Monday, November 22, 2021

ஏமாற்றங்களுடன் வாழப்பழகுதல்…!

 ஒவ்வொரு அரசாங்கத்தினதும் வரவு செலவு திட்டங்களில், பெருந்தோட்ட சமூகம் மற்றும் அவர்களின் பிரதேச அபிவிருத்தி பற்றி கூறப்படும் விடயங்கள்  முன்மொழிவுகளாக மட்டுமே இருப்பது ஒன்றும் ஆச்சரியமல்ல. ஏனென்றால் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் அரச சேவையாளர்களாவும்  இல்லாது தனியார் துறையையும் சாராது வேறுபட்டு நிற்கும் ஒரு பிரிவினர்,  அல்லது ஒதுக்கி வைக்கப்பட்ட   ஒரு சமூகத்தினர் என்று கூறலாம்.

நாட்டின் தேசிய வருமானத்துக்கு, சுதந்திரத்துக்கு முன்பும்  அதற்கு பின்னரும்   தொடர்ச்சியாக பங்களிப்பு செய்து வரும் மக்கள் கூட்டம்  என பெருமையாக பேசுபவர்கள், சுதந்திரத்துக்கு முன்பு இருந்த நிலையிலேயே அவர்களது வாழ்க்கையும் வசிப்பிட உட்கட்டமைப்பும்  தற்போதும்  உள்ளது என்பது குறித்து பேச மாட்டர்.

அந்த வகையில்  2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம்  பற்றியும் அதில் பெருந்தோட்ட  பிரதேசங்கள் மற்றும் அங்கு வாழ்ந்து வரக்கூடிய மக்களுக்கு என்ன வரப்பிரசாதங்கள் முன்மொழியப்பட்டன என்பது குறித்தும்  கட்டுரை எழுதுமளவுக்கு ஒன்றுமில்லை.  என்றாலும் இதற்கு முன்பும் இவ்வாறு வரவு செலவு திட்டத்தில் இம்மக்களுக்காக முன்மொழியப்பட்டவையும்  அப்படியே கிடப்பில் போட்டவையாகவே உள்ளன என்பதை உரிய தரப்புக்கு ஞாபகமூட்டுதல் அவசியமல்லவா?

மட்டுமல்லாது ஏனைய சமூகங்களுக்கும், அவர்கள் வாழ்ந்து வரும் பிரதேசங்களுக்கும்,  அமைச்சுக்களுக்கும்  முன்மொழியப்பட்ட விடயங்களை சீர்தூக்கி பார்த்தாலாவது பெருந்தோட்ட சமூகம் எந்தளவுக்கு ஒரங்கட்டப்பட்டுள்ளது  என்பதை அந்த சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு பிரதிநிதிகள், வரவு செலவு திட்ட விவாதங்களின் போது   கதைப்பதற்கும் உதவியாக இருக்கும் என்று நினைக்கிறோம்.

இம்முறை வரவு செலவு திட்டத்தில் பெருந்தோட்டப்பகுதி வீடுகள் அபிவிருத்திக்கு 500 மில்லியன் (ரூ50 கோடி) ஒதுக்கப்பட்டுள்ளது. மட்டுமின்றி 3 வருடங்களுக்குள் லயன் வீடுகளை இல்லாதொழிக்கும் ஒரு செயற்பாட்டுக்காகவே இத்.தொகை ஒதுக்கப்படுவதாக நிதி அமைச்சர் அறிவித்துள்ளார். இது மிகவும் நகைப்புக்குரியதாகவும் பெருந்தோட்டப்பகுதி குடியிருப்புகள் பற்றிய பூரணமான எந்தவொரு தெளிவுமின்றிய முன்மொழிவாகவே உள்ளது.

ஏனென்றால் ஊவா , மத்திய,சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் உள்ள பெருந்தோட்டப்பகுதிகளில், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட சுமார் ஒரு இலட்சத்து 30 ஆயிரம் வரையிலான லயன் குடியிருப்புகள் இன்னமும் உள.  இவற்றை  எங்ஙனம் 3 வருடங்களுக்குள் இல்லாமலாக்குவது ? மட்டுமின்றி 50 கோடி ரூபாயில் எத்தனை வீடுகள் அமைக்க முடியும்?  இப்போது நிதி அமைச்சராக விளங்கும் பஸில் ராஜபக்சவின் சகோதரர் மஹிந்த ராஜபக்ச, ஜனாதிபதியாகவும் நிதி அமைச்சராகவும்  இருந்த போது,  2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட முன்மொழிவில் பெருந்தோட்டப்பகுதிகளில் 50 ஆயிரம் வீடுகள் அமைக்கப்படும் என்றார். அந்நேரம் மலையகம் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள ஒரு அமைச்சுப் பொறுப்பை கொண்டிருந்தது.

ஆனாலும்  2015 ஆம் ஆண்டுக்கான  வரவு செலவு திட்ட உரையை நிதி அமைச்சராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சமர்ப்பித்த போது, அது வரை  பெருந்தோட்டப்பகுதிகளில் ஒரு வீட்டுத்தொகுதி கூட உருவாக்கப்பட்டிருக்கவில்லை. அது குறித்து அவருக்கு ஆதரவு வழங்கிய இ.தொ.கா,   வாய் திறந்து ஒன்றுமே கேட்கவில்லை.

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் பெருந்தோட்டத்துறை சமூகம் எந்தளவுக்கு புறக்கணிக்கப்பட்டிருக்கின்றது என்பதற்கு மற்றுமொரு உதாரணம் கிராமப்புற வீடுகள் அபிவிருத்திக்கு முன்மொழியப்பட்டுள்ள தொகை. இதற்காக 5 ஆயிரம் மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. பொதுவாக கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கு நிலம் சொந்தமாகவுள்ளது. அந்த உரிமை ஒன்றே அவர்களுக்கு கிடைத்துள்ள பெரும் வரப்பிரசாதம். இங்கு நிலவுரிமையும் வீடுகளும் இல்லாதவர்களுக்கு  பிய்த்து கொடுத்தாற்போன்று 500 மில்லியன் ரூபாய் மட்டுமே ..! தற்போதுள்ள  வாழ்க்கைச்செலவு, கட்டுமான பொருட்களின் விலையேற்றத்துக்கு மத்தியில்  இத்தொகையில் அதிகபட்சமாக 350 வீடுகள் வரை மட்டுமே அமைக்க முடியும். பிறகு எப்படி ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட லயன் குடியிருப்புகளை  3 வருடங்களில் ஒழிப்பது?

மட்டுமின்றி வனப்பாதுகாப்புக்குக் கூட 2 ஆயிரம் மில்லியனும் விளையாட்டுத்துறையை அபிவிருத்தி செய்ய 3 ஆயிரம் மில்லியனும் முன்மொழியப்பட்டுள்ளன. ஆனால் கொரோனா தொற்று காலத்திலும் நாள் முழுக்க பணியாற்றி, சம்பள விடயத்தில் ஏமாற்றப்பட்டு ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக நாட் சம்பளத்தைப் பெற்று வரும் தொழிலாளர்  சமூகத்துக்கு முன்மொழியப்பட்டுள்ள தொகை  வெறும் 50 கோடி ரூபாய் மட்டுமே !

முழுக்க முழுக்க பெரும்பான்மையினர் வாழ்ந்து வரும் கிராமப் பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதற்கான முன்மொழிவுகளை தாங்கி, அவர்களை விட கடும் உழைப்பையும் அர்ப்பணிப்பையும் வழங்கும் தோட்டத்தொழிலாளர்களை முழுமையாக புறக்கணித்து இந்த வரவு செலவு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என்றால் மிகையாகாது. ஏனென்றால் ஏற்கனவே இரசாயன பசளை விவகாரத்தில் கிராமப்புற விவசாயிகளின் கடுஞ் சீற்றத்துக்குள்ளாகியிருக்கும் அரசாங்கம், அவர்களை ஓரளவுக்குச் சரி திருப்திபடுத்துவதற்கு கிராமப்புற அபிவிருத்தி என்ற பெயரில் ‘ கிராமப்புற வாழ்வாதார அபிவிருத்திக்கு 19 ஆயிரம் மில்லியன்களும், கிராமப்புற அபிவிருத்தி திட்டங்கள் என்ற பெயரில் தனியாக 42 ஆயிரம் மில்லியன்களையும் ஒதுக்கியுள்ளது.

வரவு செலவு திட்டங்களின் முன்மொழிவுகளை வைத்துக்கொண்டு இங்கு எவரும் கனவு காண முடியாது. ஏனென்றால் முன்மொழிவுகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டிய அவசியம் அரசாங்கத்துக்கு இல்லை. நிறைவேற்றியே தீர வேண்டும் என குறித்த சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் அழுத்தம் கொடுக்கவும் முடியாது. ஏனென்றால் அவர்களுக்குக் கிடைக்கும் சலுகைகள் சில வேளைகளில் இல்லாமல் போகலாம் அல்லது பறிக்கப்படலாம். அதையும் மீறி அமைச்சரவையில் குரல் எழுப்புவதற்கு மலையக சமூகத்துக்கு அமைச்சரவை அந்தஸ்த்தும் கிடையாது.

எது எப்படியானாலும் இவ்வாறான சம்பவங்கள் தோட்டத்தொழிலாளர்களை இனியும் பாதிக்கப்போவதில்லை. ஒன்றரை நூற்றாண்டுகளாக பல விதத்திலும் ஏமாற்றப்பட்டே வாழ்க்கையை நகர்த்தி வரும் அவர்கள் ஏமாற்றங்களுடன் வாழ  பழகி  விட்டனர் என்றே கூற வேண்டும்.     

 

 


No comments: