Tuesday, March 3, 2026

இனவாதமில்லாத ஆட்சியாளர்கள் என யாருமில்லை…!









‘தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எதிராக சிங்கள பெளத்தர்களை கிளர்ந்தெழச்செய்யும் நடவடிக்கைகளில் சில பேரினவாத கும்பல்கள் திட்டமிட்டு செயற்படுகின்றன. இதன் பின்னணியில் பொதுபலசேனா உள்ளிட்ட சில அமைப்புகளும் சில முன்னாள் அரசியல்வாதிகளும் செயற்படுகின்றனர். இதற்கு ஆதரவாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் அக்கூட்டங்களில் கலந்து கொள்கிறார். எனவே அவர் தமிழ் பேசும் மக்களுக்கு  எதிரானவர். ஆகவே ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்கிக்கொண்டிருக்கும்   தமிழ், முஸ்லிம் எம்.பிக்கள் அதிலிருந்து விலக வேண்டும்…’  இவ்வாறு பல பதிவுகள் கடந்த வாரம் சமூக ஊடகங்களை ஆக்கிரமித்திருந்தன.

இவ்வாறான பதிவுகளுக்குக்  காரணம் பெப்ரவரி 20 ஆம் திகதி கொழும்பு பெளத்தாலோக்க மாவத்தையில் இடம்பெற்ற அனைத்திலங்கை பெளத்த மகா சம்மேளன நிகழ்வில்  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்து கொண்டிருந்தமையாகும். அவர் ஒரு சிங்கள பெளத்தர் எனவே பெளத்தம் சார்ந்த நிகழ்வில் அவரை கலந்து கொள்ள வேண்டாம் என எவரும் தடுக்க முடியாது. அது அவரது உரிமை.  அடுத்த காரணம் இந்த நிகழ்வு அரசாங்கத்துக்கு எதிரானதாகும். அரசாங்கத்துக்கு எதிராக யார் என்ன நிகழ்வை முன்னெடுத்தாலும் அதில் ஓடோடிச்சென்று கலந்து கொள்ளும் வழக்கம்  எதிர்க்கட்சித் தலைவருக்கில்லை. ஆனால் 20 ஆம் திகதி இடம்பெற்ற நிகழ்வானது தற்போதைய அரசாங்கம் பெளத்த மதத்தை  பாதுகாக்க தவறி விட்டது என்றும் அதைப் பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்து அரசாங்கத்துக்கு எதிர்ப்பை வெளிப்படுத்த  வேண்டும் என்பதை அடிப்படையாகக்கொண்டது.   நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி கூட  பெளத்த பீடங்களின் ஆலோசனைக்கு கட்டுப்பட்டவர்களாக விளங்குகின்றனர். பெளத்தத்தை பாதுகாத்தல் என்பது அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளதால் அதை மீற நாட்டின் தலைவருக்கு முடியாது.

சஜித்தை இனவாதி என்று  கூறுபவர்கள்,  தேசிய கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி அல்லது பொதுஜன பெரமுன போன்ற கட்சிகளை  இனவாதமற்ற கட்சிகள் என்று கூற முடியுமா?  அக்கட்சிகளுடன்   கடந்த காலங்களில்   இணைந்து தேர்தல்களில் போட்டியிட்டு அமைச்சுப்பதவிகளை பெற்றவர்கள் தமிழர்களுக்கு எதிரானவர்களா? அல்லது தற்போது இக்கட்சிகளுக்கு ஆதரவாக உள்ள முன்னாள் இந்நாள் பிரதிநிதிகள் தமிழ்த்தரப்பினருக்கு எதிரானவர்களா? சுதந்திரத்துக்குப் பிறகு நாட்டில் உருவான அனைத்து சிங்கள கட்சிகளும்   சிங்கள பெளத்த தேசியவாத கொள்கைகளுடனேயே இன்று வரை பயணித்துக்கொண்டிருக்கின்றன. இந்த பயணத்தை தவிர்க்க முடியாது. அக்கட்சிகளோடு  இணைந்து அரசியல் பயணம் செய்வதைத் தவிர தமிழ்க் கட்சிகளுக்கு வேறு வழியில்லை தெரிவும் இல்லை  என்பதை உரியோர் உணர்ந்து கொள்ளல் அவசியம்.

1948 ஆம் ஆண்டு இந்தியத் தமிழர்களின் குடியுரிமையை பறித்து 1983 இல் தமிழர்களுக்கு எதிராக வன்முறையை தூண்டி விட்ட   ஐக்கிய தேசிய கட்சி, 1956 ஆம் ஆண்டு சிங்களம் மட்டும் சட்டம், 1964 இல் சிறிமா –சாஸ்த்ரி ஒப்பந்தம், பின்னர் தரப்படுத்தல் சட்டங்களை கொண்டு வந்தது மாத்திரமல்லாது முதலாவது குடியரசு யாப்பில் (1972) பெளத்த மதத்துக்கு அரச முன்னுரிமை வழங்கிய  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி , 1970 களில் இந்திய விஸ்தரிப்பு வாதத்துக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருந்த மக்கள் விடுதலை முன்னணி ஆகிய அனைத்து கட்சிகளும், அதன் தலைவர்களும் இனவாத போக்குடைய மனநிலையிலும் பேரினவாத சிந்தனைகளுடன் இயங்கியதாலேயே மேற்படி சம்பவங்கள் நடந்தேறின. 

ஆனால்   அரகலயவுக்குப் பிறகு நாட்டின் பெரும்பாலான சிங்கள பெளத்தர்களின் மனநிலையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.  பெளத்தத்துக்கு அழிவு ஏற்பட்டு விட்டது என என பிக்குகள்  கூறினாலும் அதை கடந்து செல்லும் மனப்பக்குவத்தை நாட்டு மக்களில் கணிசமானோர் பெற்றுள்ளனர். இனவாதத்தை முன்னிறுத்தி செய்யப்படும் அரசியலை இந்த நாட்டின் மிகக்குறைந்த எண்ணிக்கையானோரே விரும்புகின்றனர் என்பதை வெளிப்படுத்துவதாக அது உள்ளது.

ஆனால் பெளத்தாலோக்க அனைத்திலங்கை பெளத்த மகா சம்மேளனமானது இந்நாட்டின் பெளத்த பிக்குகளுக்கும் ஒரு அழுத்தமான செய்தியை கூறியுள்ளது. பெளத்தத்தை முன்னிறுத்தி இனி பிக்குகளையும் ஏமாற்ற முடியாது என்பதே அந்த செய்தி. மேற்படி நிகழ்வுக்கு எட்டாயிரம் பெளத்த பிக்குகளை திரட்டி அரசை ஆட்டங்காணச் செய்வோம் என ஏற்பாட்டாளர்கள் சூளுரைத்திருந்தார்கள். எதிர்ப்பார்த்த ஆதரவு இல்லையென்பதை அறிந்து பிறகு ஐயாயிரம் பிக்குகள் என்றார்கள். இறுதியில் முன்னுறுக்கும்  குறைவான பிக்குகளே இதில் பங்கேற்றிருந்தனர். அதிலும் அதிகமானோர்  ‘பொடி ஹாமதுரு’ என அழைக்கப்படும் இளம் பிக்குகளாக காணப்பட்டனர். இனவாத போக்குடன் பெளத்தத்தை முன்னிறுத்தி பெளத்த பிக்குகளால் முன்னெடுக்கப்பட்ட இந்த  சங்க பிரகடன நிகழ்வில், எதிர்ப்பார்க்கப்பட்ட  பிக்குகளே கலந்து கொள்ளாத நிலையில் இந்த நிகழ்வு பிசுபிசுத்து போயுள்ளது என்று தான் கூற வேண்டும்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில்,   புத்த சாசனம், பிக்குகள் அத்துடன் பொதுமக்கள் எதிர்கொள்ளும் சமூக நெருக்கடிகளைத் தீர்ப்பதற்காக, நாட்டின் அனைத்துப் பிக்குகளும் பௌத்தத் தலைவர்களும் இணைந்து 'சங்கப் பிரகடனம்' ஒன்றினை வெளியிட்டனர். அதன்படி, அந்த பிரகடனம் ,  அனைத்து பிக்குகளினதும் கையெழுத்துக்களுடன்   ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளதாக மொரட்டுவ, லுனாவ போதிராஜாராம விகாராதிபதி, கொழும்புப் பல்கலைக்கழகத்தின் சிங்களத் துறைத் தலைவர்   அகலகட சிறி சுமன தேரர் குறிப்பிட்டார். இங்கு பத்து அம்சங்களைக் கொண்ட சங்க சத்தியபிரமாணம் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வில் சிவில் சமூக பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

இனி விடயத்துக்கு வருவோம். பெளத்த மகா சம்மேளன நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் கலந்து கொண்டமையை விமர்சிப்போர் அவர் கலந்து கொண்டிராவிட்டால் எத்தகைய விமர்சனங்களை அவர் எதிர்நோக்கியிருக்கக் கூடும் என்பதையும் யோசிக்க வேண்டும். அவருக்கு இந்நிகழ்வில் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது. இந்த அரசாங்கம் பிக்குகளை கைது செய்கின்றது, பெளத்தத்தை பாதுகாக்க தவறி விட்டது என சஜித் பிரேமதாசவும் பாராளுமன்றில் பேசிக்கொண்டு தான் இருக்கின்றார். எனவே இந்த நிகழ்வு அவருக்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது. அப்படி பேசாவிட்டாலும் அவர் தீவிர பெளத்தர் என்பதை சொல்லித் தான் அறிய வேண்டும் என்பதில்லை. நல்லாட்சி காலத்தில் சஜித் வீட்டு வசதிகள் , கட்டுமானம் மற்றும் கலாசார விவகாரங்களுக்கான அமைச்சராக இருந்த போதே வடக்கில் அதிக பெளத்த விகாரைகள் உருவாகின என்ற விடயத்தை மறுப்பதற்கில்லை. அச்சந்தர்ப்பத்தில் தொல்லியல் திணைக்களமும் அவரது அமைச்சின் கீழே இருந்தது. நல்லாட்சி காலத்தில் வடக்கு கிழக்கில் ஆயிரம் விகாரைகள் அமைக்கும் திட்டம் திரைமறைவில் முன்னெடுக்கப்பட்டமை குறித்து அப்போது எவரும் வாய்திறக்கவில்லையென்பது முக்கிய விடயம்.

இந்நிலையில் சஜித்   தனது இடத்தை தக்க வைத்துக்கொள்வதற்கு என்னவெல்லாமோ முயற்சி செய்து இறுதியில் இனவாத போக்கோடு செயற்படும் கூட்டத்துடனும் ஐக்கியமாகி விட்டார் என்று இப்போது கூறப்படுகின்றது.  ஐக்கிய மக்கள் சக்தி என்பது பல கட்சிகளின் கூட்டமைப்பு ஆகும். தேர்தல் காலங்களில் மாத்திரமே இக்கூட்டணி கட்சிகள்,  ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஒரே சின்னத்தில் போட்டியிடல் மற்றும் தேசிய பட்டியல் பங்கீடு , நிபந்தனைகள் அல்லது நிபந்தனைகளற்ற ஆதரவு போன்ற விடயங்கள் குறித்து கலந்துரையாடுகின்றன.

அதற்கு அப்பால், தமக்கு வாக்களித்த மக்களின் நிலையறிந்து அரசியல் நகர்வுகளை மேற்கொள்வதற்கும் சுயாதீனமாக இயங்குவதற்கும் கூட்டணி  கட்சிகளுக்கு சுதந்திரம் உள்ளன. யாரும் எவரையும் கட்டுப்படுத்த வேண்டிய அவசியமில்லை. ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்து தேர்தல்களில் போட்டியிட்ட தமிழ் முற்போக்குக் கூட்டணியும் முஸ்லிம் காங்கிரசும் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்குவதை அவதானிக்கலாம். தமது மக்கள் பிரச்சினைகளைப் பற்றி இப்பிரதிநிதிகள் கேள்வியெழுப்புகின்றனர். விவாதம் செய்கின்றனர். எதிர்க்கட்சியிலிருந்தாலும் ஆளும் கட்சி கொண்டு வரும் நல்ல விடயங்களுக்கு வரவு செலவு திட்டத்திலும் வாக்களித்துள்ளனர்.  தோட்டத்தொழிலாளர்களின் சம்பள விவகாரத்தில்  தமிழ் முற்போக்குக் கூட்டணி வரவு செலவு திட்டத்துக்கு ஆதரவாகவே வாக்களித்தது. அதே போன்று ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் இலங்கை தொழிலாளர் காங்கிரசும் அவ்வாறே ஆதரவாக வாக்களித்தது.

இந்த யதார்த்தங்களையும் தெளிவையும் விமர்சனங்களை முன்வைப்போர் விளங்கிக்கொள்ளல் அவசியம். தமிழ்த் தரப்பினர் அனைவரும் ஒன்றிணைந்து ஏன் தனித்துவமாக இயங்க முடியாது என சிலர் நாட்டின் அரசியல் வரலாற்றை அறியாமல் பேசலாம். பெரும்பான்மை  சிங்கள மக்களைக் கொண்ட இலங்கையில், அம்மக்களை ஒன்றிணைந்து பிரதிநிதித்துவம் செய்ய முடியாமல் தான்  இன்று  சிங்கள கட்சிகளே பிரிந்தும் தனித்தும் நின்று அரசியல் செய்கின்றன. சிங்கள தேசிய கட்சிகளுடன் இணைந்து அரசியல் பயணத்தை செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தமிழ்க் கட்சிகள் தள்ளப்பட்டுள்ளமைக்குக் காரணம் நடைமுறையிலுள்ள தேர்தல் சட்டங்களாகும்.  இதையும் விளங்கிக்கொள்ளல் அவசியம். இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற அனைத்து சம்பவங்களையும்  இன்று வரை வரிசைப்படுத்தி பார்த்தால் அதற்குக் காரணமான அனைத்து தேசிய சிங்கள கட்சிகளும் இனவாதக் கட்சிகளாவே விளங்குகின்றன. காலத்துக்குக் காலம் அக்கட்சிகளுக்கு தலைமை தாங்கி ஆட்சி பீடமேறிய அனைவருமே இனவாதத்தையும் அதற்குக் கவசமாக பெளத்தத்தையும் முன்னிறுத்தியே ஆட்சி செய்துள்ளனர் என்பதே உண்மை. இதில் சஜித்தை நோக்கி மாத்திரம் விரல் நீட்டுதல் நியாயமாகாது.

 

 

 

 

 


No comments: