தமிழ் நாடு சட்டசபைத் தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்திருந்த கருத்துகள் மிக முக்கியமானவை. ‘ காமராஜர் தோற்றார், மு.க.ஸ்டாலினும் தோல்வியைத் தழுவியுள்ளார் தமிழ் நாட்டு மக்கள் சமூகம் இரசிகர் மயமாகியுள்ளதையே இது வெளிப்படுத்துகின்றது…அதே வேளை அரசியல் மயமாகவில்லையென்பது நிரூபணமாகியுள்ளது ‘ என்று அவர் சமூக ஊடகங்களில் கருத்து வெளியிட்டிருந்தார்.
தேர்தல் பிரசார காலங்களில்
நடிகர் பிரகாஷ்ராஜ் நடிகர் விஜய்க்கு எதிராகவே கருத்துகளை வெளிப்படுத்தி வந்தார். ‘சினிமாவில்
எவரும் வைத்தியர் ஆகலாம் பொறியியலாளர் ஆகலாம், ஏன் முதல்வராகக் கூட ஆகலாம். ஆனால்
அரசியலில் அப்படி முதல்வராகி விட முடியுமா? என்று கேள்வியெழுப்பியவர் பிரகாஷ்ராஜ்.
எனினும் தேர்தல் முடிவுகள் வெளிவந்தவுடன் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகளை
கூறிய அவர், விஜயை ஆட்சியமைக்க தமிழக
ஆளுநர் அழைப்பு விடுக்காதது குறித்து தனது
அதிருப்தியையும் வெளிப்படுத்தியிருந்தமை முக்கிய விடயம்.
இது இவ்வாறிருக்க கடந்த 4 ஆம் திகதி தமிழக
சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளிவந்தவுடன் இலங்கையின் பல பாகங்களிலும் இடம்பெற்ற
கொண்டாட்டங்கள் பலரது கவனத்தை ஈர்த்திருந்தன. குறிப்பாக வடக்கு கிழக்கு மற்றும் மலையகப்பகுதிகளில் நடிகர்
விஜயின் இரசிகர்கள், கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர்.
இதில்
குறிப்பிட்டுக் கூற வேண்டிய விடயம் என்னவெனில் நடிகர் விஜயை தலைவராகக் கொண்ட தமிழக வெற்றிக்
கழகத்தில் விஜய் மாத்திரமே அனைவருக்கும்
அறிமுகமான பிரபல்யமான நபராக விளங்கினார். கட்சியில் வெற்றி பெற்ற ஏனைய அனைவரும்
234 தொகுதி மக்களுக்குமே புதியவர்கள். விஜய் என்ற பிம்பத்தை மாத்திரம் தமது மனதில்
கொண்டு தமிழக மக்கள் வாக்களித்துள்ளனர் என்பதே யதார்த்தம்.
இலங்கையின்
வடமாகாணத்தில் தமிழக வெற்றிக் கழக ஆதரவாளர்கள் பெரும் கொண்டாட்டங்களில்
ஈடுபட்டனர். காக்கை தீவு பகுதியில் விஜய் கட்சி கொடியை பறக்கவிட்ட இளைஞர்கள்
பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர். அப்பகுதி வறிய மக்களுக்கு உலர் உணவுப் பொருட்களையும் விநியோகித்தனர். அதே
போன்று நுவரெலியா மாவட்டத்தில் புசல்லாவை நகரில் ஒன்று திரண்டு விஜய் இரசிகர்கள் கேக்
வெட்டி பட்டாசு வெடித்து ஊர்வலமாகச்
சென்று தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மூதூர் பகுதியில் விஜய் இரசிகர்கள் பாற்சோறு
சமைத்து அனைவருக்கும் விநியோகித்து தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
அன்றைய தினம்
இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொண்ட உறுப்பினர்களும் விஜயின் வெற்றிக்கு
வாழ்த்து தெரிவித்திருந்தனர். யாழ் மாவட்ட சுயேச்சை எம்.பி அர்ஜுனா ஒரு படி மேலே
சென்று கச்ச தீவை மாத்திரமல்லாது யாழ்ப்பாணத்தையும் விஜய்கே வழங்க வேண்டும் என பாராளுமன்றில்
கூறியிருந்தார். அரசியல்வாதிகளின்
வாழ்த்துகள்,
கருத்துகள் ஒரு பக்கம் இருக்க, விஜயின்
வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்ட வடக்கு, கிழக்கு, மலையக இளைஞர்கள் மீது சமூக
ஊடகங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்திருந்தன. தேர்தல் பிரசாரங்களின் போது கச்ச
தீவை மீட்போம் என விஜய் கூறியிருந்தார். எமது நாட்டிற்கு சொந்தமான ஒரு பகுதியை
கேட்ட விஜய்க்கு எப்படி இங்கிருந்து கொண்டு ஆதரவளிப்பது என விமர்சனங்கள்
கிளம்பியிருந்தன. மாத்திரமின்றி
பெரும்பான்மை ஆசனங்களின்றி ஆட்சியமைக்க முடியாத நிலையிலிருந்து விஜய்க்கு ஆதரவளிக்க காங்கிரஸ் முன் வந்தமை, அதை விஜய்
ஏற்றுக்கொண்ட சம்பவங்களுக்குப் பிறகு எதிர்ப்புகள் வேறு கோணத்தில் எழுந்தன.
ஈழத்தமிழர்கள்
பலர் பலியாக காரணமான காங்கிரஸோடு இணைந்து
ஆட்சியமைக்கப் போகும் விஜய்க்கு இங்குள்ளவர்கள் ஆதரவாக செயற்பட்டால் அதைவிட
துரோச் செயல் இருக்க முடியாது என புலம்பெயர் தமிழர்களால் சமூக ஊடகங்களில் கருத்துகள் பகிரப்பட்டன. மலையகத்தின்
புசல்லாவை நகரில் இடம்பெற்ற வெற்றிக் கொண்டாட்டங்களும் விமர்சனங்களை
எதிர்நோக்கியிருந்தன. காவத்தை பகுதியில் தொழிலாளர்களுக்கு எதிராக இடம்பெற்ற
தாக்குதலை கண்டித்து மலையகம் மற்றும் தலைநகரில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டங்களில்
இளைஞர்கள் பங்கு கொண்ட தருணத்தில் இங்கு இவர்களுக்கு என்ன கொண்டாட்டம்
வேண்டியுள்ளது என கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
அதற்கு விஜய் இரசிகர்கள் ‘அவர்
எமது விருப்புக்குரிய நடிகர். அவரது படங்கள் இலங்கையில் திரையிடப்படும் போது நாம்
எவ்வாறு வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபடுவோமோ அதே போன்று அவர் தமிழகத்தின்
முதலமைச்சராக வெற்றி வாகை சூடப்போவதை கொண்டாடுகின்றோம். இதில் எதுவும் தவறுகள்
இருப்பதாக எமக்குத் தெரியவில்லை’ என அவர்கள் தமது பக்க நியாயங்களை சமூக ஊடகங்களில்
வெளிப்படுத்தியிருந்தனர்.
சுதந்திரத்துக்குப்
பின்னர் தமிழ்நாட்டின் அரசியல், சினிமா,
இலக்கியம், கிரிக்கெட் என்ற இந்த நான்கு அம்சங்களிலிலிருந்தும் இலங்கை எப்போதும் விடுபட முடியாத ஒரு சூழல் நிலவுவதை
நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஐம்பதுகளில் தமிழ்நாட்டில் முகிழ்த்த திராவிட
இயக்கங்களின் தாக்கம் இலங்கையை பாதித்திருந்தது. இலங்கையைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் மற்றும்
இலக்கியவாதிகள் தமிழ் நாட்டு அறிஞர்களை வரவழைத்து ஆன்மிக, இலக்கிய செயற்பாடுகளை
வளர்த்தனர். தமிழ் நாட்டு சஞ்சிகைகள் , பத்திரிகைகள் இதற்கு தூண்டுகோலாய் இருந்தன.
அக்காலகட்டத்தில் தமிழ்நாட்டு பிரமுகர்களோடு
தொடர்புகளை ஏற்படுத்தி அவர்களை இலங்கைக்கு வரவழைத்தவர்கள், ‘நாம் இலங்கையர்’ என்ற கோட்பாட்டுக்குள்ளேயே
இச்செயற்பாடுகளை முன்னெடுத்தனர். இலங்கையில்
திராவிட கழகத்தை ஆரம்பித்து வடக்கு,
கிழக்கு மலையகத்தில் துடிப்பாக செயற்பட்ட
ஏ.இளஞ்செழியனும் ‘நாம் இலங்கையர்’ என்ற என்ற விடயத்தில் மிகக் கவனமாக
செயற்பட்டார். திராவிட அரசியல் வரலாற்றில் தமிழக முதலமைச்சர்களாக விளங்கிய சி.என்.அண்ணாதுரை, கலைஞர் கருணாநிதி,
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய அனைவருமே சினிமாவோடு
தொடர்புடையவர்கள். இவர்கள் அனைவரினதும் உருவப்படங்கள் இலங்கையில் பல
இல்லங்களில் இன்றும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.
ஆனால் சினிமாவோடு
எந்த தொடர்புகளும் இல்லாத அதே நேரம் நேர்மையான அரசியலை முன்னெடுத்த ஒரு தமிழகத்
தலைவரை இலங்கை மக்கள் இன்று வரை தமது மனதிலிருத்தி வருகின்றனர் என்றால் அவர் கர்மவீரர் காமராஜர். தமிழ் நாடு சென்னை
மாநிலமாக இருந்த போது ஒன்பது ஆண்டுகள் முதலமைச்சராக இருந்தவர் காமராஜர். தொடர்ச்சியாக
அதிக நாட்கள் முதலமைச்சராக பதவியிலிருந்த பெருமை இன்று வரை இவரையே சாரும்.
காமராஜரைத் தவிர இவர்கள்
அனைவருமே சினிமாவுக்காக அரசியலையும் அரசியலுக்காக சினிமாவையும் பயன்படுத்திக்கொண்ட
தமிழக அரசியல்வாதிகள் மற்றும் கலைஞர்கள். என்ன தான் இவர்கள் மீது விமர்சனங்கள்
இருந்தாலும் இவர்களின் அரசியல் பயணம்
மிகவும் கரடுமுரடான பாதைகளைக் கொண்டது.
ஆனால் விஜய்
அப்படியல்ல. அவர் நடிகராக இருந்த போது தமிழ்நாடாக இருந்தாலும் இலங்கையாக இருந்தாலும்
மக்களின் துயரங்களில் பங்கு கொண்டிருக்கின்றாரா, பொது நிகழ்வுகளில் அது குறித்து
பேசியுள்ளாரா என்ற கேள்வி சட்டசபை தேர்தல்
பரப்புரைகளின் போது நடிகர்களான சத்தியராஜ் , சரத்குமார் ஆகியோரினால்
எழுப்பப்பட்டிருந்தது. 2011 ஆம் ஆண்டு ஒரு நிகழ்வில் பேசிய விஜய்
உணர்ச்சிவசப்பட்டு இலங்கை படையினரை கடுமையாக விமர்சித்திருந்தார். நாகபட்டினத்தில்
இடம்பெற்ற அந்த நிகழ்வு தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதற்கு
எதிராக இடம்பெற்றது. இதில் உரையாற்றிய நடிகர் விஜய், ‘பக்கத்து வீட்டுக்காரர்
என்பதால் எந்த பிரச்சினையும் வேண்டாம் என இருக்கிறோம். உலக வரைபடத்தில் இலங்கை
என்ற இடமே இல்லாமல் போய்விடும் என்றும் கூறியதோடு நா அடிச்சா தாங்க மாட்ட நாலு
மாசம் தூங்க மாட்ட என்ற தனது பட பாடலையும் பாடி காட்டியிருந்தார்.
அதற்குப் பிறகு இவ்வாறான
பொது நிகழ்வுகளில் விஜயை பேச அழைக்காமலிருப்பதே நல்லது என சிலர் கருதினர். ஆனால்
சினிமாவில் உச்ச இடத்தில் இருக்கும் போதே தமிழக அரசியல் சூழ்நிலைகளை நன்கு கணித்து
வைத்திருந்தார் விஜய். தனது அரசியல் படங்களை பார்க்கும் இரசிகர்களின்
நாடித்துடிப்பையும் அவர் அறிந்து வைத்திருந்தார். அதன் காரணமாகவே கட்சி தொடங்கி
இரண்டு வருடங்களில் (2024–2026) அவரால் தமிழ்நாட்டின் பாரம்பரிய திராவிட கட்சிகளை
ஓரங்கட்ட முடிந்தது. மாத்திரமின்றி 1952 ஆம் ஆண்டிலிருந்து இடம்பெற்ற 17 சட்டசபை
தேர்தல்கள் வரலாற்றில் முதன் முறையாக 80 வீதத்தை
தாண்டிய வாக்குப் பதிவு இறுதியாக 85 வீதமாக அமைந்தது.
இவை அனைத்துக்கும்
காரணம் விஜய் என்ற ஒற்றை மனிதரே என்பது அவரது தமிழக மற்றும் இலங்கை இரசிகர்களின்
அசைக்க முடியாத நம்பிக்கையாகவுள்ளது. ஆனால் ஒரு தனிமனிதராக, கட்சி ஆரம்பித்து இரண்டு ஆண்டுகளில்
முகங்கொடுத்த தேர்தலில் 234 தொகுதிகளில்
108 தொகுதிகளை வென்ற விஜய், பெரும்பான்மையை பெறாததால் ஆட்சியமைப்பதில் குழப்பங்களை
எதிர்நோக்கி வருகின்றார். மத்திய பா.ஜ.க
அரசாங்கமானது காங்கிரஸ் இணைவோடு விஜய் தமிழ் நாட்டின் முதலமைச்சராக
வருவதற்கு விரும்பவில்லை போன்றே தெரிகின்றது.
விஜய் வெற்றி
பெற்றதற்கே இலங்கையில் இத்தனை கொண்டாட்டங்கள் என்றால் அவர் முதலமைச்சராக அரியணையில்
அமரும் நாளன்று இன்னும் பல சம்பவங்களை எதிர்ப்பார்க்கலாம். ஆனால் விஜய்
முதலமைச்சராகுவதற்கு சந்தர்ப்பங்கள் உள்ளனவா என்பதே இப்போது தமிழ் நாட்டில்
மாத்திரமின்றி இலங்கையிலும் எழுந்திருக்கும் விடை தெரியாத மில்லியன் டொலர்
கேள்வியாக உள்ளது.
No comments:
Post a Comment