Thursday, June 18, 2026

அம்பை எய்தவர்களின் பதற்றங்கள் ..?

 


அரசு புலனாய்வுப் பிரிவின் முன்னாள்  பணிப்பாளர்  சுரேஷ் சாலேவுக்காக கொழும்பு கோட்டையில்  சத்தியாக்கிரகத்தை முன்னெடுத்த   விமல் வீரவன்சவும் உதய கம்மன் பிலவும் ராஜபக்ச அணியைச் சேர்ந்தவர்கள் என்பதை சிறு குழந்தையும் அறியும். தமது இனவாத கருத்துகளால் நாட்டின் கணிசமான சிங்கள பெளத்த மக்களின் வெறுப்புகளையும் சம்பாதித்து வைத்திருக்கும் நபர்களாக இவர்கள் விளங்குகின்றனர்.   

சாலேவுக்காக இவர்கள் ஏன் களமிறங்க வேண்டும் எற கேள்விக்கான விடையையும் நாட்டு மக்கள் அறிவர். இச்சம்பவத்தின் சூத்திரதாரிகளை கண்டறிவதற்கான  விசாரணைகளின் ஒரு கட்டமாக  சுரேஷ் சாலே கடந்த பெப்ரவரி மாதம்  கைது செய்யப்பட்டார். அவர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு முகங்கொடுத்து வந்தார். அச்சந்தர்ப்பத்தில் ராஜபக்ச தரப்பிலிருந்து சலசலப்புகள் எழவில்லை. ஆனால்  முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் இரு முன்னாள் இராணுவ அதிகாரிகளுக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டமையை அடுத்தே ராஜபக்ச முகாமிலிருந்து பதற்றம் வெளிப்பட்டது.

  கோட்டாபய ஆட்சி காலத்தில் அவரால் அரச புலனாய்வு பிரிவு பணிப்பாளராக நியமிக்கப்பட்டவரே சுரேஷ் சாலே. கோட்டாபய ஜனாதிபதியானவுடன் தனக்கு மிகவும் விசுவாசமிக்க முன்னாள் இராணுவ அதிகாரிகளை பல்வேறு உயர் பொறுப்புகளுக்கு நியமித்தார். பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக முன்னாள் ஜெனரல் கமால் குணரத்னவை நியமித்த அவர்   நாட்டின் மிக உயரிய உளவு அமைப்பான அரச புலனாய்வுச் சேவையின் பணிப்பாளராக சுரேஷ் சாலே என்ற இராணுவ அதிகாரியை முதன் முதலாக இந்த பொறுப்புக்கு நியமித்தார்.கோட்டாபய ஒரு முன்னாள் இராணுவ அதிகாரி. இடையில் இராணுவத்திலிருந்து விலகிச் சென்றவர். எனவே அவர் தனக்கு விசுவாசமான இராணுவ அதிகாரிகளை முக்கிய பொறுப்பில் நியமிப்பது குறித்து அவர் தரப்பில் நியாயம் கற்பிக்கப்பட்டலும் அரச இயந்திரம் இராணுவமயமாகி விடக்கூடும் என்ற அச்சமும் அப்போது வெளியிடப்பட்டிருந்தது.

அதுவும் சுரேஷ் சாலே என்பவருக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டதில் வேறு எதுவும் பின்னணி காரணங்கள் இருக்கக் கூடும் என்ற சலசலப்புகளும் எழாமலில்லை. அரகலய போராட்டத்துக்குப் பின்னர் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் குறித்து அதிகமாகவே பேசப்பட்டன. அது சர்வதேசத்தையும் ஆக்கிரமித்திருந்தது. 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் மற்றும் அதற்குப்பின்னரான ஆட்சி மாற்றத்துக்காக இந்தத் தாக்குதல் திட்டமிடப்பட்டதா என்ற கேள்விகள் நாட்டின் ஒவ்வொரு பிரஜையின் மனதிலும் எழுந்தது. இச்சம்பவம்  குறித்த இறுக்கமான முடிச்சுகள் தற்போதே மெல்ல அவிழ ஆரம்பித்துள்ளன.

சுரேஷ் சாலே வாய் திறந்தால் அது யார் யாரையெல்லாம் பாதிக்கும் என்பதை அறிந்து வைத்திருக்கும் முன்னாள்  உயர்மட்ட அரசியல் பிரமுகர்களின் ஒரு நடவடிக்கையே அவருக்கு  ஆதரவான போராட்டங்களாக உருப்பெற்றன.  ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் உண்மையில் எந்த அரசியல் பின்புலம் அல்லது சதி நடவடிக்கைகளுக்கு அப்பாற்பட்டதொரு தீவிரவாத தாக்குதலாக இருக்கும் பட்சத்தில் அது குறித்து ஏன் முன்னாள் அரசியல்வாதிகள் பதற்றத்துக்குள்ளாக வேண்டும்?

எனவே ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் மிகவும் வலிமை வாய்ந்த மறைகரங்கள் செயற்பட்டிருப்பது குறித்து நாட்டு மக்கள் தற்போது விளங்கிக்கொண்டுள்ளனர். சுரேஷ் சாலே என்ற இராணுவ அதிகாரியை எதற்கு கோட்டாபய தேசிய புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக தனது காலத்தில் நியமித்தார் என்பதற்கு இப்போது விடைகள் கிடைத்திருக்கும். கோட்டாபயவின் காலத்தில் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் குறித்த விசாரணைகளில் குறிப்பிடத்தக்க ஆர்வம் காட்டப்படவில்லை. அது குறித்து எவரும் ஆராய்கின்றார்களா என்பதை புலனாய்வு செய்வதற்கே சுரேஷ் சாலே போன்றவர்களை கோட்டாபய பயன்படுத்தியிருக்கக் கூடும்.

தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டு வந்த சுரேஷ் சாலேவிடம் பல சந்தர்ப்பங்களில் வாக்குமூலங்கள் பெறப்பட்டிருக்கலாம். இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுக்கு சர்வதேச தீவிரவாத இயக்கம் ஒன்று உரிமை கோரியதால் அது குறித்த விசாரணை அறிக்கைகள் இரகசியமாக பேணப்பட்டு வருவது யதார்த்தமாகும். ஆனால் அவருக்கு ஆதரவாக ஒரு தரப்பினர் களமிறங்கி விசாரணைகளுக்கு இடையூறு செய்யும் அதே வேளை நாட்டு மக்களையும் குழப்பும் சம்பவங்கள் அதிகரித்த காரணத்தினால் ஒரு கட்டத்தில் நாட்டு மக்களுக்கு சில இரகசியங்களை அம்பலப்படுத்த வேண்டிய நிர்பந்தம் அரசாங்கத்துக்கு ஏற்பட்டது.  இத்தாக்குதலுக்கும் சுரேஷ் சாலேவுக்குமிடையிலான தொடர்புகளில் சில விடயங்களை  பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவினால் பாராளுமன்றத்தில் பகிரங்கப்படுத்தப்பட்டன. தாக்குதல் சம்பவத்துக்கு முன்பே நீர்கொழும்புக்குச் சென்று கத்தோலிக்க தேவாலயங்களை சுரேஷ் சாலே வேவு பார்த்த சம்பவங்களை அவர் பாராளுமன்றத்தில் கூறினார்.

மேலும் மூன்று மாத காலங்கள் தடுத்து வைக்கப்பட்ட சுரேஷ் சாலே சிறைச்சாலை சலுகைகளை அனுபவித்து விட்டு தற்போது குறை கூறுவதில் என்ன உண்மைகள் இருக்கப்போகின்றன என்ற அவரது கேள்வி முக்கியமானது.   

விமல் வீரவன்ச தரப்பினரின்  சத்தியாக்கிரக போராட்டம் மூன்றாவது நாளை எட்டியபோது குறித்த பேராட்டத்துக்கு எதிராக ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களில் இறந்தவர்களின் உறவினர்கள் தாம் ஒரு போராட்டத்தை மேற்கொள்வதற்கு ஆயத்தங்களை முன்னெடுத்தனர்.   முன்னதாக விமல் வீரவன்ச–கம்மன்பில குழுவினரின் போராட்டக் களத்துக்குச் சென்ற சிலர் அவர்களுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டிருந்தனர். உண்மைகள் அம்பலமாகப்போகும் போது அதை குழப்ப வேண்டாம் என சிலர் அவ்விடத்துக்குச் சென்று சத்தமிட்டிருந்தனர்.

மேலும் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் விசாரணைகளுக்கு இடையூறு செய்ய வேண்டாம் என அரசாங்கத்துக்கு ஆதரவாக நீர்கொழும்பில் மக்கள் வீதிக்கிறங்கி ஆர்ப்பாட்டமொன்றையும் முன்னெடுத்திருந்தனர்.

சுரேஷ் சாலேவுக்கு ஆதரவான போராட்டக் களத்தில் அவரின் குடும்பத்தினர் இருந்தமையே விமல் வீரவன்ச தரப்பினருக்கு சாதகமாயிற்று.   இந்தப் போராட்டத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எவரும் பங்கு கொள்ளவில்லையாயினும் மகிந்த மற்றும் ரணில் அரசாங்கத்தில் பாராளுமன்றத்தில் இருந்த பலர் இவ்விடத்தில் தலையைக் காட்டிச் சென்றனர்.   மூன்றாவது நாளன்று எதிர்ப்புகள் அதிகமாகும் என்று உணர்ந்து கொண்ட வீரவன்ச தரப்பு தாம் இந்த போராட்டத்தை கைவிடப்போவதாக அறிவித்து நடையை கட்டினர். தாம் முன்வைத்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டதையடுத்தே இப்போராட்டம் கைவிடப்பட்டதாக உதய கம்மன்பிலவும் வீரவன்சவும் தெரிவித்திருந்தனர்.  அதற்கு வேறு ஒரு காரணமும் உள்ளது. போலி கடவுச்சீட்டு விவகாரத்தில் கொழும்பு நீதவான் நீதிமன்றால் இரண்டு வருட சிறைத்தண்டனை தீர்ப்பு அறிவிக்கப்பட்ட வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவின் மேன் முறையீட்டு மனு நிராகரிக்கப்பட்டு தண்டனை உறுதி செய்யப்பட்டது. அவரது மனுவை கொழும்பு மேல் நீதிமன்றம் 11 ஆம் திகதி நிராகரித்திருந்தது. இத்தகவல் வீரவன்சவுக்கு முன் கூட்டியே அவரது சட்டத்தரணி ஊடாக தெரிந்திருக்கும். மட்டுமின்றி ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட தரப்பினரில் ஒரு தொகையினர் புறக்கோட்டையை நோக்கி படையெடுத்திருந்தனர்.    40 அரச வாகனங்களை தவறாகப் பயன்படுத்திஇ 09 மில்லியன் ரூபா நட்டத்தை அரசாங்கத்துக்கு  ஏற்படுத்திய குற்றச்சாட்டில்  - விமல் வீரவன்சவின் சகோதரர் சரத் வீரவன்சவிற்கு வெளிநாட்டுப் பயணத்தடையை கொழும்பு கோட்டை நீதிமன்றம் விதித்திருந்தது. போராட்டம் நீடித்தால் அவ்விடத்தில் இவை குறித்து ஊடகங்கள் எழுப்பும் கேள்விகளுக்கு வீரவன்ச பதில் கூற வேண்டி வரும் என்பதால் அவர் அவ்விடத்திலிருந்து செல்வதே நலம் என்பதை ஊகித்திருக்கலாம்.

மட்டுமின்றி சாலேவுக்கு ஆதரவான போராட்டத்தின் போது நாட்டுக்காக போராடியவரை இவ்வாறு சித்திரவதைப் படுத்தலாமா என்ற கோஷங்களும் எழுந்திருந்தன. இதற்கு பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா பதிலடி கொடுத்தவுடன் அந்த கோஷங்களும் அடங்கி விட்டன. சாலே எப்போது இராணுவத்துக்கு வந்தார் என்ன செய்தார் என்று கேள்வியெழுப்பிய சரத் பொன்சேக்காஇ அவர் நாட்டுக்காக போராடியவர் என்றால் நாம் என்ன செய்து கொண்டிருந்தோம் என பதில் கேள்வி எழுப்பியிருந்தார்.  நாட்டுக்காக தம்மை அர்ப்பணித்து பணியாற்றிய இராணுவ வீரர்களை பாதுகாக்க வேண்டும் என்று இப்போது கோஷமெழுப்பும் ராஜபக்ச குழுவினர் என்னை என்ன செய்தனர் என்பதை இந்த நாடே அறியும். மேலும் சுரேஷ் சாலே என்பவர் கோட்டபாயவின் அடிமை போன்று செயற்பட்டவர். அவர் மலசல கூடத்துக்கு செல்ல வேண்டும் என்றாலும் அவரிடம்  கேட்டே செல்வார் என சில விடயங்களைக் கூறியிருந்தார்.

 ஈஸ்டர் குண்டுத் தாக்குல் சம்பவத்தின் சூத்திரதாரியை அரசாங்கம் நெருங்கியுள்ளது என்றாலும் அவர்களிடம் சிக்கியிருப்பது எறியப்பட்ட அம்பு தான். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவுக்கு வெளிநாடு பயணத்தடை விதிக்கப்பட்டிருறப்பதால் இந்த விசாரணைகளின் அடிப்படையில் அவர் எந்நேரமும் கைது செய்யப்படுவதற்கான சாத்தியங்களும் இருக்கின்றன.

அடுத்தடுத்த நாட்களில் இச்சம்பவம் பற்றிய பல உண்மைகளை வெளிவரக்கூடும். அரசாங்கத்தின் முன்னாள் உயர் மட்ட அரசியல்வாதிகள்இ அதிகாரிகள் கைது செய்யப்படலாம். இலங்கை மக்கள் மாத்திரமின்றி சர்வதேசமும் எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கும் உண்மைகள் வெளிவரலாம். ஆனால் குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு கிடைக்கும் நீதியே இங்கு முக்கியமானது.   ஏழு வருடங்கள் இழுபறியாக்கிக்கொண்டிருந்த ஒரு தீவிரவாத சம்பவம் குறித்த உண்மைகள் பல அதிர்ச்சிகளையும் ஏற்படுத்தலாம். ராஜபக்ச தரப்பினருக்கு எதிராக மேலும் ஒரு அரகலய போன்றதொரு எழுச்சி ஆர்ப்பாட்டம் ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.


 


 


 


 


 


 


 


 


 

 


 


 


 

No comments: