Sunday, January 9, 2022

தொழிற்றுறையை அடகு வைக்கும் செயற்பாடுகள்…!


பண்டமாற்று முறை ஆதிகால வர்த்தக செலாவணி நடைமுறையாகும். ஒரு பொருளுக்குப் பதிலாக மற்றுமொரு பொருளைப் பெற்றுக்கொள்வது அல்லது வழங்குதல் இதன் செயற்பாடாகும். தற்போதைய நவீன காலத்திலும் இந்த முறையானது கூடுதலாக வறுமை நிலவும் நாடுகளிலும் பொருளாதார தேக்க நிலை உள்ள நாடுகளிலும் பின்பற்றப்படுகின்றது எனலாம்.

ஏனெனில் ஒரு பொருளை இறக்குமதி செய்யுமளவிற்கு அந்நிய செலாவணி இல்லாவிட்டால் பணம் கொடுப்பதற்குப் பதிலாக பொருளை கொடுக்க வேண்டி வரும். இப்போது அந்த நிலைமையில் தான் இலங்கையும் உள்ளது. அதே வேளை உணவுப்பொருட்களுக்கும் அத்தியாவசிய ஏனைய பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டாலும் இந்த பண்டமாற்று முறை செயற்படுத்தப்படுகின்றது. காரணம் கையிருப்பில் உள்ள பணத்திற்கு அத்தியாவசிய பொருட்களை குறைந்த அளவாவது இறக்குமதி செய்ய வேண்டி நேரிடும்.

அதே வேளை இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கான நிலுவைத் தொகையை செலுத்துவதற்கு டொலர்கள் இல்லாத பட்சத்தில் அதற்கு மாற்றீடாக அதே பெறுமதிக்கு மாற்று பொருட்களை ஏற்றுமதி செய்ய வேண்டும்.

ஈரானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெய்க்கான நிலுவைத்தொகையான சுமார் 251 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்த முடியாது திண்டாடி வரும் இலங்கை, அதற்கு மாற்றீடாக தற்போது தேயிலையை ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது.

ஆனால் இதில் முக்கிய விடயம் ஏற்கனவே இலங்கையில் உணவுப்பொருட்களுக்கான தட்டுப்பாடு நிலவுவதையும் அவற்றை போதுமான அளவுக்கு இறக்குமதி செய்வதற்குரிய அந்நிய செலாவணி இல்லை என்பது குறித்தும் விவசாய அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதித்த ஜயசிங்க உறுதிப்படுத்தியுள்ளார். உணவுப்பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட நேரிட்டால் நாம் பண்டமாற்று முறைக்கு செல்ல வேண்டி வரும் என ஏற்கனவே அவர் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

இலங்கை தேயிலை வரலாற்றில் முதல் தடவையாக, நாடு செலுத்த வேண்டிய கடன் பாக்கி தொகைக்கு ஈடாக தேயிலை ஏற்றுமதி செய்யப்படவிருக்கின்றது. இதற்கு முன்னதாக நாட்டிற்கு வருமானம் பெற்றுத்தந்த துறையாக இது பிரதானமாக விளங்கியது. இப்போது நாடு செலுத்த வேண்டிய கடன் நிலுவைக்கு இத்துறை பிணையாளியாக வைக்கப்பட்டுள்ளது. அதன் படி இந்த கடன் நிலுவையை செலுத்துவதற்கு மாதமொன்றுக்கு 5 மில்லியன் டொலர்கள் பெறுமதியான தேயிலையை ஏற்றுமதி செய்ய வேண்டும். இந்த செயற்பாடு ஜனவரி மாதத்திலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளதாக பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

ஆகவே அடுத்த 50 மாதங்கள், அதாவது 4 வருடங்களுக்கு இலங்கைத் தேயிலையின் பெரும்பகுதி ஈரானுக்கே ஏற்றுமதியாகப்போகின்றது. எனவே அடுத்த வருடத்திலிருந்து தேயிலை உற்பத்திக்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்க வேண்டியுள்ளது. ஆனால் பெருந்தோட்டப்பகுதிகளில் தற்போது நிலவும் சூழ்நிலைகள் இந்த செயற்பாடுகளுக்கு எந்தளவு சாதகமான பெறுபேறுகளைத் தரப்போகின்றன என்று தெரியவில்லை. கூறப்போனால் அடுத்த 4 வருடங்களுக்கு இலங்கைத் தேயிலைத்துறையானது அடகு வைக்கப்பட்டுள்ளது என்றே கூற வேண்டியுள்ளது.

வருடந்தோறும் 340 மில்லியன் கிலோ கிராம் தேயிலையை எமது நாடு உற்பத்தி செய்கின்றது. கடந்த வருடம் மட்டும் 265 மில்லியன் கிலோ கிராம் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டதில் வருமானமாக 1.24 பில்லியன் டொலர்கள் பெறப்பட்டன.

ஆனால் இதைப் பெற்றுத்தரும் தோட்டத்தொழிலாளர்களுக்கு உரிய வேதனம் கிடைக்கின்றதா? அரசாங்கத்தின் சம்பளத் திட்டத்தையே கம்பனிகள் சரிவர அமுல்படுத்தவில்லை. அதை விசாரிக்க ஆணைக்குழுவை தாபிக்க போகிறோம் என்கிறார் தொழில் அமைச்சர். மீண்டும் கூட்டு ஒப்பந்தத்துக்கே செல்ல வேண்டும் என ஆளுந்தரப்பில் அங்கம் வகிக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கூறுகின்றது. அப்படியானால் அடுத்த வருடத்திலிருந்து குறித்த தொகை பெறுமதியான தேயிலையைப் பெற்றுக்கொள்ளவா இந்த ஏற்பாடுகள் எல்லாம் என்ற கேள்வியும் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

இலங்கை, பணமாகவோ பொருளாகவோ ஏனைய நாடுகளிடம் பெற்ற கடன் தொகையை வட்டியுடன் அடுத்த வருடம் செலுத்த வேண்டுமென்றால் அத்தொகையானது 4.5பில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளது.

இவ்வாறான பாரிய தொகையை ஈடு செய்வதற்கு நாட்டில் வேறு என்ன தொழிற்றுறையை அடகு வைக்க முடியும் என அரசாங்கம் நிச்சியம் சிந்திக்கும். ஆனால் இத்துறையோடு இணைந்திருப்பவர்களுக்கு என்ன கிடைக்கின்றது என்பது மிகப்பெரிய கேள்வி. நாட்டின் தேசிய வருமானத்துக்கு கடந்த 150 வருடகாலமாக தொடர்ச்சியான பங்களிப்பு செய்து வரும் தேயிலை தொழிற்றுறையோடு இணைந்திருப்பவர்களின் வாழ்க்கை நிலைமைகள் குறித்து புதிதாக என்ன தான் கூற வேண்டியுள்ளது? அத்துறைக்குப் பிறகு அந்நிய செலாவணியைப் பெற்றுத்தரக்கூடிய துறைகளாக வளர்ச்சியடைந்த ஆடை ஏற்றுதி மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரிவோரின் பங்களிப்பு போன்ற அம்சங்கள் புத்துயிர் பெறுவதற்கு இந்த தேயிலைத்துறையே உயிர்நாடியாக இருந்தது.

ஆரம்பத்தில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு கீழும் பின்னர் தொழிற்சங்கங்கள் ,அரசியல் கட்சிகளின் கட்டுப்பாட்டிலும் இருந்த தேயிலைத்தொழிற்றுறை இப்போது தற்போதைய அரசாங்கத்தின் பிடிக்குள் நேரடியாகவே சிக்குண்டுள்ளது.இந்த தரப்பினரை பிரதிநிதித்துவப்படுத்தும் தரப்பினர் தொழிற்சங்கவாதிகளாக அரசாங்கத்தின் பக்கம் இருந்தாலும் பெருந்தோட்டத்துறை அமைச்சு அந்த தரப்பினரிடம் இல்லை. இது வரை அந்த அமைச்சுப் பொறுப்பு எந்த மலையக பிரதிநிதிகளின் கைகளுக்கும் செல்லாமல் பார்த்துக்கொள்வதில், மாறி மாறி வந்த அனைத்து அரசாங்கங்களும் மிகவும் எச்சரிக்கையாகவே இருந்துள்ளன.

ஆனால் நாட்டின் பெருங்கடனை அடைப்பதற்கு இவ்வாறானதொரு தொழிற்றுறையும் உயிர்ப்போடு இருப்பதை இந்த அரசாங்கமும் சிந்திப்பதாகத் தெரியவில்லை. அதை எடுத்துக்
கூறும் ஆளுமைகளும் மலையகத்தில் இல்லை என்பது வேதனைக்குரியதே !

No comments: