Sunday, January 9, 2022

இந்தியாவையும் 13 ஆவது திருத்தச்சட்டத்தையும் மட்டும் நம்பிக்கொண்டிருப்பதா?


 

தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஏற்பாட்டில் கடந்த நவம்பர் மாதம் 2 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ஒன்று கூடிய தமிழ்க்கட்சிகளின் தலைவர்கள் பின்னர் இரண்டு தடவைகள் தலைநகரிலும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். முதலாவது சந்திப்பின் போது 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தக் கோரியும் மாகாண சபை தேர்தல்களை நடத்தும்படியும் இந்தியாவுக்கு கோரிக்கை முன்வைத்து அனைத்துத் தமிழ் தரப்பினரும் ஒரு பொது ஆவணத்தை தயாரித்து இந்திய பிரதமருக்கு அனுப்பி வைப்பதென்ற முடிவு எடுக்கப்பட்டிருந்தது.

இலங்கையின் வடக்கு ,கிழக்கு மலையகத்தில் செறிவாகவும் ஏனைய பிரதேசங்களிலும் வாழ்ந்து வரக்கூடிய தமிழர்கள் என்று அழைக்கக்கூடிய மக்களில் மூன்று மதங்களையும் சேர்ந்தவர்கள் இருக்கின்றனர். இந்த மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித்தலைவர்களே இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

மூன்று சந்திப்புகளினதும் பின்னர் பொதுவான ஆவணமொன்றை தயாரித்து அனைத்து தமிழ்க்கட்சித் தலைவர்களினதும் கையொப்பங்களுடன் அதை இலங்கைக்கான இந்திய தூதுவர் ஊடாக இந்திய பிரதமருக்கு கையளிப்பது தொடர்பில் இணக்கம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் புதிய அரசியலமைப்பில், 13 ஆவது திருத்தச்சட்டத்தை நீக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் கூறும் இந்த தரப்பினர், அதை தக்க வைத்துக்கொள்ளவும் அதிகார பகிர்வை ஏற்படுத்த இந்தியாவின் தலையீடு வேண்டும் என்றும் கூறுகின்றனர். முதலில் இந்த 13 ஆவது திருத்தச்சட்டத்தினால் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக தமிழ்ப்பேசும் மக்கள் என்ன நன்மைகளைப் பெற்றார்கள் என்பதை அனைத்து கட்சிகளும் தாம் தயாரிக்கும் ஆவணத்தில் உள்ளடக்கியுள்ளனரா ? அதை பாரத பிரதமருக்கு அனுப்புவார்களா என்று கேட்கத்தோன்றுகின்றது. இலங்கையில் வாழ்ந்து வரும் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் மற்றும் முஸ்லிம் மக்களுக்கும், ஊவா, மத்திய, சப்ரகமுவ மாகாணங்களில் செறிந்து வாழ்ந்து வரும் இந்திய வம்சாவளி மலையக மக்களுக்கும் இந்த 13 ஆவது திருத்தச்சட்டத்தினால் என்ன நன்மைகள் கிடைத்தன அல்லது எதிர்காலத்தில் எவையெல்லாம் கிடைக்கப்போகின்றன என்பது குறித்து இவர்கள் தனியாக ஒரு ஆவணத்தை தயாரிக்க வேண்டும். அதன் பின்னர் தமிழப்பேசும் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வை பெற்றுத்தருவதில் இந்த திருத்தச்சட்டத்தைப்பற்றி பேசுவதா வேண்டாமா என்ற முடிவுக்கு வரலாம்.

அதிகார பரவலாக்கம் என்ற அம்சத்தில் 13 ஆவது திருத்தச்சட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட மாகாண சபைத் தேர்தல்களை மட்டுமே ஏன் இவர்கள் இலக்கு வைத்து வருகின்றனர் என்பது மிக முக்கியமான கேள்வி. மட்டுமின்றி இன்று வடக்கு கிழக்கு தமிழர்களினதும் மலையகத் தமிழர்களினதும் அரசியல் பிரச்சினைகள் வெவ்வேறானவை. வடக்கு கிழக்கு தவிர்ந்த தமிழர்கள் செறிவாக வாழ்ந்து வரும் மத்திய மாகாணத்தில் ஒரு தமிழர் முதலமைச்சராக வரக்கூடிய சாத்தியங்களே இல்லை. தமிழ்க்கல்வி அமைச்சு என்ற விடயத்தையும் தற்போதைய ஜனாதிபதி இல்லாது செய்துள்ளார். முதலமைச்சருக்கு மேலதிகமான அதிகாரத்தைக் கொண்ட ஆளுநர் பதவி மாகாணங்களுக்கு உள்ளது. பொலிஸ்/காணி அதிகாரங்கள் எப்போதும் மாகாணங்களுக்குள் அமுல்படுத்தப்படப் போவதில்லை. இதை எந்த அரசாங்கங்கள் வந்தாலும் அமுல்படுத்தாது.

ஏனென்றால் இந்த நாட்டின் பெரும்பாலான பெளத்த சிங்கள மக்களுக்கு ‘சமஷ்டி’ என்ற அர்த்தமும் ‘அதிகார பரவலாக்கம்’ என்ற விடயத்தைப் பற்றியும் போதிய விளங்கங்கள் இல்லை. அதிகாரங்களை பகிர்வது என்றால் அவர்கள் மனதில் தமிழர்களுக்கு நாட்டை பிரித்து கொடுப்பது என்ற அர்த்தம் மட்டுமே தெரியும். காலாகாலமாக பேரினவாதிகள் அதை மட்டுமே சிங்கள மக்கள் மனதில் விதைத்து வருகின்றனர்.

முதலில் இந்த நாட்டின் சிங்கள மக்களின் மனதை வெல்லும் நிகழ்ச்சி நிரல்களை தமிழப்பேசும் கட்சிகள் முன்னெடுத்தல் அவசியம். அதை எந்த தமிழ்த்தரப்பும் இது வரை முன்னெடுக்கவில்லை.

.தமிழ் மக்களின் நிரந்தர அரசியல் தீர்வு விடயத்தில், இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் இந்த தமிழ்க்கட்சிகள் 13 ஆவது திருத்தச்சட்டத்தையும் இந்தியாவையும் நம்பிக்கொண்டிருக்கப்போகின்றன? பொலிஸ் காணி அதிகாரங்கள் இல்லாத மாகாண சபை முறையில் மலையக மக்களுக்கோ அல்லது வடக்கு கிழக்கு மக்களுக்கோ என்ன கிடைத்தது?

உறுப்பினர்களுக்கு வேண்டுமானால் சலுகைகள் கிடைத்திருக்கலாம். 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்தி தமிழ் மக்களின் மனங்களை வெல்லுங்கள் என்கிறார் த.மு.கூ தலைவர் மனோ கணேசன். அவர் தலைவராக உள்ள இரண்டு கட்சிகள் நுவரெலியா மாவட்ட மக்களை பிரதிநிதித்துவப்படுத்துபவை. 3 பாராளுமன்ற உறுப்பினர்களை அம்மாவட்டம் கொண்டுள்ளது. அவர் கூற்றுப்படி இத்திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தினால் பெருந்தோட்ட மக்களுக்கு காணிகள் உரித்தாகுமா? அவை ஏற்கனவே நீண்ட கால குத்தகைக்கு பெருந்தோட்ட கம்பனிகளிடம் அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ளன. சட்டம் அமுல்படுத்தப்பட்டு அதிகாரம் பரவலாக்கப்படும் போது ஏற்கனவே இருக்கும் சட்டங்களையும் ஒப்பந்தங்களையும் எவ்வாறு வலுவிழக்கச்செய்வது போன்ற பல விடயங்களைப்பற்றியும் பேச வேண்டியுள்ளது.

அனைவரும் 13 ஆவது திருத்தச்சட்டத்தைப் பற்றி பேசுவதால் கூட்டத்தோடு சேர்ந்து கோவிந்தா போடுவது போன்று கைகளை உயர்த்தி விட்டு வருவதல்ல தீர்வு. முதலில் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களுக்கு இந்த கோரிக்கை தீர்வை தருமா என சிந்திக்க வேண்டும்.

காணி அதிகாரங்களைப் பொறுத்தவரை வடக்கு கிழக்கு வாழ் மக்கள் தமது காணி உரித்தோடு வாழ்கின்றனர். அதன் காரணமாகவே யுத்த காலத்தில் இராணுவத்தினரின் அதிகாரத்துக்குள் இருந்த பிரதேசங்களும் காணிகளும் விடுவிக்கப்பட்டுள்ளன. ஆனால் மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் 200 வருட காலமாக காணி உரித்து இல்லாது இருக்கும் தொழிலாளர்களுக்கு இந்த சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட்டவுடன் காணி உரித்து கிடைத்து விடுமா? இதற்கு மனோ கணசேன் உத்தரவாதம் தருவாரா? இந்த திருத்தச்சட்டம் எந்த காலகட்டத்தில் எதற்காக ஏற்படுத்தப்பட்டது என்பது குறித்து இவர்கள் விளங்கிக்கொள்ளல் அவசியம். 87 ஆம் ஆண்டு வடக்கு கிழக்கு மாகாணங்கள் மற்றும் அப்போது அங்கு உருவான அரசியல் கிளர்ச்சி நிலைகளை அடிப்படையாகக்கொண்டே 13 ஆவது திருத்தச்சட்டம் உருவானது.

இதே வேளை இக்கலந்துரையாடலானது எதிர்த்தரப்பிலுள்ள அனைத்து சிறுபான்மை கட்சிகளின் சங்கமமாகவே காணப்படுகின்றது. ஆளுந்தரப்பிலுள்ள தமிழ்க் கட்சிகளுக்கும் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்திருக்கலாம். தனக்கு அழைப்பு விடுக்கப்படும் பட்சத்தில் தமிழ்க்கட்சிகளின் ஒன்றிணைந்த கூட்டத்தில் இ.தொ.கா பங்கேற்கும் என அதன் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தெரிவித்துள்ளார்.

தமிழ்ப் பேசும் கட்சிகளின் ஒருங்கிணைவை விரும்பாதவர்கள் ஓதுங்கிக்கொள்ள வேண்டும் என த.மு.கூ தலைவர் மனோ கணேசன் அறிக்கை விடுகிறார். ஆனால் இந்த ஒருங்கிணைவில் கலந்து கொண்ட வேறு எந்த தமிழ்க்கட்சித் தலைவர்களும் அவ்வாறு கூறியிருக்கவில்லை. இவர்கள் எதிர்ப்பார்க்கும் தீர்வுகளும் முன்வைக்கும் ஆலோசனைகளும், இவர்கள் பொறுப்பு கூறவேண்டிய மக்களுக்கு எந்தளவுக்குத் தெரியும் என்பது முக்கிய விடயம். மக்களிடம் எல்லாம் சென்று கேட்டு விட்டு கட்சிகள் கலந்துரையாடலை நடத்த முடியாது என்று கூறுபவர்களும் உள்ளனர். அப்படியானால் மாகாண சபையிலிருந்து உள்ளூராட்சி தேர்தல் வரை மக்களிடம் செல்லும் பிரதிநிதிகள் , என்ன அடிப்படையில் மக்களுக்கு வாக்குறுதிகளை வழங்குகின்றனர்? கட்சிகளின் ஒன்றிணைவை விட இவர்கள் தமக்கு வாக்களிக்கும் மக்கள் மனதை வெல்லக்கூடியவர்களாக இன்னும் மாறவில்லை. எல்லாவற்றையும் விட சிறுபான்மையினரை சூழவுள்ள சிங்கள மக்களின் மனதை தமிழ்கட்சிகள் வெல்ல வேண்டும். அதை விடுத்து தமது தீர்மானங்கள், ஒன்றிணைவுகள் சிங்கள மக்களுக்கு எதிரானதல்ல என அறிக்கை விடும் போதே அது தமக்கு எதிரானது தான் என்ற மாயை அம்மக்களின் மனதில் தோன்றுவதை தவிர்க்க முடியாது. இலங்கை தமிழர்களின் அரசியல் தீர்வுக்கு இந்தியாவின் தலையீடு அவசியம் தான், அதை இவர்கள் மட்டுமே
கூறுகிறார்கள். ஆனால் அது குறித்து இந்தியாவும் அல்லவா நினைக்க வேண்டும்?

No comments: