Monday, August 4, 2025

எம். பிக்கள் ஓய்வூதியம் பெற தகுதியானவர்களா ?



(கார்ட்டூன்)  நன்றி: த ஐலண்ட்
 

முன்னாள் எம்.பிக்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முடிவெடுத்துள்ளமை நாட்டு மக்கள் மத்தியில் எந்தவி பிரதிபலிப்புகளையும் ஏற்படுத்தவில்லை. எந்த பொது அமைப்புகளும் , சிவில் சமூக அமைப்புகளும், மனித உரிமைகள் பற்றி பேசும் குழுக்களும், அரசாங்கத்தின் இந்த முடிவுக்கு எதிராக குரல் எழுப்பவில்லை. ஆனால் ஓய்வு பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் சங்கம் இதற்கு எதிர்ப்பபை வெளியிட்டுள்ளது.

தமது ஓய்வூதியம் இரத்து செய்யப்பட்டால் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் பாராளுமன்றங்களுக்கிடையிலான ஒன்றியத்துக்கு முறைப்பாடு செய்யவுள்ளதாக அதன் செயலாளர் தெரிவித்துள்ளார். இதற்கும் ஒரு படி மேலே சென்ற முன்னாள் எம்.பி ஒருவர், தனது ஓய்வூதியம் இரத்துச் செய்யப்பட்டால் ‘உயிரை மாய்த்துக்கொள்ள’ வேண்டி வரும் என்று பீதியை கிளப்பியுள்ளார். அவர் மக்கள் விடுதலை முன்னணியின்முன்னாள் எம்.பியான நந்தன குணதிலக்க ஆவார்.

ஓய்வு பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் சங்கத்தின் கருத்துப்படி தமது மருந்துகளை பெறுவதற்கு மாதாந்த ஓய்வூதியத்துக்காக காத்திருக்கும் வயதான எம்.பிக்கள் பலர் உள்ளதாகவும் இந்த சலுகையை இரத்து செய்தால் அவர்கள் கடும் நெருக்கடிகளுக்கு உள்ளாகுவார்கள் என்று கூறப்படுகின்றது. தற்போது முன்னாள் எம்.பிக்கள் ஐந்நூறு பேர் வரை ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். இவர்களில் எளிமையான வாழ்க்கையை முன்னெடுத்த பலரும் இருக்கக் கூடும். ஆனால் ஓய்வூதியமோ அல்லது வேறு எந்த கொடுப்பனவுகளோ இல்லாது வறுமை கோட்டுக்குள் தவித்து வரும் ஒரு பிரிவினர் இந்த நாட்டில் வாழ்ந்து வருகின்றனர் என்பதையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

நாட்டு மக்களில் கணிசமானோர் இந்த திட்டத்தை வரவேற்றுள்ளதாகவே தெரிகின்றது.அவர்களின் மெளனம் இதை வலியுறுத்துகின்றது. ஓய்வூதியம் பெறுவதற்கு சிலஅரசியல்வாதிகள் , நாட்டுக்காகவும் தமது தொகுதி மக்களுக்காகவும் என்ன தான் செய்தார்கள் என்ற கேள்விகளும் அவர்கள் மனதில் எழுந்திருக்கக் கூடும்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதிய திட்டம், யார் நலனை முன்வைத்து அறிமுகப்படுத்தப்பட்டது என்பது முக்கியமானதொரு கேள்வி. 1977 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன இந்த சட்டமூலத்தை கொண்டு வந்தார்.

குடிமக்களின் நலன்களை விட, எம்.பிக்களின் எதிர்காலத்தையும் அவர்களின் நலன்களையும் பாதுகாப்பதே இதன் நோக்கமாக இருந்திருக்கின்றது. நாட்டின் சாதாரண குடிமகன் ஒருவர் தனது ஓய்வூதிய உரிமைகளைப் பெறுவதற்கு குறைந்தது 35 ஆண்டுகளாவது காத்திருக்க வேண்டும். இடையில் ஏதாவதொரு காரணங்களினால் தொழிலை இழக்கும் சந்தர்ப்பத்தில் பல சலுகைகளையும் அவர் இழக்கக் கூடும். ஆனால் தோல்வியுற்ற ஒரு அரசியல்வாதிகளுக்கு சிறப்பு சலுகைகள் காட்டப்படுகின்றன.

ஒரு சராசரி குடிமகன் பெறும் ஓய்வூதியத்தின் பெறுமதி அவரின் தகைமைகள் மற்றும் பதவி உயர்வுகளில் தங்கியுள்ளது. அதாவது தனது பணி காலத்தில் அவர் எவ்வாறு செயற்பட்டார் என்பதில் அவை அடங்கியுள்ளன. ஆனால் அரசியல்வாதிகளுக்கு இது தேவையில்லை. அவர் சிறப்பாக செயற்பட்டாரா இல்லையா என்பதையெல்லாம் எவரும் ஆராய்ந்து பார்ப்பதில்லை. பாராளுமன்றத்தில் ஐந்து வருடங்களை பூர்த்தி செய்த எந்த ஒரு உறுப்பினரும் ஓய்வூதியம் பெறுவதற்கான தகைமையைப் பெறுகின்றார். இதில் ஜனநாயகம் எங்குள்ளது?

கொவிட் தொற்று காலத்தில் கடுமையான நெருக்கடிகளை நாடு சந்தித்தது. சாதாரண மக்களின் சம்பளங்கள் குறைக்கப்பட்டன. ஒப்பந்த ஊழியர்கள் பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டனர். மத்திய வங்கி அறிக்கைகளின் படி சுமார் ஐந்து இலட்சம் பேர் வரை தமது வேலைகளை இழந்தனர். ஆனால் எம்.பிக்கள் தொடர்ந்தும் தமது சலுகைகளை அனுபவித்தனர். சில எம்.பிக்கள் பாராளுமன்றத்துக்கு வருவதை தவிர்க்கும் அதே வேளை வாய் திறந்து கதைப்பதுவும் இல்லை. அப்படியும் அவர்கள் வரப்பிரசாதங்களை அனுபவிக்கின்றனர்.

இவ்வாறான பல சம்பவங்களை தொடர்ச்சியாக அவதானித்து வந்த காரணத்தினாலேயே தேசிய மக்கள் சக்தி இந்த முடிவை எடுத்திருக்க வேண்டும். ஆனால் அவர்களது பாசறையில் வளர்ந்த ஒரு முன்னாள் எம்.பியே ஓய்வூதிய இரத்து விடயத்துக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவரது தனிப்பட்ட வாழ்வாதாரம் ஓய்வூதியத்திலேயே தங்கியுள்ளமை அதிசயமல்ல. ஏனென்றால் மக்கள் விடுதலை முன்னணியினரின் கொள்கைகள் அப்படியானவையாக உள்ளன. ஏனைய தேசிய கட்சிகளின் முன்னாள் எம்.பிக்களின் சொத்துகள் ,சொகுசு வாழ்க்கை முறையைப்பற்றி கூற வேண்டியதில்லை.

அவ்வாறானவர்களின் ஊழல் மோசடிகளையே தற்போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அம்பலப்படுத்தி வருகின்றது. ஓய்வூதியம் பெறும் அனைத்து முன்னாள் எம்.பிக்களும் சொகுசு வாழ்க்கை வாழ்பவர்கள் அல்லர். சிலர் இன்னும் ஏதாவதொரு தொழிலில் தம்மை இணைத்துக்கொண்டுள்ளனர்.

சிலர் நோய்வாய்ப்பட்டுள்ளனர். அவர்களின் நிலைமைகள் பரிதாபகரமானவை. இவ்வாறானவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு வேறு வழியில் ஏதாவது சிறப்பு சலுகைகளை வழங்க முடியுமா என அரசாங்கம் ஆராய வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன.

அரசாங்கத்துக்கும் தமக்கு வாக்களித்தவர்களுக்கும் எந்தவித பங்களிப்புகளும் செய்யாமல் சிறப்பு வரப்பிரசாதங்கள் என்ற அடிப்படையில் சில எம்.பிக்கள் ஓய்வூதியத்தை அனுபவித்து வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

No comments: