Monday, October 11, 2021

இராணுவ பிரசன்னத்தை கோருவதன் மூலம் தொழிலாளர்களை தீவிரவாதிகளாக சித்திரிக்க முயற்சியா?

 


பெருந்தோட்டப்பகுதிகளில் ஆயிரம் ரூபாய் நாட்சம்பளமானது சம்பள நிர்ணய சபையின் ஊடாக வழங்கப்பட்ட காலத்திலிருந்து, தொழிலாளர்களுக்கும் தோட்ட நிர்வாகங்களுக்கும் முரண்பாடுகள் அதிகரித்து தற்போது உச்ச நிலையை எட்டியுள்ளன.

தோட்ட முகாமையாளர்கள், சேவையாளர்களுக்கும் தோட்டத்தொழிலாளர்களுக்குமிடையிலான இந்த சம்பள முரண்பாடுகள், வாய்த் தர்க்கத்தில் ஆரம்பித்து  கைகலப்புகள் வரை சென்று பின்பு பொலிஸ் முறைப்பாடு, கைதுகள், தடுத்து வைப்பு, வழக்கு விசாரணை என தொடர்கின்றன.

ஆனால் தொழிற்சங்கங்களோ அரசாங்கமோ இவற்றை கண்டு கொள்வதில்லை. ஆயிரம் ரூபாய் பிரச்சினை தீர்ந்து விட்டது என  இருதரப்பினரும் மறுபக்கம் முகத்தை திருப்பி வைத்துக்கொண்டு சம்பவங்களை கண்டும் காணாதது போன்றும் கடந்து செல்கின்றனர். நீதிமன்றில் வழக்கு இருப்பதை காரணம் காட்டியே இவர்களின் மெளனமும் அலட்சியம் தொடந்தாலும் மறுபக்கம் தொழிலாளர்களின் தொழில் மற்றும் அடிப்படை உரிமைகள் என்ற விடயத்தை பிரதானமாக வைத்தாவது ஏதாவது பேசப்படுகின்றதா என்றால் அதுவும் இல்லை.

சில வாரங்களுக்கு முன்பு தலவாக்கலை பிரதேச கட்டுக்கலை தோட்டத்தில் இடம்பெற்ற சம்பவத்துக்கு அடிப்படை காரணமே இந்த சம்பள  விவகாரமேயாகும். 20 கிலோ கொழுந்து பறித்தால் மட்டுமே ஆயிரம் ரூபாய் நாட்சம்பளம் வழங்கப்படுகின்றது. அதற்கு ஒரு கிலோ குறைவாக இருந்தால் பறிக்கப்படும் கொழுந்தின் எடைக்கேற்ப, கொழுந்து ஒரு கிலோவுக்கு வழங்கப்படும் 40 ரூபாய் படியே தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகின்றது.

அதே வேளை ஆண் தொழிலாளர்கள் மாலை 4 மணி வரை பணிபுரியாவிட்டால் அரை பேர் வழங்கப்படுகின்றது. ஒரு நாளைக்கு 15 கிலோ வரை பறிக்கப்படும் கொழுந்தில் கழிவுக்காக ஒரு தொழிலாளியிடமிருந்து குறைக்கப்படுகின்றது. அப்படிப் பார்க்கும் போது ஒரு தொழிலாளி தினந்தோறும் 35 கிலோ வரை பறிக்க வேண்டியுள்ளது. கழிக்கப்படும் கொழுந்து தொழிற்சாலைக்கே அனுப்பப்படுகின்றது. ஆகவே இதில் தோட்ட நிர்வாகங்கள் எவ்வாறு இலாபத்தை பார்க்கின்றன என்பதை அறியலாம்.

இவற்றையெல்லாம் முன்வைத்தே தலவாக்கலை தோட்டத்தின் கட்டுக்கலை பிரிவு தொழிலாளர்கள் தோட்ட முகாமைத்துவம் மற்றும் சேவையாளர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு முகாமையாளர், தொழிலாளர்களைப் பார்த்து தகாத வார்த்தை பிரயோகத்தை வெளிப்படுத்தியதாலேயே முரண்கள் உருவாகி கைகலப்பு வரை சென்றுள்ளது. இந்த சம்பவத்தில் 4 பெண் தொழிலாளர்கள் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

இராணுவ  பிரசன்னத்தை கோரும்  முகாமையாளர்கள்

இச்சம்பவத்தையடுத்து தோட்ட முகாமையாளர்கள் சங்கமானது பத்திரிகையாளர் மாநாட்டை நடத்தி தாம் பொறுப்புகளிலிருந்து தற்காலிகமாக விலகிக்கொள்ளப்போவதாகவும் தமது பிரச்சினை குறித்து ஜனாதிபதி உடன் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறியிருந்தது. மேற்படி சங்கத்தின் தலைவரான தயா குமாரகே ஒரு படி மேலே சென்று, தொழிலாளர்களிடமிருந்து முகாமையாளர்களை பாதுகாக்க இரவு நேரங்களில் இராணுவ ரோந்த தோட்டப்பகுதிகளில் அவசியம் என பொலிஸ் மா அதிபருக்கு முறைப்பாடு செய்துள்ளார்.

யுத்த காலப்பகுதிகளில் தீவிரவாத செயற்பாடுகளை கட்டுப்படுத்தவும் மக்கள் பாதுகாப்பு கருதியும்  நாட்டின் பல பகுதிகளில் இராணுவ ரோந்து பணிகள் இடம்பெற்றமை வழமையானதொன்று. அதுவும் யுத்தம் இடம்பெற்ற பகுதிகளிலேயே இராணுவ ரோந்து நடவடிக்கைகள் அதிகமாக காணப்பட்டன. அதற்கு அப்பால் நாட்டின் தலைநகரம், முக்கியமான பாதுகாப்பு கேந்திர பகதிகளில்  சோதனைச் சாவடிகள், காவலரண்கள் போன்றன காணப்பட்டன. யுத்த காலத்தில் கூட பெருந்தோட்டப்பகுதிகளில் இராணுவ நடமாட்டம் இருந்ததில்லை.

அப்படியிருக்கும் போது தொழிலாளர்களிடமிருந்து பாதுகாப்பு கோரி தோட்டப்பகுதிகளில் இராணுவ பிரசன்னத்தை கோரியிருக்கும் முகாமையாளர்கள் சங்கம் தொழிலாளர்களை தீவிரவாதிகள் போன்று சித்திரிப்பது வேதனையான விடயம். அந்தளவுக்கு அவர்கள் மோசமாக நடந்து கொள்கின்றனர் என்ற ஒரு மாயத்தோற்றத்தை இவர்கள் ஏற்படுத்தவே முனைகின்றனர். ஏற்கனவே இவ்வாறான சம்பவத்தையடுத்து சாமிமலை ஓல்ட்டன் தோட்டத்துக்குள் பொலிஸ் நிலையமொன்றை அமைப்பதற்கான பணிகள் முடக்கி விடப்பட்டுள்ளன.

இதை அனைத்தும் தெரிந்தும் தமக்கு வாக்களித்த மக்களுக்கு ஒன்றுமே செய்ய முடியாத நிலையில் கைகளை பிசைந்து கொண்டு அரசாங்கத்திடமோ அல்லது கம்பனிகளிடமோ பேச முடியாது தத்தளித்துக்கொண்டிருக்கின்றனர் மலையக பிரதிநிதிகள்.

கொட்டகலையில் இராணுவ முகாம்

மக்கள் செறிவாக வாழ்ந்து வரும் பகுதிகளில் இராணுவ முகாம்கள் அமைக்கப்படுவதில்லை. ஆனால் கடந்த வருடம் கொரோனா நிலைமைகள் காரணமாக நாடு முடக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் கொட்டகலை கொமர்ஷல் கம்பனியின் கட்டிடங்களுக்குள்  வலுக்கட்டாயமாக இராணுவத்தினர் அத்துமீறி குடியேறியிருந்தனர். பின்பு அவ்விடத்தை ஆக்கிரமித்து தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இது தொடர்பாக இராணுவத்தினருக்கு எதிரான வழக்கு அட்டன் நீதவான் நீதிமன்றில் நிலுவையில் உள்ளது. இது இராணுவ முகாம் அல்ல, அனர்த்த முகாமைத்துவ நிலையமே என இராணுவத் தளபதி கூறினாலும் குறித்த பகுதியில்  படைப்பிரிவின் பெயர்க்கல் அங்கு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

அங்கு சில எண்ணிக்கையான இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர். இந்த சம்பவத்துக்கும் மலையக பிரதிநிதிகள் வாய் திறக்கவேயில்லை. ஆனால் ஒரு பிரதிநிதி இலங்கையின் பாதுகாப்புக்காக எங்கு வேண்டுமானலும் இராணுவ முகாம்களை அமைப்பதற்கு அரசாங்கத்துக்கு அதிகாரமும் உரிமைகளும் உள்ளன என அதை நியாயப்படுத்தினார். இத்தனை நாட்கள் இல்லாத இராணுவ பிரசன்னம் அதுவும் யுத்தம் முடிவுற்ற பிறகு, யுத்தத்துக்கும் சற்றும் சம்பந்தமேயில்லாத இடத்துக்கு  எதற்கு என்ற கேள்விக்கு அவர் பதில் கூறவில்லை. யுத்தம் முடிவுற்று  ஒரு தசாப்தம் கடந்த நிலையில் இன்று வடக்கு கிழக்குப்பகுதிகளில் நிலை கொண்டுள்ள இராணுவ பிரசன்னத்தை குறைக்கும்படி சர்வதேச ரீதியாகவே அழுத்தங்கள் உள்ள நிலையில், மக்கள் நடமாட்டம் உள்ள ஒரு பகுதிக்குள் புதிய இராணுவ முகாம்கள் எதற்கு என்ற கேள்வியை எவருமே எழுப்ப முடியாத நிலையிலுள்ளனர்.

இப்போது நகர்களுக்கு மிக அருகில் இராணுவ முகாம்கள் வந்து விட்ட நிலையில் அடுத்ததாக தோட்ட முகாமையாளர்கள் கோருவது போன்று தோட்ட எல்லைப்புறங்களிலும் முகாம்கள் அமைக்கப்படுமா என்று தெரியவில்லை.  எது எப்படியானாலும் இறுதி யுத்த காலப்பகுதியில் வட பகுதி மக்களை பிரதிநிதிகள் கைவிட்டு , தமது உயிரை காப்பாற்றி கொள்ள அங்கிருந்து வெளியேறியது போன்று, மலையக மக்களை ஏற்கனவே பிரதிநிதிகள் கைவிட்டு தலைநகர் சென்று தங்கி விட்டனர் என்று தான் கூற வேண்டியுள்ளது.   இதில் எதிர்த்தரப்பினரும் அடங்குகின்றனர்.

ஏனென்றால் சாமிமலை ஓல்ட்டன் தோட்டம் மற்றும் தலவாக்கலை கட்டுக்கலை தோட்ட சம்பவங்கள் எதையுமே ஆளும் மற்றும் எதிர்த்தரப்பு மலையக பிரதிநிதிகள் கண்டு கொள்ளவே இல்லை. எவரும் அந்த பக்கம் எட்டியும் பார்க்கவில்லை. கட்டுக்கலை தோட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள 11 பேரும் பிணையில் வெளிவந்து அவர்களுக்கும் தோட்ட நிர்வாகம் பணி வழங்கினால்  ஒழிய தாம் வேலைக்கு திரும்பப் போவதில்லையென தோட்ட மக்கள் உறுதியாக இருக்கின்றனர்.

அப்படியான உறுதியும் கட்டுக்கோப்பும் இன்று மலையக பிரதிநிதிகளிடம் இல்லையே என எண்ணும் போது வெட்கமாக உள்ளது. எனினும் கம்பனிகளும் தோட்ட முகாமையாளர்களும் தோட்டத்தொழிலாளர்கள் எதற்காக முரண்படுகின்றார்கள் என்ற விடயத்தை மறைத்து அவர்களை மிக மோசமான மனிதர்களாக சித்திரிப்பதில் கவனம் செலுத்துகின்றனர். இவர்கள் மூர்க்கமானவர்கள் என்ற மாயத்தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கின்றனர்.

நாட்சம்பள விவகாரத்துக்குப் பிறகு பெருந்தோட்டப்பகுதிகளில் தொழிற்சங்க செயற்பாடுகள் முற்றும் முழுவதுமாக செயலிழந்து போயுள்ள நிலையில் தொழிற்சங்க காரியாலயங்களும் வெறிச்சோடியுள்ளன. தொழிற்சங்க பிரமுகர்களையும்  அரசியல்வாதிகளையும் காணக்கிடைக்கவில்லை.    தேர்தல் என ஏதாவதொன்று வந்தால் அப்போது மக்களை காண பிரதிநிதிகள் வரும் போது இந்த நிர்வாக –தொழிலாளர் மோதல்கள் எந்தளவுக்கு உச்சத்தை தொட்டிருக்கும் என்று கூற முடியாதுள்ளது.  

சிவலிங்கம்  சிவகுமாரன்

 

No comments: