Monday, September 6, 2021

சொந்த நாட்டின் அகதிகள்….!

 


 தமிழகத்தின் ஆளும் திராவிட முன்னேற்ற கழகமானது கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக தனது மாநிலத்திலமைந்துள்ள  முகாம்களில் தங்கி வாழ்ந்து வரும் இலங்கை அகதிகளுக்கு பல நலனோம்பு திட்டங்களை அறிவித்துள்ளது.

ஒரு தலைமுறையை கடந்து வாழ்ந்து வரும் அந்த மக்கள் இன்னும் அகதிகள் என்ற பெயரிலேயே வாழ்க்கையை கடத்துகின்றனர். இதன் காரணமாக மத்திய அரசாங்கத்தின் சட்டரீதியான பல உரிமைகளை அவர்கள் அனுபவிக்க முடியாத சூழ்நிலைகள்  மூன்று தசாப்த காலமாக தொடர்கின்றன. இந்த மக்களுக்கு இந்திய குடியுரிமையைப் பெறுவதற்கு சட்ட சிக்கல்கள் உள்ளன.

மனிதாபிமான ரீதியில் அதைப்பெற்றுக்கொள்ளும் வகையில் கடந்த கால மத்திய அரசாங்கங்கள் எதுவும் நகர்வுகளை மேற்கொண்டிருக்கவில்லை. உண்மையில் தமிழக முகாம்களிலும் மாநிலத்தின் வேறு இடங்களிலும் வாழ்ந்து வரக்கூடிய அகதிகளின் எண்ணிக்கை 90 ஆயிரத்துக்கும் அதிகமாகும். இவர்கள் தமது சொந்த நாட்டுக்கு திரும்புவதற்கு விரும்புகின்றார்களா , அதை இலங்கை அரசாங்கம் எவ்வாறு பார்க்கின்றது போன்ற கேள்விகளுக்கு தெளிவான பதில்கள் இல்லை.

 1983 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆயிரக்கணக்கில் அங்கு சென்றவர்களின் பிள்ளைகள் அங்குள்ளவர்களை மணம் முடித்து தனியார் நிறுவனங்களில் பணி புரிந்து வருகின்றனர். ஆனால் இவர்களின் மீது இன்னும் அகதிகள் என்ற  பரிதாப பார்வையே நிலவி வருகின்றது.

தற்போது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த மக்களுக்காக அறிவித்திருக்கும் திட்டங்கள் உண்மையில் வரவேற்கத்தக்கது. ஆனால் அதை இலங்கையிலுள்ள அரசியல் பிரமுகர்கள் எவ்வாறு பார்க்கின்றனர் என்பது முக்கிய விடயம். மிக முக்கியமாக மலையக அரசியல் பிரதிநிதிகள் பலர் நேரடியாக அங்கு சென்று தமிழக முதலமைச்சர் உட்பட தி.மு.க பிரதிநிதிகளை சந்தித்துள்ளனர். தமிழகத்தில் வாழ்ந்து வரும் அகதிகளுக்கு தி.மு.க எடுத்திருக்கும் நடவடிக்கைகள் குறித்து பாராட்டுதல்களை தெரிவித்துள்ளனர்.

ஆனால் தமக்கு  வாக்களித்து அழகு பார்த்த, சொந்த நாட்டின் அகதிகளாக வாழ்ந்து வரும் மலையக பெருந்தோட்ட சமூகம் பற்றி அவர்கள் சிந்திக்கின்றார்களா என்று பார்த்தல் அவசியம். இங்கிருந்து தமிழகத்துக்கு அகதிகளாக சென்றவர்கள் கூட 30 வருடங்களுக்கு மேல் முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் அதே தமிழக கிராமங்களிலிருந்து இங்கு வந்த உழைக்கும் வர்க்கத்தினர் கடந்த 200 வருடங்களாக முகாம்களை விட மோசமான லயன் குடியிருப்புகளில் காலத்தை தள்ளுகின்றனர்.

வாக்களிக்கும் உரிமையைப் பெற்றுவிட்டால் இவர்கள் இந்த நாட்டின் பிரஜைகளாகி விடமாட்டார்கள். ஏனென்றால் இன்னும் இவர்கள் இந்நாட்டின் பதிவுபிரஜைகளாகவே சான்றிதழை வைத்துக்கொண்டிருக்கின்றனர். இலங்கை பிரஜைகள் என்ற அந்தஸ்த்து இவர்களுக்கு இன்னும் அரசியலமைப்பில் வழங்கப்படவில்லை.

அவர்களின் தலைமுறையினருக்கும் இதே வேதனை தொடர்கின்றது. இந்த சமூகத்துக்கு நேரடியாக பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைக்கப்பெற்று அரை  நூற்றாண்டு  நெருங்குகின்றது. அதற்கு இன்னும் 6 வருடங்கள் இருக்கின்றன. இத்தனை வருடங்களாக இந்த மக்களின் வாக்குகளைப் பெற்று அதிகார பீடங்களின் ஆசியுடன் அமைச்சர் ,பிரதி அமைச்சராக வலம் வந்தவர்கள் எவருக்குமே  லயன் குடியிருப்பை முற்றாக ஒழிக்க முடியவில்லை.

இந்த மக்களுக்கு சொந்தம் என்று கூறக் கூடிய சட்ட ரீதியான காணித்துண்டுகள் இல்லை. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தை விட மிக மோசமான அழுத்தங்களுக்கும் கொடுமைகளுக்கும் முகங்கொடுத்து வரும் சூழ்நிலைக்கு தற்போது இந்த மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

சில நேரங்களில் தமிழக அரசியல் பிரமுகர்கள் இலங்கையின் பெருந்தோட்ட பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டால் அங்குள்ள அகதி முகாம் மக்கள் நன்றாக வாழ்கின்றனர் என திருப்திபட்டுக்கொள்வர். அதன் காரணமாகத்தான் கடந்த 4 தசாப்த காலமாக இச்சமூக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றை அலங்கரித்து வந்த மலையக பிரதிநிதிகள் எவரும் தமிழக அரசியல்வாதிகளை இலங்கையின் பெருந்தோட்டப் பகுதிகளுக்கு அழைத்துச்சென்றதில்லை.

தமிழகத்தின் சுமார் 108 முகாம்களில் தங்கியுள்ள அகதிகளின் நலன்கள்  மற்றும் அவர்களின் பிள்ளைகளின் கல்வி எதிர்காலத்துக்காக  தமிழக அரசு அறிவித்துள்ள  சில நலனோம்புகை திட்டங்களை பார்க்கும் போது, மலையக பெருந்தோட்டப் பிரதேசங்களில் வறுமை கோட்டுக்குக் கீழ் கல்வி கற்க போராடும் மாணவர்கள் , போராட்டம் தோற்ற நிலையில் இடைவிலகியோர், பின்பு தலைநகரங்களுக்கு பணியாற்றச் சென்று மர்மமான முறையில் உயிரிழந்தோர் பற்றிய ஞாபகங்கள் வந்து போவதை தடுக்க முடியாதுள்ளது.

இது வரை எந்த மலையக தொழிற்சங்கமும் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு எந்த வித புலமை பரிசில்களையும் கல்விக்காக வழங்கியதாக சரித்திரம் இல்லை. மாறாக தொழிலாளர்களின் சந்தாவைப் பெற்றும் அதற்கு கணக்கு காட்டாதவர்களாகவே இன்று வரை இவர்கள் காலந்தள்ளுகின்றனர். உயிர் அச்சம் காரணமாக  வேறு ஒரு   நாட்டிலிருந்து வந்த தமது இன மக்களை  மனிதாபிமானத்தோடு அரவணைத்து அவர்களுக்கான நலன்களை கவனிக்கும் தமிழக அரசின் செயற்பாடுகளைப் பார்த்துச் சரி மலையக பிரதிநிதிகள் பாடங்கற்றுக்கொள்ள வேண்டும். இன்னொரு வகையில் கூறப்போனால் தாம் தமது மக்களை எவ்வாறு வைத்திருக்கிறோம் என்பதை நினைத்து வெட்கி தலை குனிய வேண்டும்.

அகதிகளுக்கு இவ்வாறெல்லாம் செய்திருக்கின்றீர்கள் எமது மக்களையும் கவனியுங்கள் என ஒவ்வொரு முறையும் இவ்வாறு ஓடோடிச்சென்று தமிழக அரசிடமோ இந்திய அரசிடமோ உதவிகளை கேட்பது எந்த வகையில் நியாயம் என்பது தெரியவில்லை. அப்படியானால் இந்த மக்களை அழைத்து வந்து பெருந்தோட்டங்களை உருவாக்கிய பிரித்தானியரிடமும் அல்லவா சென்று உதவி கேட்க வேண்டும்? தொப்புள் கொடி உறவென்ற விடயத்தை அடிப்படையாக வைத்துக்கொண்டு அதை உதவிகளைப் பெற்றுக்கொள்ள பயன்படுத்துவது நாகரிகமாகாது என்பதை இந்த பிரதிநிதிகள் புரிந்து கொள்வார்களாக. அகதிகளுக்காக ஒரு மாநில அரசு நிதி ஒதுக்கும் போது இங்கு சொந்த நாட்டில்  அகதி வாழ்க்கை வாழ்ந்து வரும் மலையக பெருந்தோட்ட சமூகத்தின் நலன்களுக்கு ஏன் ஒதுக்கீடுகளை செய்ய முடியாது என இலங்கை அரசாங்கத்திடம் கேள்வி கேட்கும் தைரியம் யாருக்குத் தான் உள்ளது?  

 

 

 

No comments: