Monday, October 25, 2021

புத்தர் பரிநிர்வாணமடைந்த நகரமும் பகவத் கீதையும்....!

 

உத்தரபிரதேசத்தின் குஷிநகரில் சர்வதேச விமான நிலைய திறப்பு விழாவுக்கு முதன் முதலாகச் சென்று  தரையிறங்கியவர்கள்   என்ற பெருமையை எமது  நாட்டின் அமைச்சர் நாமலும் அவரோடு சென்ற சுமார் 100 பௌத்த பிக்குகளும் பெற்றிருக்கின்றனர். இந்த பயணத்தில் தமிழ்ப்பிரதிநிதியாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இ.தொ.கா பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமானும் கலந்து கொண்டிருக்கிறார்.

உத்தர பிரதேசத்திலமைந்த குஷி நகர் ஆனது அனைத்துலக பௌத்தர்களின் (  பௌத்த சிங்களவர்களினது மட்டுமல்ல) புனித தலமாக விளங்குகின்றது.  பௌத்த கோட்பாட்டை உருவாக்கிய சித்தார்த்த கௌதமர், பிறந்த இடம் நேபாள நாட்டின் லும்பினி எனும் இடமாகும். பின்பு ஞானம் பெற்று புத்தர் ஆன பிறகு தனது 80 ஆவது வயதில் அவர் பரிநிர்வாணம் அடைந்த நகரமே உத்தர பிரதேசத்தின் குஷி நகரம்.

அங்கு அமைக்கப்பட்ட விமான நிலையத்தின் திறப்பு விழாவுக்கே இலங்கையிலிருந்து சுமார் 110 பேர் விசேட விமானத்தில் சென்றிருந்தனர். இவ் விமான நிலையத்தை கடந்த 20 ஆம் திகதி  இந்திய பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.  குஷி நகரத்தின் சிறப்புகள் என்னவென்றால் புத்தர் பரிநிர்வாணம் அடைந்த  கோவில், அவரது உடல் தகனம் செய்யப்பட்ட இடம், அவரது அஸ்தி பாதுகாக்கப்படும் பகுதி என முக்கியமான அம்சங்கள் உள்ளன.  புத்தர் பிறந்த நேபாள நாட்டின் எல்லைப்புறத்தின் மிக அருகே இந்த நகர் அமைந்துள்ள அதே நேரம்  இராமர் பிறந்ததாக கூறப்படும் அயோத்யா நகரமும் அருகிலேயே உள்ளது.

மட்டுமின்றி இந்த உத்தரபிரதேசமானது  நாட்டின் மிகப்பெரிய மாநிலமாகும். முதல்வராக இருப்பவர் யோகி ஆதித்யநாத் என்ற துறவியாவார்.

இந்த நிகழ்வில் இலங்கை நாட்டின் பிரதிநிதியாக கலந்து கொண்ட அமைச்சர் நாமல் இந்திய பிரதமர் மோடிக்கு மும்மொழி பகவத் கீதை நூலை அன்பளிப்பாக வழங்கினார். இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையே 2500 வருடங்களாக காணப்படும் நட்புறவின் அடையாளமாகவும் பாரத தேசம் இந்த உலகிற்கு தந்த மிக புனிதமான நூாலாகவும் விளங்கும் பகவத் கீதை மும்மொழி வெளியீட்டின் முதற் பிரதியாகவும் இந்த பகவத் கீதை நூல் வழங்கப்பட்டதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது முகநூலில் தெரிவித்துள்ளார்.

 பாரத தேசம் தந்த பகவத் கீதையானது சிங்கள மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பமாக இது இருக்கலாம். ஆனால் அது உலகெங்கினும் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. குருஷேத்திர போரின் போது தனது எதிரணியில் உறவினர்களையும் , வித்தைகள் கற்றுக்கொடுத்த ஆசிரியர்களையும் எதிர்ப்பதா என அருச்சுணன் மனங்கலங்கி நின்றபோது அவனது தேரோட்டியாக செயற்பட்ட கிருஷ்ணன் வாழ்க்கையின் தத்துவங்களை உபதேசமாக கூறி அருச்சுணனை தேற்றி போருக்கு தயார்ப்படுத்துவதே கீதா உபதேசமாக விளங்குகின்றது. மகாபாரதம் ஏராளமான உபகதைகளையும் சம்பவங்களையும் கொண்ட ஒரு திரட்டு. அதில் யுத்த களத்தில் அருச்சுணனுக்கு கிருஷ்ணன் உபதேசிக்கும் சம்பவமே கீதாஉபதேசமாகியது.

'தர்மத்தை நிலைநாட்டவும் அதர்மத்தை எதிர்க்கவும் சூழ்நிலைகள் தோன்றும் போது   உறவினர், நண்பர், குரு என்றெல்லாம் பார்ப்பது நியாயமில்லை. நீ உனது கடமையையே செய்கிறாய் ' என்கிறார் கிருஷ்ணர்.

ஆனால் குருஷேத்திர போர் உருவாக பின்னணி காரணம் என்ன என்று கேட்டால்  அது மண்ணாசை பெண்ணாசை பொன்னாசை என மிக சுருக்கமாக மூன்று விடயங்களை மாத்திரமே கூறுவர் ஆன்றோர். ஆகவே கௌதம புத்தர் பரிநிர்வாணம் அடைந்த குஷிநகரில் இந்த நூலை அமைச்சர் நாமல் வழங்கியதற்கும் புத்தருக்கும் தொடர்புகள் இருக்கின்றன. ஏனென்றால் இளவரசராக இருந்த அவரும் அற்ப ஆசைகளை வெறுத்து ஒதுக்கி  ராஜபோக வாழ்க்கையை தவிர்த்து துறவறம் பூண்டார். ஆனால் தன்னைப் போன்று அனைவரும் செயற்பட வேண்டும் என்று கூறவில்லை. ராஜபோகத்தை வெறுத்து ஒதுக்கி வந்ததால் தான் பல தத்துவங்களை அவரால் கூற முடிந்தது.   அளவிற்கு அதிகமான ஆசையே துன்பத்துக்கு காரணம் என்ற ஞானத்தையே புத்தர் பெற்றார்.

உத்தர பிரதேச மாநிலத்திலமைந்த குஷி நகருக்கு உலகெங்கினும் பௌத்த மதத்தை பின்பற்றுவோர் வந்து செல்கின்றனர். அந்த நாடுகளுடன்  ஒப்பிடும் போது, பௌத்த மதத்தை பின்பற்றும் குறைவானவர்களை கொண்ட நாடாகவே இலங்கை விளங்குகின்றது. ஆனால் புத்தர் பிறந்தவுடனேயே  இந்திய -இலங்கை தொடர்புகள் உருவானதென்றும்  அதற்கும் முன்னர் இரு நாடுகளுக்குமிடையில் எந்த தொடர்புகளுமே இல்லை என்ற அடிப்படையிலேயே தவறான கருத்தியல்கள் இப்போதும்  முன் வைக்கப்பட்டு வருகின்றன. அதில் இந்த சம்பவமும் ஒன்று.

  அதைத்தான் ஜனாதிபதியும் இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையிலான 2500 வருட தொடர்புகள் என்று அழுத்தி கூறுகிறார். பகவத் கீதையை தந்த பாரத தேசம் தான் இராமாயணத்தையும் தந்தது. ஆனால் இராமாயணம் இலங்கையோடு மிகவும் தொடர்புடைய காவியம்.  இராமாயண சம்பவங்களோடு தொடர்புடைய பல இடங்கள் இலங்கையில் இருக்கின்றன. எனினும் இங்குள்ள கடும்போக்கு சிங்கள பௌத்த பிக்குகள் இராமரை, அந்நிய தேசத்திலிருந்து இலங்கைக்கு  படையெடுத்து வந்த ஒரு சக்தியாக பார்க்கும் அதே வேளை இலங்கையை மீட்க போராடி உயிர்நீத்த மன்னராகவும் மண்ணின் மைந்தனாகவும்  இராவணனை போற்றுகின்றனர். அதன் விளைவாகவே இராவண பல சேனா போன்ற அமைப்புகளும் தோற்றம் பெற்றன.

கூறப்போனால் இராமாயணம் மகாபாரதத்துக்கு முந்தியது என்றே கூற வேண்டும். ஏனென்றால் மகாபாரதத்தின் 18 காண்டங்களில் மூன்றாவது காண்டமான ஆரண்ய காண்டத்தில், அதாவது பாண்டவர்களின் வனவாச காலத்தில், மார்க்கண்டேய முனிவர் இராமாயண நிகழ்வுகளை தருமனுக்கு எடுத்துரைக்கின்றார் என்பது முக்கிய விடயம். ஆனால் மகாபாரதத்துக்கும் இலங்கைக்கும் தொடர்புகள் இருக்கின்றதா இல்லையா என்பதை கூற முடியாதுள்ளது. அல்லது உறுதியான வரலாற்று தகவல்கள் இல்லை. ஆகையால் தான் அது மும்மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளதோ தெரியவில்லை.

  இது வரை ஏன் கம்பராமாயணம் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்படவில்லையென எவரும் கேள்வி கேட்க முடியாது. ஏனென்றால் புத்தர் பிறப்பதற்கு முன்னரே இராமர் இலங்கை வந்து சென்று விட்டாரா ? இராவணன் என்ற தமிழ் மன்னன் ,சிவபக்தன் இலங்காபுரியை ஆண்டானா என கடும்போக்குவாதிகள் கேள்வி கேட்க ஆரம்பித்து விடுவர்.

எது எப்படியானாலும் இங்கு வாழ்ந்து வரும் பௌத்த சிங்கள மக்களினதும் அவர்களின் மனவோட்டத்தை புரிந்து அரசியல் செய்யும் பிரதான கட்சிகளினதும் நிலைப்பாடு என்னவென்றால் கௌதம புத்தர் பிறந்து பிறகே இலங்கைக்கும் இந்தியாவுக்கும் தொடர்பு ஏற்பட்டது என்பதாகும். இதன் காரணமாகவே அவர் பிறந்த தினமான புத்த பூர்ணிமா அல்லது புத்த ஜெயந்தியை இலங்கை வாழ் மக்கள்  தமது வரலாற்றின் தினமாக கொண்டாடுகின்றனர்.

அதே போன்று இலங்கை வரலாறு என்பது மகாவம்சத்திலிருந்தே ஆரம்பிக்கின்றது என கடும்போக்கு வரலாற்று ஆராய்ச்சியாளர்களும் இன்று வரை கூறி வருகின்றனர். அதற்கு முன்பு இங்கிருந்த அரசியல், கலாசார ,பண்பாட்டு விடயங்கள் பற்றிய ஆய்வு அவர்களுக்கு முக்கியமில்லை. தேவையுமில்லை.

இப்போது குஷிநகர் என்பது இலங்கையுடன் மிகவும் தொடர்புடைய நகரமாக மாறி விட்டது. புத்தர் பரிநிர்வாணம் அடைந்த நகரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சர்வதேச விமான நிலைய ஓடுதளத்தை,  முதன் முதலில் முத்தமிட்டது  இலங்கை விமானம் என்றும் வந்திறங்கியவர்கள் இலங்கை பௌத்த சிங்கள மக்கள் என்றும் வரலாற்று ஏடுகளில் பதியப்படப்போகின்றன. 

அடுத்ததாக இதே உத்தரபிரதேச மாநிலத்தின் அயோத்தி நகரில் இராமர் ஆலயம் உருவாகி வருகின்றது.  இராமாயண காலத்தையும் இலங்கையுடனான தொடர்பையும் நினைவு கூருவதற்கும் சில மாதங்களுக்கு முன்பு நுவரெலியா சீதையம்மன் ஆலயத்திலிருந்து பூஜிக்கப்பட்ட கல் ஒன்று அயோத்தி இராமர் ஆலய கட்டுமானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.   அயோத்தி இராமர் ஆலயப் பணிகள் பூர்த்தியாகியவுடன் அந்நிகழ்வில் பங்கேற்பதற்காக உத்தர பிரதேசம் அயோத்தி நகருக்கு யார் இலங்கையிலிருந்து செல்லப்போகின்றார்கள், மற்றும்  பிரதமர் மோடிக்கு என்ன புத்தகத்தை கையளிக்கப்போகின்றார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 

No comments: