Tuesday, May 3, 2011

ராஜபக்ச -பிரபாகரன் , ஒபாமா - பின்லேடன்














அல்கைதா தலைவர் ஒசாமா பின்லேடன் அமெரிக்க துருப்புக்களால் கொல்லப்பட்ட செய்தி சர்வதேச ஊடகங்களில் பரபரப்பாக ஒளிஒலிபரப்பாகி கொண்டிருந்த போது ஒரு தொழிற்சங்க முக்கியஸ்த்தர் திடீரென எனக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தினார். ஒசாமா கொல்லப்பட்ட விடயத்தை சர்வசாதாரணமாகவே இன்று உலக மக்கள் எடுத்துக்கொள்வர் என்று தெரிவித்த அவர் அமெரிக்காவிற்கு வேண்டுமானால் இது மகிழ்ச்சி தரும் விடயமாக இருக்கலாம் காரணம் ஒசாமாவால் அவர்கள் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள். மற்றையோருக்கு இது சாதாரண விடயம் தான் என்றார்.ஏன் என்று கேட்டேன் அதற்கு அவர் சொன்ன பதில் இது. ஒசாமா ஒரு சர்வதேச தீவிரவாதியாக அடையாளம் காணப்பட்டவன். ஆகவே அவனுக்குள் பல திறமைகள் இருக்க வேண்டும் முக்கியமாக அமெரிக்க துருப்புகளின் கண்களில் படாமல் உலகெங்கும் அவர் சுற்றி வந்திருக்கிறான்.அப்படி இருக்கும் போது பாகிஸ்தானில் ஒரு வீட்டில் இருக்கும் போது அவன் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறான் என்றால் சந்தேகமேயில்லை அவனை யாரோ காட்டிக்கொடுத்துள்ளனர். இது காட்டிக்கொடுக்கும் மக்கள் அதிகரித்துள்ள உலகம். ஆகையால் இதை சாதாரணமாகத்தானே எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது ? என்று திருப்பிக்கேட்டார்.
அது அவரது சொந்த கருத்து. இருப்பினும் மேற்குல நாடுகளுக்கு சிம்ம சொப்பனமாய் இருந்த ஒசாமா கொல்லப்பட்டு விட்டான். ஆனால் அவனது அமைப்பு பூரணமாக அழிக்கப்படவில்லை. அல்கைதா அமைப்பின் இரண்டாம் நிலை தலைவர் அய்மன் அல்சௌகாரி ஒசாமாவின் இடத்தை நிரப்ப காத்திருக்கிறார்.மேலும் தமது புனித யுத்தம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார். இது அமெரிக்க உட்பட பல மேற்குலக நாடுகளுக்கு அபாய எச்சரிக்கை தான். அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷை கசாப்பு கடைக்காரன் என்று சொன்னவர் தான் இந்த அல் சௌகாரி. தனது ஆட்சி காலத்தில் ஈராக் மீதான ஆக்கிரமிப்பால் உலகம் முழுக்க விமர்சிக்கப்பட்டவர் ஜோர்ஜ் டபிள்யூ புஷ். சதாம் உசேனை தூக்கிலிட்ட பிறகும் கூட ஈராக்கில் இரசாயன ஆயுதங்கள் இருப்பதை அவரால் கண்டு பிடிக்கமுடியவில்லை. மறுபுரம் இவரது ஆட்சி காலத்திலேயே அமெரிக்கா இரட்டை கோபுரத்தையும் அல்கைதாவின் தாக்குதலில் பறி கொடுத்தது. இரண்டு தடவைகள் பதவியிலிருந்தும் உருப்படியான எந்த வேலையும் செய்யாமல் போன புஷ்ஷின் இடத்திற்கு வந்த பராக் ஒபாமாவின் நுணுக்கமான வியூகத்திற்குக் கிடைத்த வெற்றியே ஒசாமாவின் மரணம்.
இனி ஒபாமா தான் சில காலங்களுக்கு ஹீரோவாக ஜோலிக்கப்போகிறார். சரி அதிருக்கட்டும் தலைப்பிற்கு இன்னமும் வரவில்லையே? இலங்கையிலும் சுமார் 20 ஆண்டு கால யுத்தத்தை தனது இரும்புப்பிடியினால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தவர் இன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச. விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் உட்பட பலரை அழித்து புலிகள் இயக்கம் ஒன்றே இன்று இலங்கைக்குள் இல்லை என்று கூறப்படுகிறது. புலிகள் இராணுவ ரீதியாக தோல்வியை தழுவியதும் ஜனாதிபதி ராஜபக்ச நாயகனாக வலம் வந்தார்.இரண்டாவது தடவை அவர் பெரும்பான்மையுடன் ஜனாதிபதி பதவியை கைப்பற்றவும் அவரது கட்சி பாராளுமன்றத்தில் அறுதிப்பெரும்பான்மை பெற்று அரசியல் அமைப்பை மாற்றுமளவிற்கு முன்னேறவும் அவருக்கு வலிமையை கொடுத்தது இந்த வெற்றி தான்.மறுபுரம் போர்க்குற்றச்சாட்டுகளுக்கு அரசாங்கம் உட்படாமலில்லை. ஐ.நாவின் போர்க்குற்றச்சாட்டு அறிக்கைக்கு பதில் கொடுக்கும் கடப்பாட்டில் இலங்கை உள்ளது.
இலங்கை இராணுவத்திற்கும் விடுதலை புலிகளுக்குமிடையிலான யுத்தத்தின் இறுதி கட்டத்தில் பல பொது மக்கள் கொல்லப்பட்டதாகத் தான் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஆனால் இது ஒபாமாக்களின் விடயத்தில் எல்லாம் எடுபடாது.காரணம் வியட்நாம்,ஈரான் மற்றும் ஆப்கான் மீதான ஆக்கிரமிப்பு காலத்தில் அமெரிக்கா மற்றும் அதன் நேசப்படைகள் செய்த அட்டூழியங்கள் பற்றி யார் தான் வாய் திறப்பார்கள்?
வாய் திறப்பவர்கள் இருக்கிறார்கள் ஆனால் யாராவது காட்டிக்கொடுக்க வேண்டுமே ? என்ன புரியவில்லையா? ஆரம்ப பந்தியை முதலிலிருந்து வாசிக்கவும்.

Monday, September 13, 2010

மலையக மக்களை நாம் மறக்க வில்லை…!



இலங்கையில் வடக்கு கிழக்கு தவிர்ந்த மத்திய மலை பிரதேசத்தில் செறிந்து வாழும் இந்திய வம்சாவளி மலையக மக்களை நாம் மறக்க வில்லை. மறக்கவும் முடியாது.தென்னிந்தியாவிலிருந்து அவர்கள் உழைக்கும் மக்களாக இங்கு வந்த காலம் முதல் இப்போதுள்ள சூழல் வரை எல்லாம் அறிந்து வைத்துள்ளோம். இப்படி ஒரு மக்கள் கூட்டம் இருப்பதை அறியாமலில்லை என்று கூறுகிறார் பாடகர் பத்மஸ்ரீ டாக்டர் சீர்காழி ஜி.சிவசிதம்பரம்.வீரகேசரி பத்திரிகையின் 80 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தலைநகர் கொழும்பு ,யாழ்ப்பாணம் ,மற்றும் மலையகத்தில் கொட்டகலை ஆகிய இடங்களில் இன்னிசை கச்சேரிகள் நடத்தி இசை ஆர்வலர்களை மட்டுமன்றி தனது அமைதியான அன்பான குணத்தின் மூலம் பலரினதும் மனதில் இடம்பிடித்து விட்டார் டாக்டர் சீர்காழி ஜி.சிவசிதம்பரம். சரீரத்தில் மட்டுமன்றி சாரீரத்திலும் தனது தந்தை சீர்காழி கோவிந்தராஜனை எமது கண் முன் கொண்டு வந்து ஆச்சரியப்படுத்திய அவரை சூரியகாந்தி பத்திரிகைக்காக அட்டனில் சந்தித்த போது அவர் தெரிவித்த கருத்துக்கள்.
மலையகம் என்ற சொற்பதம் எமக்கு புதியதல்ல அதன் தரைத்தோற்றம் மக்கள் ,அவர்களின் பண்புகள் எல்லாம் அறிந்து தான் வைத்துள்ளோம். எனது தந்தைக்கு எந்தளவிற்கு இங்கு இரசிகர்கள் உள்ளனரோ அதே போல் எனக்கும் எனது குழுவினருக்கும் இங்கு கிடைத்த வரவேற்பு நெகிழ்ச்சியைத் தருகிறது. 80 வருடம் தொடர்ச்சியாக ஒரு தமிழ் பத்திரிகை இலங்கையில் வந்து கொண்டிருப்பது ஆச்சரியம் அந்த பத்திரிகை நிறுவனத்தின் அழைப்பின் பேரில் என்னையும் எனது குழுவினரையும் அழைத்து இன்னிசை கச்சேரி நடத்தி எமக்கு மாபெரும் கௌரவத்தை அளித்து விட்டனர். என்று தான் கூற வேண்டும்.
மேலும் இவ்வாறான இசை நிகழ்வுகள் எமது உறவை மேலும் வலுப்படுத்துகின்றன. கலைகளுக்கு மொழியோ மதமோ ஒரு தடையாக இருப்பதில்லை. அதை பலமுறை பல சந்தர்ப்பங்களில் நாம் அவதானித்துள்ளோம் அனுபவித்துள்ளோம். இவ்வாறான நிகழ்வுகள் எம்மை மட்டுமல்லாது அனைத்து மொழி பேசும் மக்களுக்கும் உள அமைதியையும் ஆர்வத்தையும் ஏற்படுத்துகின்றன. இன்னிசை கச்சேரிக்காக இலங்கை மண்ணில் கால் பதித்த நாள் முதல் எமக்குக்கிடைத்த வரவேற்பும் அன்பும் மறக்க முடியாதவை. எனது தந்தையின் குரல் எனக்கு இருப்பதாக பலரும் கூறி ஆச்சரியப்படுகின்றனர்.இது எனக்குக்கிடைத்த வரம் என்றே கூற வேண்டும். குரலை வளப்படுத்த நான் விசேடமாக எதுவும் செய்வது கிடையாது. அதை அப்படியே விட்டு விட வேண்டும் என்று தான் கூறுவேன்.குரலை கடினப்படுத்தி பாடல்கள் என்ற பெயரில் சத்தமிடுவதை தவிர்த்தாலே போதும்.
மலையகத்தில் கொட்டகலை நகரில் நான்கு மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக இன்னிசை கச்சேரி நடந்தது.அனைவரும் அமைதியாக அமர்ந்து மெய்மறந்து இரசித்து பார்த்தது மட்டுமன்றி தமக்கு விருப்பமான பாடல்களை எழுதி தந்தனர். அவர்களின் வேண்டுதலை நிறைவேற்றினோம். எம்மேல் அவர்கள் வைத்திருந்த அன்பின் வெளிப்பாட்டை மனமகிழந்து ஏற்றோம் என்றார்.
உங்களது தந்தை பக்தி பாடல்களால் புகழ் பெற்றவர் நீங்கள் விரும்பி வணங்கும் தெய்வம் யார் என்று கேட்டதற்கு சட்டென தாய் தான் என்று பதில் வந்தது. அதற்கு காரணமும் கூறினார். தந்தை தாயை விட வேறு தெய்வங்கள் இருப்பதாக எனக்குத்தெரியவில்லை. அதிலும் சிறுவயதில் சோறுட்டி ,பாலூட்டி ,தாலாட்டி ,சீராட்டி வளர்ப்பதில் தாயின் பங்கை எவரும் நிரப்பி விட முடியாது. பிள்ளையின் முதல் சொந்தம் தாய் தானே? நான் இன்றும் எனது தாயுடன் தான் வசித்து வருகிறேன் என்கிறார் சீர்காழி .ஜி.சிவசிதம்பரம். வித்தியாசமான அதே நேரம் மலையக மக்களையும் ஞாபகத்தில் வைத்திருக்கும் ஒரு இன்முகக் கலைஞரை சந்தித்ததில் மனம் நிரம்பியிருந்தது.
சிவலிங்கம் சிவகுமாரன்

Monday, July 19, 2010

இந்திய வம்சாவளியினரா மலையகத்தமிழர்களா நாங்கள்?

இத்தனை காலமும் இல்லாத சந்தேகம் இப்போது ஏன் திடீரென ஏற்பட வேண்டும் என்று பலர் நினைக்கக்கூடும் ஆனால் தமிழர்கள் என்ற பொதுவான அடையாளப்படுத்துதலின் கீழ் மலையக மக்கள் என்று கூறப்படுவோர் இன்று இல்லை அல்லது அவர்கள் வேறு விதமாக புரிந்து கொள்ளப்படுகின்றார்கள் என்ற சர்ச்சைகளுக்கு மத்தியிலேயே இப்படி ஒரு கேள்வியை கேட்கத்தோன்றியது. அண்மையில் கோவையில் இடம்பெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் கூட மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் கலந்து கொண்ட குழுவினருக்கும் இதே அனுபவம் தான் ஏற்பட்டிருக்கிறது. நாங்கள் மலையகத்தமிழர்கள் என்று ரீதியில் ஒரு சமுக அந்தஸ்த்தோடு கூற விழைந்த போது மலையகமாக அது எங்குள்ளது நீங்கள் மலைச்சாதியினரா என்ற வகையில் வினா எழுப்பப்பட்டுள்ளது. மேற்படி குழுவுக்கு தலைமை தாங்கிய கவிஞர் சு.முரளிரதன் இச்சம்பவத்தை ஒரு நிகழ்வில் வேதனையோடு கூறியதை எவர் அலட்சியப்படுத்தினாலும் எம்மால் இருக்க முடியாது என்ற நிலையிலேயே விவாதத்திற்குரிய இவ்விடயம் பற்றி எல்லோரும் கலந்தாலோசித்து ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்று நினைக்கிறோம், காரணம் இன்னும் ஆயிரம் வருடங்களுக்குப்பிறகு நாம் குறிப்பிடும் மலையக சமுகம் அந்தப்பெயருடனேயா அல்லது வேறு பெயருடனேயா இருக்கப்போகின்றது, இயங்கப்போகின்றது என்பதை தீர்மானிக்கும் சக்திகளாக ஏன் இப்போதுள்ளவர்கள் விளங்கக்கூடாது என்ற கேள்வியும் எழாமலில்லை.
இச்சந்தர்ப்பத்தில் மேற்கூறிய விடயம் பற்றி அலசி ஆராய்வதற்குப் பல காரணங்கள் முன்னிற்கின்றன.

1)தென்னிந்தியாவிலிருந்து உழைக்கும் வர்க்கமாக இலங்கை வந்த ஒரு மக்கள் கூட்டம் இன்னமும் இங்கு வாழ்ந்து கொண்டிருப்பது பற்றி இந்தியாவில் உள்ள பெரும்பாலனவர்களுக்கு ஏன் தமிழ் நாட்டினருக்கே தெரியாமலிருப்பது.


2) இலங்கை தமிழர்கள் அல்லது இலங்கை தமிழ், இலக்கியம்,கலாசாரம்,பாரம்பரியம் என்றால் அது ஒன்று தான் இருக்கின்றது இருக்க வேண்டும் என்ற ரீதியில் இன்று உலகம் முழுக்க பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றமை.


3)இப்படி ஒரு தமிழ் பேசும் சமுகம் இருக்கும் பட்சத்தில் அவர்களின் எங்கிருந்து வந்தார்கள் அவர்களின் அடையாளப்படுத்தல் என்ன ஏன் அப்படி இருக்க வேண்டும் என்ற அக்கறை எவருக்கும் இல்லாது போனமை.


4) இந்நிலையில் மலையகம் என்ற பதம் பலருக்கு விளங்காத ஒரு சொல்லாகவும் கேலிக்குரிய விடயமாகவும் ஆக்கப்பட்டிருக்கின்றமை.


அண்மையில் புதிதாக வெளிவந்திருக்கும் ஒரு தமிழ் வாரமலரின் ஆசிரியத்தலையங்கத்திலேயே மலையக மக்கள் மலைபிரதேச மக்கள் என்று விளிக்கப்பட்டுள்ளனர்.குறிப்பிட்ட பிரதேசத்தில் வாழும் ஒரு மக்கள் கூட்டத்தினரை அப்பிரதேச புவியியல் அம்சங்களை வைத்து பெயர் சூட்டி அழைக்கும் பண்பு என்பது வேறு அதை இதோடு ஒப்பிடுவது ஏற்றுக்கொள்ள முடியாத விடயம். சங்க காலத்தில் மலையும் மலை சார்ந்த மக்களை குறிஞ்சி நில மக்கள் என்று அழைத்ததுண்டு. இப்போது அப்படியல்லவே? ஆபிரிக்காவின் சகாரா பகுதி வாழ் மக்களை பாலைவனக்கூட்டம் என்றா அழைக்கிறோம் அல்லது இமயமலை நேபாளம் பகுதி வாழ் மக்களை பனி மலை பகுதி வாழ் மக்கள் என்றா அழைக்கிறோம்? தமிழ் நாட்டைப்பொறுத்த வரை மலைசாதியினர் அல்லது மலைப்பகுதி மக்கள் என்று குறிப்பிடப்படுவோர் பூர்வீகக்குடிகள் அல்லது ஆதிவாசிகள் என்றே பொருள்படும். இந்தியாவில் 416 வகையான ஆதிவாசிகள் உள்ளனர். சரி விடயத்திற்கு வருவோம். மலையக மக்கள் என்ற பதம் எவ்வாறு உருவானது?
1844 ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து இலங்கை கோப்பி தோட்டங்களில் பணி செய்வதற்காக லுதினன் கேர்னல் ஹென்றி சி.போர்ட் என்பவர் 14 பேரை அழைத்து வந்ததோடு வரலாறு ஆரம்பிக்கின்றது. ( ஆனால் 1818 ஆம் ஆண்டே இந்தியாவிலிருந்து இலங்கையின் மத்திய மலைப்பிரதேசத்திற்கு மக்கள் வந்ததாக ஒரு குறிப்பு கூறுகிறது)
இவர்கள் இலங்கையின் மத்திய மலைப்பிரதேசங்களுக்கே முதன் முதலில் வந்தனர் என்று வரலாறு கூறுகிறது.மலைகள் சூழந்த பிரதேசமாகையால் இப்பகுதி வாழ் மக்கள் மலைய மக்கள் என்று அழைக்கப்பட்டனர் என குறிப்பிடப்பட்டாலும் 1950 களுக்குப்பிறகே மலையகம் என்ற பதம் தோற்றம் பெற்றது. புவியியல் ரீதியில் சப்ரகமுவ குன்றுகளை தவிர்த்து கடல் மட்டத்திலிருந்து 300 மீற்றருக்கு மேல் அமைந்துள்ள பகுதிகள் மலையகம் என வரையறுக்கப்படுகிறது. ஆனால் சமுகம் சார்ந்து பார்க்கும் போது மாத்தளை,கண்டி,பதுளை,இரத்தினபுரி,கேகாலை, ஏன் தென் பகுதியின் காலி மாவட்டத்திலும் தென்னிந்தியாவிலிருந்து வந்த மக்கள் வாழ்கின்றார்கள். அப்படியானால் அவர்களை மலையகத்தவர்கள் என்று அழைப்பது சரியாகுமா?
மலையகம் ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற குரல்கள் எழுந்து வருகின்றன ஆனால் எமது அடையாளம் என்பது இந்திய வம்சாவளி தமிழர்கள் தான் அதை எப்படி மாற்ற முடியும் என்ற பதில் குரல்களும் எழாமலில்லை.இந்தியாவின் அடைமொழியோடு நாம் வாழ விரும்பவில்லை இப்படி ஒரு மக்கள் கூட்டம் இருப்பதை அவர்கள் அறியாமலிருக்கும் போது ஏன் அந்தப்பெயரை நாம் சூட்டிக்கொள்ள வேண்டும் என்ற இளந்தலைமுறையினரின் கோபத்திலும் நியாயம் இல்லாமலில்லை. இது குறித்து ஒரு சந்தர்ப்பத்தில் சிரேஷ்ட தொழிற்சங்கவாதியான ஓ.ஏ.இராமையாவுடன் கலந்துரையாடிக்கொண்டிருக்கும் போது அவர் சில விளக்கங்களை கூறினார்.
‘ஒவ்வொரு சமுகத்திற்கும் ஒரு வரலாறு உண்டு ,வரலாற்றை திரிபுபடுத்த எவராலும் முடியாது.தென்னிந்தியாவிலிருந்து பணி செய்வதற்காக வந்த மக்கள் இலங்கைக்கு மட்டுமா வந்தார்கள்? மலேஷியா ,மொரிஷியஸ் நாடுகளுக்கும் சென்றார்கள்.அவர்கள் தாம் வாழ்ந்த பிரதேசத்திற்கு ஏற்ப சமுகப்பெயர்களை சூட்டிக்கொள்ள வில்லை.இன்றும் மலேஷியாவில் இந்திய வம்சாவளி தமிழர்கள் என்ற பதத்தை தான் பாவிக்கின்றனர். ஆகவே எமது வேர் இந்தியா தான் என்பதில் சந்தேகமில்லை. தொழில் ரீதியாக பார்க்கும் போது பெருந்தோட்டத்தொழிலாளர்கள் என்று கூறுவதில் தப்பில்லை. ஆனால் மலையகத்தவர் என்ற பதத்தை எப்படி ஏற்றுக்கொள்வது? இன்னும் ஆயிரம் வருடங்கள் சென்றாலும் எம்மை இந்திய வம்சாவளி தமிழர்கள் தான் என்றே வரலாறு கூறும் காரணம் அது தான் உண்மை. ஏன் எமது பிறப்பத்தாட்சி சான்றிதழ்களில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளது? மலையகத்தமிழர் என்றா உள்ளது? அப்படி மலையக சமுகம் என்று நாம் கூறிக்கொண்டாலும் அதை அரசாங்கத்திடம் கூறி சான்றிதழலில் மாற்றிக்கொள்ளத்தான் முடியுமா? இந்திய வம்சாவளி மக்களை ஓரங்கட்டுவதற்கும் அவர்களை கேலிப்பொருளாக சித்திரிப்பதற்கும் பலர் இன்று முனைப்பாக உள்ளனர்.ஒரு பேராசிரியர் சி.வி.வேலுப்பிள்ளையை தோட்டக்கவிஞர் என்று வர்ணிக்கிறார் இதையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியுமா? எமக்கென்று ஒரு வரலாறு உள்ள போது இடையில் ஏற்படுத்திக்கொண்ட ஒரு பெயரை வைத்துக்கொண்டு வாழ்தல் சரியா என்பதை சிந்திக்க வேண்டும்” என்றார்
எங்கள் சமுகத்தை நாம் எப்பெயர் கொண்டு அழைக்க வேண்டும் என்பது வாத பிரதிவாதங்களுக்கு உட்டபட்ட விடயம் எனினும் காலத்தின் தேவை அறிந்து இது குறித்து நாம் உடனடியாக செயற்பட வேண்டிய விடயமாகி விட்டது. கல்விமான்கள் ,புத்தி ஜீவிகள் , அரசியல் தொழிற்சங்க பிரதிநிதிகள் இது குறித்து ஆக்கபூர்வமான கருத்துகளை முன் வைக்க வேண்டும் என்பது எமது தாழ்மையான வேண்டுகோள்.


சிவலிங்கம் சிவகுமாரன்

Monday, March 8, 2010

இலங்கை அரசியலும் பெண்களின் பங்களிப்பும்.




* இலங்கையின் சனத்தொகையில் 52 வீதமானோர் பெண்களாவர்.


* 1931 ஆம் ஆண்டே வாக்களிக்கும் உரிமையை இலங்கை வாழ் பெண்கள் பெற்றனர் எனினும் இது வரையில் அவர்களின் அரசியல் பங்களிப்பு மோசமாகவே உள்ளது.


இலங்கை பாராளுமன்றத்தில் பெண்கள்
ஆண்கள் 212
பெண்கள் 13
மொத்தம் 225



*1931 ஆம் ஆண்டு பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்கியதன் மூலம் ஆசியா,ஆபிரிக்கா மற்றும் இலத்தீன் அமெரிக்காவைச்சேர்ந்த நாடுகள் வரிசையில் இலங்கை இவ்விடயத்தில் முதல் நாடு என்ற பெருமையைப்பெற்றது.


*1960 ஆம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்க உலகின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையோடு பதவியேற்றார்.


*1994 ஆம் ஆண்டு இலங்கையின் முதல் பெண் ஜனாதிபதி என்ற பெருமையை சந்திரிகா குமாரதுங்க பெற்றார்.


பல்வேறு காலகட்டங்களில் பல தேர்தல்களை சந்தித்த நாடு என்ற வகையில் இலங்கையைப்பொறுத்தவரை சுதந்திரத்திற்கு பிற்பட்ட காலத்திலிருந்து இன்று வரை அரசியலில் பெண்களின் பங்களிப்பு என்பது எட்டாக்கனியாகவே உள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பதாக கொழும்பு லிப்டன் சதுக்கத்தில் இடம்பெற்ற ஒரு பெண்கள் ஒன்றுகூடல் நிகழ்வில் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் வருகை தந்திருந்த ஆயிரக்கணக்கான பெண்கள் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை வலியுறுத்தியதோடு அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும்படியும் கோரிக்கைகளை முன்வைத்தனர். பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் இருவருக்கும் இப்பெண்கள் எழுத்து மூலமான தமது கோரிக்கைகளை சமர்ப்பித்திருந்தனர் என்பதும் முக்கிய அம்சம்.எனினும் எதிர்காலத்தில் இது எந்த விதத்தில் சாத்தியப்படப்போகிறது என்பது கேள்விக்குறியே. இலங்கை நாட்டைப்பொறுத்தவரை அரசியலில் பெண்களின் பங்கு என்று பார்க்கும் போது உலகின் முதல் பெண் பிரதமர் மற்றும் இலங்கையின் முதல் பெண் ஜனாதிபதி என்ற வரையறையோடு அது நின்று விட்டதை காணக்கூடியதாக உள்ளது.
1931 ஆம் ஆண்டு இலங்கையில் பெண்கள் வாக்களிக்கும் உரிமையைப்பெற்றனர். இதன் மூலம் ஆசியா,ஆபிரிக்கா மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகள் வரிசையில் பெண்களுக்கு இவ்வரிமையை அளித்த முதல் நாடு என்ற பெருமையை இலங்கை பெற்றது. 1960 ஆம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்க முதல் பெண் பிரதமர் என்ற பெருமையைப்பெற்றார். 1994 ஆம் ஆண்டு சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க முதல் பெண் ஜனாதிபதி என்ற பெருமையையும் பெற்றார். வெவ்வேறு காலகட்டத்தில் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தல்களில் ஒரு சில தேர்தல் தொகுதிகளைப்பிரதிநிதித்துவப்படுத்தி பெண்கள் சிலர் பாராளுமன்ற பிரவேசம் செய்தாலும் இலங்கை அரசியலில் முத்திரைப்பதித்த பெண் அரசியல்வாதிகள் என்ற வரையறைக்குள் எவரையும் அடக்க முடியாத நிலைமையே உள்ளது.இதற்கு என்ன காரணம் என்பது முக்கிய விடயம்.
இலங்கையை விட பெண்கள் விடயத்தில் இறுக்கமான கலாசார பின்புலத்தைக்கொண்ட ஏனைய நாடுகளில் அரசியலில் பெண்களின் பங்களிப்பு என்பது அதிகமாக உள்ளதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. உதாரணமாக பங்களாதேஷ் பாராளுமன்றத்தில் உள்ள மொத்த உறுப்பினர்களில் 18.6 வீதமானோர் பெண்களாவர். தென்கிழக்காசிய நாடுகளை வரிசைப்படுத்தினால் இலங்கை பாராளுமன்றமே மிகக்குறைவான வீதத்தில் பெண்களைக்கொண்டிருக்கின்றது 225 உறுப்பினர்களில் 13 பேர் மட்டுமே பெண்கள்.
முதலில் உள்ளூராட்சி தேர்தல்களில் பெண்களின் பங்களிப்பை ஈடு செய்யும் வழிவகைகளை ஏற்படுத்த வேண்டும். ஆனாலும் இலங்கையைப்பொறுத்தவரை உள்ளூராட்சி அமைப்புகளில் (பிரதேச,நகர ,மாநகர சபைகள்) பெண்களின் உறுப்புரிமை 1.8 வீதமாகவே உள்ளது. மாகாணசபைகளில் 4.1 ஆகவும் பாராளுமன்றத்தில் 5.8 ஆக உள்ளது.
இதன் காரணமாகவே காலாகாலமாக பெண்களின் அரசியல் பிரவேசம் குறித்து குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதுவும் இங்கு ஏற்படவில்லை. வேட்பாளர் பட்டியலில் 30 வீதம் பெண்கள் இருக்க வேண்டும் என்பது ஒரு சில பெண்கள் சார் அமைப்புகளின் கோரிக்கை. இருப்பினும் இந்த முறையில் தேர்தல்களில் பெண் வேட்பாளர்களை களமிறக்கும் பட்சத்தில் குறிப்பிட்ட அரசியல் கட்சிகளோ தொழிற்சங்கங்களோ தமக்குரிய பெரும்பான்மை இல்லாது போய்விடும் என்ற மறைமுக அச்சத்தை கொண்டிருக்கின்றன. இதன் காரணமாகவே தொழிற்சங்கமோ அரசியல் கட்சியோ பெண்கள் தலைமைத்துவத்தைப்பொறுத்தவரை வெறும் மாவட்ட தலைவி,மகளிர் அணித்தலைவி என்ற வரையறைக்குள் மட்டும் அவர்களை வைத்துக்கொள்வதில் திருப்தி காண்கின்றன. இது மலையக அரசியலில் மட்டும் காணப்படும் ஒரு சாபக்கேடாகும். பெரும்பான்மை இனத்தைப்பொறுத்தவரை பெண்கள் தலைமைத்துவம் என்ற விடயத்தை அவர்கள் கையாளும் முறை பற்றி தமிழ் பெண்கள் அறிந்து கொள்ள வேண்டியது அதிகம் உள்ளது. இன்று கிராமப்புறங்களில் கூட பல அரசியல் கட்சிகளுக்கு உந்துசக்தியாக பெண்கள் இருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது.
அரசியலில் பெண்கள் அங்கத்துவத்தை அதிகரிக்க தொகுதி வாரியாக பெண்களின் இருப்பை உறுதி செய்யும் முறையிலான அம்சங்களை அறிமுகப்படுத்தினோலே போதுமானது.உதாரணமாக இந்தியாவில் மாநிலங்களில் இடம்பெறும் உள்ளூராட்சி தேர்தல்களைக்கூறலாம். இங்குள்ள தொகுதிகளில் மூன்றில் ஒரு பகுதி தொகுதிகள் பெண்களுக்காக பதிவு செய்யப்பட்டிருக்கும்.கட்டாயமாக பெண்களே இத்தொகுதியில் போட்டியிட வேண்டும். இந்த முறை காரணமாக கிராமப்புறங்களிலிருந்து இலட்சக்கணக்கான பெண்கள் உள்ளூராட்சி மன்றங்களுக்குத்தெரிவு செய்யப்படுவதோடு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஆரம்பகட்ட வாய்ப்பினை உறுதி செய்கின்றனர். இதனூடாக தமது அரசியல் பயணத்தை ஆரம்பிக்கின்றனர்.
இலங்கையின் மொத்த சனத்தொகையில் 52 வீதமானோர் பெண்கள்,அதே வேளை வாக்களிக்கும் உரிமையைப்பெற்றிருப்பவர்களிலும் 56 வீதமானோர் பெண்களே. இதை வைத்துப்பார்க்கும் போது எமது நாடு அரசியலில் எந்தளவிற்கு பெண்களை உள்ளீர்த்திருக்க வேண்டும் என்பதை சொல்லிப்புரியவைக்க வேண்டியதில்லை.
மேலும் தற்போதுள்ள அரசியல் செயற்பாடுகளை கருத்திற்கொண்டு பல படித்த பெண்கள் அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கிப்போகின்றனர் எனலாம். வன்முறை அரசியல் தலைதூக்கியுள்ள இச்சந்தர்ப்பத்தில் பெண்கள் எங்ஙனம் அரசியலில் ஈடுபட அக்கறை காட்டுவர்?
எனினும் பாராளுமன்ற அரசியல் வரை உடனடியாக செல்ல வேண்டிய அவசியம் இல்லை.முதலில் உள்ளூராட்சி மன்றங்களில் பெண்கள் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் வழிவகைகள் துரிதப்படுத்தப்படவேண்டும் என்பதே பலரினதும் அவா.இது குறித்த அழுத்தங்களை மேற்கொள்ள பெண்கள் தான் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் முன்வருவீர்களா சகோதரிகளே?

Friday, September 25, 2009

சர்வதேச முதியோர் தினம்



அரசாங்க உத்தியோகத்தர்கள் போல் பெருந்தோட்டப்பகுதி மூத்த பிரஜைகளுக்கு மாதாந்த ஓய்வூதியம் இல்லை. ஓய்வூதிய பணத்தை கூட முறையõக பெற்றுக்கொள்ளக்கூடிய வழிவகைகள் இங்கு இல்லை,அப்படி இருந்தாலும் தரகர்களுக்கு தாரை வார்த்தது போக மிகுதியை பிள்ளைகள் பிடிங்கிக்கொள்வார்கள்.




ஓக்டோபர் முதலாம் திகதி சர்வதேச முதியோர் தினமாகும். மூத்த பிரஜைகள் என்று அழைக்கப்படும் முதியோர்கள் ஒவ்வொரு சமூகத்திலும் கௌரமிக்க பார்வையில் நோக்கப்படவேண்டியவர்கள் என்ற அர்த்த புஷ்டியுடன் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை மூலம் 1990 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் திகதி கொண்ட வரப்பட்ட தீர்மானத்திற்கமைய (பிரிவு 45/106)ஒக்டோபர் 1 ஆம் திகதி சர்வதேச முதியோர் தினம் அனுஷ்டிக்கப்பட முடிவு செய்யப்பட்டது. இதன் படி முதன் முதலாக 1991 ஆம் ஆண்டு சர்வதேச முதியோர் தினம் உலகெங்கினும் கொண்டாடப்பட்டது. உலகெங்கும் வாழும் முதியோர்களின் நலன் மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதும் அவர்களுக்கென ஒரு சமூக கட்டமைப்பை உருவாக்குவதுமே இந்த நாளின் நோக்கம். ஐக்கிய அமெரிக்காமற்றும் கனடா ஆகிய நாடுகளில் இத்தினம் தேசிய விடுமுறை நாளாகவும் ஜப்பானில் மூத்ததோருக்கு கௌரவம் செலுத்தும் நாளாகவும் இது கொண்டாடப்படுகிறது. தற்போது உலகெங்கும் வாழ்ந்து வரும் முதியோர்களின் எண்ணிக்கை (2009 ஆம் ஆண்டில் நடுக்கூற்றில்) 516 மில்லியன்களாகும்,இதுவே 2050 ஆம் ஆண்டு 1.53 பில்லியன்களாக அதிகரிக்கும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.இது 65 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையோரின் எண்ணிக்கையாகும்.


இலங்கையும் முதியோர்களும்


இலங்கையைப்பொறுத்தவரை உலக அளவில் அதிக முதியோர்களைக்கொண்ட நாடு என்ற பெருமை உள்ளது. 2006 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் இலங்கையில் அண்ணளவாக 22 இலட்சம் மூத்த பிரஜைகள் உள்ளதாக தெரியவந்துள்ளது. இதுவே 2031 ஆம் ஆண்டில் 50 இலட்சமாக இருக்கும் என்று தெரிவிக்கிறது அந்த கணக்கெடுப்பு. 2011 ஆம் ஆண்டளவில் இலங்கையி“ல 60 வயதுக்கு மேற்பட்டோரின் தொகை 27 இலட்சமாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. இது அப்போதைய மொத்த சனத்தொகையில் 13 வீதமாக இருக்கும். இலங்கையைப்பொறுத்தவரையில் முதியோர்கள் தமது பிள்ளைகளில் தங்கியிருக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்றால் மிகையாகாது. ஒரு சிலர் தமது பிள்ளைகளாலேயே முதியோர் இல்லங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.ஏனையோர் பிள்ளைகளால் கைவிடப்பட்ட நிலையில் உள்ளனர். புள்ளி விபரங்களைப்பார்க்கும் போது இலங்கையில் 48.3 சதவீதமான முதியோர்கள் தமது பிள்ளைகளின் பராமரிப்பில் வாழ்ந்து வருகின்றனர். ஓய்வூதியம் மூலம் 13.5 வீதத்தினரும் விவசாயம் மற்றும் ஏனைய தொழில்கள் மூலம் 10.3 வீதத்தினரும் தமது சொத்துகளின் வருமானம் மூலம் 7.7 வீதத்தினரும் வாழ்க்கையை நடத்துகின்றனர். இலங்கையில் உள்ள முதியோர்களில் 6070 வயதுக்கிடைப்பட்டோர் 54.4 வீதமாக உள்ளனர்.7080 வயதுக்கிடைப்பட்டோர் 32.3 வீதமும் 8090 வயதுக்கிடைப்பட்டோர் 10 வீதமும் 90 வயதுக்கு மேற்பட்டோர் 1.3 வீதமுமாக உள்ளனர். இதே வேளை இலங்கையில் அதிகரித்து வரும் முதியோர்கள் தொடர்பில் அவர்களுக்குரிய பல செயற்றிட்டங்கள் முன்வைக்கப்படல் அவசியம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. காரணம் அதிகரித்து வரும் முதியோர்களை வைத்து பராமரிக்கும் அளவிற்கு இங்கு முதியோர் இல்லங்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதும் அவ்வில்லங்களுக்குரிய போதிய வருமானங்கள் நன்கொடைகள் கிடைப்பதில்லை என்ற காரணங்களாகும்.


பெருந்தோட்டப்பகுதி முதியோர்கள்


இலங்கையில் உள்ள முதியோர்களில் 70 வீதமானோர் வறுமை கோட்டிற்கு கிழே வாழ்ந்து வருவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன,எனினும் இலங்கையில் மிக அதிகமான (34 வீதம்) வறுமை வீதத்தை கொண்டிருக்கக்கூடிய பெருந்தோட்டப்பகுதி முதயோர்களின் நிலை எப்படி இருக்கும் என்பதற்கு வியாக்கியானங்கள் தேவையில்லை. அரசாங்க உத்தியோகத்தர்கள் போல் இவர்களுக்கு மாதாந்த ஓய்வூதியம் இல்லை.தமது ஓய்வூதிய பணத்தை கூட முறையõக பெற்றுக்கொள்ளக்கூடிய வழிவகைகள் இங்கு இல்லை,அப்படி இருந்தாலும் தரகர்களுக்கு தாரை வார்த்தது போக மிகுதியை பிள்ளைகள் பிடிங்கிக்கொள்வார்கள். ஒரு கட்டத்தில் அனைவராலும் புறக்கணிக்கப்பட்டு இவர்கள் யாசகம் எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுவதே உண்மை.எனவே பெருந்தோட்டப்பகுதி முதியோர்கள் தொடர்பில் பலரும் அக்கறை கொள்ளல் அவசியம்.

Wednesday, September 16, 2009

சி.வியை மறந்த மலையகம்








வீடற்றவன் என்ற நாவலை தீர்க்கதரிசனமாகத்தான் அவர் எழுதினாரே தெரியவில்லை





அவரது அலுவலக அறை இன்று ஒரு குடும்பத்தின் சமையலறையõக காட்சியளிக்கின்றது.





எந்த தொழிலாளர் வர்க்கத்திற்காக இவர் கவி படைத்தாரோ அதே தேயிலைச்செடிகளுக்கு மத்தியில் கைவிடப்பட்ட நிலையில் புற்கள் மண்டி தோற்றமளிக்கிறது சி.வியின் கல்லறை







மலையகத்தின் விடிவுக்காய் குரல் கொடுத்தவர்கள் பலர் இன்று மறக்கப்பட்டு வருவது ஒன்றும் புதிய விடயமல்ல. எனினும் பெருந்தோட்டப்பகுதி வாழ் தொழிலாளர்களின் இன்னல்கள் சோகங்களை இலங்கையைத்தாண்டி வெளிஉலகுக்கு தனது அற்புதமான படைப்புக்கள் மூலம் கொண்டு வந்தவர் மூத்த இலக்கியவாதி மக்கள் கவிமணி சி.வி.வேலுப்பிள்ளை ஆவார். செப்டெம்பர் 14 ஆம் திகதி அவரின் 95 ஆவது பிறந்த நாள் நினைவு தினமாகும். படைப்பிலக்கியம்,அரசியல், தொழிற்சங்கம் என பன்முக ஆளுமை நிறைந்த ஒரு அற்புதமான மனிதர் வாழ்ந்து மறைந்த சுவடே தெரியாமல் அமைதியாக இருக்கிறது அவர் பிறந்து வாழ்ந்த வட்டகொடை மடக்கும்பரை தோட்டம். மலையகமும் அதே நிலையில் தான் இருக்கின்றது என்பதை சொல்லித்தெரியவேண்டியதில்லை. வீடற்றவன் என்ற நாவலை தீர்க்கதரிசனமாகத்தான் அவர் எழுதினாரே தெரியவில்லை இறுதியில் அவர் வாழ்ந்து மறைந்த வீட்டிலிருந்தே அவரின் குடும்பத்தினரை வெளியேற்றியது தோட்ட நிர்வாகம்.இன்று அவர் வாழ்ந்து மறைந்த வீட்டின் நிலைமையை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.
எந்த சமூகத்திற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்து வாழ்ந்து மறைந்தாரோ அவர்கள் மத்தியில் அவர் பேசப்படாது இருப்பதை ஜீரணிக்கமுடியவில்லை. அவர் மண்ணில் பிறந்தவன் என்ற அடையாளப்படுத்தல்களுக்கும் அப்பாற்பட்டு ஒரு உயர்ந்த இலட்சிய நோக்கத்தில் தனது வாழ்வை அர்ப்பணித்து வாழ்ந்து மறைந்த அந்த உன்னத மனிதரின் இல்லம் நோக்கிச்சென்றேன். அவர் வாழ்ந்த காலகட்டத்தில் பங்களாவாக காட்சியளித்த அந்த குடியிருப்பு இன்று பல தனித்தனி குடும்பங்களின் வாழ்விடமாக விளங்கியது. இங்கு குடியிருந்த மனிதரைப்பற்றி உங்களுக்குத்தெரியுமா என்றால் உதட்டை பிதுக்குகின்றனர். வீட்டினுள்ளே நுழைந்தால் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. சி.வி வாழ்ந்த வீடா இது ? அவரது அலுவலக அறை இன்று ஒரு குடும்பத்தின் சமையலறையõக காட்சியளிக்கின்றது. பெருந்தோட்டப்பகுதிகளில் விறகு மற்றும் பழைய பொருட்கள் வைக்கும் இடமான அட்டாலில் விறகுகள் நிறைந்து கிடக்கின்றன.
அதைத்தாண்டி அவரின் உறங்கும் அறைக்குச்சென்று பார்த்தால் சுவரில் வெடிப்புகள் விழுந்து இருட்டறையாக காட்சியளிக்கின்றது. மலையக சமூகத்திற்கு வெளிச்சம் கிடைக்க போராடிய பேனா போராளியின் சிந்தனைகள் இந்த அறையில் தான் தோற்றம் பெற்றதோ? சரி அவர் பாவித்த பொருட்கள் தளபாடங்கள் எல்லாம் எங்கே என்று விசாரித்தால் அவரின் குடும்பத்தை இவ்வீட்டிலிருந்து வெளியேற்றும் நடவடிக்கையின் போது அவை தூக்கி எறியப்பட்டன என்றும் அச்சந்தர்ப்பத்தில் ஒவ்வொருவரும் அதை தமது வீட்டிற்கு எடுத்துச்சென்றனர் என்றும் கூறினர். ஒரு சிலரோ அவரது ஆவணங்களை உறவினர்கள் தலைநகருக்கு எடுத்துச்சென்றனர் என்று கூறினர். மற்றுமொருவர் இன்னுமொரு தகவலை சொன்னார். சி.வி பாவித்த மேசையும் அலுமாரியும் அருகில் ஒரு வீட்டில் இருப்பதாகக்கூறினார். ஓடோடிச்சென்றேன் அவ்வீட்டிற்கு , ஒரு அறையில் சி.வி பாவித்த மேசையும் அலுமாரியும் காணக்கிடைத்தன.மேசையை வாஞ்சையுடன் வருடிப்பார்க்கும் போது புல்லரித்தது. தனது படைப்புப்பொக்கிஷங்களை சிருஷ்டிப்படுத்த உதவிய மேசை அல்லவா இது ? அருகில் உடைந்து விழும் நிலையில் அவரது அலுமாரி. பெரும் துயரத்துடன் அங்கிருந்து வெளியேறினேன். அடுத்ததாக நான் சென்ற இடம் மக்கள் கவிஞன் மண்ணுள் உறைகின்ற இடமாகும்.



புழுதிப் படுக்கையில் புதைந்த


என் மக்களைப்போற்றும்


இரங்கற் புகழ் மொழி இல்லை
ஊணையும் உடலையும் ஊட்டி


இம் மண்ணை உயிர்த்த வர்க்கு


இங்கே உளங்கசிந்த அன்பும்
பூணுவாரில்லைஅவர்புதைமேட்டிலோர் கானகப்பூவைப்பறித்துப்போடுவாரில்லை



என்ற வரிகள் தான் ஞாபகத்திற்கு வந்தன. தேயிலைச்செடிகள் மத்தியில் தனது வாழ்க்கையை தொலைத்த எந்த தொழிலாளர் வர்க்கத்திற்காக இவர் கவி படைத்தாரோ அதே தேயிலைச்செடிகளுக்கு மத்தியில் கைவிடப்பட்ட நிலையில் புற்கள் மண்டி தோற்றமளிக்கிறது சி.வியின் கல்லறை.
தன்னை மறைக்கத்தானோ அவ்விறைவனும்தளிர் பசும் புல்லால் தரை மறைத்தனனோ என்ற அவரது வரிகளில் எந்தளவிற்கு உண்மை இருக்கிறது என்பது இங்கு வந்து பார்த்தால் புரிகிறது.
சி.வி.வேலுப்பிள்ளை காலமாகி எதிர்வரும் நவம்பர் 19 ஆம் திகதியோடு 25 வருடங்கள் நிறைவுறுகின்றன. அவரது இல்லத்தை நினைவாலயமாக்கி அவர் பாவித்த பொருட்களை சேகரித்து அங்கு காட்சிப்படுத்த வேண்டும் என்று ஆங்காங்கே சிலர் அவ்வப்போது புலம்புவதோடு சரி அவர் வாழ்ந்த வீட்டையும் அவரது கல்லறையையும் எட்டிக்கூட பார்க்க எவரும் வருவதில்லை.



வாடிய ரோசா மலரிதழ் போல வாடியே


அன்னார்வாழ்க்கை கழிந்தது




என்ற அவரது கவி வரிகளை அவருக்கே சமர்ப்பணம் செய்து விட்டு அவரது கல்லறைக்கு அஞ்சலி செய்து அவ்விடம் விட்டு நகர்ந்தேன்.

தேசிய வருமானம் பாதிக்கப்படும் என்ற கரிசனை பெருந்தோட்டப்பகுதி வறுமை குறித்து இருக்கின்றதா?







* இலங்கையில் தேசிய வறுமை வீதம் 14 ஆக இருக்கும் இச்சந்தர்ப்பத்தில் பெருந்தோட்டப்பகுதிகளில் அது 34 ஆக உள்ளது. வாழ்க்கைச்செலவு என்பது இலங்கையில் எல்லா பாகங்களில் உள்ள மக்களுக்கும் ஒன்று தான்.







* ஒத்துழையாமை போராட்டத்தினால் தேசிய வருமானத்தில் மாதம் 4.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இழக்கப்பட வாய்ப்புண்டு என புள்ளி விபரங்கள் கூறுகின்றன. உயர்நில பிரதேசங்களில் வாரத்திற்கு 15 இலட்சம் கிலோ கிராம் தேயிலை உற்பத்தி செய்யப்படுகிறது. தொழிலாளர் போராட்டத்தில் ஒரு நாளைக்கு 642857 அமெரிக்க டொலர்வருமானம் இழக்கப்படுகிறது எனு“கின்றன புள்ளி விபரங்கள்.







யாரோ உழைக்கிறார்கள் யாரோ ஊதியத்தை தீர்மானிக்கிறார்கள் இடையில் நமக்கென்ன என்ற நழுவல் போக்கு ஒரு சிலருக்கு, இப்படி போய் கொண்டிருக்கிறது பெருந்தோட்ட தொழிற்றுறை. மற்றுமொரு சாராரோ தொழிலாளர் போராட்டத்தால் தேசிய வருமானம் பாதிக்கப்படுகிறது என புள்ளி விபரங்களை முன்வைக்கின்றனர். சரி எவராவது பெருந்தோட்டப்பகுதி வறுமை நிலை பற்றிய புள்ளி விபரங்கள் குறித்து கரிசனை காட்டுகிறார்களா ? மார்ச் மாதம் 31 ஆம் திகதியோடு முடிவடைந்த கூட்டு ஒப்பந்தம் தற்போது 500 ரூபா என்ற கோரிக்கையோடு இழுபறி நிலையில் உள்ளது. தொழிலாளர்கள் ஒத்துழையாமை போராட்டத்தை முன்னெடுத்துச்செல்கின்றனர். இந்நிலையில் தொழிலாளர்களின் போராட்டத்தால் தேயிலைத்தொழிற்றுறை பாதிப்பு குறித்தும் இதனால் ஒரு மாதத்திற்கு ஏற்படும் நட்டம் மற்றும் அந்நிய செலாவணியில் இது ஏற்படுத்தும் தாக்கம் குறித்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இச்சந்தர்ப்பத்தில் தேயிலை தொழிற்றுறையை மட்டும் நம்பியிருக்கும் பெருந்தோட்டப்பகுதி வாழ் தொழிலாளர்களுக்கு ஏன் சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும் என்ற நியாயப்படுத்தல்கள் குறைவாகவே உள்ளதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை திருத்தி எழுதப்படும் தீர்ப்பாக இருக்கும் கூட்டு ஒப்பந்தத்தில் ஒரு மாற்றம் இருக்க வேண்டிய அவசியத்தையே அதில் கையெழுத்திடும் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றனவே ஒழிய தொழிலாளர்களின் நீண்ட கால தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஒரு கோரிக்கையை முன்வைக்க தயங்குகின்றன. தற்போது தொழிலாளர்கள் ஆரம்பித்திருக்கும் மெதுவாக பணி செய்தல் அல்லது ஒத்துழையாமை போராட்டத்தினால் தேசிய வருமானத்தில் மாதம் 4.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இழக்கப்பட வாய்ப்புண்டு என பொருளாதார நிபுணர்களின் புள்ளி விபரங்கள் கூறுகின்றன. இதே வேளை இலங்கை தேயிலைச்சபை தலைவர் லலித் ஹெட்டியாராய்ச்சி கூறுகையில் உயர்நில பிரதேசங்களில் வாரத்திற்கு 15 இலட்சம் கிலோ கிராம் தேயிலை உற்பத்தி யசெய்யப்படுகிறது. ஒரு கிலோ கிராம் தேயிலையின் விலை 3 அமெரிக்க டொலர்கள் என்று வைத்தாலும் ஒரு நாளைக்கு 642857 அமெரிக்க டொலர்வருமானத்தை இழக்கிறோம் என்று தெரிவிக்கிறார் அவர்.
இலங்கையில் தேசிய வறுமை வீதம் 14 ஆக இருக்கும் இச்சந்தர்ப்பத்தில் பெருந்தோட்டப்பகுதிகளில் அது 32 ஆக உள்ளது. வாழ்க்கைச்செலவு என்பது இலங்கையில் எல்லா பாகங்களில் உள்ள மக்களுக்கும் ஒன்று தான். அரசாங்க உத்தியோகத்தரோ , தனியார் தொழிற்றுறை ஊழியரோ , தோட்டத்தொழிலாளியோ அனைவருக்கும் அரிசியின் விலை ஒன்று தான். ஆனால் வறுமை வீதம் அதிகரித்து காணப்படும் பெருந்தோட்டப்பகுதி வாழ் தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளம் என்ன? இவர்களுக்கு மானிய முறையில் பொருட்கள் கிடைக்கின்றனவா? தற்போது முன்வைக்கப்பட்டுள்ள 500 ரூபா என்ற சம்பள கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் அது இவர்களின் வறுமையை தீர்த்து விடுமா என்று கேட்டால் பதில் இல்லை என்பதாகத்தான் இருக்கும்.
முதலாளிமார் சம்மேளனமோ தண்ணீர் வசதி,பாதை ,குடியிருப்பு,விறகு , மரணாதார செலவு ,போக்குவரத்து ஆகிய சலுகைகளை முன்வைத்து மின்சாரத்திற்கு மட்டும் தானே தொழிலாளர்கள் பணம் செலுத்துகிறார்கள் மற்றதெல்லாம் இலவசமாகத்தானே கிடைக்கின்றன என்ற அர்த்தப்பட கருத்துகளை முன்வைக்கின்றனர். இவையெல்லாம் இலவசமாகக்கிடைத்தாலும் உணவை அவர்களுக்கு இலவசமாக எவரும் கொடுக்கிறார்களா என்ன?
ஒரு நாட்டின் அரசாங்கத்திற்கு அந்நாட்டு மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில் மனிதாபிமான தார்மீக கடப்பாடுகள் பல உள்ளன. அதில் பிரதானமானது வறுமையிலிருந்து அவர்களை மீட்டெடுத்தல். இதில் பெருந்தோட்டப்பகுதி மக்கள் எந்நதளவிற்கு உள்வாங்கப்பட்டிருக்கின்றனர் என்பது கேள்விக்குறியே ! எனினும் தற்போதைய சூழலில் வறுமையில் தள்ளப்பட்டிருக்கும் விடயத்தை முன்னிலைப்படுத்திச்சரி இந்த சம்பள விவகாரம் தொடர்பில் அவர்களுக்கு நியாயம் கிடைக்குமா?