Wednesday, January 19, 2022

அட்டன் நகர் வாழ் மக்களுக்கு சுகாதார சேவைகள் கிடைக்கின்றனவா?

 

 

நுவரெலியா மாவட்டத்தில்   பிரதேச செயலகங்கள் , பிரதேச சபைகள் மட்டுமின்றி இன்னும் சில மக்கள் சேவை வழங்கும்  அரச நிறுவன கட்டமைப்புகளும் அதிகரிக்கப்படல் வேண்டும்  என்பது இந்த மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல்வாதிகளுக்கும் நன்கு தெரியும்.  ஆனால் மக்களுக்கு எது அவசியமோ அதை செய்யாமலிருப்பது தான் மலையக அரசியலாக உள்ளது.

பெருந்தோட்டப்பகுதிகளின் சுகாதார சேவைகள் எந்தளவுக்கு மந்தமாக இருக்கின்றன என்பதற்கு  பல தோட்டப்பகுதிகளில் வளங்களின்றி இயங்கி வரும் டிஸ்பென்சரிகளே  சாட்சிகளாக இருக்கின்றன. தோட்ட வைத்தியசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்கும் திட்டம் வெற்றியளிக்கவில்லை.

தோட்ட உதவி வைத்திய அதிகாரிகள் என்ற பிரிவினர் இல்லாவிட்டால், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நிலைமையை நினைத்துப்பார்க்க முடியாது. அதே போன்று பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள பிரதான நகரங்களில்   சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்கள் (MOH) கடந்த காலங்களில் ஆரம்பிக்கப்பட்டன. நகரங்கள் மற்றும் அதனை  அண்டிய தோட்டப்பகுதி மக்களில் , குறிப்பாக கர்ப்பிணித்தாய்மார்களுக்கான கிளினிக் மற்றும் தடுப்பூசிகள் பெறல், குழந்தைபேறுக்கு பின்னர் தாய்–சேய் பராமரிப்பு ஆலோசனைகள் , குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் என இன்னோரன்ன சேவைகளை இதன் மூலம் பெற முடிந்தது. எனினும் நுவரெலியா மாவட்டத்தில் அதிக சனத்தொகை கொண்ட பிரதேச செயலகப்பிரிவுகளாக அம்பகமுவையும் நுவரெலியாவும் உள்ளன.  இங்கு  13  சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளே உள்ளன. சுமார்  7 இலட்சத்து 90 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட நுவரெலியா மாவட்டத்தில் கடந்த காலங்களில் கொவிட் –19 தடுப்பூசிகளை விரைவாக வழங்க தாமதம் நிலவியமைக்கு இதுவும் ஒரு பிரதான காரணமாகும்.

நுவரெலியா மாவட்டம்

குறித்த ஒரு பிரிவில் அமைந்துள்ள  சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயமே அப்பிரதேசத்தின் பொது சுகாதாரம் தொடர்பான சகல விடயங்களுக்கும் பொறுப்பாக விளங்குகின்றது. பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும்  குடும்ப நல உத்தியோகத்தர்களின் சேவைகள்  அளப்பரியன. நுவரெலியா மாவட்டத்தின் மொத்த சனத்தொகையில் 53 வீதத்துக்கும் மேற்பட்டோர் பெருந்தோட்டத்தொழிலாளர்களாவர். மேற்குறிப்பிட்ட  13   சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் அதிக சனத்தொகையை கொண்ட  சுகாதார பிரிவாக (MOH)   அம்பகமுவ உள்ளது.  இப்பிரிவின் மக்கள் தொகையின் எண்ணிக்கை சுமார்  தற்போது சராசரியாக 1 இலட்சமாகும்.  அதே வேளை மிகக்குறைந்த மக்கள் தொகை கொண்ட சுகாதார வைத்திய பிரிவாக வலப்பனை உள்ளது. இப்பிரிவின் சனத்தொகை  47,978 ஆகும்.  இந்த தரவுகளின் அடிப்படையில் அம்பகமுவ பிரதேசம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, பிரதான நகரமாக உள்ள அட்டன் நகரத்தின் மையப்பிரதேசத்தில் ஒரு பிரதான   சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் உருவாக்கப்படல் வேண்டும் என ஆரம்பத்திலிருந்தே கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அது குறித்து எவரும் அலட்டிக்கொள்ளாத நிலைமைகளே உள்ளன. கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் கீழ் வயது அடிப்படையில் தடுப்பூசிகள் வழங்கப்பட்ட போது பிரச்சினைகள் வெளிவரவில்லை.

ஆனால் மூன்றாவது தடுப்பூசியான பூஸ்டர் வழங்கும் போது அதிக அம்பகமுவ பிரதேச செயலகப்பிரிவின் பல நகரங்கள் சிக்கல்களை எதிர்நோக்கின. அட்டன்– டிக்கோயா நகரசபை எல்லைக்குட்பட்ட பகுதியில் வாழ்ந்து வரும் 30–60 வயதுக்கிடைப்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி வழங்கும் நிகழ்வு கடந்த வாரமளவில் இடம்பெற்றது. சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் கினிகத்தேனை நகரில் உள்ளது.  அங்கிருந்து சுகாதார உத்தியோகத்தர்கள்  அட்டன் நகருக்கு வந்து சேர்வதற்கே 10 மணியாகிவிட்டது. அன்று வியாழக்கிழமையாதலால் பலரும் தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பி விட்டு காலை 7 மணியிலிருந்து தடுப்பூசி வழங்கும் மண்டபத்தின் முன்பாக வரிசையில் நின்று கொண்டிருந்தனர். ஏனென்றால் அதற்கு முதல் நாள் மாலை நகரசபையானது காலை 8 மணியிலிருந்து தடுப்பூசி வழங்கப்படும் என நடமாடும் ஒலிபெருக்கி சேவையை முன்னெடுத்திருந்தது. தடுப்பூசி வழங்க ஆரம்பித்த போது வரிசையில் நிற்பவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை அண்மித்து விட்டது. ஒரு கட்டத்தில் நகர சபை லொறியில் சுகாதார உத்தியோகத்தர்கள் வந்திறங்கினர். அட்டன் நகரில் ஒரு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் இருந்திருந்தால் இந்நிலைமை ஏற்பட்டிருக்காது.

அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவில் அம்பகமுவவை தவிர்த்து பொகவந்தலாவை மற்றும் மஸ்கெலியா ஆகிய இரண்டு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளே உள்ளன. நுவரெலியா மாவட்டத்தில் உள்ள இரண்டு நகரசபைகளில் அட்டன்– டிக்கோயா நகர சபையும் ஒன்று. ஆனால் இந்த நகரில்  ஒரு பிரதேச வைத்தியசாலை கூட இல்லை.  பண்டாரநாயக்க டவுண் பகுதியில் ஒரு ஆரம்ப மருத்துவ பராமரிப்பு பிரிவு (Primary Medical Care Unit)  மட்டுமே உள்ளது.  இந்த பிரிவானது சுகாதார வைத்தியர் காரியாலயத்தின் நிர்வாகத்தின் கீழேயே வர வேண்டும். ஆனால் அட்டன் நகரில் அக்காரியாலயம் இல்லாததால் நுவரெலியா  பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயம் (RDHS)  இதை நிர்வகிக்கின்றது. இவ்வாறு தான் அட்டன் நகரின் சுகாதார  சேவைகளின் நிலைமைகள் உள்ளன.  அட்டன் நகரில் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் இல்லாததற்கு பிரதான காரணமே இங்கு வைத்தியசாலை ஒன்று இல்லாததாகும். ஏனென்றால் அட்டன் நகரை விட சனத்தொகையில் குறைந்த கொட்டகலை , லிந்துலை , பொகவந்தலாவை, மஸ்கெலியா, ராகலை ஆகிய  நகரங்களில் பிரதேச வைத்தியசாலைகள் இருக்கின்ற  காரணங்களினாலேயே  அங்கு MOH காரியாலயங்கள் உருவாகின என்றால் மிகையாகாது.     150 வருடங்களுக்கு மேல் பழைமை வாய்ந்த ஒரு நகரத்தில்  அதுவும் உள்ளூராட்சி சபைகளில் நகர சபையாக விளங்கும் அட்டன்– டிக்கோயா பிரதேசத்தில் ஒரு பிரதேச வைத்தியசாலையை உருவாக்குவதற்கு எந்த அரசியல் சக்தியும் ஆர்வம் காட்டவில்லை. இருக்கின்ற ஒரே ஆரம்ப மருத்துவ பராமரிப்பு பிரிவையும் தரம் உயர்த்துவதற்கு எவரும் சிந்திப்பதாக இல்லை. ஆனால்  நகர சபையை மாநகர சபையாக்க வேண்டும் என பல தடவைகள் பிரேரணைகள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன.  

இங்கு வாழ்ந்து வரும் மக்களுக்கு முதலில் அடிப்படைத் தேவை என்ன என்பது குறித்து பிரதேச அரசியல் பிரமுகர்களும் அவர்களை வைத்து அரசியல் செய்யும் பாராளுமன்ற உறுப்பினர்களும் எப்போதும் சிந்திப்பதில்லை. அதன் காரணமாகவே நகர சபை எல்லைக்குட்பட்ட மக்கள் கிளங்கனில் அமைந்துள்ள ஆதார வைத்தியசாலைக்கு படையெடுக்கின்றனர்.  அந்த வைத்தியசாலையை தரமுயர்த்துவதற்குக் கூட இந்தியா தான் நிதியுதவி வழங்கியது.  மாகாண சுகாதார அமைச்சிடமோ அல்லது திணைக்களத்திடமோ சில விடயங்களைக் கேட்டுப்பெறுவதற்கே இங்கு எவருக்கும் தைரியமில்லாத போது யார்  மத்திய அரசாங்கத்திடம் கதைக்கப்போகின்றனர்? உள்ளூராட்சி சபைகளின் ஆயுட்காலம் அடுத்த மார்ச் மாதம் வரை  நீடிக்கப்பட்டுள்ளது. அட்டன் நகரில் ஒரு MOH காரியாலயம் அமைக்கப்படல் வேண்டும் என நகர சபையில் இதற்கு முன்னர் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால் அதை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்லும் முயற்சிகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை.

  சிறுவர்கள் விளையாடுவதற்கு பூங்காக்கள் தேவைதான், ஆனால் சிறுவர்களும் அவர்களின் பெற்றோர்களும் உரிய சுகாதார வசதிகளைப் பெற்றுக்கொள்வதற்கும் கட்டமைப்புகள் அவசியமல்லவா?

MOH பிரிவு

பொது சுகாதார பரிசோதகர் பிரிவு              

பொது சுகாதார   குடும்ப நல  உத்தியோத்தர்  பிரிவு    

மாவட்ட

ஆதார     வைத்தியசாலை 

பிரதேச               வைத்தியசாலை  

ஆரம்ப மருத்துவ

பராமரிப்பு பிரிவு

1

அம்பகமுவை

6

41

3

3

2

பொகவந்தலாவை

2

20

1

3

ஹங்குரான்கெத்த

3

30

1

3

4

கொட்டகலை

3

25

1

5

கொத்மலை

3

25

2

2

6

லிந்துலை

4

31

3

7

மஸ்கெலியா

3

25

1

1

1


No comments: