Sunday, July 5, 2009

ஆஷஸ் கிண்ணப்போட்டிகளும் ஆரம்ப கால சாதனைகளும்

கிரிக்கெட் வரலாற்றில் பாரம்பரியமிக்க ஆஷஸ் (சாம்பர்) கிண்ணப்போட்டிகள் ஜுன் மாதம் 8 ஆம் திகதி புதன்கிழமை ஆரம்பமாகின்றன. இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையில் இடம்பெறும் கிரிக்கெட் போர் என இது வர்ணிக்கப்படுகிறது. மேலும் இரு நாடுகளுக்குமிடையே இடம்பெறும் ஒரு கௌரவ போட்டித்தொடராகவும் இது விளங்குகிறது. கிரிக்கெட்டின் தாயக நாடாக போற்றப்படுவது இங்கிலாந்தாகும். ஆரம்பத்தில் இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மட்டுமே கிரிக்கெட் விளையாடி வந்தன. கிரிக்கெட் எனும் விளையாட்டை ஆரம்பித்து வைத்தவர்கள் என்ற பெருமிதத்திலும் இறுமாப்பிலும் இருந்த இங்கிலாந்தை அவர்களின் சொந்த மண்ணில் தோற்கடித்த அவுஸ்திரேலிய அணியினர் ஆஷஸ் கிண்ண வரலாற்றை ஆரம்பித்தனர். வரலாறு1882 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி ஓவல் மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் இங்கிலாந்தை தோற்கடித்தது அவுஸ்திரேலிய அணி. இதை தாங்க முடியாத இங்கிலாந்து ஊடகங்கள் மிகவும் கடுமையாக இங்கிலாந்து கிரிக்கெட் அணியை விமர்சித்தன. ஒரு படி மேலே சென்ற Sporting Times என்ற சஞ்சிகையின் இளம் பத்திரிகையாளர் ரெஜினோல்ட் ஷெர்லி புரூக்ஸ் (Reginald Shirley brooks) மரண அறிவித்தல் என்ற தலைப்பில் இப்படி செய்தியை எழுதினார்;



Obituary“ in affectionate remembrance of English cricket which died at the oval, 29th August,1882.deeply lamented by a large circle of sorrowing friends and acquaintances, Rip.NB the body will be cremated and the Ashes taken to Australia.



இங்கிலாந்தின் கிரிக்கெட்டானது, ஓவல் மைதானத்தில் 1882 ஆம் ஆண்டு 29 ஆம் திகதி ஆகஸ்ட் மாதம் மரணித்து விட்டது.இதன் உடம்பு தகனஞ்செய்யப்பட்டதன் பின்னர் சாம்பர் அவுஸ்திரேலியாவுக்கு எடுத்துச்செல்லப்படும் .
இப்படி அமைந்தது அந்தச்செய்தி.அப்போட்டியில் உபயோகப்படுத்தப்பட்ட பேல்ஸ்கள் எரிக்கப்பட்டு அந்த சாம்பர் இடப்பட்டு உருவாக்கப்பட்டதே ஆஷஸ் கிண்ணம் என்றும் அவுஸ்திரேலிய மூதாதையர்களான அபோர்ஜினல் இன பழங்குடியினரின் பாரம்பரியமிக்க கிண்ணமே இது என்றும் பல்வேறு கதைகள் உலா வந்தாலும் நாளடைவில் கிண்ணம் பற்றிய கதை மறைந்து இரு நாடுகளுக்குமிடையே இடம்பெறும் போட்டிகள் தான் கதைக்கப்பட்டன. இது வரை இடம்பெற்ற ஆஷஸ் தொடரில் ஏற்படுத்தப்பட்ட சாதனைகள் பற்றிய தகவல்களை மட்டும் நாம் சுருக்கமாகப்பார்ப்போம்.




போட்டி விபரங்கள்
முதல் டெஸ்ட் ஜுலை 8 புதன் சோபியா கார்டன்

2 ஆவது டெஸ்ட் ஜுலை 16 வியாழன்லோர்ட்ஸ்

3ஆவது டெஸ்ட்ஜுலை 30 வியாழன்எஜ்பஸ்டன்

4ஆவது டெஸ்ட் ஆகஸ்ட் 7 வெள்ளிஹெடிங்லே

5ஆவது டெஸ்ட் ஆகஸ்ட் 20 வியாழன்ஓவல்






இது வரை இரண்டு அணிகளும்
இதுவரை 316 போட்டிகள் இரண்டு அணிகளுக்கிடையிலும் இடம்பெற்றுள்ளன.இதில் 131 போட்டிகளில் வெற்றி பெற்று முதலிடத்தில் உள்ளது அவுஸ்திரேலிய அணி.இங்கிலாந்து 97 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 88 போட்டிகள் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்துள்ளன.




ஒரு இன்னிங்ஸில் அதிகூடிய ஓட்டங்கள்

729/6 (டிக்ளேர்) 1930 அவுஸ்திரேலியா
903/7 (டிக்ளேர்) 1938 இங்கிலாந்து





அதிக ஓட்டங்கள் பெற்ற வீரர்கள்

சேர் டொன் பிரட்மன்(அவுஸ்) (1928-1948) 5028 ஓட்டங்கள்
ஜெக் ஹொப்ஸ்(இங்கி) (1908-1930) 3636 ஓட்டங்கள்





அதிக சதங்கள் பெற்ற வீரர்கள்

சேர் டொன் பிரட்மன் (அவுஸ்) 37 போட்டிகளில் 19 சதங்கள்
ஜெக் ஹொப்ஸ்(இங்கி) 41 போட்டிகளில் 12 சதங்கள்




அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள்

ஷேன் வோர்ன் (அவுஸ்) 36 போட்டிகளில் 195 விக்கெட்டுகள்
இயன் பொத்தம் (இங்கி) 36 போட்டிகளில் 148 விக்கெட்டுகள்
சிறந்த பந்து வீச்சு பெறுதி (ஒரு இன்னிங்ஸில்)

ஜிம் லேக்கர் (அவுஸ்) 10/53
மெய்லி (இங்கி) 9/121





அதிக பிடியெடுப்புகள்

கிரேக் செப்பல் (அவுஸ்) 35 போட்டிகள் 61 பிடிகள்
இயன் பொத்தம் (இங்கி) 36 போட்டிகள் 57 பிடிகள்





அதிக ஆஷஸ் போட்டிகளில் விளையாடியோர்

எஸ்.ஈ.கிரகரி(அவுஸ்) 1890-1912 52 போட்டிகள், 2193 ஓட்டங்கள், 24 பிடிகள்
கொலின் கௌட்ரி (இங்கி) 1954197543 போட்டிகள்,2433 ஓட்டங்கள்,40 பிடிகள்

Thursday, July 2, 2009

இலங்கைக்கு தேயிலையை அறிமுகப்படுத்தியவர்



ஜேம்ஸ் டெய்லர் என்றதும் எமக்கு ஞாபகம் வருவது இலங்கையில் தேயிலையை அறிமுகப்படுத்தியவர் என்பது தான். இவரைப்பற்றி விரிவாக அறிந்து கொள்ள வேண்டியது இந்த தலைமுறையினருக்கு மிக அவசியமானதொன்று. பிரித்தானியரான ஜேம்ஸ் டெய்லர் 1835 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29 ஆம் திகதி இங்கிலாந்தில் பிறந்தார். 1852 ஆம் ஆண்டு இவர் இலங்கைக்கு வந்த போது கண்டி மாவட்டத்தின் லூல்கந்துர தோட்டத்தில் நிரந்தரமாகத்தங்கி விட்டார். தேயிலை தொழிற்றுறை மற்றும் தேயிலைச்செய்கை பற்றியும் அறிந்து கொள்வதற்காக இவர் 1866 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு பயணம் செய்து அங்கு பல விடயங்களைக்கற்றார். பின்பு 1867 ஆம் ஆண்டு நாடு திரும்பிய இவர் தான் கற்ற விடயங்களையே மூலதனமாக்கொண்டு தான் வசித்த லூல்கந்துர தோட்டத்தில் 19 ஏக்கரில் தேயிலைப்பயிர்ச்செய்கையை ஆரம்பித்தார். அத்தோடு சிங்கோனாவையும் பயிரிட்டனர். இலங்கையில் முதன் முதலாக தேயிலை பயிரிடப்பட்ட இடமாக லூல்கந்துர தோட்டமே விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் 1872 ஆம் ஆண்டு இங்கு அவர் ஒரு தேயிலை தொழிற்சாலையையும் ஆரம்பித்தார். தேயிலை தொழிற்றுறையை இலங்கையில் அபிவிருத்தி செய்யும் பொருட்டு அச்சந்தர்ப்பத்தில் இங்கு வந்த ஸ்கொட்லாந்து நாட்டவரான தோமஸ் லிப்டனிடம் இணைந்து தேயிலையை பிரித்தானியாவுக்கு ஏற்றுமதி செய்வது தொடர்பில் கலந்துரையாடினார் டெய்லர். ஐக்கிய இராச்சியத்தின் கோடீஸ்வரராக விளங்கிய தோமஸ் லிப்டன் 1890 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு செல்லவிருந்த பயணத்தை இடை நிறுத்தி இலங்கை வந்தார்.அதற்குக்காரணம் அப்போது இலங்கையின் தேயிலை உற்பத்தி பற்றி எழுந்த கதைகள் தான். டெய்லரை சந்தித்த தோமஸ் லிப்டன் அவரிடம் இலங்கைக்தேயிலையை வாங்கி பிரித்தானியாவில் விற்பனை செய்ய சம்மதம் தெரிவித்தார்.இதன் பிறகு டெய்லர் இலங்கையிலிருந்து தேயிலையை ஏற்றுமதி செய்யும் அளவிற்கு இத்துறையை முன்னேற்றினார். 23 பவுண்ட்களில் ஆரம்பித்த இவரது தேயிலை ஏற்றுமதி 81 தொன்களாக அதிகரித்து 1890 ஆம் ஆண்டின் இறுதியில் 22,900 தொன்களாக உச்சத்தை தொட்டது. அதன் பின்னர் டெய்லர் ஹேவாஹெட்ட பிரதேசத்தின் காட்டுப்பகுதியை சுத்தப்படுத்தி 19 ஏக்கரில் தேயிலை விதைகள் மூலம் தேயிலை பயிரிட்டார். தனது அயராத முயற்சி காரணமாக 1875 ஆம் ஆண்டு இலண்டனில் இடம்பெற்ற தேயிலை ஏல விற்பனையில் இலங்கைத்தேயிலையை இடம்பெறச்செய்தார்.இலங்கையின் தேயிலைத்தொழிற்றுறை அசுர வேகத்தில் வளர்ச்சி கண்டது. பல தேயிலை கம்பனிகள் இதன் இலாபத்தை அனுபவிக்க தயாராகின.சிறிய தேயிலை தோட்டங்கள் பலதை இந்த கம்பனிகள் விலை கொடுத்து வாங்கின. டெய்லர் இருந்த லூல்கந்துர தோட்டமும் இதற்கு இரையானது. இலங்கையில்முதன் முதலாக தேயிலையை பயிரிட்டவர் என்ற பெருமைக்குரிய டெய்லர் மிகுந்த மனவேதவையுடன் லூல்கந்துர தோட்டத்தை விட்டு வெளியேறினார்.தனது வாழ்நாளில் அரைவாசியை இலங்கையிலேயே கழித்தார்.அதாவது 57 வருடங்கள். 1892 ஆம் ஆண்டு உயிர் நீக்கும் வரை அவர் இலங்கை மண்ணை விட்டு நீங்கவில்லை. லூல்கந்துர தோட்டத்தை விட்டு நீங்கிய ஜேம்ஸ் டெய்லர் வயிற்று உபாதை நோயால் பாதிக்கப்பட்டு அவ்வாண்டே காலமானார். அவரது உடல் கண்டி மகியாவ மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.அவரது கல்லறையில் பொறிக்கப்பட்டுள்ள வாசகங்கள் இவை;


"In pious memory of James Taylor of Loolecondera Estate Ceylon, the pioneer of the cinchona and tea enterprise in this island, who died May 2, 1892, aged 57 years"..


ஜேம்ஸ் டெய்லர் இறந்து சரியாக ஒரு வருடம் கழித்து அதாவது 1893 ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து சுமார் பத்து இலட்சம் தேயிலை பைக்கற்றுகள் இலண்டனுக்கு கப்பல் மூலம் கொண்டு செல்லப்பட்டு அமெரிக்காவின் சிக்காக்கோவில் இடம்பெற்ற உலக சந்தையில் விற்பனை செய்யப்பட்டது. 1867 ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கையில் உள்ள தேயிலை தோட்டங்களில் 80 வீதமானவை பிரித்தானிய கம்பனிகள் வசம் இருந்தன. 1971 ஆம் ஆண்டே இலங்கை அரசாங்கம் நிலவுரிமை சட்டத்தை அறிமுகப்படுத்தி பல தேயிலை தோட்டங்களை தன்வசமாக்கியது. 1992 ஆம் ஆண்டு ஜேம்ஸ் டெய்லர் இறந்து நூறாண்டுகள் நினைவு கூறப்பட்டது. அச்சந்தர்ப்பத்தில் அப்போதைய பிரித்தானிய உயர்ஸ்தானிகராக இருந்த ஜோன் பீல்ட் (ஒணிடண ஊடிஞுடூஞீ) கூறிய வார்த்தைகள் உண்மையில் அர்த்தம் வாய்ந்ததாகத்தான் அமைந்தது.இலங்கையின் மத்திய மலை நாட்டை செதுக்கியவர்களுள் பல தனிப்பட்ட நபர்களும் தொழிலாளர்களும் அடங்கலாம், ஆனால் மத்திய மலை நாட்டை அழகு படுத்தியதில் ஜேம்ஸ் டெய்லர் என்ற மனிதரின் பங்கு அளவு கடந்தது. தேயிலையைப் பயிரிட்டதன் மூலம் அவர் இதை செய்தார், இவ்வாறு அவர் கூறினார்.


"It can be said of very few individuals that their labors have helped to shape the landscape of a country. But the beauty of the hill country as it now appears owes much to the inspiration of James Taylor, the man who introduced tea cultivation to Sri Lanka".


ஜேம்ஸ் டெய்லர் வாழ்ந்த இடத்தில் அவ்வாண்டு நூதன சாலை ஒன்றும் அமைக்கப்பட்டது. இன்று தேயிலைத்தொழிற்றுறையில் உலகில் தனித்துவமிக்க நாடாக விளங்குகிறது இலங்கை. மேலும் தேசிய வருமானத்தில் பெரும்பங்கு வகிக்கின்றது. இத்தனைக்கும் காரணமான ஜேம்ஸ் டெய்லர் என்ற மனிதரை நாமும் ஞாபகப்படுத்திக்கொள்வது தான் நாம் அவருக்கு செய்யும் நன்றிக்கடன்.

Wednesday, July 1, 2009

உங்களுக்குத்தெரியாத கிரிக்கெட்



டெஸ்ட் போட்டியொன்றில் சதம் பெறுவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. போட்டியின் தன்மைக்கேற்ப வேகமாகவும் மிக தாமதமாகவும் டெஸ்ட் சதங்கள் பெறப்பட்டிருக்கின்றன. ஆனால் டெஸ்ட் வரலாற்றில் அதிக நேரம் எடுத்துப்பெறப்பட்ட சதம் எது தெரியுமா? 1978 ஆம் ஆண்டு இது பெறப்பட்டது. இங்கிலாந்துக்கு எதிராக இவ்வாண்டு லாகூரில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியில் முதாசர் நஸார் 557 நிமிடங்கள் களத்திலிருந்து சதம் பெற்றார். அதே போல் பவுண்டரிகளே பெறாது டெஸ்ட் போட்டியில் அதிக ஓட்ட எண்ணிக்கைப்பெறப்பட்ட சந்தர்ப்பங்களும் உண்டு. 1979 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த்தில் இடம்பெற்ற போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜெப்ரி பொய்கொட் 77 ஓட்டங்களைப்பெற்றார். இவ்வோட்ட எண்ணிக்கையில் ஒரு நான்கு ஓட்டங்கள் பதிவாகியிருக்கின்ற போதிலும் அது ஓடிப்பெறப்பட்டதாகும்.


அபூர்வ நிகழ்வுகள்
கிரிக்கெட்டில் அவ்வப்போது ஒரு சில அபூர்வ நிகழ்வுகள் இடம்பெறுவதுண்டு. இது ஒரு சில சந்தர்ப்பங்களில் பந்து வீச்சாளருக்கு பாதகமாகவும் துடுப்பாட்ட வீரரருக்கு சாதகமாகவும் அமைந்து விடுவதுண்டு. பந்து ஸ்டம்புகளுக்கிடையில் சென்றும் பேல்ஸ்கள் கீழே விழாத சந்தர்ப்பம் ஒன்று கிரிக்கெட்டில் இடம்பெற்றுள்ளது. இது ஒரு அபூர்வமான நிகழ்வாகும். 1998ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருந்தது தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி. பைசலாபாத்தில் இடம்பெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னங்ஸில் தென்னாபிரிக்கா துடுப்பெடுத்தாடியது. 98 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது தென்னாபிரிக்கா.ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கேரி கேர்ஸ்டனுடன் 8 ஆவது விக்கெட்டுக்காக இணைந்தார் சுழற்பந்து வீச்சாளர் பெட் சிம்கொக்ஸ். மிக வேகமாக துடுப்பெடுத்தாடினார். 56 ஓட்டங்களைப்பெற்றிருந்த போது பாகிஸ்தானின் சுழற்பந்து வீச்சாளர் முஷ்டாக் அகமட் வீசிய பந்து ஓப் திசை மற்றும் மத்திய ஸ்டம்பின் இடையே வேளியேறியது,என்ன அதிசயம் பேல்ஸ்கள் அசையவே இல்லை. நடுவர் ஸ்டீவ் டன்னுக்கு தனது கண்களையே நம்ப முடியவில்லை. அதன் பிறகு தனது வழமையான துடுப்பாட்டத்தை தொடர்ந்த சிம்கொக்ஸ் 10 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 81 ஓட்டங்களைப்பெற்றார். இப்போட்டியில் தென்னாபிரிக்கா 53 ஓட்டங்களள்ல வெற்றி பெற இவரின் இந்த இன்னிங்ஸ் பெரிதும் உதவியது. இப்போட்டியின் ஆட்ட நாயகனாகவும் அவரே தெரிவு செய்யப்பட்டார்.



முறியடிக்கப்படாத சாதனைகள்


நியூசிலாந்து அணியின் சகல துறை வீரர் புரூஸ் டெய்லரின் ஒரு சாதனை இது வரை எவராலம் முறியடிக்கப்படவில்லை. 1965 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் இடம்பெற்ற இந்திய அணிக்கு எதிரான போட்டியே அவரது முதல் டெஸ்ட் போட்டி.இப்போட்டியில் துடுப்பெடுத்தாடிய டெய்லர் தனது முதல் போட்டியிலேயே சதம் பெற்றார் (105).பின்னர் பந்து வீச்சில் 86 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழத்தினார். டெஸ்ட் போட்டி ஒன்றில் சதம் பெற்ற வீரர் ஒருவர் பந்த வீச்சில் 5 விக்கெட்டுகளைப்பெற்ற சந்தர்ப்பங்கள் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 26 தடவைகள் இடம்பிடித்துள்ளன. ஆனால் புரூஸ் டெய்லருக்குப்பிறகு எவரும் தனது கன்னி டெஸ்ட் போட்டியில் இதை நிகழ்த்தவில்லை. ஆக டெய்லரின் சாதனை 44 வருடங்களாக முறியடிக்கப்படாம்ல உள்ளது.

Monday, June 29, 2009

ஐரோப்பியரால் உருவாக்கப்பட்ட அம்மன் ஆலயம்




சுமார் 200 வருடங்கள் பழமையான ஹங்வெல ஸ்ரீ அங்காளப்பரமேஸ்வரி ஆலயம்



இலங்கையில் காலனித்துவ ஆட்சி காலத்தில் பெருந்தோட்டப்பகுதிகளில் அமைந்த ஆலயங்கள் பல இன்று உரு தெரியாமல் போய்விட்டன. அவை குறித்த ஆராய்ச்சிகளும் கிடப்பில் போடப்பட்டு விட்டன. எனினும் ஐரோப்பியர் ஆட்சி காலத்தில் அவர்களாலேயே பெருந்தோட்டப்பகுதிகளில் உருவான ஒரு சில ஆலயங்கள் குறித்து இன்று நாம் அறிந்து கொள்வதற்கு ஆர்வம் காட்டுவதில்லை. அப்படி உருவான ஒரு ஆலயம் தான் ஹங்வெல ஸ்ரீ அங்காளப்பரமேஸ்வரி ஆலயம்.
அவிசாவளையிலிருந்து கொழும்புக்குச்செல்லும் புதிய பாதையில் ஹங்வெல எனும் இடத்தில் அமைதியாக இருந்து அருள் பாலிக்கும் இந்த ஆலயத்தின் வரலாறு தொன்மை வாய்ந்ததாகும்.


சுமார் 200 வருடங்கள் பழமை வாய்ந்ததாக கருதப்படும் இந்த ஆலயம் இறப்பர் மரங்கள் சூழவுள்ள இயற்கை அன்னை ஆட்சி செய்யும் அமைதியான இடத்தில் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் விசேடம் என்னவெனில் இங்கு சுமார் 300 வருடங்கள் பழமையான ஆலமரம் ஒன்று வீற்றிருக்கின்றது. இதுவே இவ்வாலயத்தின் சரித்திரம் கூறுவதாக அமைந்துள்ளது. சுமார் 150 வருடங்களுக்கு முன்னர் இப்பகுதியில் தேயிலை தோட்டங்கள் இருந்ததாகவும் மேற்படி விருட்சத்தின் அடியில் இருந்த சக்தி வாய்ந்த கல்லையே அம்மனாக நினைத்து இப்பகுதி மக்கள் வழிபட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இருநூறு வருடங்களுக்கு முன்னர் இந்தியாவின் கேரளா மாவட்டத்தில் இருந்து இங்கு வந்த மக்களின் வழிபாட்டுத்தலமாக இவ்விடம் இருந்திருக்கலாம் என்றும் எனினும் அதற்கு முன்னதாக இவ்விடத்தில் ஆலயம் இருந்திருக்கக்கூடிய ஆதாரங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அக்காலத்தில் இப்பகுதியில் சுமார் மூவாயிரம் குடும்பங்களுக்கு மேல் இருந்ததாகவும் கூடுதலாக பிராமணர்கள் பூஜை செய்ததற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. முக்கியமாக பிராமண ஜாதி என்று குறிப்பிடப்பட்ட பிறப்புச்சான்றிதழ்கள் இதை உறுதிப்படுத்துகின்றன.
ஹங்வெல என்ற பெயரில் இருந்து அங்காளப்பரமேஸ்வரி உருவானதா அல்லது அங்காளப்பரமேஸ்வரி எனும் பதத்திலிருந்த ஹங்வெல எனும் இடம் உருவானதா என்பது இன்று வரை கேள்விக்குறியாகவே உள்ளது. ஆரம்பத்தில் தேயிலை தோட்டங்கள் இருந்த இடத்தில் பின்னர் இறப்பர் தோட்டங்கள் உருவாகின. இங்கு வேலை செய்வதற்காக இந்தியாவின் திருச்சி மாவட்டத்தின் கரூர் எனும் இடத்தில் இருந்து மக்கள் வரவழைக்கப்பட்டனர் என்கிறார் இலங்கையின் பாரம்பரிய இந்து கோயில்கள் பற்றி ஆராய்ச்சி செய்து அற்புதமான பல உண்மைகளை வெளிப்படுத்தி வரும் என்.கே.எஸ்.திருச்செல்வம்.
தோட்டத்துரைக்கு காட்சி கொடுத்த அம்மன்
இங்கமைந்த இறப்பர் தோட்டத்தின் உரிமையாளராக இருந்தவர் இங்கிலாந்து நாட்டைச்சேர்ந்த ஹோடன் புரூக் என்பவராவார். ஒருமுறை இவர் இத்தோட்டத்தின் வழியே நடந்து வரும் போது ஒரு பெண்ணை இவர் அவதானித்திருக்கிறார். இப்பகுதிக்கு புதிய முகமாக இருக்கின்றதே என அவர் இப்பெண்ணை பின்தொடர்ந்துள்ளார். ஒருகட்டத்தில் ஆலமரத்தடிக்கு வந்த பெண் மாயமாய் மறைந்துள்ளார். இக்காட்சியை கண்டு அதிசயித்த ஹோடன் புரூக் இதை தோட்டக்கங்காணிமார் மற்றும் வேலையாட்களிடம் இது குறித்து கூறியுள்ளார். இங்கு குடியிருக்கும் அம்மன் தான் பெண்ணுருவில் வந்திருப்பார் என பயபக்தியோடு தோட்ட மக்கள் கூற உடனடியாக அவ்விடத்தில் ஆலயம் ஒன்றை எழுப்ப அந்த வெள்ளைக்கார தோட்டத்துரை முடிவெடுத்தார்.
அதன் படி தோட்டத்தின் முக்கியஸ்தர்களை அழைத்து இது குறித்து அவர் கலந்துரையாடி இந்தியாவில் அமைந்துள்ள மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்திற்கு ஒரு குழுவினரை அனுப்பி அவ்வாலய தோற்றம் குறித்து அறிந்து வரும்படியும் மேலும் அங்கிருந்து சிற்ப கலைஞர்களை அழைத்து வரும்படியும் கூறியுள்ளார். இதன்படி ஆலயம் அமைப்பதற்குரிய பொருட்கள் இந்தியாவிலிருந்து கொண்ட வரப்பட்டன.சிற்பாசாரியார்களும் அங்கிருந்து வந்தனர். மிகப்பழமையான ஆலமரத்தின் கீழ் அமைந்த கோயில் 1875 ஆம் ஆண்டு பெரிய கோயிலாக கட்டப்பட்டு கும்பாபிஷேகமும் இடம்பெற்றது.
இதற்குப்பிறகு சில வருடங்களில் ஹோடன் புரூக் இந்த தோட்டத்தை வேறு ஒருவருக்கு விற்றுவிட்டு இங்கிலாந்து சென்று விட்டார். தோட்டத்தொழிலாளர்களும் வேறு இடத்திற்கு இடம்பெயர்ந்து விட்டனர்.சுமார் நூறு வருடங்கள் வரை இவ்வாலயம் கைவிடப்பட்டு கவனிப்பாரறின்றி கிடந்தது.காலப்போக்கில் சிதைவடைந்து விட்டது. பின்னர் இத்தோட்டத்தைச்சேர்ந்த டி.செல்வநாயகம் என்பவர் கடந்த 15 வருடங்களாக இத்தோட்ட மக்களின் ஆதரவில் பரிபாலன சபை ஒன்றை உருவாக்கி இக்கோயிலை புனருத்தாரனம் செய்யும் முயற்சியில் இறங்கினார். தலைநகர் வாழ் வர்த்தகப்பெருமக்கள் மற்றும் அவிசாவளை மலையகத்தின் ஏனைய பகுதிகளைச்சேர்ந்த வர்த்தகர்கள்,தனவந்தர்கள் ஆகியோரின் பண மற்றும் பொருள் உதவியினால் படிப்படியாக இக்கோயில் புது மெருகுப்பெற்றது. அங்காளப்பரமேஸ்வரியின் அருள் கடாட்சத்தினால் கடந்த வருடம் 06-06-2009 அன்று இவ்வாலயத்தின் மகா கும்பாபிஷேகம் இடம்பெற்றது.
சுமார் 130 வருடங்களுக்குப்பிறகு இவ்வாலயத்தில் இரண்டாவது தடவையாக கும்பாபிஷேகம் இடம்பெற்றுள்ளது. இவ்வாலயத்திற்கு இன பேதம் பாராது அனைவரும் வந்து போகின்றமை மற்றுமோர் முக்கிய அம்சம். ஆலயத்தின் உட்பிரகாரத்தில் பக்கவாட்டின் இருபுறமும் அமைந்துள்ள சிலைகள் புதுமையான ஆலய அமைப்பினை எமக்குக்கூறுகின்றன. ஆரம்பத்தில் இங்கு சர்ப்பங்கள் உலாவித்திரிந்ததாகவும் இங்குள்ளோர் கூறுகின்றனர். ஆலயத்தின் பாரம்பரியம் கூறும் பழமை வாய்ந்த ஆல மர விருட்சத்தின் கீழ் தற்போது பிள்ளையார் வீற்றிருக்கிறார்.
நெடுநாட்களாக திருமணம் ஆகாத பெண்கள் ,குழந்தை பேறில்லாதவர்கள் இக்கோயிலை தரிசித்தால் உடன் பலன் கிட்டுவதாக இங்கு வருகை தந்த பக்தர்கள் மூலமாக அறியக்கிடைத்தது. பெருந்தோட்டப்பகுதிகளில் ஆங்கிலேயர்களால் பங்களாக்கள் தான் கட்டப்பட்டன.ஆனால் ஒரு வெள்ளைக்கார துரை ஆலயம் ஒன்றையே அமைத்துள்ளார் என்று நினைக்கும் போது நெகிழ்ச்சியாகத்தான் உள்ளது. ஆலயத்தின் சுற்றுப்புறத்தில் நிலவும் ஒரு வித சாந்தம் மனதை இலகுவாக்குகிறது என்பது மட்டும் உண்மை.
படம்,தகவல்சிவலிங்கம் சிவகுமாரன்

Friday, March 27, 2009

ஸ்லம்டோக் மில்லியனரும் நான் கடவுளும்



*ஸ்லம்டோக் மில்லியனர் பிரதிபலிக்கும் கதை கரு இன்றைய சூழ்நிலையில் இந்தியாவில் (மும்பை) நிஜம் என்ற காரணத்தினால் தான் கூடுதலாக விமர்சிக்கப்படுகிறது. இதே விமர்சனம் இயக்குனர் பாலாவின் நான் கடவுள் திரைப்படத்திற்கும் எழுந்துள்ளது என்பதும் முக்கிய விடயம்.







*படத்தின் கதைக்கரு பிரதிபலிக்கும் சில விடயங்களால் நல்ல சினிமா என்ற விடயத்திலிருந்து விமர்சனங்களுக்குள்ளாயிருக்கின்றன இந்த இரு திரைப்படங்களும்.





உலக சினிமாவில் ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி மாதம் எதிர்ப்பார்க்கப்படும் ஒஸ்கார் திரைப்பட விருது வழங்கல் நிகழ்வு இம்முறை ஆசிய கண்டத்தில் அதிகளவாக பேசப்பட்டதற்கு காரணம் இந்தியாவில் படமாக்கப்பட்ட ஸ்லம்டோக் மில்லியனர் திரைப்படத்திற்கு கிடைத்த எட்டு ஒஸ்கார் விருதுகள் மற்றும் தமிழரான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு அதில் கிடைத்த இரு விருதுகள். இது ஒருபக்கம் இருக்க மேற்படி ஸ்லம்டோக் மில்லியனர் திரைப்படத்திற்கு ஒஸ்கார் விருது கிடைத்திருப்பது பற்றி இந்தியாவிலேயே பல விமர்சனங்கள் எழுந்தன. இது பிரிட்டிஷ் இயக்குனர் டொனி பொய்ல் இயக்கிய ஆங்கிலத்திரைப்படம் என்பதால் அதற்கு இசையமைத்த ரகுமானுக்கு கிடைத்த விருதே ஒழிய இது இந்தியத்திரைப்படம் ஒன்றுக்கு கிடைத்த விருதாக கொள்ளமுடியாது என்பது ஆரம்பத்தில் எழுந்த விமர்சனம்.
இதை விட தற்போது இத்திரைப்படம் குறித்து முன்வைக்கப்பட்டிருக்கும் விமர்சனங்கள் பேசப்படவேண்டியவை.மேலும் திரைப்படம் ஒன்றிக்கு அங்கீகரிக்கப்பட்ட விருதொன்று கிடைத்தாலே அதை பார்த்து விட்டு விமர்சிக்கும் கூட்டங்கள் இன்று அதிகமாகிவிட்ட நிலையில் கடந்த வருடம் வெளியான இத்திரைப்படம் குறித்து இவ்வருடமே அதிகமாக பேசப்படுகிறது. உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடாக விளங்கும் இந்தியாவின் மற்றுமொரு முகம் அங்கு நிலவும் வறுமை. வறுமையைச்சார்ந்து இடம்பெறும் அட்டூழியங்கள்,கட்டாய சிறுவர் விபசாரம், சிறுவர்களை முடமாக்கி பிச்சையெடுக்க வைத்தல், அவர்கள் மூலமாக போதை பொருள் விநியோகம் செய்தல் இப்படி கூறிக்கொண்டே போகலாம்.
இந்த சமூக அவலங்களைக்கொண்டு இந்தியாவில் பல மொழிகளில் திரைப்படங்கள் வெளிவந்துள்ளன.அவை பேசப்பட்டனவா என்பதை விட அதன் மூலம் பலன் கிடைத்ததா என்பது குறித்து எவரும் கதைப்பதற்கு முன்வருவதில்லை.ஸ்லம்டோக் மில்லியனர் திரைப்படம் உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு விருதை பெற்றவுடன் அதன் மூலம் பெருமை பட முடியாது என்று எழுந்துள்ள விமர்சனங்களுக்கு காரணம் இது தான். இத்திரைப்படத்தில் சமூக அவலங்கள் யதார்த்தபூர்வமாக காட்டப்பட்டிருப்பினும் கூட இக்கதை இந்தியாவின் குறிப்பாக மும்பை வாழக்கையின் இன்னுமொரு பகுதியை படம்பிடித்து காட்டுகின்றது என்பது இந்த நாட்டுப்பற்றுள்ள விமர்சகர்களின் வாதம்.
திரைப்பட விருது என்பது எடுக்கப்பட்ட விதத்திற்கும் அதில் கையாளப்பட்டிருக்கும் உத்திகளுக்கும் சொல்ல வந்த விடயத்திற்குமே ஒழிய ஒரு நாட்டில் ஓர் இடத்தில் இடம்பெற்ற பெறுகின்ற அவலங்களை வெளிக்கொணர்ந்ததற்கு அல்ல. சம்பவம் ஒன்றை தழுவி எடுக்கப்படும் திரைப்படங்களில் வரலாற்று சான்றுகளை அப்படியே கூற வேண்டிய அவசியம் இல்லை என்பதே யதார்த்தம்.உதாரணமாக டைட்டானிக் திரøப்படத்தை கூறலாம். 1912 ஆம் ஆண்டு டைட்டானிக் என்ற கப்பல் கடலில் முழ்கியது நிஜம்.ஆனால் 1997 ஆம் ஆண்டு ஜேம்ஸ் கமரூன் இயக்கத்தில் வெளிவந்த டைட்டானிக் திரைப்படத்தில் ஜெக் ,ரோஸ் என்ற இரு காதலர்களை சுற்றியே இத்திரைப்படம் பின்னப்பட்டிருந்ததை நாம் அறிவோம்.டைட்டானிக் முழ்கிய சந்தர்ப்பத்தில் இப்படியான கதாபாத்திரங்கள் வாழ்ந்தார்களா என்பதற்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை .இது நெறியாள்கையின் கைவண்ணம்.இத்திரைப்படம் 14 பிரிவுகளில் ஒஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு இறுதியில் 11 விருதுகளை வென்றமை குறிப்பிடத்தக்கது. இதை ஒரு உதாரணத்திற்காக கூறினேன்.
ஆனால் ஸ்லம்டோக் மில்லியனர் பிரதிபலிக்கும் கதை கரு இன்றைய சூழ்நிலையில் இந்தியாவில் நிஜம் என்ற காரணத்தினால் தான் கூடுதலாக விமர்சிக்கப்படுகிறது. இதே விமர்சனம் இயக்குனர் பாலாவின் நான் கடவுள் திரைப்படத்திற்கும் எழுந்துள்ளது என்பதும் முக்கிய விடயம்.
மும்பையின் சுமார் இரண்டு கோடி ஜனத்தொகையில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் ஒதுக்கப்பட்ட இடங்களில் வறுமையின் நிழலில் தான் வாழ்ந்துக்கொண்டிருக்கின்றனர் என்பதே நிஜம். இந்த மக்களின் வாழ்க்கை முறையை நேரில் பார்ப்பதை விட திரைப்படம் வாயிலாக நாம் பார்க்கும் போது எழும் உணர்ச்சி விஸ்வரூபத்தை மனதில் மட்டுமே தேக்கி வைத்துக்கொள்ள முடியும். அந்தளவிற்கு திரைப்படத்தில் அதை வெளிப்படுத்தும் பாங்கும் இருக்க வேண்டும் இது இயக்குனரின் கைகளில் தங்கியுள்ளது என்பது முக்கியம். ஸ்லம்டோக் மில்லியனரில் இயக்குனர் டோனி பெய்ல் கூறியிருப்பதுவும் இதைத்தான். மதக்கலவரம் ,வறுமை ஒரு சமூகத்தின் மீதான அடக்குமுறை என்பவற்றுக்கு முகங்கொடுக்கும் மூன்று சிறுவர்களைப்பற்றிய கதை தான் இது. மதக்கலவரத்தில் அனாதையாகும் சகோதரர்கள் ஜமால் ,சலீம் இவர்களின் பெண் தோழி லத்திகா ஆகியோர் மும்பை சமூகத்தின் என்னென்ன அக்கிரமங்களுக்கெல்லாம் முகங்கொடுத்து பிரிந்து இறுதியில் ஒன்று சேர்வது கதைக்கரு.இதனிடையே மூவரும் கட்டாய பிச்சைக்காரர்களாக்கப்படுவது இதில் லத்திகா சந்தர்ப்ப சூழ்நிலையால் விலைமாதாவது சலீம் கொலைகாரனாவது என பல விடயங்களை சரியாக நகர்த்துகிறார் இயக்குனர்.
இதன் காட்சியமைப்புகளும் கதைக்களமும் கற்பனையே அல்ல நிஜம் தான் என மும்பையில் வாழ்ந்து வரும் இரண்டு கோடி பேரும் கூறுவர். இருந்தாலும் சினிமா என்ற ஜனரஞ்சக ஊடகம் வாயிலாக ஒரு சமூகத்தின் உண்மை நிலை உலகெங்கும் பரவும் போது அதை எதிர்வினை கண்ணோட்டத்தில் பார்க்கும் கூட்டம் தான் இதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று கௌரவ விளக்கம் கூறும். இயக்குனர் டோனி மும்பை சமூகத்தினதோ அதன் இன்னொரு பக்கத்தையோ தோலுரித்து காட்டுவதற்கும் வெளிச்சத்துக்கு கொண்டு வருவதற்கும் இத்திரைப்படத்தை உருவாக்க வில்லை என்பதை சொல்லித்தான் நிரூபிக்கவேண்டியதில்லை. இதற்கு முன்பதாக இவர் Shallow Grave (1994) Train Spotting (1996 A Life Less Ordinary (1997) the Beech (2000)28 Days Later (2002) ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.



இதே போல் தான் இயக்குனர் பாலாவின் நான் கடவுள் திரைப்படத்திற்கும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஸ்லம்டோக் மில்லியனர் போல் இத்திரைப்படத்திலும் பாலா விளிம்பு நிலை மனிதர்கள் பற்றிய உண்மை முகத்தை காட்டியிருக்கிறார்.பிச்சைகாரர்களை நாம் தினந்தோறும் காண்கின்ற÷õம்.அவர்களின் வாழக்கை முறை பற்றியும் அவர்கள் ஏன் எப்படி இந்த யாசக வாழ்க்கைக்கு வந்தார்கள் என்றும் நாம் என்றாவது யோசித்தது உண்டா? பிச்சைகாரர்களை உருவாக்கவென்றே ஒரு கூட்டம் இருப்பது எத்தனைப்பேருக்குத்தெரியும்? ஸ்லம்டோக் மில்லியனரில் ஒரு கட்டத்தில் மட்டும் வரும் இந்த விடயம் நான் கடவுளில் முழுக்க வியாபித்துள்ளது.இத்திரைப்படத்தில் வரும் மும்பை தாதாவும் நான் கடளில் வரும் தாண்டவன் பாத்திரமும் ஒரே காரியத்தை செய்பவர்கள். காசியில் உலாவும் அகோரி என்ற இனம் பற்றி நாம் கேள்விப்பட்டது கொஞ்சமே.தம்மை கடவுள் என்று கூறிக்கொள்ளும் இவர்கள் எரியும் பிணத்தை உண்பவர்கள் என்பதை மட்டுமே கேள்வியுற்றுள்ளோம். நான் கடவுளில் இதற்கான தெளிவான விளக்கங்களை பாலா வைத்துள்ளார்.ஆனால் அதே சமயம் இத்திரைப்படத்தில் பிச்சைகாரர்கள் அங்கவீனர்களை பாலா கேவலப்படுத்தியுள்ளார் என் தற்போது குரல்கள் எழுந்துள்ளன. இயக்குனர் டோனி பொய்ல் மும்பை வாழ்க்கையின் இருட்டுப்பகுதிகளை கூறியிருப்பது போல் பாலா பிச்சைகாரர்களின் உருவாக்கம் இதன் பின்னணி குறித்த முகமுடிகளை கிழித்தெறிந்துள்ளார். இந்த உண்மைகளை யதார்த்தபூர்வமாக அவர்களை வைத்தே நெறிப்படுத்தியிருப்பதால் தான் யதார்த்தம் இரசிகனின் நெஞ்சை பிழிகிறது. இது தான் படத்தின் வெற்றியும் கூட. இதே நேரம் சாதாரண நடிகர்களை வைத்து அவர்களை அங்கவீனர்களாகவும் பிச்சைகாரர்களாகவும் தனது படத்தில் பாலா சித்திரித்திருந்தால் அவர் வேறு விதமான விமர்சனங்களை எதிர்நோக்கியிருக்கக்கூடும். ஒரு நல்ல திரைப்படம் மூலம் சமூக அவலங்களை வெளிச்சம் போட்டுக்காட்டும் எந்தவொரு நல்ல கலைஞனும் வர்த்தகமயத்தை நோக்காக கொண்டிருக்க மாட்டான். அவனது எதிர்ப்பார்ப்பு விருதுகளும் அல்ல. டோனி பொய்ல் உண்மையில் இந்திய நாட்டை பற்றி என்ன விடயங்களை தெரிந்து வைத்திருந்தார் என்பது பலரின் கேள்வி, காரணம் இவர் இந்திய நாவலாசிரியர் விகாஸ் ஸ்வரூப்பின் நாவலை தழுவியே ஸ்லம்டோக் மில்லியனரை எடுத்துள்ளார். அதே போல் ஜெயமோகனின் ஏழாவது மனிதன் கதையின் தழுவலே நான் கடவுள். இத்திரைப்படத்தில் பாலா கற்பனையாக எதுவும் கூறவரவில்லை என்பது நல்ல சினிமாவுக்கான வெளிப்பாடாக இருக்கும் அதே வேளை உண்மைகளை ஏற்றுக்கொள்வதில் தானே சிக்கல்கள் எழுகின்றன. இத்திரைப்படத்தில் வரும் அவ்வளவும் பொய் என எவரும் கூறவில்லை. எமக்கு மட்டும் தெரியும் உண்மைகள் பலர் அறிய விஸ்வரூபமெடுக்கும் போது நாமே விமர்சன நிலைக்கு தள்ளப்படுவது நிதர்சனம்.
இந்தியாவைப்பற்றியும் இந்தியர்கள் பற்றியும் இந்தியாவில் உள்ளவர்களுக்கே ஒரு சில திரைப்படங்கள் மூலம் தான் தெரிய வருகின்றது. உண்மை தெரிந்த பிறகு அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் ஒரு சிலருக்கே உண்டு. இது இந்திய நாட்டுக்கும் மட்டும் பொருத்தமானதல்ல இருப்பினும் சினிமாவை இன்னுமொரு மதம் என்ற கண்ணோட்டத்தில் பார்க்கும் நாடு என்ற வகையில் இந்தியா என்று கூற விழைந்தேன்.

(சிவலிங்கம் சிவகுமாரன்)


நன்றி:வீரகேசரி வாரவெளியீடு (22-03-2009)

Sunday, March 1, 2009

விளம்பர படத்திலிருந்து ஒஸ்கார் விருது வரை

1967 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 6ஆம் திகதி தமிழ்நாட்டின் சென்னையில் திலீப்குமாராக பிறந்த இந்த பையனா பின்னர் ஏ.ஆர்.ரகுமானாக மாறி தனது இசையின் மூலம் உலகை திரும்ப வைத்திருகிறார் என்றால் நம்பமுடியவில்லை. சர்வதேசத்தின் பார்வையை இந்திய சினிமா பக்கம் திரும்பவைத்தவர் இயக்குனர் சத்தியஜித்ரே என்றால் மிகையாகாது. இவர் இயக்கிய படங்கள் பல விருதுகளை வென்றாலும் ஒஸ்கார் பிரிவில் விருதுகள் கிடைக்கவில்லை.எனினும் அவருக்கு 1992 ஆம் ஆண்டு வாழ் நாள் சாதனையாளருக்காக ஒஸ்கார் விருது சிபாரிசு செய்யப்பட்டு வழங்கப்பட்டது.அவர் நோயுற்று வைத்தியசாலையில் இருக்கும் போது பரிசு குழுவினர் அங்கு நேரடியாகச்சென்று இவ்விருதை வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு முன்பதாக 1982 ஆம் ஆண்டு ரிச்சர்ட் அடன்பெரோ இயக்கி பென் கிங்ஸ்லி நடித்த காந்தி திரைப்படத்தின் ஆடை வடிவமைப்புக்கான ஒஸ்கார் விருதை இந்தியபெண்மனியான பானு ஆதைய்யா பெற்றுக்கொண்டார்.இவை இரண்டு மட்டுமே இந்திய திரைப்படத்துறைக்கு கிடைத்த ஒஸ்கார் விருதுகள்.


வைத்தியசாலையில் ஒஸ்கார் விருதுடன் இயக்குனர் சத்தியஜித்ரே

அதன் பிறகு சுமார் இரண்டு தசாப்த காலத்திற்குப்பிறகு அமீர்கான் நடித்து அசுதோஷ் கவ்ரிகர் இயக்கத்தில் வெளியான லகான் ஹிந்தித்திரைப்படம் 2002 ஆம் ஆண்டு சிறந்த வெளிநாட்டு படப்பிரிவிற்கான ஒஸ்கார் விருதுக்கு தெரிவு செய்யப்பட்ட போதும் விருது கிடைக்கவில்லை.இப்படத்திற்கும் ரகுமானே இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தனது இசையில் இரண்டு ஒஸ்கார் விருதுகளைப்பெற்று தமிழினத்திற்கும் இந்திய இசை பாரம்பரியத்திற்கும் பெருமை சேர்த்து விட்டார் ஏ.ஆர்.ரகுமான் . இவர் இசையமைத்த சிலம்டோக் மில்லியனியர் (Slumdog Millionaire)


என்ற பிரித்தானிய தயாரிப்புப்படத்திற்கு கிடைத்திருக்கும் எட்டு விருதுகளில் இரண்டு பிரிவுகளுக்கான (சிறந்த இசையமைப்பாளர் மற்றும் சிறந்த பாடல் இசைக்கான விருது) விருதுகள் இப்போது ரகுமான் வசம். ரகுமானுக்கு ஒஸ்கார் விருதை பெற்றுத்தந்திருக்கும் ஸ்லம்டோக் மில்லியனியர் என்ற படம் இந்திய எழுத்தாளர் விக்காஸ் சுவரூப் எழுதிய கியூ அண்ட் ஏ (Q and A) என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.மேலும் இந்தியாவில் இரட்டை ஒஸ்கார் விருதுகளைப்பெறும் முதல் நபர் என்ற பெருமைக்கு அப்பாற்பட்டு ஒஸ்கார் விருதைப்பெற்றுள்ள முதல் தமிழர்
இந்தியாவில் முதல் ஒஸ்கார் விருது பெற்ற பானு ஆதைய்யா

என்ற பெருமை தான் பேசப்படவேண்டியது. அதுவும் விருது வழங்கும் நிகழ்வு இடம்பெற்ற கொடக் அரங்கில் அவர் தனது தாயின் ஆசிர்வாதத்தை சிலாகித்து கூறி, தமிழில் எல்லா புகழும் இறைவனுக்கே என்று சொல்லி முடித்தார்.இது அவரின் தாய் கரீமா பேகம் மற்றும் தாய்மொழி மேல் வைத்துள்ள பற்றை காட்டி நிற்கின்றது.
திரைப்படத்துறையில் வழங்கப்படும் மிக உயரிய விருதான ஒஸ்கார் விருதுக்கு முன்பதாக இதே திரைப்பட இசைக்காக, ரகுமான் குளோடன் குளோப் மற்றும் பப்டா விருதுகளைப்பெற்றார்.குளோடன் குளோப் விருது வெல்லும் திரைப்படத்திற்கு நிச்சியமாக ஒஸ்கார் விருது கிடைக்கும் சாத்தியகூறுகள் அதிகம் என்பதை வரலாறு எமக்கு புலப்படுத்துகின்றது.

இந்த மைல்கல்லை அடைய ரகுமான் எடுத்துள்ள முயற்சிகள் கடுமையானவை.ரகுமான் ஒரு இசைக்குடும்பத்தில் பிறந்தவர்.இவரது தந்தை ஆர்.கே.சேகர் தமிழரானாலும் மலையாள படவுலகின் இசையமைப்பாளரா திகழ்ந்தவர்.22 படங்களுக்கு இசையமைத்துள்ள இவர் 100 படங்களுக்கு மேல் இசைப்பணியாற்றியுள்ளார். ரகுமான் 9 வயதாக இருக்கும் போது அவரது தந்தை மரணத்தை தழுவ ரகுமானின் குடும்பம் வறுமையில் தள்ளப்பட்டது. அச்சந்தர்ப்பத்தில் அவருக்கு உதவ எவருமே முன்வரவில்லை.இதன் காரணமாக ரகுமானின் குடும்பம் இசை உபகரணங்களை வாடகைக்கு விட்டு அந்த வருமானத்தில் வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.அந்நேரத்தில் அவரது குடும்பத்திற்கு பல்வேறு வகையில் உதவிகள் புரிந்து வந்த இஸ்லாமிய அன்பரின் மனித நேயத்தை மதித்து 1989 ஆம் ஆண்டு தனது சகோதரிகளுடன் இஸ்லாம் மதத்தை தழுவியது குடும்பம்.அதிலிருந்து அவரது பெயரையும் ஏ.ஆர்.ரகுமான் என்று மாற்றிக்கொண்டார். தனது 11 ஆவது வயதில் தனராஜ் மாஸ்டரிடம் கீபோட் வாசிக்கப்பழகினார் ரகுமான். ஆரம்பத்தில் தனது சிறுவயது நண்பர்களான டரம்ஸ் சிவமணி,சுரேஷ் பீட்டர்ஸ், ஜோன் அந்தனி.ஜோ ஜோ ஆகியோரிடமும் இசை பற்றிய விடயங்களø பகிர்ந்து கொள்ள அவர் தயங்கவில்லை. இவர்கள் அனைவரும் உருவாக்கிய ரூட்ஸ் என்ற இசைக்குழுவில் ரகுமான் கீபோட் வாத்திய கலைஞராக விளங்கினார்.
அதன் பின்னர் இசைஞானி இளையராஜா,எம்.எஸ்.விஸ்வநான் ஆகியோருடன் பணியாற்றும் வாய்ப்பு இவருக்குக்கிடைத்தது.மேலம் தபேலா கலைஞர் ஜாகிர் உசேன்,வயலின் வித்துவான் குன்னக்குடி ஆகியோருடன் இணைந்து பல நாடுகளுக்கு இசைப்பயணம் மேற்கொண்டுள்ளார். புலமை பரிசில் மூலம் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு இலண்டனில் அமைந்துள்ள டிரினிடி இசை கல்லூரியில் மேலைத்தேய இசையில் பட்டம் பெற்றார்.
தனது 25 ஆவது வயதில் தனியõக இசையமைக்கத்தொடங்கினார் ரகுமான்.தனது வீட்டிலேயே ஒலிப்பதிவு கூடத்தை ஆரம்பித்தார். விளம்பர படங்களுக்கு இசையமைத்து வந்த இவரின் வித்தியாசமான இசைப்பாணி பலரை கவர்ந்தது. இவரது இசையில் கவரப்பட்ட இயக்குனர் மணிரத்னம் தனது ரோஜா திரைப்படத்திற்கு இசையமøக்கும் பொறுப்பை வழங்கினார். தனது முதல் பட வாய்ப்பை பலமாக பற்றிக்கொண்ட ரகுமான் அற்புதமான பாடல்களை தந்ததன் மூலம் முதல் திரைவுலக பிரவேசத்திலேயே சிறந்த இசைக்கான தேசிய விருதை பெற்றார்.அதிலிருந்து இயக்குனர் மணிரத்னத்தின் ஆஸ்தான இசையமைப்பாளரா விளங்கினார். ரகுமான் இது வரை ரோஜா உட்பட நான்கு தேசிய விருதுகளை சிறந்த இசையமைப்பாளர் பிரிவில் வென்றுள்ளார். ரோஜா (1992) மின்சாரகனவு (1996) லகான் (2001) கன்னத்தில் முத்தமிட்டால் (2001) இதைத்தவிர தமிழ் நாடு அரசு விருதுகள் ஆறை பெற்றுள்ளார்.
இது வரை தமிழ் ,ஹிந்தி, ஆங்கிலம் ஏனைய மொழிகள் உட்பட 103 படங்களுக்கு ரகுமான் இசையமைத்துள்ளார். 11 படங்கள் கைவசம் உள்ளன.இதில் இயந்திரன், அசோகவனம்,சென்னையில் ஒருமழைகாலம்,விண்ணைத்தாண்டி வருவாயா ஆகிய தமிழ் படங்களும் அடங்குகின்றன. அமெரிக்காவின் பிரபல வோல்ட் டிஸ்னி தயாரிப்பில் அடுத்த ஆண்டு வெளிவரவுள்ள ஆங்கில ,தமிழ்,ஜப்பானிய மொழிகளில் தயாரிக்கப்பட்டு வரும் The 19th Step என்ற படத்திற்கும் ரகுமானே இசை.இத்திரைப்படமும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
விளம்பர படங்கள் மூலம் தனது இசை பிரவேசத்தை ஆரம்பித்த ரகுமான் இன்று ஒஸ்கார் எனும் சிகரத்தை தொட்டுள்ளார். இவரது இளமை கால வாழ்க்கையும் விடாமுயற்சியும் பலருக்கு ஒரு பாடமாக அமையட்டும்.
சிவலிங்கம் சிவகுமாரன்

நன்றி: வீரகேசரி வாரவெளியீடு (01-02-2009)

Monday, February 23, 2009

தமிழ் சினிமாவும் ஏமாற்றப்படும் இரசிகர்களும்


தமிழ் சினிமா பற்றிய பல்வேறு அலசல்களில் இந்திய திறனாய்வு மற்றும் விமர்சனங்களில் கையாளப்படும் பல விடயங்கள் குறித்து நாம் பொழுது போக்காகக்கூட கதைப்பதில்லை விவாதிப்பதில்லை. இதற்குக்காரணம் நல்ல சினிமா எது என்ற விடயம் பற்றிய அறிவை நாம் வளர்த்துக்கொள்ளாததுதான். ஒரு சினிமாவை நாம் எதற்குப்பார்க்கவேண்டும் அதிலிருந்து என்னென்ன விடயங்களை கற்றுள்ளோம், அவ்விடயங்களை நம் நண்பர்களுடன் விவாதத்திற்கு உட்படுத்துகின்றோமா குறிப்பிட்ட படத்தில் இயக்குனர் என்ன விடயத்தை முன்னிலைப்படுத்துகிறார் அல்லது எதை மறைமுகமாக குத்திகாட்டுகிறார் இது பற்றிய தேடல்கள் நம்மிடம் குறைவு. ஒரு தமிழ் படத்தில் நகைச்சுவை காட்சிகளுக்கும் சண்டை காட்சிகளுக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை நாம் வேறு பல நல்ல விடயங்களுக்கு கொடுப்பதில்லை. இப்போது வெளி வரும் தமிழ்த்திரைப்படங்களில் முக்கியமாக பலரும் பேச விரும்பாத விடயம் சினிமா இலக்கணவிதிகள் பற்றிய தவறுகளாகும். இதை ஆங்கிலத்தில் Logical Mistakes என்று கூறுகின்றனர். ஒரு சினிமா இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற வரையறை சினிமா பாடத்தில் இல்லையென்றாலும் ஒரு சினிமாவை பார்க்க திரையரங்கு செல்லும் இரசிகனை எப்படியெல்லாம் காட்சியமைப்புக்களில் ஏமாற்றலாம் என்பதற்கு இன்று வெளிவரும் திரைப்படங்கள் சான்று பகர்கின்றன. இதில் இந்தியாவிலிருந்து வெளிவரும் சகல மொழி திரைப்படங்களும் அடக்கம் சரி இந்த லொஜிக்கல் தவறுகள் என்றால் என்ன? ஒரு படத்தில் இடம்பெறும் சன்டை,நகைச்சுவை,ஆடல் ,பாடல்,சம்பவங்கள் அனைத்திலும் இந்த தவறுகள் ஆக்கிரசித்துள்ளன. இதை தான் இன்றைய இரசிகர்கள் விரும்புகிறார்கள் என்றால் ஒரு வகையில் இது அவர்களை ஏமாற்றுவதற்கு ஒப்பானது. நவீன தொழில்நுட்பம் என்ற பெயரில் சண்டை ,பாடல் காட்சிகளை கற்பனைக்கு எட்டாத விதத்தில் எடுத்தல் ஒரு நல்ல சினிமாவுக்கான பண்புகள் என்று கூற முடியாது. சண்டை காட்சிகளை எடுத்துக்கொண்டால் ஒரு நாயகன் என்னதான் அசாத்திய உடல் திறன் கொண்டவனாக இருந்தாலும் ஒரே தடவையில் வெறுங்கையில் இருபது அரிவாள் ரவுடிகளை சமாளிப்பது என்பது சினிமாவில் மட்டுமே நிஜம் என்பது அதைப்பார்க்கும் ஒவ்வொருவருக்கும் தெரியும். ஆனால் இக்காட்சியல் யதார்த்தம் என்பது இல்லை.சண்டை காட்சியில் பிண்ணியில் ஒலிக்கும் சத்தங்கள் கூட பொய்யானவை என்பது கண்கூடு. தற்போது வெளி வரும் தமிழ் சினிமாவில் உள்ள சண்டை காட்சிகள் நூற்றுக்கு நூறு வீதம் பொய்யானவை என்பதே உண்மை. ஆனால் இதே காலகட்டத்தில் சண்டை காட்சிகளில் கூட யதார்த்தத்தை காட்ட விரும்பும் இயக்குனர்கள் இல்லாமலில்லை.இதில் பாலா,அமீர்,மிஷ்கின், ஏன் அக்காலத்து பாலு மகேந்திரா,மகேந்திரன் என்போரை குறிப்பிடலாம். இயக்குனர் பாலா தனது படத்தில் வரும் சண்டை காட்சிகல் கூட யதார்த்தத்தை எதிர்ப்பார்ப்பவர்.பிண்ணனியில் பொய்யான சப்தங்களை எழுப்ப விரும்பாத இவர் தனது படங்களில் இருவர் சண்டையிடும் போது அவர்களில் இருந்து எழும் உணர்ச்சிகள் ஆவேசம் சப்தம் என்பன உண்மையானதாகவும் தொழில் நுட்ப கலப்பில்லாததாகவும் இருக்க வேண்டும் என விரும்புபவர். இவரின் நந்தா,பிதாமகன்,தற்போது வெளிவந்துள்ள நான் கடவுள் என்பவற்றைக்கூறலாம். சண்டை காட்சிகளை விடுத்து ஒரு படத்தில் இடம்பெறும் சம்பவங்களில் எத்தனையோ தவறுகள் இடம்பெறுகின்றன. இதற்கு உதாரணம் காட்டத்தொடங்கினால் இங்கு இடம்போதாது.எனினும் ஒரு சில விடயங்களைப்பார்க்கலாம். மகத்தான வெற்றி பெற்ற பல தமிழ் திரைப்படங்களில் கூட ஆரம்பம் முதல் முடிவு வரை தவறுகள் காட்சியமைப்பிலும் திரைக்கதையிலும் இடம்பிடித்துள்ளதை அவதானிக்கலாம்.விஜய் சிம்ரன் நடித்த துள்ளாத மனமும் துள்ளும் படத்தை எடுத்துக்கொண்டால் இறுதி வரை நாயகிக்கு இவன் தான் நாயகன் என்பது தெரியாமல் இருப்பதற்கு இயக்குனர் எழில் எடுத்துக்கொண்ட முயற்சிகளில் இறுதி தருணங்கள் பொய்யானவை. நாயகி தனது வாழக்கையில் முக்கியமான இடத்தைப்பிடித்த நாயகன் ஒரு பொய் குற்றச்சாட்டுக்கு ஆளாகி ஏழு வருடங்கள் சிறைவாசம் அனுபவிக்க போய் விடுகிறான்.அந்த காலகட்டத்தில் இவனது உயிர் நண்பர்கள் நாயகியிடம் இருக்கின்றார்கள்.அப்போது நாயகனின் ஒரு புகைப்படம் கூட அவர்கள் மத்தியில் இல்லாததை நம்ப முடியாது உள்ளது. இது ஓர் உதாரணம் தான் இப்படி எத்தனையோ. இயக்குனர் சங்கரின் படங்களில் பிரமாண்டம் இருக்கும் ஆனால் காட்சியமைப்புக்களை நம்ப முடியாது. கதையையே நம்ப முடியாதுள்ளது. ஆரம்பத்தில் இயக்குனர் மணிரத்னம் கூட தனது படங்களில் யதார்த்தம் இழையோடுவதை விரும்பினார் எனினும் வர்த்தக நோக்கத்தை கொண்டு படம் தாயாரிக்கும் எண்ணம் இப்போது மேலோங்கியுள்ளதால் அவரிடம் இருந்து இப்படியான படங்களை அண்மைக்காலங்களில் எதிர்ப்பார்க்கமுடியாததாகவுள்ளது. இறுதியாக வெளிவந்த கமலின் தசாவதாரம் திரைப்படத்திலும் ஏகப்பட்ட தவறுகள்.இப்படத்தில் பலரால் சுட்டிக்காட்டப்பட்ட விடயம் இறுதி காட்சியில் சுனாமி ஏற்பட்டு மக்களின் மரண ஓலங்களின் மத்தியில் கமலும் அசினும் கடற்கரையில் காதல் வசனங்களை பேசியபடி வருவது. ஹொலிவுட் திரைப்படங்களை Drama, action, thriller, science fiction, animation என்ற வகைக்குள் உள்ளடக்குவர். கற்பனா அதிசயங்கள் நிறைந்த விஞ்ஞான புனைகதைகள் என்றால் science fiction என்ற முத்திரையுடன் தான் அவை வெளிவரும்.இதில் ஸ்பைடர்மேன்,சூப்பர் மேன்,ஹரி பொட்டர் ஆகிய படங்களை உள்ளடக்கலாம்.இப்படங்களை பார்ககும் ஒரு இரசிகன் ஏமாற்றப்படுவதில்லை என்பதே உண்மையாகும். எனினும் இன்று வெளிவரும் பெரும்பாலான தமிழ்த்திரைப்படங்கள் தழுவல்களாக இருப்பதுவும் கூட இரசிகர்களை ஏமாற்றும் வேலைதான். அதற்கு உலக சினிமா குறித்து ஆர்வமும் அக்கறையும் தேவை. இச்சந்தர்ப்பத்தில் ஒன்றை குறிப்பிடல் அவசியம். ஹிந்தித்திரை உலகில் நடிப்பு இயக்கம் ஆகியவற்றில் தனிமுத்திரை பதித்த நடிகர் அமீர்கான்.இவர் இயக்கி நடித்த லகான்,ரங் தே பாசந்தி என்பன சர்வதேச விருதுகளை பெற்றன. இவர் ஒரு கட்டத்தில் கூறும் போது ஆங்கில திரைப்படங்களை தழுவி நாம் படம் எடுத்து அதே படத்தை அவர்களுக்குப்போட்டுக்காட்டி விருது கேட்டால் கொடுப்பார்களா என்றார். ஆனால் அவரே ஆங்கிலத்திரைப்படத்தை அப்பட்டமாக அப்படியே தமிழில் எடுத்து வெற்றி பெற்ற கஜினி ஹிந்தி படத்தில் நடித்திருக்கிறார்.கஜினி 2001 ஆம் ஆண்டு வெளியான மொமென்டோ (Memento) என்ற ஹொலிவுட் திரைப்படத்தின் நேரடி தமிழ் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதை தமிழிலும் ஹிந்தியிலும் முருகதாஸ் இயக்கியிருந்தார். ஒரு திறனாய்வாளனுக்கும் சாதாரண இரசிகனுக்கும் ஒரு திரைப்படத்தை பார்ப்பதில் உள்ள வித்தியாசங்கள் முக்கியமானவை. ஒரு திறனாய்வாளன் ஒரு பக்க சார்பாளனாக இருக்க முடியாது.ஆனால் ஒரு இரசிகனால் அப்படியிருக்கமுடியாது, தனது மனதுக்குப்பிடித்த நாயகன் திரைப்படத்தில் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டாலும் கொடூரமானவனாக இருந்தாலும் கூட அவனை ஏற்றுக்கொள்ளக்கூடிய மனநிலையிலேயே அவன் இருப்பான். தமிழ்த்திரைப்படங்களில் வரும் தவறுகள் ஒரு சராசரி இரசிகனுக்கும் விளங்கவேண்டும் என்ற அவாவில் எழுதப்பட்டதே இவ்விடயங்கள்.இது ஆரம்பம் மட்டுமே. இரசிகர்கள் இது குறித்து என்ன நினைக்கிறார்கள் என்பதை அவர்களே வெளிப்படுத்த வேண்டும்.தமிழ்த்திரைப்படங்களில் யதார்த்தம் இருக்கக்கூடாதா இப்படியான படங்களைத்தான் அவர்கள் விரும்புகிறார்களா? உங்கள் கண்களுக்குப்பட்ட தவறுகள் எவை?எழுதுங்களேன் இப்பக்கத்துக்கு?
நன்றி:வீரகேசரி வாரவெளியீடு( 22-02-2009)