Thursday, March 26, 2026

இந்தியாவில் முதல் கருணைக் கொலை தீர்ப்பு…!

  

இந்திய உச்ச நீதிமன்றமானது கடந்த 11 ஆம் திகதி புதன்கிழமை  முதலாவது கருணைக் கொலை தீர்ப்பொன்றை வழங்கியுள்ளது. இந்திய நீதித்துறை வரலாற்றில் இந்த சம்பவம் பல கோணங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கருணைக்கொலைக்கு பல நாடுகளில்  ஒரு சேர எதிர்ப்பும் ஆதரவும் நிலவுகின்றன.  மேலை நாடுகளில் நோய்த்தாக்கம் அதிகரித்த நிலையில் உள்ள  வயோதிபர்களை பராமரிக்க முடியாமல் திணறும் உறவினர்கள்இ  கருணை கொலையை நியாயப்படுத்துகின்றனர். நோய்வாய்ப்பட்ட முதியோர்கள் படும் துன்பங்களிலிருந்து  அவர்களுக்கு விடுதலைப் பெற்று தருமாறு  கோரிக்கை விடுத்து வருகின்றனர். இன்னும் இந்த விவகாரம் அரசியல் மற்றும் சட்டரீதியாகவும் ஆன்மிக ரீதியாகவும் மருத்துவ ரீதியாகவும் சர்ச்சைக்குரிய ஒன்றாகவே விளங்குகின்றது.

இந்தியாவில் கருணைக் கொலைக்கு நீதிமன்றம் ஒப்புதல் அளிக்கப்பட்டவர்  வயோதிபர் அல்ல. அவர் ஒரு பல்கலைக்கழக மாணவர். புதுடெல்லி காஸியபாத் பகுதியைச் சேர்ந்த ஹரிஷ்ராணா என்ற 31 வயது இளைஞர் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை தொழில்நுட்பம் கற்று வந்தவர். 2013 ஆம் ஆண்டு இவர் பல்கலைக்கழக விடுதியின் நான்காம் மாடியிலிருந்து தவறி விழுந்ததில் அவருக்கு மூளை பாதிக்கப்பட்டது.  கடந்த 13 வருடங்களாக நினைவு திரும்பாத நிலையில் சிகிச்சைப் பெற்று வந்தார் ஹரிஷ்.

தனது மகன் படும் வேதனைகளால் துவண்டு போன குடும்பத்தினர் இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தனர். ஹரிஷ்ராணாவின் தந்தையும் தாயும் தனது மகனின்  கருணைக் கொலைக்கு  அனுமதி வேண்டி 2024 ஆம் ஆண்டு டெல்லி டெல்லி உயர்  நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்தனர். ஆனால் அது உடனடியாக சாத்தியமாகவில்லை. டெல்லி எய்ம்ஸ் மருத்துமனையில் அவருக்கு மருத்துவ குழாய்கள் மூலமே நீராகார முறையில் உணவு வழங்கப்பட்டு வந்தது. அது அவரது உயிரை காப்பாற்றியதே தவிர அவரால் மீண்டும் பழைய இயல்பான நிலைக்கு திரும்ப முடியவில்லை. சிகிச்சை காரணமாக அவரது உயிர் காப்பாற்றப்பட்டு வருவதால்  பெற்றோர்களின் கோரிக்கையின் படி அவருக்கு வழங்கப்படும் சிகிச்சைகளை மீளப்பெறுவதற்கு டெல்லி நீதிமன்றால் உத்தரவு பிறப்பிக்க முடியாத நிலை தோன்றியதால் குறித்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.  

ஆனால் மருத்துவமனை செலவுகள் ராணாவின் குடும்பத்தினரை மிகவும் நெருக்கடியான நிலைமைக்கு தள்ளின. அவரை வைத்தியசாலையில் பராமரிப்பதற்கு ஒவ்வொரு மாதமும் 25 தொடக்கம் 30 ஆயிரம் (இந்திய ரூபாவில்) செலவாவதாக தெரிவித்த குடும்பத்தினர் தமக்கு இருந்த ஒரே வீட்டையும் விற்று சிகிச்சைக்கு வழங்கியுள்ளனர். அதே வருடத்தில் அவர்கள் உச்ச நீதிமன்றை அணுகினர். இச்சந்தர்ப்பத்திலேயே ஹரிஷ் பூரமாக குணமடைய வாய்ப்புகள் இல்லையென வைத்தியசாலை அறிக்கைகள் உறுதிப்படுத்தின. அதையடுத்து அவருக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சைகளை நிறுத்துவதற்கு அனுமதியளித்த நீதிமன்றம் அவரை கருணை கொலை செய்வதற்கும் தீர்ப்பளித்தது.

இதையடுத்து அவருக்கு வழங்கப்பட்டு வந்த சிகிச்சைகள் படிப்படியாக நிறுத்தப்பட்டு வருகின்றன.  அதாவது வீட்டில்  சிகிச்சை பெற்று வரும் ஹரிஷ்ராணா டெல்லி எய்ம்ஸ் மருத்​து​வ​மனை​க்கு கொண்டு வரப்பட்டு  அவரது உயிர்காக்​கும் கருவி​கள் படிப்​படி​யாக அகற்​றப்​பட்டு வருகிறது. அவருக்கு வழங்கப்பட்டு வரும் செயற்கை சுவாசமும் நிறுத்தப்பட்டுள்ளது. இரண்டு அல்லது மூன்று வாரங்களில் ஹரிஷ்ராணா உயிரிழந்து விடுவார் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். உயிர் காக்கும் கருவிகள் அகற்றப்பட்ட நிலையில் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவருக்கு   இறுதி பிரியாவிடை கொடுக்கும் காட்சிகள் அனைவரையும் கண்கலங்கச் செய்துள்ளன.

அவருக்கு அடிப்படை மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதால் அவர் சில நாட்கள் உயிர்வாழ்வார் என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.  உயிர்களைக் கொல்லக் கூடாது என்ற அகிம்சாவழியில் இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக்கொடுத்த காந்தி பிறந்த மண்ணில் கருணைக் கொலை தீர்ப்பு எப்படி சாத்தியமாகியது என்ற கேள்விகள் ஒரு பக்கம் எழுந்துள்ள நிலையில் இந்தத் தீர்ப்பை சாதகமான ஒன்றாக பலர் வரவேற்று கருத்து வெளியிட்டுள்ளனர்.

ஆங்கிலத்தில் யூதோனேசியா (euthanasia)  என்றும் மேர்சி கில்லிங் (Mercy Killing)  என்றும் அழைக்கப்படும் கருணைக்கொலையை வதையா இறப்பு என்று தமிழில் கூறுகின்றனர். ஹரிஷ்ராணா  கோமா நிலையில் சுயநினைவற்று இருப்பதால் அவரது அனுமதியின்றி அதாவது அவரது விருப்பம் பெறவியலாத வகையில் அவரது உயிரை நிறுத்துவதற்கு நீதிமன்றம் எவ்வாறு தீர்ப்பு வழங்க முடியும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.


 கருணைக் கொலை தொடர்பான நடைமுறைகள் மற்றும் சட்டங்கள் நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன. உலகில் முதன் முறையாக கருணைக் கொலையை சட்டரீதியாக அங்கீகரித்த நாடாக நெதர்லாந்து விளங்குகின்றது (2002)ஐரோப்பிய நாடுகளான பெல்ஜியம்,ஸ்பெயின், போர்த்துகல், சுவிர்சர்லாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளும் கனடா, கொலம்பியா மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் சில மாநிலங்களிலும் கருணைக் கொலைக்கு சட்டரீதியான அனுமதிகள் இருப்பினும்    அதை எவ்வாறு முன்னெடுப்பது என்ற விடயத்தில் கட்டுப்பாடுகளும் நிபந்தனைகள் உள்ளன.


ஹரிஷ்ராணா மனுவின் மீதான தீர்ப்பானது  உச்ச நீதிமன்ற நீதிபதிகளான ஜே.பி.பர்திவாலா மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வின்  மூலம்  திறந்த நீதிமன்றத்தில் மக்களுக்கு முன்பாக வழங்கப்பட்டது. நீதிபதி பர்திவாலா 286 பக்கம் கொண்ட தீர்ப்பை வாசிக்கும் போது, ‘ இந்தத் தீர்ப்பு கொண்டுள்ள ஆழ்ந்த உணர்ச்சிப்பூர்வமான சுமையை நாங்கள் அங்கீகரிக்க விரும்புகிறோம். இந்தத் தீர்ப்பு ஒரு சரணடைதல் செயற்பாடு  போலத் தோன்றலாம்,ஆனால் உண்மையில் இது ஆழ்ந்த கருணை மற்றும் தைரியத்தின் செயல் என்று நாங்கள் நம்புகிறோம். நீங்கள் உங்கள் மகனைக் கைவிடவில்லை. அவர் கண்ணியத்துடன் விடைபெற்றுச்செல்ல நீங்கள் அனுமதிக்கிறீர்கள். இது அவர் மீது நீங்கள் கொண்டுள்ள தன்னலமற்ற அன்பு மற்றும் பக்தியின் ஆழத்தைப் பிரதிபலிக்கிறதுஇ" என்று  அவரது குடும்பத்தினரை பார்த்து கூறினார்.

எனினும் ஹரிஷ்ராணாவின் விடயத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்றுள்ள சிலர் அருணா ஷன்பக் என்ற தாதிக்கு ஏன் நியாயம் கிடைக்கவில்லையென  தற்போது  கேள்வியெழுப்பியுள்ளனர்.  மும்பையில் உள்ள கெம் எனும் வைத்தியசாலையின் தாதியான அருணா ஷன்பக், 1973 ஆம் ஆண்டு அதே வைத்தியசாலையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். அதன் பின்னர்  குணப்படுத்த முடியாத மூளை பாதிப்புக்குட்பட்ட அவர் கோமா நிலைக்குச்சென்றார். 42 வருடங்கள்  நினைவு திரும்ப முடியாத நிலையிலிருந்த அவர் 2015 ஆம் ஆண்டு மரணத்தைத் தழுவினார்.

அருணாவின் நிலைமை. அவதானித்த எழுத்தாளர்  விரானி, 2011 ஆம் ஆண்டு  அவருக்கு கருணைக் கொலை அனுமதி கோரி உச்ச நீதிமன்றில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். ஆனால் அதை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.  பெண்கள் பணியாற்றும் இடங்களில் அவர்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை குறைப்பதற்கும்   துஷ்பிரயோகங்களின்  தீவிரத்தை வெளிப்படுத்தவுமே கருணைக் கொலை வழக்கு தொடரப்பட்டாலும் இந்த வழக்கு  எந்த வழியிலும் அதற்கு உதவவில்லையென  பெண்கள் உரிமை ஆர்வலர்கள் தெரிவித்திருந்தனர்.

எனினும் இந்தியாவில் கருணைக் கொலை  கோரிக்கைகள் அதிகரித்ததையடுத்து உச்ச நீதிமன்றமானது 2018 ஆம்ஆண்டு அதற்கான வழிகாட்டல் நெறிமுறைகளை அறிவித்திருந்தது. அதாவது செயலற்ற கருணைக் கொலைக்கு (Passive Euthanasia) அனுமதி அளித்துஇ அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்தது. நோயாளியின் சுயமரியாதையுடன் இறக்கும் உரிமை மற்றும் 'வாழும் உயில்'  (Living Will)  ஆகியவற்றிற்கு இது சட்ட அங்கீகாரம் அளித்தது. அதன் முக்கியமான பிரிவுகள் இவ்வாறு அமைந்தன.

ஒரு நபர், கடுமையான நோய் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி போகும் நிலையில்இ தனக்கு செயற்கை சுவாசமோ அல்லது உயிர்காக்கும் கருவிகளோ பொருத்தப்படக்கூடாது என்று முன்கூட்டியே எழுதி வைக்கும் விருப்பம். இது வாழும் உயில் என்று குறிப்பிடப்படும்.

 குணப்படுத்த முடியாத, மூளைச் சாவு அடைந்த அல்லது மீள முடியாத கோமா நிலையில் உள்ள நோயாளிகளுக்கு  உயிர்காக்கும் கருவிகளை அகற்றி, இயற்கையான மரணத்தை அனுமதிக்கலாம்.இது பயனற்ற சிகிச்சை என்ற பிரிவுக்குள் அடங்குகின்றது.

மூன்று மருத்துவர்கள் கொண்ட குழு, நோயாளியின் நிலையை ஆய்வு செய்து, குடும்பத்தினரின் சம்மதத்துடன் இந்த முடிவை எடுக்க வேண்டும் என்பது முக்கியமான நெறிமுறையாகும். ஹரிஷ்ராணாவுக்கு உச்ச நீதிமன்றம் கருணைக்கொலைக்கு தீர்ப்பளித்தமைக்கு மருத்துவ குழுவினரின் அறிக்கைகளே பிரதான காரணமாக இருந்தன.


இப்படி பல காரணங்கள் கூறப்பட்டாலும் காந்தியவாதிகள் இதற்கு தமது எதிர்ப்பை காட்டியுள்ளனர். ஆனால் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதியானதால் அதற்கு அடுத்த கட்டத்துக்கு அவர்களால் செல்ல முடியவில்லை. இந்நிலையில் நோய்வாய்ப்பட்ட வளர்ப்பு பிராணிகள் அல்லது சமூகத்துக்கு ஆபத்தாக வீதிகளில் திரியும் தெருநாய்களை அவசியமானால் கொல்லலாம் என காந்தி ஒரு சந்தர்ப்பத்தில் தெரிவித்த விடயமும் இங்கு மேற்கொள் காட்டப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாகவும் மக்கள் தொகையில் 146  கோடியை நெருங்கியுள்ள இந்தியாவானது கருணைக் கொலை விடயத்தில் முற்போக்குடனும் சட்டரீதியாகவும் சில தீர்மானங்களை எடுத்துள்ளமை வரவேற்கத்தக்கது  என்றும் விமர்சனங்கள் தெரிவிக்கப்படுகின்றன.