Wednesday, January 19, 2022

உணவுக்கு இந்தியா – உறவுக்கு சீனா….!

  2500 வருடங்களுக்கு மேலான  இந்தியாவின் பாரம்பரிய வரலாற்று உறவை விட 65 வருட சீனாவின் இராஜதந்திர நட்பில் வீழ்ந்து கிடக்கின்றது இலங்கை அரசாங்கம். இல்லாவிட்டால் ‘சீனா எங்களின் உயிர்த்தோழன் ‘ என விளித்திருப்பாரா பிரதமர் மஹிந்த?  சீனாவின் வெளிவிவகார அமைச்சர் வாங் யீ யின் இலங்கை விஜயத்துக்குப்பிறகு சீன –இலங்கை உறவில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை விட, முன்னதாக இந்த அரசாங்கத்தில் சீனாவுடன் உருவான உர வர்த்தக முரண்பாடும் தீர்த்து வைக்கப்பட்டிருக்கின்றது எனலாம்.

இலங்கைக்கும் சீனாவுக்குமிடையே இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்ட 65 வருட பூர்த்தி மற்றும் இறப்பருக்குப் பதிலாக அரிசி ஒப்பந்தத்தின் 70 ஆண்டுகால நிறைவு ஆகியவற்றை முன்னிட்டு கொழும்பு துறைமுக நகரில் கடந்த வாரம் இடம்பெற்ற நிகழ்வில், ஜனாதிபதி கோட்டாபய , பிரதமர் மஹிந்த,  சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ ஆகியோர் உட்பட அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்களும் பங்கு கொண்டிருந்தனர்.

இங்கு உரையாற்றியிருந்த பிரதமர் மஹிந்த, சீனா எமது உயிர்த்தோழன், வரலாற்றில் எவ்விடத்திலும் எம்மத்தியில் மனக்கசப்புகள் நேர்ந்ததில்லை என்று அழுத்தி உரைத்திருந்தார். வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தரும் தலைவர்கள் அல்லது பிரதிநிதிகள் பங்கேற்பு நிகழ்வில், குறித்த நாடுகளுடனான வரலாற்று சம்பவங்கள் மற்றும்  இராஜதந்திர நட்பு, உதவிகள் போன்றவற்றை நினைவு கூர்ந்து அவர்களை உச்சி குளிர செய்வது ஒரு அரசியல் பண்பாடாகும். ஆனால் சீனாவுடனான நட்பு குறித்து பேசுகையில் ராஜபக்ஸ அரசாங்கம் ஒரு படி மேலே சென்று விட்டது.

அதற்குக் காரணம் இருநாடுகளுக்குமான 65 வருடங்களுக்கும் மேற்பட்ட  இராஜதந்திர மற்றும் வர்த்தக உறவில்  முதல் தடவையாக சீனா,  இலங்கையின் அரச வங்கியொன்றை கறுப்புப் பட்டியலில் சேர்த்தமையாகும். அதற்குக் காரணம்  சீனா ஏற்றி வந்த இரசாயன  உரக்கப்பலை  இலங்கை  திருப்பி அனுப்பியமையாகும்.  இது சீனாவுக்கு பெரும் கெளரவ குறைச்சலை ஏற்படுத்திய சம்பவமாகி விட்டது. ஏனென்றால்  ஆசிய வல்லரசான சீனாவின் உதவியை குட்டி நாடான இலங்கை எப்படி மறுக்கலாம்? குறித்த இரசாயன உரத்தில் ஆபத்தான பக்ரீயாக்கள் இருப்பது பரிசோதனைகளில் இருந்து தெரியவந்ததையடுத்து, உள்ளூரில் விவசாயத்துறை சார்ந்த அமைச்சு மற்றும் ஏனையோரின் அழுத்தங்கள் காரணமாக  சீனாவின் இரசாயன உரத்தை இலங்கை பெற்றுக்கொள்ளாது, கப்பலை திருப்பி அனுப்ப வேண்டி.யேற்பட்டது.

இவ்விடயத்தில் விவசாயத்துறை அமைச்சர் மகிந்தானந்த சற்று கண்டிப்புடன் இருந்தார். இதற்கு மறுப்பு கூற முடியாத சங்கடத்தில் ஜனாதிபதி கோட்டாபய இருந்தமைக்குக் காரணம் அவர் தான் இலங்கையில் இரசாய உர பயன்பாட்டை இல்லாதொழிக்கும் தீர்மானத்தை எடுத்திருந்தார். எனினும்  நாடு முழுதும் உள்ள விவசாயிகளிடமிருந்து எழுந்த எதிர்ப்பலைகள் காரணமாகவும் நாட்டில் உணவுத்தட்டுப்பாடு ஏற்பட்டதும் இரசாயன உரத்தை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இறக்குமதி செய்யும் நிர்பந்தத்துக்கு அவர் தள்ளப்பட்டார். அப்படியான சூழ்நிலைகளிலேயே மேற்படி சீன உரக்கப்பல் இலங்கையை நோக்கி புறப்பட்டிருந்தது. எனினும் அந்த உரத்தில்  ஆபத்தான உள்ளீடுகள் இருப்பது உறுதி செய்யப்பட்டதால் கப்பலை கொழும்பு துறைமுகத்தில் நங்கூரம் இடுவதற்கான அனுமதியைக் கூட துறைமுக அதிகார சபை வழங்கியிருக்கவில்லை.

  மக்கள் வங்கியை கறுப்புப் பட்டியலில் சேர்த்த சீனா

நாம் எதைக்கொடுத்தாலும் இலங்கைப் பெற்றுக்கொள்ளும் என்ற எண்ணத்திலிருந்த  சீனா, உரக் கப்பல் விவகாரத்தில் சீற்றம் கொண்டது. இருநாடுகளுக்குமிடையிலான  வர்த்தக உறவுகளில் இது தாக்கத்தை ஏற்படுத்தியது.  உர கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இருநாடுகளுக்குமிடையேயான வர்த்தக ஒப்பந்தத்தின் படி, கடன்சான்று பத்திரத்துக்கான கொடுப்பனவை செலுத்தும்படியும் , உரக்கப்பலுக்கான நட்டஈடை கோரியும் சீனா குறித்த உர நிறுவனங்கள் ஊடாக இலங்கைக்கு நெருக்கடியை வழங்கியது மட்டுமின்றி அவ்வாறு கடன் சான்று பத்திரத்துக்கான கொடுப்பனவை செலுத்தாத அரச வர்த்தக வங்கியான மக்கள் வங்கியை தனது கறுப்புப்பட்டியலிலும் சேர்த்தது. மேற்படி வங்கியூடாக மேற்கொள்ளப்படும்  வர்த்தக ஒப்பந்தத்தை செய்திருக்கும் தனது நாட்டு வர்த்தக நிறுவனங்களையும் அது எச்சரித்திருந்தது.

ஏற்கனவே சீனாவின் தயவில் தலைநகரிலும் அம்பாந்தோட்டையிலும் வர்த்தக முதலீடுகளை செய்திருக்கும் இலங்கைக்கு இது மேலும் தலையிடியை கொடுக்கவே சீனா கோரிய 6.7 மில்லியன் அமெரிக்க டொலர் நட்டஈடை செலுத்த முன்வந்தது. அதன் பிறகே சீன தூதுவரின் இலங்கை விஜயமும் அமைந்திருந்தது. அவர் வந்த நிகழ்ச்சியில் பிரதமர் மஹிந்த, சீனா எங்கள் உயிர்த்தோழன் என கூறிய பிறகே மக்கள் வங்கியை கறுப்புப் பட்டியலிருந்து நீக்கிய செய்தியும் வந்து சேர்ந்திருக்கின்றது. ஏற்கனவே மக்கள் வங்கி விடுத்திருந்த வேண்டுகோளின் அடிப்படையில் சீனத் தூதரகத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக செயலகம் இந்த அறிவிப்பை விடுத்திருக்கின்றது.

எனினும் இரு வர்த்தக நீதிமன்றங்களின்  உத்தரவுகளுக்கமையவே இந்த கொடுப்பனவை மக்கள் வங்கி நிறுத்தி வைத்திருந்தமை முக்கிய விடயம். இலங்கையுடன் வர்த்தக உறவுகளை பல ஆண்டுகளாக கொண்டு நடத்தும் எந்த நாடும் இது வரை இவ்வாறானதொரு நடவடிக்கையில் இறங்கியதில்லை. ஆகவே இதை மனக்கசப்பாக ஜனாதிபதியும் பிரதமரும்  ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், நாட்டு மக்களின் மனதில் அது ஆழப்பதிந்துள்ளமை முக்கிய விடயம்.   வர்த்தக உறவுகளில் உள்ள கொடுக்கல் வாங்கல் நடைமுறைகளில் அண்மைக்காலமாக சீனாவின் இந்த அணுகுமுறை இலங்கைக்கு புதியது. அதே வேளை இலங்கைக்கு விஜயம் செய்திருந்த சீனத் தூதுவர் தனதுரையில், இலங்கை –சீன நட்புறவில் மூன்றாம் தரப்பு தலையிடக்கூடாது என கூறியிருந்தமை முக்கிய விடயம். அந்த மூன்றாம் தரப்பு அருகிலுள்ள இந்தியா தான் என்பதை சிறுபிள்ளையும் அறியும் தானே..!

உணவுத் தேவைக்கு இந்தியா

 இந்தியாவிலிருந்து இலங்கைக்கு இறக்குமதியாகும்  பலதரப்பட்ட பொருட்களில் உணவுப்பொருட்கள் முக்கிய இடத்தை வகிக்கின்றன. 2020 ஆம் ஆண்டு மட்டும் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு இறக்குமதியாகிய பொருட்களின் பெறுமதி 3.01 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களாகட்டும் , ஆடைகள், போக்குவரத்துக்கு பயன்படுத்தும் பஸ்கள், மருந்து பொருட்கள், ஆபரணங்கள் அனைத்திலும் இந்தியாவின் பங்களிப்பு உள்ளது. இலங்கையின் உணவுத்தேவையை பிரதானமாக நிறைவு செய்யும் நாடு இந்தியாவாகும். தற்போது கூட அரிசி நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங்கை, ஒரு இலட்சம் தொன் அரிசியை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதற்கு முடிவு செய்துள்ளது. இலங்கை அரசியலில் பல தலையீடுகளை இந்தியா செய்திருப்பது அனைவரும் அறிந்த ஒரு விடயம். இலங்கையுடன் அது பல ஒப்பந்தங்களை செய்துள்ளது. அரசியலமைப்பில் 13 ஆவது திருத்தச்சட்டம் என ஒன்று ஏற்படவே இந்தியாவே காரணம். இறுதி யுத்தத்தை வெற்றி கொள்ள பங்களிப்பை நல்கியிருந்தது. ஆசிய –பசுபிக் பிராந்தியத்தில் தனது இருப்பை தக்க வைக்க இலங்கையை கேந்திர ஸ்தானமாக பயன்படுத்த நினைக்கும் நாடுகளில் இந்தியாவே முதன்மையானது . எனினும் அண்மைக்காலமாக இலங்கையின் மீதான சீனாவின் தலையீடுகளும் முதலீடுகளும் இந்தியாவை சிந்திக்க வைத்திருக்கின்றன. இந்நிலையில் சீன வெளிவிவகார அமைச்சரின் முன்பாக, சீனா எங்கள் உயிர்த்தோழன் என பூரிப்புடன் கூறியிருக்கிறார் பிரதமர் மகிந்த. இலங்கைக்கு  சீனா நட்பு நாடு ஆனால் இந்தியா உறவு நாடு. இலங்கையில் 15 இலட்சத்துக்கும் மேற்பட்ட  இந்திய வம்சாவளித்தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். தற்போதைய நிலைமையைப் பார்த்தால் எதிர்காலத்தில் சீனாவும் இலங்கையின் உறவு நாடாக மாறக்கூடும். ஏனென்றால் இப்போது  சீனர்கள் இலங்கையில்  ஆழ கால் பதித்து விட்டனர். ஒரு காலத்தில், இலங்கையிலிருக்கும் சீனர்களின் நலனுக்காக சீன– இலங்கை ஒப்பந்தங்கள்  ஏற்படுத்தப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

No comments: