யுத்த காலத்தில் யாருக்கும் தெரியாதபடி திடீரென குண்டுகள் வெடித்தன. எவரும்
எதிர்பாராத முறையில் பல உயிர்கள் கொல்லப்பட்டன. அதன் காரணமாக பாதுகாப்புகள்
பலப்படுத்தப்பட்டன. ஆனால் இப்போது
தெரிந்தே தினமும் நூற்றுக்கணக்கான
உயிர்களை எமது நாடு பலிகொடுத்துக்கொண்டிருக்கின்றது. எனினும் இதை தடுப்பதற்குரிய
எந்த வித ஏற்பாடுகளையும் செய்யாது நீங்களே உங்களை பாதுகாத்துக்கொள்ளுங்கள் என்று
ஒரு அரசாங்கம் கூறலாமா?
கிட்டத்தட்ட எல்லா நாடுகளையும் ஆக்கிரமித்து உயிர்ச் சேதங்களை ஏற்படுத்தியுள்ள கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க வைத்தியர்கள் இரவு பகலாக போராடி வருகின்றனர். அது அவர்களின் சத்தியபிராமாணத்துக்கு வழங்கும் கெளரவமாகும். தொற்றால் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் இது உயிர் காக்கும் தொழில் என்பதால் அவர்களுக்கு வழங்க வேண்டிய சகல வசதிகளையும் அந்தந்த நாட்டின் அரசாங்கங்கள் ஏற்படுத்திக் கொடுத்துள்ளன. தீர்மானங்களை எடுக்கும் அதிகாரத்தையும் வழங்கியுள்ளன.
ஆனால் அதிலிருந்து மாறுபட்ட ஒரே ஒரு நாடாக இலங்கை விளங்குகின்றது. நோய்த்தொற்று , அது தொடர்பான சுகாதார வழிகாட்டல் திறன்கள் , நிர்வாக செயற்பாடுகளில் தேர்ச்சியும் முதிர்ச்சியும் பெற்ற வைத்திய குழாம் எமது நாட்டில் உள்ளது. எல்லாவற்றையும் விட இப்படியானவர்கள் தற்போதைய அரசாங்கத்திலும் இருக்கின்றனர். ஆனால் இவை எல்லாவற்றையும் ஒரு பக்கம் ஒதுக்கி வைத்து விட்டு சுகாதாரத் துறையுடன் சம்பந்தப்படாதவர்களுக்கு இத்துறையை வழங்குவதில் அக்கறை காட்டி வருகின்றது அரசாங்கம். தேர்ச்சி பெற்ற வைத்தியரான சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே கொவிட் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சராக மட்டுமே விளங்குகிறார். அவரது அனைத்து ஆலோசனைகளும் புறக்கணிக்கப்படுகின்றன. ஆரம்பத்தில் சுகாதார அமைச்சராக பவித்ரா வன்னியாராய்ச்சி நியமிக்கப்பட்டவுடன் பலத்த விமர்சனங்கள் எழுந்தன. இத்தொற்றை கட்டுப்படுத்துவதற்குரிய எந்த வித நடவடிக்கைகளையும் அவரால் எடுக்க முடியாதிருந்தது. ஏனென்றால் ஜனாதிபதி கொவிட் செயலணியை இராணுவ தளபதியின் கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தார். அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கமானது தொடர்ச்சியாக நாட்டின் நிலைமை குறித்து அரசாங்கத்துக்கு விளங்கப்படுத்தி வந்தாலும் இதையெல்லாம் ஒரு பொருட்டாக எவரும் எடுத்துக்கொள்ளவில்லை.
நாளுக்கு நாள் அதிகரித்த விமர்சனங்கள் காரணமாக கடந்த வாரம் அமைச்சரவையில் மாற்றங்கள் இடம்பெற்றாலும் சுகாதார அமைச்சானது மீண்டும் அது தொடர்பில் எந்த வித அனுபவங்களோ இல்லாத முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கே வழங்கப்பட்டுள்ளது. சில வாரங்களுக்கு முன்னர் நாட்டின் நிலைமைகள் குறித்து இவர் கூறிய கருத்து பலருக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருந்தது. ‘ஒன்றும் முடியாவிட்டால் நாட்டை கடவுளிடம் தான் ஒப்படைக்க வேண்டும்’ என இவர் ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்திருந்தார். இப்போது நாட்டின் சுகாதாரத் துறையை ஜனாதிபதி இவரிடம் ஒப்படைத்திருக்கின்றார். கடந்த வருடம் ஒரு சந்தர்ப்பத்தில் இவர் தான் ‘புலிகளை தோற்கடித்த எங்களுக்கு கொரோனா எல்லாம் ஒரு பொருட்டே அல்ல’ என்று வீர வசனம் பேசியிருந்தார்.
ஆரம்பத்தில் தேசிய சுகாதார சேவைகள் பணிப்பாளராக விளங்கிய டாக்டர் அனில் ஜாசிங்க சம்பந்தமில்லாது தற்போது சுற்றாடல் அமைச்சின் செயலாளராக பணி புரிகின்றார்.நோயாளிகளை எந்த நிலையிலும் பாதுகாப்பேன் அவர்களின் உயிரை இறுதி முயற்சிவரை காப்பாற்ற போராடுவேன் என ஒரு வைத்தியராக சத்தியபிரமாணம் எடுத்துக்கொண்ட இராஜாங்க அமைச்சர் டாக்டர் சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளே ஒரு கட்டத்தில் நாட்டு மக்களுக்கு விடுத்திருந்த செய்தி மிக முக்கியமானது. ‘அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதிக்கும் என்று எதிர்ப்பார்ப்பதற்கு முன்பதாக மக்கள் தாமே தமது உயிர்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்” என்று அவர் கூறியிருந்தார். தனது மனசாட்சியை ஒரு பக்கம் கழற்றி வைத்து விட்டு அவர் அப்படி கூறியிருக்கின்றார். ஏனென்றால் அப்படித்தான் அவருக்கு சொல்லப்பட்டிருக்கின்றது.
கொரோனா நிலைமைகள் பற்றிய எந்த ஒரு அறிவையும் கொண்டிராத சில அரசியல்வாதிகள் வைத்தியர்களாக மாறி மறு பக்கம் அறிக்கை விட்டுக்கொண்டிருக்கின்றனர். ஆனால் அது பற்றிய பூரணமான தெளிவும் அறிவும் கொண்ட அரசாங்கத்தின் பக்கம் இருக்கக் கூடிய வைத்தியர்கள், நோயியல் நிபுணர்கள், பேராசிரியர்களோ மக்களிடம் நீங்களே உங்களை பாதுகாத்துக்கொள்ளுங்கள் என்று மனதுக்குள் அழுதபடி ஒலிவாங்கியின் முன்பாக சிரித்து பேச முயற்சிக்கின்றனர்.
போரை முடிவுக்கு கொண்டு வந்தோம் என்ற கோஷங்களுடன் மாத்திரமே ஆரம்பத்தில் மஹிந்தவும் தற்போது கோத்தாவும் ஆட்சியை கைப்பற்றியுள்ளனர். ஆனால் யுத்த காலத்தில் தினந்தோறும் கொல்லப்பட்டவர்களை விட யுத்தமில்லாத இந்த காலத்தில் நாட்டு மக்கள் கொத்து கொத்தாக செத்து மடிகின்றனர். இதற்கு பாதுகாப்பு அரணாக செயற்பட வேண்டியது இராணுவ ஜெனரல்களின் வியூகங்களல்ல…..மாறாக வைத்தியர்களின் ஆலோசனைகளே. அரசாங்கத்தின் பக்கமிருக்கும் விசேட நோயியல் தொடர்பான பேராசிரியர் திஸ்ஸ விதாரண மற்றும் டாக்டர் சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளே இருவருக்கும் அந்த வாய்ப்புகளை நிச்சயமாக அரசாங்கம் வழங்கப்போவதில்லை. ஏனென்றால் யார் எந்த துறையை சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களை அரசியல்வாதிகளாக வைத்திருக்கவே அரசாங்கம் விரும்புகின்றது. ஒலிவாங்கிகளின் முன்பதாக அவர்கள் தமது துறை சார்ந்தவர்களாக சில உண்மைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு இந்த அரசாங்கம் விரும்பாது. அது இன்னும் அரசாங்கத்தை பலவீனமாக்கும். புதிய சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய, மஹிந்த காலத்திலேயே ‘கோயபல்ஸ்’ என வர்ணிக்கப்பட்டவர். மக்களுக்கு எதிரான சம்பவங்களையும் செய்திகளையும் ஏன் பொய்களையும் கூட, மக்கள் நம்பும்படியாக அவர்களிடம் கொண்டு சேர்க்கும் கலையை ஹிட்லரின் பிரசார செயலாளராக விளங்கிய கோயபல்ஸ் முன்னெடுத்திருந்தார். ஆக அப்படியான ஒருவரே இன்று சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பேற்றிருக்கிறார்.
இறுதி நேரத்தில் அமைச்சர் பவித்ரா நேரடியாகவே ஜனாதிபதியிடம் நாட்டின் நிலைமை குறித்து எடுத்துக் கூறியும் கிண்டல் தொனியில் ஜனாதிபதியிடமிருந்து பதில் கிடைத்ததாகவே தெரியவருகின்றது. தனது அமைச்சுப் பதவியை விட்டு போகும் போது பவித்ரா “நடப்பதெல்லாம் நன்மைக்கே ‘ என்ற பொருள் பட ஒரு குட்டிக்கதையையும் கூறி விட்டுச் சென்றிருக்கிறார். தொற்றை கட்டுப்படுத்த ஆரம்பத்தில் எடுக்க வேண்டிய சில முக்கியமான முடிவுகளை விடுத்து தற்போது அரசாங்கம் திருமண நிகழ்வுகளுக்கு கட்டுப்பாடு விதித்தல், போக்குவரத்து கட்டுப்பாடுகள் என சிறுபிள்ளைகளும் சிரிக்கும் வண்ணம் உத்தரவுகளை பிறப்பிக்கின்றது. நாட்டின் அனைத்து அரச வைத்தியசாலைகளும் செயலற்ற நிலையில் உள்ள அதே வேளை . மக்கள் தமது தலை விதியை நினைத்து தமது உறவினர்களை பறிகொடுத்து வருகின்றனர். பொறுப்பான ஒரு சுகாதார அமைச்சர் என்ற பதவியிலிருந்த பவித்ரா அம்மணி தனக்கு பதவி பறி போனதை மட்டும் சுட்டிக்காட்டி நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று கூறியிருப்பது எவ்வளவு சுயநலமிக்க வார்த்தைகள்? அப்படியானால் நாள்தோறும் சராசரியாக இருநூறு பேர் வரை இறந்து கொண்டிருக்கின்றனரே? அதுவும் நன்மைக்குத் தான் என்று நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்வார்களா? உயிரை காக்கும் வைத்தியர்கள் ஏற்றுக்கொள்வார்களா? எப்படியானதொரு அரசியல்வாதிகள் மத்தியில் நாடு அகப்பட்டுக்கொண்டிருக்கின்றது என்பதை இப்போது மக்கள் உணர்ந்திருப்பர். ஆனால் நாம் கூற வேண்டியது ஒன்று தான். காலம் கடந்த விட்டது !
சிவலிங்கம் சிவகுமாரன்
No comments:
Post a Comment