்ஸை விளையாடினார். அப்போட்டியில் நிதானமாக இவர் விளையாடி 72 ஓட்டங்களைப்பெற்றார்.மறுமுனையில் மியாண்டாட்டுடன் இணைந்து 129 ஓட்டங்களைப் பகிர்ந்தார். இவரது அறிமுகங்களான இன்ஸமாம் மற்றும் வசீம் ஆகியோர் இறுதி நேரத்தில் மொத்தமாக 75 ஓட்டங்களை அணிக்குப் பெற்றுக்கொடுக்க, பாகிஸ்தான் 249 ஓட்டங்களைப்பெற்றது. வலுவாக இருந்த இங்கிலாந்துக்கு இது சாதாரண ஓட்ட எண்ணிக்கை தான்.ஆனால், அசராமல் வசீம் மற்றும் முஸ்டாக்கை களமிறக்கி முக்கிய விக்கெட்டுகளை வீழச்செய்து 227 ஓட்டங்களில் இங்கிலாந்தை ஆட்டமிழக்கச்செய்தார். இப்போட்டித்தொடரின் ஆரம்பத்தில்  இம்ரானை ஏனைய அணிகள்  பொருட்படுத்தவில்லை. ஏனெனில், அப்போது அவருக்கு வயது 40. இந்த வயதில் இவர் என்ன செய்யப்போகிறார் என்று அலட்சியப்போக்கு இருந்தது என்னவோ உண்மை.எனினும் தனது அணியை இறுதிப்போட்டி வரை கொண்டு சென்று உலகக்கிண்ணத்தை வென்று கொடுத்து தான் ஒரு கிரிக்கெட் போராளி என்பதை நிரூபித்தார் இம்ரான். 19 வயதில் எந்த இங்கிலாந்து அணிக்கு  எதிராக தனது முதல் போட்டியை ஆரம்பித்தாரோ சரியாக 21 வருடங்களுக்குப்பிறகு அதே அணியை உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் வீழ்த்தி பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் என்றும் பேசப்படும் ஒருவரானார்.
 அதே போன்று 1997 ஆம் ஆண்டு முதல் தேர்தலில் முகங்கொடுத்து ஒரு ஆசனத்தையும்பெறாத நிலையில் தோல்வியில் துவண்டு விடாது சரியாக காய்களை நகர்த்தி,  21 வருடங்கள் கழித்து நாட்டின் பிரதமர் ஆசனத்தைக் கைப்பற்றி தான் ஒரு அரசியல் போராளி என்பதையும் நிரூபித்துள்ளார்.
எளிமையை விரும்பும் இம்ரான்
மைதானத்திற்கு உள்ளே பல வீரர்களுக்கும் இரசிகர்களுக்கும் சிறந்த கிரிக்கெட் வீரராக இருந்த இம்ரான், அரசியல் பாதையில் உச்ச பதவியை அடைந்தும் எளிமையை வெளிப்படுத்தியுள்ளார். பிரதமர் வாசஸ்தலத்தில் குடியேற மாட்டேன் எனத்தெரிவித்துள்ள அவர், இஸ்லாமாபாத்தில் அமைச்சர்களின் குடியிருப்புகளில் ஒன்றில் வசிக்கப்போவதாக அறிவித்துள்ளார்.மேலும் தனது அமைச்சரவையில் அனுபவமும் அறிவும் கொண்ட இளம்   வயதுடையோரை தேர்ந்தெடுத்துள்ளார்.
போராட்டப்பாதை
பெரும்பான்மை இல்லாத காரணத்தால் எதிர்க்கட்சிகளின் நெருக்கடி இம்ரானுக்கு இருக்கும். அதே வேளை தலிபான்களுக்கு அடைக்கலம் கொடுத்து வருவதாக பாகிஸ்தான் மீது குற்றஞ்சாட்டியுள்ள அமெரிக்கா சில நிதி உதவிகளையும் இரத்துச் செய்துள்ளது. பரம வைரியான இந்தியாவையும் சமாளிக்க வேண்டிய தேவை இம்ரானுக்கு உள்ளது. ஏனெனில் மும்பை குண்டுத்தாக்குதலின் சூத்திரதாரியின் மரண தண்டனைப்பற்றி அப்போது அவர் விமர்சித்திருந்தார்.
எனினும் இம்ரானின் வெற்றிக்கு இந்தியப் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். கடந்த வாரம் தன்னை  சந்தித்த அமெரிக்க தூதுவரிடம்,  எங்களது அரசாங்கம்  அமெரிக்காவுடன் சமநிலையான, நம்பகத் தன்மையுடன் கூடிய உறவை வளர்ப்பதில் ஈடுபடும். அமெரிக்காவுடனான வர்த்தகம் மற்றும் பொருளாதார உறவுகளை நாங்கள் பெரிதும் மதிக்கிறோம்’ என்று தெரிவித்திருந்தார் இம்ரான். அதே நேரம் வெற்றி பெற்றவுடன் சீனாவைப் புகழ்ந்து தனது இராஜதந்திரத்தை வெளிப்படுத்தவும் அவர் தவறவில்லை. சீனாவை முன்மாதிரியாகக்கொண்டே புதிய பாகிஸ்தானை உருவாக்கப்போகின்றோம். ஏனெனில், சீனா  தனது திட்டங்களால் 70 கோடி  மக்களை வறுமையிலிருந்து மீட்டுள்ளது. இது எமக்குக்கிடைத்திருக்கும் சந்தர்ப்பம் என்று இம்ரான் கூறியிருந்தார். இந்தியாவும் அமெரிக்காவும் இல்லாவிட்டால் என்ன ஆசிய வல்லரசான சீனாவுடன் கைகோர்த்து பயணிக்கத்தயார் என்று மறைமுகமாகக்குறிப்பிட்டாரோ தெரியவில்லை. ஒரு முறை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் பிரபல வீரருமான மன்சூர் அலிகான் பட்டோடி ஒரு தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ‘Either lead from front or push from back’ என்று குறிப்பிட்டிருந்தார். "முன்னோக்கிச்சென்று அனைவரையும் வழிநடத்த வேண்டும் அல்லது பின்னாலிருந்து ஊக்கப்படுத்த வேண்டும் இது தான் ஒரு தலைவனுக்கு அழகு" என்றார். கிரிக்கெட் வாழ்க்கையில் அனைவரையும் ஊக்கப்படுத்தி வளர்த்து விட்ட இம்ரான், இப்போது ஒரு அரசியல்வாதியாக முன்னாலிருந்து நாட்டை வளப்படுத்தப் போகிறார். பட்டோடியின் கூற்று நூற்றுக்கு நூறு வீதம் இம்ரான் கானுக்கே பொருந்துகிறது.









No comments: