Sunday, August 10, 2025

எம்.பிக்களின் ஓய்வூதிய இரத்து விவகாரம் எதிர்ப்பை சம்பாதிப்பாரா ஜனாதிபதி அநுர ..?



  பாராளுமன்ற அரசியலை விட்டு விலகியிருந்தாலும் முன்னாள் எம்.பிக்களில் பலரும் சொகுசு வாகனங்களில் வலம் வருபவர்களாகவும் செல்வத்தில் மிதப்பவர்களாகவும் உள்ளனர். எனவே மாதாந்தம் 68 ஆயிரம் வரையான ஓய்வூதியம் கிடைக்காவிட்டால் உயிரை மாய்த்துக்கொள்வோம் என இவர்கள் எக்காலத்திலும் கூற மாட்டார்கள். பாராளுமன்றத்தின் ஐந்து வருடங்களை பூர்த்தி செய்தவர்கள் ஓய்வூதியம் பெறும் அதே வேளை , ஒரு சில அமர்வுகளுக்கு மாத்திரம் தலை காட்டி சென்றவர்கள் ,வாயே திறக்காமல் சபையில் அமர்ந்திருந்தவர்களுக்கெல்லாம் மூன்று கோடிக்கு மேல் மதிப்புள்ள சொகுசு வாகனங்களை வாங்குவதற்கு தீர்வையில்லாத அனுமதி பத்திரங்கள் வழங்கப்பட்டன என்பது முக்கிய விடயம். இதனால் நாட்டுக்கு ஏற்பட்ட நட்டம்பில்லியன்களை தாண்டும். ஆனால் முன்னாள் எம்.பிக்கள் சிலர் ஓய்வூதிய இரத்துக்கு மெளனம் காத்தாலும் தற்போது அநுர அரசுக்கு எதிராக செயற்படும் மகிந்த உள்ளிட்ட விமல் ,. உதய கம்மன்பில ஆகியோர் இந்த திட்டத்தை எதிர்த்து கருத்துத் தெரிவித்து வரும் அதே வேளை தமது ஆதரவாளர்களையும் இதற்கு எதிராக தூண்டி விட்டு வருகின்றனர்.


எம்.பிக்களுக்கான ஓய்வூதியத்தை இரத்து செய்யும் சட்டமூலம் வர்த்தமானிபடுத்தப்பட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற பெரும்பான்மையை கொண்டிருக்கும் தேசிய மக்கள் சக்தியானது இச்சட்டமூலத்தை நிச்சயமாக நிறைவேற்றும். ஆனால் இதன் மூலம் ஓய்வூதியம் பெறும் முன்னாள் எம்.பிக்கள் மற்றும் மரணத்தைத் தழுவிய எம்.பிக்களின் விதவை மனைவிகள் உட்பட அவர்களின் ஆதரவாளர்களின் எதிர்ப்பை அநுர சம்பாதிக்கப்போகின்றார் என பரவலான கருத்துகள் எழுந்துள்ளன. அதே வேளை மிகவும் சொகுசான வாழ்க்கை வாழ்ந்து வரும் முன்னாள் எம்.பிக்களுக்கு ஏன் ஓய்வூதியம் என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

ஏனென்றால் எம்.பிகளுக்கு ஓய்வூதியம் உட்பட வேறு பல சலுகைகள் இருப்பது குறித்து மக்களுக்குத் தெரியாது. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் என்பது ஒரு அநாவசியமான செலவு என்பதை உணர்ந்த மக்கள் விடுதலை முன்னணி, தாம் ஆட்சிக்கு வந்தால் ஓய்வூதியம் உட்பட அரசியல்வாதிகளுக்குக் கிடைக்கும் ஏனைய சலுகைகளை இல்லாதொழிக்கப்படும் என்று கூறி வந்தது. தற்போது அதை அமுல்படுத்த முடிவு செய்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உள்ள முழுமையான வரப்பிரசாதங்களை இன்னும் நாட்டு மக்கள் அறிந்து கொள்ளவில்லை என்று தான் கூற வேண்டும். அரசாங்கத்தின் வரப்பிரசாதங்களை தவிர்த்துப் பார்க்கும் போது தமது அதிகாரத்தால் அவர்கள் பெற்று வரும் சலுகைகளை நினைத்துப்பார்க்க முடியாது. இந்நிலையில் தற்போது ஓய்வூதியம் பெற்று வரும் முன்னாள் எம்.பிக்கள் மற்றும் அவர்களின் துணைகள் , குடும்ப உறுப்பினர்கள் என சுமார் ஐந்நூறு பேரின் ஓய்வூதியங்களை இரத்து செய்வதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.

இந்த முடிவுக்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்தது மாத்திரமல்லாது அப்படி நடந்தால் உயிரை மாய்த்துக்கொள்வேன் என தனது பேஸ்புக் பக்கத்தில் அநுர அரசாங்கத்தை பயமுறுத்தியவர் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் சிரேஷ்ட உறுப்பினர் நந்தன குணதிலக்க ஆவார். 1999 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியவர் நந்தன. அதிக வாக்குகள் பெற்றவர்களில் அவர் மூன்றாமிடத்தைப் பெற்றவர். பின்பு மக்கள் விடுதலை முன்னணியிலிருந்து விலகி சுதந்திர கட்சியில் இணைந்தார். 2014 ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்த அவர் கடந்த வருடம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தில் ரணிலுக்கு ஆதரவாக பிரசார மேடைகளில் செயற்பட்டதுடன் அரகலய போராட்டத்தின் பின்னணியில் ஜே.வி.பியினரே செயற்பட்டனர் என மேடைகளில் பகிரங்கமாக குற்றச்சாட்டை முன் வைத்தார்.

தேசிய மக்கள் ஆட்சியமைத்தவுடன் அவர்களின் செயற்பாடுகள் பற்றி விமர்சிக்கும் ஒருவராக நந்தன குணதிலக்க விளங்குகின்றார். முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் பாதுகாப்பு மற்றும் இதர சலுகைகளை குறைக்கும் பட்சத்தில் புலம்பெயர் தமிழர்களினால் அவரது உயிருக்கு ஆபத்து உள்ளதாக அவர் கடந்த வாரம் செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்தமை முக்கிய விடயம்.

இந்நிலையில் ஓய்வூதியம் பற்றி அவர் கூறுகையில் " 68,000 ரூபாய் ஓய்வூதியத்தை வைத்தே நான் வாழ்க்கையை நடத்தி வருகிறேன். வீட்டு வாடகை, பயன்பாட்டுச் செலவுகள் மற்றும் மருத்துவக் கட்டணங்களைச் செலுத்திய பிறகு, தினசரி உணவு மற்றும் பிற செலவுகளுக்கு ரூ. 700 முதல் ரூ. 800 வரை மட்டுமே எனக்கு மிகுதியாகின்றது’ என அவர் தெரிவித்திருந்தார்.

முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகள் மற்றும் எம்.பிக்களின் ஓய்வூதியங்களை இல்லாதொழிப்போம் என தேசிய மக்கள் சக்தியானது நாட்டு மக்களுக்கு தேர்தல் வாக்குறுதிகளை வழங்கியிருந்தமை முக்கிய விடயம். அந்த வகையில் முன்னாள் ஜனாதிபதிகளின் மற்றும், விதவை மனைவிகளுக்கு (ஹேமா பிரேமதாச மாத்திரமே இதில் அடங்குகின்றார்) வழங்கப்படும் உத்தியோகபூர்வ குடியிருப்புகள், மாதாந்திர கொடுப்பனவுகள், செயலக கொடுப்பனவுகள், போக்குவரத்து மற்றும் பிற வசதிகள் மற்றும் விதவைகளுக்கான ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலமானது

தேசிய மக்கள் சக்தியின் அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் கடந்த ஜுலை மாதம் 31 ஆம் திகதி வர்த்தமானிப்படுத்தப்பட்டது. கடந்த 7 ஆம் திகதி பாராளுமன்றத்திலும் சமர்ப்பிக்கப்பட்டது. எனினும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கான ஓய்வூதியம் என்பது அவர்களுக்கான அரசியலமைப்பு உரிமை என்பதால் அதை இரத்து செய்வதற்கான ஏற்பாடுகள் அதில் இல்லை. மேற்படி சட்டமூலத்தை எதிர்த்து பொதுஜன பெரமுன உயர்நீதிமன்றில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. இந்த சட்டமூலம் நேரடியாக தமது தலைவரான மகிந்த ராஜபக்சவை இலக்கு வைப்பதாகவுள்ளதாக மொட்டு கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

ஆனால் சொந்த வீடுகள் இல்லாத வேறு வருமானங்கள் எதுவுமில்லாத எந்த ஏழை அரசியல்வாதியும் இலங்கை நாட்டின் ஜனாதிபதியாக தெரிவாகவில்லை. 1977 ஆம் ஆண்டுக்குப்பிறகு நாட்டில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தெரிவானவர்கள் அனைவருமே மேல் தட்டு வர்க்கத்தினர். அநுரகுமார மாத்திரம் விதிவிலக்கானவராக உள்ளார். ரணசிங்க பிரேமதாசவும் மைத்ரிபால சிறிசேனவும் சாதாரண குடும்பத்திலிருந்து வந்தாலும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட சந்தர்ப்பத்தில் இருவருமே செல்வந்த நிலையில் இருந்தவர்கள் என்பது முக்கிய விடயம். அனைவருக்குமே சொந்த வீடுகள் அதுவும் பிரமாண்டமாக இருந்தன.

ஜே.ஆர்.ஜெயவர்தனவுக்கு வோர்ட் பிளேசில் பிரீமர் என்ற மாளிகை இருந்தது. ரணசிங்க பிரேமதாசவுக்கு சுசரிதா என்ற பிரமாண்ட வீடு இருந்தது. சந்திரிகா அம்மையார் ரொஸ்மீட் பிளேசில் உள்ள தனது மூதாதையரின் மாளிகை வீட்டை ஹோட்டலாக மாற்றி குத்தகைக்கு கொடுத்து விட்டு அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ வீட்டில் வசித்து வருகின்றார். தான் வசிக்கும் விஜேராம வீட்டை விட தனது அம்பாந்தோட்டை மெதமுலன வலவ்வ சிறந்தது என்று கூறியிருக்கின்றார் மகிந்த ராஜபக்ச.

மேலும் மைத்ரிபால சிறிசேனவுக்கு பொலன்னறுவையிலும் கோட்டாபய ராஜபக்சவுக்கு மிரிஹானவிலும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கொள்ளுப்பிட்டியிலும் சொந்தமான பிரமாண்ட வீடுகள் உள்ளன. எனவே தேசிய மக்கள் சக்தி கொண்டு வந்திருக்கும் முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகள் மற்றும் உரிமைகள் இரத்து சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் எந்த முன்னாள் ஜனாதிபதிகளும் ‘நாம் நடுத்தெருவுக்கு வந்து விட்டோம்’ என்று கூற முடியாது. நந்தன குணதிலக்கவை போன்று நாம் எமது உயிரை மாய்த்துக்கொள்வோம் என பயமுறுத்தவும் முடியாது.

ஆனால் நந்தன குணதிலக்க போன்ற விதிவிலக்கான பல எம்.பிக்கள் இருப்பது அரிதானது. தேசிய கட்சிகள் பாராளுமன்றத் தேர்தல்களுக்கு வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் போது அதில் பணமும் செல்வாக்கும் பிரதான இடத்தை வகிக்கின்றன.

அவர்கள் கட்சிக்காக பல கோடிகளை செலவழிக்கும் ஆதரவாளர்களாகவே கடந்த காலங்களில் இருந்திருக்கின்றனர். பாராளுமன்ற அரசியலை விட்டு விலகியிருந்தாலும் அவர்கள் முன்னரைப் போன்றே சொகுசு வாகனங்களில் வலம் வருபவர்களாகவும் செல்வத்தில் மிதப்பவர்களாகவும் உள்ளனர். எனவே மாதாந்தம் 68 ஆயிரம் வரையான ஓய்வூதியம் கிடைக்காவிட்டால் உயிரை மாய்த்துக்கொள்வோம் என இவர்கள் எக்காலத்திலும் கூற மாட்டார்கள். பாராளுமன்றத்தின் ஐந்து வருடங்களை பூர்த்தி செய்தவர்கள் ஓய்வூதியம் பெறும் அதே வேளை , ஒரு சில அமர்வுகளுக்கு மாத்திரம் தலை காட்டி சென்றவர்கள் , வாயே திறக்காமல் சபையில் அமர்ந்திருந்தவர்களுக்கெல்லாம் மூன்று கோடிக்கு மேல் மதிப்புள்ள சொகுசு வாகனங்களை வாங்குவதற்கு தீர்வையில்லாத அனுமதி பத்திரங்கள் வழங்கப்பட்டன என்பது முக்கிய விடயம்.

இதனால் நாட்டுக்கு ஏற்பட்ட நட்டம் பில்லியன்களை தாண்டும். அநுர அரசாங்கத்தின் இந்த நகர்வுகளை மத்திய தர மற்றும் கீழ்த் தட்டு மக்கள் வரவேற்றுள்ளனர் என்பதை அறியக்கூடியதாக உள்ளது. அதே வேளை மக்கள் தெரிவு செய்த பிரதிநிதிகள் கடந்த காலங்களில் எவ்வாறெல்லாம் வரப்பிரசாதங்களை அனுபவித்தனர், இன்னும் எவ்வாறு அனுபவித்துக்கொண்டிருக்கின்றனர் போன்ற விடயங்களையும் இந்த அரசாங்கம் அம்பலப்படுத்தியுள்ளது.

நாட்டு மக்களில் கணிசமானோர் இந்த திட்டத்தை வரவேற்றுள்ளதாகவே தெரிகின்றது. அவர்களின்  மெளனம் இதை வலியுறுத்துகின்றது. ஓய்வூதியம் பெறுவதற்கு சிலஅரசியல்வாதிகள் , நாட்டுக்காகவும் தமது தொகுதி மக்களுக்காகவும் என்ன தான் செய்தார்கள் என்ற கேள்விகளும் அவர்கள் மனதில் எழுந்திருக்கக் கூடும்.  

ஓய்வூதியம் பெறும் அனைத்து முன்னாள் எம்.பிக்களும் சொகுசு வாழ்க்கை வாழ்பவர்கள் அல்லர். சிலர் இன்னும் ஏதாவதொரு தொழிலில் தம்மை இணைத்துக்கொண்டுள்ளனர். சிலர் நோய்வாய்ப்பட்டுள்ளனர்.  அவர்களின் நிலைமைகள் பரிதாபகரமானவை.இவ்வாறானவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு வேறு வழியில் ஏதாவது சிறப்பு சலுகைகளை வழங்க முடியுமா என அரசாங்கம் ஆராய வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன.

Monday, August 4, 2025

எம். பிக்கள் ஓய்வூதியம் பெற தகுதியானவர்களா ?



(கார்ட்டூன்)  நன்றி: த ஐலண்ட்
 

முன்னாள் எம்.பிக்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முடிவெடுத்துள்ளமை நாட்டு மக்கள் மத்தியில் எந்தவி பிரதிபலிப்புகளையும் ஏற்படுத்தவில்லை. எந்த பொது அமைப்புகளும் , சிவில் சமூக அமைப்புகளும், மனித உரிமைகள் பற்றி பேசும் குழுக்களும், அரசாங்கத்தின் இந்த முடிவுக்கு எதிராக குரல் எழுப்பவில்லை. ஆனால் ஓய்வு பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் சங்கம் இதற்கு எதிர்ப்பபை வெளியிட்டுள்ளது.

தமது ஓய்வூதியம் இரத்து செய்யப்பட்டால் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் பாராளுமன்றங்களுக்கிடையிலான ஒன்றியத்துக்கு முறைப்பாடு செய்யவுள்ளதாக அதன் செயலாளர் தெரிவித்துள்ளார். இதற்கும் ஒரு படி மேலே சென்ற முன்னாள் எம்.பி ஒருவர், தனது ஓய்வூதியம் இரத்துச் செய்யப்பட்டால் ‘உயிரை மாய்த்துக்கொள்ள’ வேண்டி வரும் என்று பீதியை கிளப்பியுள்ளார். அவர் மக்கள் விடுதலை முன்னணியின்முன்னாள் எம்.பியான நந்தன குணதிலக்க ஆவார்.

ஓய்வு பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் சங்கத்தின் கருத்துப்படி தமது மருந்துகளை பெறுவதற்கு மாதாந்த ஓய்வூதியத்துக்காக காத்திருக்கும் வயதான எம்.பிக்கள் பலர் உள்ளதாகவும் இந்த சலுகையை இரத்து செய்தால் அவர்கள் கடும் நெருக்கடிகளுக்கு உள்ளாகுவார்கள் என்று கூறப்படுகின்றது. தற்போது முன்னாள் எம்.பிக்கள் ஐந்நூறு பேர் வரை ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். இவர்களில் எளிமையான வாழ்க்கையை முன்னெடுத்த பலரும் இருக்கக் கூடும். ஆனால் ஓய்வூதியமோ அல்லது வேறு எந்த கொடுப்பனவுகளோ இல்லாது வறுமை கோட்டுக்குள் தவித்து வரும் ஒரு பிரிவினர் இந்த நாட்டில் வாழ்ந்து வருகின்றனர் என்பதையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

நாட்டு மக்களில் கணிசமானோர் இந்த திட்டத்தை வரவேற்றுள்ளதாகவே தெரிகின்றது.அவர்களின் மெளனம் இதை வலியுறுத்துகின்றது. ஓய்வூதியம் பெறுவதற்கு சிலஅரசியல்வாதிகள் , நாட்டுக்காகவும் தமது தொகுதி மக்களுக்காகவும் என்ன தான் செய்தார்கள் என்ற கேள்விகளும் அவர்கள் மனதில் எழுந்திருக்கக் கூடும்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதிய திட்டம், யார் நலனை முன்வைத்து அறிமுகப்படுத்தப்பட்டது என்பது முக்கியமானதொரு கேள்வி. 1977 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன இந்த சட்டமூலத்தை கொண்டு வந்தார்.

குடிமக்களின் நலன்களை விட, எம்.பிக்களின் எதிர்காலத்தையும் அவர்களின் நலன்களையும் பாதுகாப்பதே இதன் நோக்கமாக இருந்திருக்கின்றது. நாட்டின் சாதாரண குடிமகன் ஒருவர் தனது ஓய்வூதிய உரிமைகளைப் பெறுவதற்கு குறைந்தது 35 ஆண்டுகளாவது காத்திருக்க வேண்டும். இடையில் ஏதாவதொரு காரணங்களினால் தொழிலை இழக்கும் சந்தர்ப்பத்தில் பல சலுகைகளையும் அவர் இழக்கக் கூடும். ஆனால் தோல்வியுற்ற ஒரு அரசியல்வாதிகளுக்கு சிறப்பு சலுகைகள் காட்டப்படுகின்றன.

ஒரு சராசரி குடிமகன் பெறும் ஓய்வூதியத்தின் பெறுமதி அவரின் தகைமைகள் மற்றும் பதவி உயர்வுகளில் தங்கியுள்ளது. அதாவது தனது பணி காலத்தில் அவர் எவ்வாறு செயற்பட்டார் என்பதில் அவை அடங்கியுள்ளன. ஆனால் அரசியல்வாதிகளுக்கு இது தேவையில்லை. அவர் சிறப்பாக செயற்பட்டாரா இல்லையா என்பதையெல்லாம் எவரும் ஆராய்ந்து பார்ப்பதில்லை. பாராளுமன்றத்தில் ஐந்து வருடங்களை பூர்த்தி செய்த எந்த ஒரு உறுப்பினரும் ஓய்வூதியம் பெறுவதற்கான தகைமையைப் பெறுகின்றார். இதில் ஜனநாயகம் எங்குள்ளது?

கொவிட் தொற்று காலத்தில் கடுமையான நெருக்கடிகளை நாடு சந்தித்தது. சாதாரண மக்களின் சம்பளங்கள் குறைக்கப்பட்டன. ஒப்பந்த ஊழியர்கள் பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டனர். மத்திய வங்கி அறிக்கைகளின் படி சுமார் ஐந்து இலட்சம் பேர் வரை தமது வேலைகளை இழந்தனர். ஆனால் எம்.பிக்கள் தொடர்ந்தும் தமது சலுகைகளை அனுபவித்தனர். சில எம்.பிக்கள் பாராளுமன்றத்துக்கு வருவதை தவிர்க்கும் அதே வேளை வாய் திறந்து கதைப்பதுவும் இல்லை. அப்படியும் அவர்கள் வரப்பிரசாதங்களை அனுபவிக்கின்றனர்.

இவ்வாறான பல சம்பவங்களை தொடர்ச்சியாக அவதானித்து வந்த காரணத்தினாலேயே தேசிய மக்கள் சக்தி இந்த முடிவை எடுத்திருக்க வேண்டும். ஆனால் அவர்களது பாசறையில் வளர்ந்த ஒரு முன்னாள் எம்.பியே ஓய்வூதிய இரத்து விடயத்துக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவரது தனிப்பட்ட வாழ்வாதாரம் ஓய்வூதியத்திலேயே தங்கியுள்ளமை அதிசயமல்ல. ஏனென்றால் மக்கள் விடுதலை முன்னணியினரின் கொள்கைகள் அப்படியானவையாக உள்ளன. ஏனைய தேசிய கட்சிகளின் முன்னாள் எம்.பிக்களின் சொத்துகள் ,சொகுசு வாழ்க்கை முறையைப்பற்றி கூற வேண்டியதில்லை.

அவ்வாறானவர்களின் ஊழல் மோசடிகளையே தற்போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அம்பலப்படுத்தி வருகின்றது. ஓய்வூதியம் பெறும் அனைத்து முன்னாள் எம்.பிக்களும் சொகுசு வாழ்க்கை வாழ்பவர்கள் அல்லர். சிலர் இன்னும் ஏதாவதொரு தொழிலில் தம்மை இணைத்துக்கொண்டுள்ளனர்.

சிலர் நோய்வாய்ப்பட்டுள்ளனர். அவர்களின் நிலைமைகள் பரிதாபகரமானவை. இவ்வாறானவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு வேறு வழியில் ஏதாவது சிறப்பு சலுகைகளை வழங்க முடியுமா என அரசாங்கம் ஆராய வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன.

அரசாங்கத்துக்கும் தமக்கு வாக்களித்தவர்களுக்கும் எந்தவித பங்களிப்புகளும் செய்யாமல் சிறப்பு வரப்பிரசாதங்கள் என்ற அடிப்படையில் சில எம்.பிக்கள் ஓய்வூதியத்தை அனுபவித்து வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

Friday, August 1, 2025

அரசியல் காலாவதியானவர்களின் கூட்டணி …!

  



 

தற்போது காலாவதியாகிய அரசியல்வாதியாக விளங்கும் ஜீ.எல்.பீரிஸ் எனும் மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கத் தயாராகும் தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகள் முதலில் அவர் யாருடன் இணைந்துள்ளார் என்பதை தேடிப்பார்க்க வேண்டும்.பீரிஸ் இப்போது தனது 80 ஆவது வயதில் ஓய்வு காலத்தை அனுபவித்துக்கொண்டிருக்கின்றார். இந்த வயதில் அவர் மீண்டும் அரசியலுக்கு வந்து சர்வதேச நாடுகளுடன் தொடர்பை பேணி இலங்கை நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கப் போகின்றாரா? இதை அவருடன் இணையப்போகும் அரசியல்வாதிகள் தான் தமக்குள் கேட்டுக்கொள்ள வேண்டும்.ஆனால் இவர்கள் அனைவரும் இணைந்து சஜித்தை நடுவீதியில் நிற்க வைக்கும் அதே வேளை தாமும் அவ்வாறே நடுவீதியில் நிற்கப்போகின்றனர். 159 பெரும்பான்மை ஆசனங்களை பாராளுமன்றத்தில் கொண்டிருக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை எவ்வாறு இவர்கள் கவிழ்க்கப் போகின்றனர் என்பதே ஒரு கேள்வி.


அநுரகுமார திசாநாயக்க தலைவராக உள்ள தேசிய மக்கள் சக்தியின் ஊழலுக்கெதிரான செயற்பாடுகளால் எதிர்க்கட்சி வரிசையில் உள்ளவர்களும் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கடும் அச்சத்தை எதிர்நோக்கியுள்ளனர்.ஏதாவதொரு வகையில் அநுர அரசாங்கத்துக்கு அழுத்தங்களை பிரயோகித்து வருவதை தமது பிரதான பணியாக அவர்கள் கொண்டிருந்தாலும் மிகவும் பலகீனமான எதிர்க்கட்சித்தலைவர் மற்றும் ஊழல் மோசடி குற்றச்சாட்டுகளில் சிக்கிக்கொண்டுள்ள முன்னாள்அமைச்சர்களால் அதை செயற்படுத்த முடியாத நிலைமைகள் காணப்படுகின்றன.

எதிர்க்கட்சித் தலைவராக உள்ள சஜித் பிரேமதாச பாராளுமன்றத்துக்குள்ளேயும்வெளியேயும் காத்திரமாக செயற்பட முடியாத ஒருவராக விளங்குகின்றார். ரணில் விக்ரமசிங்கவை போன்று அவருக்கு சர்வதேச ரீதியான தொடர்புகள் இல்லாத அதே நேரம் உள்ளூரிலும் ஆளுமையற்ற தன்மையை வெளிப்படுத்தும் ஒருவராக உள்ளார்.

இதன் காரணமாக எதிரணியில் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ள பலரும்இப்போது தமக்கு பொருத்தமான எதிர்க்கட்சித் தலைவரை தேட ஆரம்பித்து விட்டார்கள் என்று தான் கூற வேண்டியுள்ளது.

மகிந்த தரப்பில் உள்ள பல முன்னாள் அமைச்சர்கள் எம்.பிக்களே தற்போது அதிக ஊழல் மோசடி குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ளனர். ரணில் விக்ரமசிங்க இனி நேரடி அரசியலில் ஈடுபடுவார் என்று கூற முடியாது. அவர் அவ்வாறான முயற்சிகளில் ஈடுபடுவார் என்பதை அறிந்தே தேசிய மக்கள் சக்தியினர் அவசர அவசரமாக பட்டலந்த வதை முகாம் விவகாரத்தை கையிலெடுத்து அதை பாராளுமன்றம் வரை கொண்டு வந்தனர்.

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடா விட்டாலும் ஊடகங்களுக்கு இனவாதகருத்துகளை அவ்வப்போது கூறி வரும் உதய கம்மன்பில, விமல் வீரவன்ச மற்றும் சரத் வீரசேகர போன்றவர்களின் கதைகளை நாட்டு மக்கள் காடு கொடுத்து கேட்பதில்லை.

இவர்களை தூண்டி விடும் தரப்பினராக மகிந்த மற்றும் நாமல் தரப்பினர் விளங்குகின்றனர். சஜித்தின் ஜனாதிபதி கனவு இனிமேல் பலிக்காது என்ற நிலையிலேயே நாமல் ராஜபக்சவை அடுத்த ஜனாதிபதி என்ற ரீதியில் மொட்டுகட்சியினர் கதைகளை பரப்பி வந்தனர். ஆனால் நாமல் ராஜபக்ச மீது இளையோருக்கு இருக்கும் ஈர்ப்பு நாட்டு மக்களில் ஏனையோருக்கு இல்லை. ஏனென்றால் அவர் மீதும் பல குற்றச்சாட்டுகள் உள்ளன.

இந்நிலையில் எதிரணியில் உள்ள சிலர் திடீரென முன்னாள் நிதி அமைச்சரும்புத்திஜீவியுமாக வலம் வந்த ஜீ.எல்.பீரிஸை வைத்து அனைத்து எதிர்க் கட்சிகளையும் ஒன்றிணைக்கும் முயற்சியை ஆரம்பித்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவராக சஜித் ஒரு ஆளுமையற்றவராக விளங்குவதால் அவரை வெறுக்கும் எதிரணியினர் தனியே இயங்கி வருகின்றனர். அவரது தலைமைத்துவத்தை கேலி செய்யும் சரத் பொன்சேக்கா , பாட்டலி சம்பிக்க ரணவக்க, உதய கம்மன்பில் போன்றோரை வேறு வழியில் ஒன்றிணைக்க வேண்டுமானால் சஜித்தை விட அனுபவமும் அறிவும் பெற்ற வெளிநபர் ஒருவரை அணுக வேண்டிய தேவை எதிரணியினருக்கு ஏற்பட்டது. அதற்கு அவர்கள் தேடி கண்டு பிடித்த நபரே பேராசிரியர் பீரிஸ்.

கடந்த வாரம் கொழும்பிலுள்ள பீரிஸின் இல்லத்தில் எதிரணி உறுப்பினர்கள் பலர் ஒன்று கூடி சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தனர். கலந்து கொண்ட சில அரசியல் பிரமுகர்கள் கூறிய கருத்து குழப்பகரமானதாகவும் நகைச்சுவையானதாகவும் இருந்தது.

இது தேசிய மக்கள் சக்திக்கு எதிரான கூட்டணி அல்ல, எதிரணிகளை ஒன்றிணைக்க ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டணியே என சில சஜித் தரப்பு தமிழ் எம்.பிக்கள் கூறினர். அப்படியானால் இப்போது எதிரணி பிளவு பட்டு தான் இருக்கின்றது என்பதை அவர்கள் ஏற்றுக்கொண்டிருக்கின்றனர்.

மேலும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்தின் பலவீனத்தையும் இதுஅம்பலப்படுத்தியுள்ளது. எல்லாவற்றையும் விட அரசியலில் காலாவதியான பீரிஸ் போன்றோரை தலைவராக் கொண்டு எதிரணியை ஒன்று திரட்டும் இந்த முயற்சி எதற்கு என்பதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. என்ன தான் பேராசிரியர் ஆக இருந்தாலும் ஜீ.எல்.பீரிஸின் கல்விப் புலமையை இலங்கை பெற்றது என்று கூற முடியாது. சந்திரிகா மூலம் தேசிய பட்டியல் ஊடாக அரசியலுக்கு பிரவேசித்த பீரிஸ் இலங்கையில் தமிழ் மற்றும் சிங்கள மக்களுக்கு எந்த பிரச்சினைகளும் இல்லையென சர்வதேச ஊடகங்களுக்கு இலங்கை சார்பாக குரல் கொடுக்கும் ஒரு அரசியல் ஊதுகுழலாகவே விளங்கினார். வெளிவிவகார அமைச்சராக இருந்த போது அவர் தாராளமாக தனது கருத்துகளை கூறியும் இலங்கை அரசை பாதுகாப்பதிலும் தனது புலமையைப் பாவித்துக்கொண்டார்.

சந்திரிகா பண்டாரநாயக்க அவரை அரசியலுக்கு கொண்டு வந்தமைக்கு பிரதானகாரணம் அவர் ஒரு சட்டத்துறை பேராசிரியராவார். தனது ஆட்சியில் சட்டரீதியான நகர்வுகளை மேற்கொள்ளவும் ஆலோசனைகளைப் பெறவுமே அவர் பீரிஸ் போன்றோரை தனது அமைச்சரவையிலும் இணைத்தார். ஆனால் சந்திரிகாவின் பதவி காலம் முடிந்து மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவானவுடன் அவருடன் சென்று இணைந்து அங்கேயும் அமைச்சராகி சகல சொகுசுகளையும் அனுபவித்த ஓரு அரசியல்வாதியாக மாறிப் போனார்.

தற்போது 80 ஆவது வயதில் காலடி எடுத்து வைக்கவுள்ள பீரிஸ் தனது இறுதி காலத்தில் அமைச்சராகவோ அல்லது திடீர் அரசியல் மாற்றத்தால் பிரதமர் பதவியையோ வகிக்க ஆசைப்படுவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது. கடந்த சில வாரங்களாக தேசிய மக்கள் சக்திக்குள் பிளவு என்ற செய்தி அடிபடத் தொடங்கியது. பிரதமர் ஹரிணி, ரோகித்த ராஜபக்ச விண்வெளிக்கு அனுப்பியதாகக் கூறப்படும் செயற்கை கோள் தொடர்பில் தவறான தகவல்களை பாராளுமன்றத்தில் வழங்கினார் என்பதை முன் வைத்து அவர் மீது மக்கள் விடுதலை முன்னணியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் குற்றம் சுமத்தி அவரை பிரதமர் பதவியிலிருந்து அகற்றுவதற்கு செயற்படுகின்றார்கள் என்ற கதைகள் பரவின. ஆனால் அப்படியொன்றும் இல்லையென்பதை தேசிய மக்கள் சக்தியினரே ஒரு நிகழ்வில் உணர்த்தினர். சிரேஷ்டஅமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஒன்றாக தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய நிகழ்வொன்றின் படம் அனைவரினதும் வாய்களை அடைத்து விட்டது.

தேசிய மக்கள் சக்தியில் எப்போது பிளவு வரும் என்று காத்துக் கிடந்தவர்கள் பீரிஸை பிடித்து பொது கூட்டணி அமைக்க முடிவு செய்து விட்டனர். ஆனால் யார் எங்கு கூட்டணி அமைத்தாலும் அல்லது அது தொடர்பான சந்திப்புகள் இடம்பெற்றாலும் ஓடோடிச் சென்று கலந்து கொள்ளும் தரப்பினராக தமிழ் முஸ்லிம் பிரதிநிதிகள் விளங்குகின்றனர். ஜீ.எல்.பீரிஸின் வீட்டில் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் வெளியேறிய தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசனிடம் கேள்விகள் எழுப்பிய ஒரு சிங்கள ஊடகவியலாளர் ஏன் சஜித்தின் தலைமைத்துவம் கசந்து விட்டதோ என்று கேள்வியெழுப்பிய போது அதற்கு ஒன்றும் கூறாது வாகனத்தில் ஏறிச் சென்றார் மனோ கணேசன்.

தற்போது காலாவதியாகிய அரசியல்வாதியாக விளங்கும் ஜீ.எல்.பீரிஸ் எனும் மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கத் தயாராகும் தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகள் முதலில் அவர் யாருடன் இணைந்துள்ளார் என்பதை தேடிப்பார்க்க வேண்டும். மாறாக தமது அற்ப அரசியல் ஆசைகளுக்காக இவ்வாறு ஓடோடிச் சென்று அரசாங்கத்தை கவிழ்க்கும் சூழ்ச்சிகளை செய்து கொண்டிருந்தால் ஏற்கனவே அவர்களை எதிர்க்கட்சியில் உட்கார வைத்த வாக்காளர்கள் அவர்களின் அரசியல் எதிர்காலத்தை சூனியமாக்கி விடுவர் என்பதை அவர்கள் உணர வேண்டும்.

பீரிஸ் இப்போது தனது ஓய்வு காலத்தை அனுபவித்துக்கொண்டிருக்கின்றார். இந்த வயதில் அவர் மீண்டும் அரசியலுக்கு வந்து சர்வதேச நாடுகளுடன் தொடர்பை பேணி இலங்கை நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கப் போகின்றாரா? இதை அவருடன் இணையப்போகும் அரசியல்வாதிகள் தான் தமக்குள் கேட்டுக்கொள்ள வேண்டும்.

ஆனால் இவர்கள் அனைவரும் இணைந்து சஜித்தை நடுவீதியில் நிற்க வைக்கும் அதே வேளை தாமும் அவ்வாறே நடுவீதியில் நிற்கப்போகின்றனர். 159 பெரும்பான்மை ஆசனங்களை பாராளுமன்றத்தில் கொண்டிருக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை எவ்வாறு இவர்கள் கவிழ்க்கப் போகின்றனர் என்பதே ஒரு கேள்வி.

Wednesday, July 30, 2025

ரஜினி தவறவிட்ட அரசியலை கெட்டியாக பிடித்துக்கொண்ட கமல்…!

 ரஜினி கர்நாடகாவை பிறப்பிடமாகக்கொண்டாலும் அவர் தமிழகத்தின் சூப்பர் ஸ்டாராக நிரந்தரமாக கொண்டாடப்பட்டு வருகின்றார். எனினும் அவர் அரசியலில் பிரவேசிக்காதது அவரது இரசிகர்களை மிகவும் ஏமாற்றத்துக்குள்ளாக்கியது. இப்போது 74 வயதாகும் ரஜினிகாந்த் இதற்குப் பின்னரும் அரசியலில் பிரவேசம் செய்வாரா என்பது தெரியாது. ஆனால் அவரது இரசிகர்கள் இன்னும் அவரது அரசியல் பிரவேசத்தை எதிர்ப்பார்த்துள்ளனர். அந்த இடத்தை கெட்டியாகப் பிடித்துக்கொண்டுள்ளார் கமலஹாசன். கடந்த ஜூன் மாதம் நடந்த மாநிலங்களவை தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன், மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக மாநிலங்களவை உறுப்பினராகத் அவர் தெரிவு செய்யப்பட்டார். இப்போது ராஜ்யசபா எம்.பியாக பதவி ஏற்றுள்ளார்.

 












‘நான் எப்ப வருவேன் எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது ஆனால் வர வேண்டிய நேரத்தில் வருவேன்’ என பல வருடங்களாக தனது அரசியல் பிரவேசத்தை சினிமா வசனங்கள் வாயிலாக கூறி தனது இரசிகர்களை உசுப்பேத்தி வந்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த். ஆனால் இறுதி வரை அவர் அரசியலுக்கு வரவே இல்லை. தமிழகத்தின் கட்சிகள் மற்றும் தேசிய அளவிலான பாரதீய ஜனதா கட்சி ஆகியவை ரஜினிகாந்தை அரசியல் ரீதியாக அணுகினாலும் அவர் எதற்கும் மசியவில்லை.

அவ்வப்போது தனது படங்களில் அரசியல் ஆசைகளை வசனங்களின் மூலம் வெளிப்படுத்தி வந்தார் ரஜினி. அவர் அரசியலுக்கு வர வேண்டும் தமிழகத்தின் முதலமைச்சராக வேண்டும் என்ற ஆர்வம் அரசியல் கட்சிகளை விட தமிழகத்தில் அவருக்கிருந்த இரசிகர்களுக்கு சற்று அதிகமாகவே இருந்தது. ஏனென்றால் ரஜினி தனது திரைப்படங்களில் வித்தியாசமான ஸ்டைலால் அனைத்து இரசிகர்களையும் கவர்ந்து இழுத்த அதே நேரம் மிகவும் எளிமையாகவும் இயல்பாகவும் தனது வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர். பல கோடி ரூபாய் சொத்துகளுக்கு அதிபதியாக இருந்தாலும் சினிமாவை தவிர்த்து தன்னை ஒரு ஆன்மிகவாதியாக வெளிப்படுத்தியவர்.

சினிமா வேறு வாழ்க்கை வேறு என்பதை பல சந்தர்ப்பங்களில் நிரூபித்தவர். சினிமா மேக்கப்பை தனது நிஜ வாழ்க்கையில் தவிர்த்தவர். படங்களில் தலைக்கு டோபா வைத்து நடிக்கும் அவர் ஏனைய அனைத்து சந்தர்ப்பங்களிலும் அதாவது தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகளில் பங்கேற்கும் போது தனது உண்மையான உருவத்தில் பொதுவெளியில் நடமாடுவதை அவர் விரும்பினார். இந்த இயல்பான அவரது நடவடிக்கைகளே அவரை இரண்டு தலைமுறை இரசிகர்களையும் அவர் பக்கம் இழுத்து வைத்தன.

ரஜினி கர்நாடகாவை பிறப்பிடமாகக்கொண்டாலும் அவர் தமிழகத்தின் சூப்பர் ஸ்டாராக நிரந்தரமாக கொண்டாடப்பட்டு வருகின்றார். எனினும் அவர் அரசியலில் பிரவேசிக்காதது அவரது இரசிகர்களை மிகவும் ஏமாற்றத்துக்குள்ளாக்கியது. இப்போது 74 வயதாகும் ரஜினிகாந்த் இதற்குப் பின்னரும் அரசியலில் பிரவேசம் செய்வாரா என்பது தெரியாது. ஆனால் அவரது இரசிகர்கள் இன்னும் அவரது அரசியல் பிரவேசத்தை எதிர்ப்பார்த்துள்ளனர்.

ரஜினிகாந்தின் அரசியல் பிரவேச தயக்கத்தை பயன்படுத்திக்கொண்டவர் அவரது சமகால சூப்பர் நடிகரான கமல்ஹாசன். தனது தனித்துவமான நடிப்பு மற்றும் சினிமா பற்றிய ஆழ்ந்த அறிவு , நுணுக்கம் போன்றவற்றால் அகில் இந்திய சினிமா இரசிகர்களை மாத்திரமின்றி உலக அளவில் வாழ்ந்து வரும் தமிழர்களை தன் பக்கம் ஈர்த்தவர் கமல்ஹாசன். இதன் காரணமாகவே அவர் உலக நாயகன் என்று அழைக்கப்படுகின்றார்.

தனது திரைப்படங்களில் அரசியல் சார்பான மறைமுக வசனங்களை தவிர்த்து வந்த அவர் ஒரு கட்டத்தில் அரசியலில் குதிப்பதற்கு தீர்மானித்தார். அதற்குக் காரணம் ரஜினியின் அரசியல் பிரவேசம் ஒரு கட்டத்தில் கேள்விக்குறியானதாகும்.

தமிழக மக்கள் இரண்டு விடயங்களில் தமது உயிரையும் கொடுப்பர் என்பது அவருக்கு நன்கு தெரிந்திருந்தது. ஒன்று சினிமா மற்றையது கிரிக்கெட். ஆனால் அரசியல் என்ற விடயத்தில் நிதானித்தே முடிவெடுப்பர் என்பதை அவர் உணர்ந்திருந்தார். இதில் சினிமாவை மையமாகக்கொண்டு அவர்களை அரசியல் பக்கம் இழுக்க கமலஹாசன் தீர்மானித்தார். ரஜினி இனி அரசியலில் பங்கெடுக்க மாட்டார் என்பதை உறுதி செய்து கொண்டே கமலஹாசன் அரசியலில் பிரவேசிப்பதற்கு முடிவு செய்தார் என்பதை உறுதியாகக் கூறலாம். அந்த வகையில் அவர் 2018 ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை உத்தியோகபூர்வமாக தனது ஆழ்வார் பேட்டை இல்லத்தில் ஆரம்பித்தார். கட்சியின் சின்னத்தில் உள்ள 6 கைகள் 6 மாநிலங்களையும், மற்றும் நடுவில் உள்ள நட்சத்திரம் மக்களைக் குறிக்கும். மக்களையும், நீதியையும் மய்யமாக வைத்து தொடங்கப்பட்ட கட்சி மக்கள் நீதி மய்யம் என்று கமல் கூறினார். தேர்தல் ஆணையத்தால் மக்கள் நீதி மய்யத்திற்கு "கை மின்விளக்கு" சின்னம் ஒதுக்கப்பட்டது 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை இலக்கு வைத்தே கமலஹாசன் அரசியல் கட்சியை ஆரம்பித்தார் என்பது அனைவருக்கும் தெரியும். தமிழக அரசியலில் சினிமாவின் ஆதிக்கத்தை நன்குணர்ந்திருந்த கமலஹாசன் தனது இரசிகர்கள் தனக்கு ஆதரவளிப்பார்கள் என்ற நம்பிக்கையில் அவ்வாண்டு சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளர்களுடன் குதித்தார்.

இத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் தலைமையிலான கூட்டணியில் நடிகர் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, பச்சைமுத்து பாரிவேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சி, கே. எம். சரீப்பின் தமிழக மக்கள் ஜனநாயக கட்சிஇ கர்நாடகத்தை சேர்ந்த முன்னாள் முதல்வரும், இந்திய பிரதமருமான தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் இடம் பெற்று இருந்தனர்.

மேலும் இக்கட்சி சார்பில் அதன் தலைவர் கமலஹாசன் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பார் அல்லது தமிழக சட்டமன்றத்தில் பலமான எதிர்கட்சி தலைவராக விளங்குவார் என்று கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் தமிழக மக்கள் நினைத்த போது அனைத்திற்கும் மாறாக கட்சி சார்பில் போட்டியிட்ட அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கூட்டணி கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் தோல்வியைத் தழுவினார்கள்.

மேலும் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தோல்வியைத் தழுவினார். சினிமா வேறு அரசியல் வேறு என்பதை உணர்ந்து கொள்ள கமலுக்கு இத்தனை காலம் எடுத்துள்ளது.

பின்னர் இக்கட்சியின் தோல்விக்கு காரணம் கூறப்பட்டது. கமல்ஹாசன் தேர்தல் பிரசார களத்தில் தமிழக அரசியலில் அதிமுக–பாஜக ஆட்சியை விமர்சித்த அளவிற்கு கடந்த 50 வருட காலமாக தமிழகத்தை ஆண்டு வந்த தி.மு.க ஆட்சியையும், 50 வருட கால மத்திய காங்கிரஸ் ஆட்சியை கடுமையாக விமர்சிக்காமல் போனதாலே அவர்கள் தோல்விக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.

அதைவிட தேர்தல் களத்தில் கமலஹாசன் அ தனது கூட்டணிக்கு கடந்த காலத்தில் இந்தியாவை ஊழலில் தலைக்க செய்த காங்கிரஸ் கட்சியை அழைத்தது, கமலஹாசனின் கட்சி ஆதரவாளர்கள், ரசிகர்கள் மற்றும் பொது மக்களிடையேவும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது என்றும் கூறப்படுகிறது. ஆனால் கமலஹாசன் மீது திராவிட முன்னேற்ற கழகம் ஒரு கண் வைத்திருந்தது. அதற்குக் காரணம் திராவிட கொள்கைகளான நாத்திகம் மற்றும் பகுத்தறிவு போன்ற விடயங்களில் கமலஹாசன் உறுதியான கொள்கைவாதியாக விளங்கியமையாகும். இனி தமிழகத்தில் தனித்து அரசியல் செய்வது சரிபட்டு வராது என்ற முடிவுக்கு கமலஹாசன் வந்தார் என்று தான் கூற வேண்டும். இந்நிலையில் தனது அரசியல் நிலைப்பாட்டில் திடீரென ஒரு முடிவை எடுத்தார் கமலஹாசன்.

கடந்த ஜூன் மாதம் நடந்த மாநிலங்களவை தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன், மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக மாநிலங்களவை உறுப்பினராகத் அவர் தெரிவு செய்யப்பட்டார். இதற்கு தமிழகத்தில் பலத்த விமர்சனங்கள் எழுந்தன. 2021 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் தமிழகத்தின் அனைத்து கட்சிகளையும் ஊழல் அமைப்புகள் என்ற பிரசார் செய்த கமல் இப்போது அவர்களுடன் இணையலாமா என ஊடகங்கள் அவரை வறுத்தெடுத்தன. மக்களுக்காக இந்த முடிவை எடுத்திருக்கிறேன் என்ற ஒரு வார்த்தையில் அனைத்து ஊடகங்களையும் மெளனமாக்கினார் கமல்.

அதையடுத்து வெள்ளிக்கிழமை 25 ஆம் திகதி கமலஹாசன் நாடாளுமன்றத்தில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டு ராஜ்யசபா எம்.பியாக பதவியேற்றுள்ளார். வெள்ள சட்டை, கருப்பு நிற காற்சட்டை அணிந்து நாடாளுமன்றத்துக்கு வருகை தந்த கமல்ஹாசன், தமிழ் மொழியில் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.  மாநிலங்களவையின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் கமல்ஹாசன் எனும் நான், சட்டத்தினால் நிறுவப்பெற்றதான இந்திய அரசியல் சட்டத்தின் மீது உண்மையான பற்றார்வமும்,பற்றுறுதியும் கொண்டிருப்பேன் என்றும், இந்தியாவின் இறையாண்மையையும்,ஒருமைப்பாட்டையும் உறுதியாகப் பற்றி நிற்பேன் என்றும் நான் இப்போது ஏற்கவிருக்கும் கடமையினை நேர்மையாக நிறைவேற்றுவேன் என்றும், விழுமிய முறைமையுன் உறுதிகூறுகிறேன். வணக்கம்" என உறுதி எடுத்து, பதவிப் பிரமாணம் ஏற்றுக் கொண்டார் . கமல்ஹாசனை வாழ்த்தி அவரது கட்சியினர் சமூக ஊடகங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருவதோடு தமிழ் சினிமா கலைஞர்களும் ஏனைய இந்திய சினிமா கலைஞர்களும் கமலஹாசனுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

மறுபக்கம் நடிகர் விஜய் தனது தமிழக முன்னேற்ற கழகம் கட்சியை அடுத்த தேர்தலுக்கு தயார்ப்படுத்தி வரும் நிலையில் தமிழக அரசியல் களம் நடிகர்களால் ஆக்கிரமிக்கப்படும் சூழலை தக்க வைத்து வருகின்றதோ என்று கூறத்தோன்றுகின்றது. ஆனால் தமிழக சினிமாவிலும் அரசியலிலும் சூர்ப்பர் ஸ்டார் ரஜனி காந்துக்கு இருந்த வரவேற்பு கமலஹாசனுக்கு இல்லை என்றாலும் சரியான நேரத்தில் முடிவெடுத்து இன்று ராஜ்யசபா எம்.பியாகியுள்ளார் கமலஹாசன் . அந்த வாய்ப்பை நழுவ விட்டுள்ளார் ரஜினி காந்த். இனி ரஜினி காந்த் அரசியலில் காலடி எடுத்து வைக்க நினைத்தாலும் அவரது இரசிகர்களே அதை மறுப்பர் என்று தான் கூற வேண்டும்.

Wednesday, July 23, 2025

 நுவரெலியாவில் கடந்த கால ஊழல்கள் அம்பலப்படுத்தப்படுமா?


தேசிய மக்கள் சக்தியானது பாரம்பரிய கட்சி ஒன்றோடு இணைந்து உள்ளூராட்சிசபைகளை கைப்பற்றியுள்ளது என்றால் அது இலங்கையில் நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம் என்று தான் கூற வேண்டும். இலங்கை தொழிலாளர் காங்கிரசுடன் ஒரு உடன்பாட்டுக்கு வந்ததன் மூலம் அது நுவரெலியா மாவட்டத்தில் ஏழு சபைகளில் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. ஏழாவது சபையான நோர்வூட் பிரதேச சபையில் மாத்திரம் இ.தொ.காவுக்கு எதிராக அங்குள்ள தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் செயற்பட்டு,ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களின் ஆதரவோடு சபையை கைப்பற்றியுள்ளனர்.

ஊழல்வாதிகளோடு சேரமாட்டோம் என ஆரம்பத்திலிருந்தே தேசிய மக்கள் சக்தியினர் கூறி வந்தாலும் அதை செயற்படுத்தியவர்கள் என்னவோ நோர்வூட் பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் என்று தான் கூற வேண்டும். இதற்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கலாம், எவ்வாறு இருதரப்பு இணக்கப்பாடுகளுக்கு ஏற்ப இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கு நோர்வூட் பிரதேச சபையின் தவிசாளர் பொறுப்பை பெற்றுக்கொடுக்கலாம் என்ற சிந்தனையில் நுவரெலியா மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

இதே வேளை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்ற அமைப்பின் மீதே தமக்கு நம்பிக்கையில்லையென்றும் வெற்றி பெற்ற ஆறு உறுப்பினர்களில் வேறு எவரை தவிசாளர் பொறுப்புக்கு தெரிவு செய்திருந்தாலும் தமது உறுப்பினர்கள் அனைவரும் அதற்கு இணங்கியிருக்க மாட்டோம் என நோர்வூட் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவித்துள்ளமை முக்கிய விடயம்.நுவரெலியா மாவட்ட அபிருவித்திக்குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மஞ்சுள சுரவீர ஆராச்சி கடந்த வாரம் ஊடகமொன்றுக்கு தெரிவித்த கருத்தில் தாம் எவருடனும் எந்த டீல்களையும் வைத்துக்கொள்ளவில்லையென்றும் நிச்சியாக திருடர்களை நாம் பிடிப்போம் என்றும் கூறியிருந்தார். ஜனாதிபதி அநுரவும் அதையே தனது தேர்தல் பிரசாரத்தின் பிரதான ஆயுதமாக பயன்படுத்தினார். அவர் கூறியது போன்று கடந்த கால ஆட்சியில் இடம்பெற்ற ஊழல்கள் மற்றும் குற்றச்சம்பவங்கள் பற்றிய விசாரணைகளை அநுர அரசாங்கம் ஆரம்பித்துள்ள அதே வேளை பல முன்னாள் சிரேஷ்ட அமைச்சர்கள், எம்.பிக்களும் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.


ஆனால் நுவரெலியா மாவட்டத்தில் அவ்வாறு இடம்பெறுமா என்ற சந்தேகம் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த வாக்காளர்கள் மத்தியில் எழுந்துள்ளமைக்குக் காரணம், அவர்கள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸோடு இணைந்து சபைகளை கைப்பற்றியுள்ளமையாகும். 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலின் போது பொதுஜன பெரமுனவின் உதவியுடன் ஆறு சபைகளை கைப்பற்றியது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ். சில சபைகளில் நிர்வாக சீர்கேடுகள் ஊழல் சம்பவங்கள் இடம்பெற்றதை ஊடகங்கள் ஆதாரங்களோடு செய்தி வெளியிட்டிருந்தன.

காணி ஊழல் விவகாரத்தில் நுவரெலியா பிரதேச சபை தவிசாளர் 2022 ஆம் ஆண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அதன் தலைமையால் நீக்கப்பட்டு அவருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகளும் இடம்பெற்றிருந்தன. ஆனால் விசாரணை அறிக்கைகள் பற்றி எந்த விடயங்களும் வெளிவராத நிலையில் அவர் சில நாட்களில் கட்சியின் நிகழ்வுகளில் சர்வசாதரணமாக கலந்து கொள்ள ஆரம்பித்திருந்தார். இம்முறை அவரே அச்சபையின் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதே போன்று நோர்வூட் பிரதேச சபையால் முன்னெடுக்கப்பட்ட கெசல்கமுவ ஓயா ஆற்றை அகலப்படுத்தும் திட்டமானது மாணிக்கக்கல் அகழ்வாக பின்பு மாற்றம் பெற்றது. இந்த விவகாரத்தில் நுவரெலியா மாவட்டத்தின் பல எம்.பிக்கள், மற்றும் உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள் சம்பந்தப்பட்டிருந்தனர்.

கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத கட்டிடங்கள் அமைத்தல் மற்றும் காணி அபகரிப்புகள் என பல மோசடி சம்பவங்கள் இடம்பெற்றன. சில சம்பவங்களுக்கு எதிராக வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன. அக்கரபத்தனை பிரதேச சபைக்குட்பட் பகுதிகளில் அரச நிதியில் அமைக்கப்பட்டு பிரதேச சபைக்கு உரித்தாக வேண்டிய கட்டிடங்கள் இன்று தனி நபர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. சில சபைகளில் மிக மோசமான நிர்வாக சீர்கேடுகள் இடம்பெற்றதில் நகர அபிவிருத்தியென்பது பூஜ்ய நிலைமைக்கு சென்றது. குறிப்பாக தமிழர்கள் செறிந்து வாழ்ந்து வரும் அட்டன்–டிக்கோயா நகரசபையானது கழிவகற்றல் செயற்பாடுகளில் படுதோல்வியை சந்தித்த சபையாக விளங்கியது. அமைச்சர் ஆறுமுகன் உயிருடன் இருந்த காலத்திலேயே அவரின் கட்டுப்பாட்டில் இருந்த மேற்படி நகரசபையின் கழிவகற்றல் பிரச்சினைக்கு அவரால் தீர்வு காணமுடியவில்லை.

சில சபைகளின் அதிகாரிகள் மிகவும் அலட்சியப்போக்குடன் நடந்து கொண்டதுடன் அரசியல்வாதிகளின் ஊழல்களுக்கு துணை போயினர். 2020 இற்குப்பிறகு நாட்டில் உருவான கொரோனா தொற்று மற்றும் நெருக்கடிகள் காரணமாக அரசியல்வாதிகளின் ஊழல் செயற்பாடுகளைப் பற்றி அறிந்து கொள்வதில் மக்கள் ஆர்வம் காட்டவில்லை.

அதை தமக்கு சாதகமாக்கிக்கொண்ட சில அரசியல்வாதிகள் தமது கட்டுப்பாட்டில் இருந்த உள்ளூராட்சி சபைகளின் மூலம் பல சட்டவிரோத செயற்பாடுகளில் அச்சமின்றி ஈடுபட ஆரம்பித்தனர்.

2018 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட உள்ளூராட்சி சபைகளின் பதவி காலம் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதமே முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் மேற்படி சபைகள் உள்ளூராட்சி மன்ற உதவி ஆணையாளரின் நிர்வாகத்தின் கீழும் சபை செயலாளர்களின் கட்டுப்பாட்டிலும் இயங்கத் தொடங்கினாலும், முன்னாள் தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்கள், எம்.பிக்களின் ஆதிக்கம் தொடர்ந்தும் அங்கு நிலவியதை மறுக்க முடியாது. இந்த சூழ்நிலைகளுக்கு மத்தியில் 2024 ஆம் ஆண்டு தேசிய மக்கள் சக்தி ஆட்சியைப் பிடித்ததும் பல ஊழல் அரசியல்வாதிகள் தாம் கைது செய்யப்படுவோம் என்ற அச்சத்தில் உறைந்தனர். இவ்வருடம் ஜனவரி மாதம் முதல் விசாரணைகள் ,கைதுகளை அநுரவின் அரசாங்கம் ஆரம்பித்திருந்தது. மே மாதம் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் முடிவுற்றவுடன் ஆட்சியமைப்பதில் ஏற்பட்ட நெருக்கடிகளால் இந்த கைது விவகாரம் சற்று கிடப்பில் போடப்பட்டது.

ஆனால் ஜுன் மாதம் 2 ஆம் திகதி எவரும் எதிர்பாராத வகையில் இறைச்சி கடை கேள்வி கோரல் விவகாரத்தில் அரசாங்கத்துக்கு நட்டம் ஏற்படுத்திய சம்பவத்துக்காக தலவாக்கலை –லிந்துலை நகரசபையின் முன்னாள் தவிசாளர் அசோக்க சேபால இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இந்த சம்பவத்தையடுத்து நுவரெலியா மாவட்டத்தின் உள்ளூராட்சி சபைகளின் கடந்த கால ஊழல்கள் விசாரிக்கப்பட்டு பலரும் கைது செய்யப்படுவர் என்ற எதிர்ப்பார்ப்பு மக்கள் மத்தியில் ஏற்பட்டது. ஏனென்றால் அசோக்க சேபால கைதான பின்பே அவர் ஒரு குற்றச்சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற விடயம் மக்கள் மத்தியில் அம்பலமானது. ஆனால் ஏனைய கட்சிகளை சேர்ந்த முன்னாள் தவிசாளர்கள் மற்றும் உபதவிசாளர்கள் சிலரின் மீது பகிரங்கமாகவே பல குற்றச்சாட்டுகள் இருந்தமையை மக்கள் நன்கறிவர். எனவே இவர்களை கைது செய்வதற்கு தேசிய மக்கள் சக்தி அதிக சிரமப்படவேண்டிய அவசியமிருக்காது என்றே மக்கள் நினைத்தனர்.

ஆனால் அப்படியொன்றும் இடம்பெறவில்லை. இறுதியில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவை வழங்க முன்வந்தது. இதன் காரணமாக கட்சி உறுப்பினர்கள் சிலரின் கடந்த கால ஊழல் செயற்பாடுகள் கிடப்பில் போடப்பட்டதொன்றாகவே இருக்கப்போகின்றதா என நுவரெலியா மாவட்ட மக்கள் புருவம் உயர்த்தியுள்ளனர். ஆனால் நாம் திருடர்களைப் பிடிப்போம் என்றே தேசிய மக்கள் சக்தியினர் தொடர்ந்தும் கூறி வருகின்றனர். ஆனால் நுவரெலியா மாவட்டத்தில் ஆட்சியமைத்துள்ள அவர்களுக்கு சில சபைகளில் புதிய நெருக்கடிகள் உருவாகியுள்ளதை

மறுக்க முடியாது. சில சபைகளின் ஊழல் அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களுக்கு எதிரான போக்கை கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. அண்மையில் அட்டன்–டிக்கோயா நகர சபையின் தவிசாளர் மேற்கொண்ட சில செயற்பாடுகளுக்கு அச்சபையின் அதிகாரிகள் சிலர் முணுமுணுப்பை வெளிப்படுத்தியுள்ளமை முக்கிய விடயம். பல ஆண்டுகள் கழிவுகளோடு கழிவுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நகர சபையின் வாகனங்களை மீண்டும் இயங்கச் செய்யும் நடவடிக்கைகளை எடுத்துள்ள சபைத் தவிசாளர் , கழிவகற்றும் செயன்முறைகள் மற்றும் பொது மலசல கூட வருவாயில் நிலவி வந்த ஊழல் செயற்பாடுகளைப் பற்றி ஆராய்வதற்கு முடிவு செய்துள்ளதாகவும் நகரசபையின் கடந்த கால நிதி பயன்பாடுகள் பற்றிய முழுமையான கணக்காய்வுகளை மேற்கொள்ள ஆயத்தமாகி வருவதாகவும் தெரிய வருகின்றது. இலங்கை தொழிலாளர் காங்கிரசோடு இணைந்து ஆட்சியமைத்தாலும் ஊழல்களுக்கு எதிரான செயற்பாடுகளில் தமது கட்சியின் கொள்கைகளை பின்பற்றுமாறு தேசிய மக்கள் சக்தியின் தலைமைகள் தமது உறுப்பினர்களுக்கு கண்டிப்பான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளதாகவும் தெரிகின்றது.

அவ்வாறு நடக்கும் பட்சத்தில் நுவரெலியா மாவட்டத்தின் பல சபைகளில் கடந்த காலங்களில் இடம்பெற்ற முறைகேடுகள், ஊழல் செயற்பாடுகள், மோசடிகள் அம்பலத்துக்கு வருமா என்ற ஆர்வம் மக்கள் மத்தியில் உருவாகியுள்ளதையும் மறுப்பதற்கில்லை.

Thursday, July 17, 2025

உள்ளே ஆதரவு வெளியே விமர்சனம்?

 

 நோர்வூட் பிரதேச சபையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் ஆதரவளிக்க முன் வராத நிலையில், தமிழ் முற்போக்குக் கூட்டணி உறுப்பினர்கள் தாம் ஆதரவளிக்க முன் வந்ததுடன் உபதலைவர் பதவியையும் பெற்றுக்கொண்டனர். ஆனால் கூட்டணியின் இரண்டு கட்சிகளான தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் மலையக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் தலைமைகள் தற்போது அரசாங்கத்தை குறை கூறத்தொடங்கியுள்ளனர்.


 உள்ளூராட்சி சபைத்  தேர்தல்களின் போது நுவரெலியா மாவட்டத்தில்  களமிறங்கிய இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகிய இரண்டு பிரதான மலையக அமைப்புகளுக்கும் பொது எதிரியாக இருந்த கட்சி தேசிய மக்கள் சக்தியாகும். தேர்தல் பிரசார மேடைகளில் இவ்விரு அமைப்புகளும் தேசிய மக்கள் சக்தியை வறுத்தெடுத்தன.

தொழிலாளர்களின் சம்பள விவகாரம், வீடமைப்பு போன்ற விடயங்களில் தேசிய மக்கள் சக்தி வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லையென இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்   மக்கள் சந்திப்புகளின் போது கடும் விமர்சனத்தை முன்வைத்து வந்தது. மறு பக்கம் மலையக பெருந்தோட்ட மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்ப்பதில் தேசிய மக்கள் சக்திக்கு எந்த எதிர்கால திட்டங்களும் கிடையாது என தமிழ் முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தொழிலாளர் தேசிய முன்னணி மற்றும் மலையக மக்கள் முன்னணி என்பன தமது ஆதரவாளர்கள் மத்தியில் பிரசாரத்தை மேற்கொண்டது.

எது எப்படியானாலும் நுவரெலியா மாவட்டத்தின் 12 உள்ளூராட்சி சபைகளிலும் போட்டியிட்ட  தேசிய மக்கள் சக்தி, சில சபைகளில் அதிக ஆசனங்களையும் ஏனையவற்றில் மலையக கட்சிகளுக்கு சரிசமனான ஆசனங்களையும் பெற்றதுடன் மலையக கட்சிகள் தனித்து ஆட்சியமைக்க முடியாத அளவுக்கு தனது செல்வாக்கை தக்க வைத்துக்கொண்டது. இதனிடையே இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பல தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து மாவட்டத்தில் சபைகளை கைப்பற்ற முடிவெடுத்தது. தமிழ் முற்போக்குக் கூட்டணி சாணக்கியமான நகர்வுகளை மேற்கொள்ள தவறியது. இதன் காரணமாக அதற்கு எந்த சபைகளையும் கைப்பற்ற முடியவில்லை.

 ஆனால் நோர்வூட் பிரதேச சபையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் ஆதரவளிக்க முன் வராத நிலையில், தமிழ் முற்போக்குக் கூட்டணி உறுப்பினர்கள் தாம் ஆதரவளிக்க முன் வந்ததுடன் உபதலைவர் பதவியையும் பெற்றுக்கொண்டனர். அவர்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்தில் போட்டியிட்டனர். ஆனால்  தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்தமை குறித்து  அக்கட்சியின் தலைவரான சஜித் பிரேமதாச மற்றும் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் எந்த பிரதிபலிப்புகளையும் வெளிப்படுத்தவில்லை. அநேகமாக இது குறித்து தமிழ் முற்போக்குக் கூட்டணியின்  தலைமைகள் சஜித்திடம் பேசியிருக்கலாம்.

நுவரெலியா மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்து சில சபைகளை கைப்பற்றிய இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அதற்குப்பிறகு எச்சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவையோ அல்லது கட்சியையோ விமர்சித்து எங்கேயும் பேசவில்லை. இனியும் அவ்வாறு பேச முடியாது என்று தான் கூற வேண்டியுள்ளது. ஆனால் நோர்வூட் பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைக்க உதவிய  முற்போக்குக் கூட்டணியின் இரண்டு கட்சிகளான தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் மலையக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் தலைமைகள் தற்போது அரசாங்கத்தை விமர்சிக்கத் தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அண்மையில் அட்டனில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் உரையாற்றிய மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வே.ராதாகிருஷ்ணன் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்துமே பொய்யானவை என்றும் நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் திருப்தியடைய முடியாத அளவுக்கு கொலைகளும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களும் அதிகரித்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் கடந்த ஒன்பதாம் திகதி பாராளுமன்றில் உரையாற்றிய அவர் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அனைத்துமே உயர்ந்துள்ளன.  இதே வேளை தோட்டத்தொழிலாளர்களுக்கு நாட் சம்பளம் 1700 ரூபாய் வழங்கப்படும் என அரசாங்கம் கூறினாலும் அதை பெற்றுக்கொடுக்க எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்று கூறியிருந்தார்.

அதே வேளை நுவரெலியா மாவட்டத்தின் அட்டன் கல்வி வலயத்துக்கு பெரும்பான்மையின அதிகாரி ஒருவரை நியமிக்க இந்த அரசாங்கம் முயற்சிக்கின்றது என பாராளுமன்றத்தில் வே.ராதாகிருஷ்ணன் எம்.பி கூறியுள்ளதுடன்  அது குறித்து  பழனி திகாம்பரம் எம்.பியும் தனது அதிருப்பதியை வெளிப்படுத்தியுள்ளார். தமிழ் பாடசாலைகள் அதிகம் கொண்ட அட்டன் கல்வி வலயத்துக்கு தராதரத்தினை காட்டி பெரும்பான்மை அதிகாரி ஒருவரை நியமிப்பதற்கு இந்த அரசாங்கம் முயற்சி செய்கின்றது என்பது இவர்களின் குற்றச்சாட்டு. ஆனால் குறித்த வலயக் கல்வி பணிமனைக்கு இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் 1 ஐ கொண்ட எவரும் விண்ணப்பிக்கலாம் என்றே விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. மேற்படி தரத்தினை கொண்ட தமிழ் அதிகாரிகள் எவரும் மத்திய மாகாணத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் முதல் தரத்தினை கொண்ட தமிழ்  பெண் அதிகாரி ஒருவர் இரண்டரை வருடங்களாக மேற்படி வலயக் கல்வி பணிமனையில் பிரதி கல்வி பணிப்பாளராக பணியமர்த்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நுவரெலியா மாவட்டத்தின் தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்களுடன்  அரசியல் நட்பை பேணி வருகின்றது தமிழ் முற்போக்குக் கூட்டணி. அவ்வாறான ஒரு நட்பு இல்லையென்றால் நோர்வூட் பிரதேச சபையில் அவர்களுக்கு ஆதரவளித்திருக்கவும் முடியாது, உப தவிசாளர் பதவியை பெற்றிருக்கவும் முடியாது. எனவே உள்ளே நட்பையும் ஆதரவையும் பேணிக்கொண்டு வெளியே விமர்சன அரசியலை இவர்கள் முன்னெடுத்து வருவதானது ஒரு தெளிவற்ற போக்கை காட்டி நிற்கின்றது.  நோர்வூட் பிரதேச சபை விவகாரத்தில் தாம் ஏன் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்தோம் என்பது குறித்து இதுவரை தமிழ் முற்போக்குக் கூட்டணி எந்த விளக்கத்தையும் எங்கேயும் கூறவில்லை. ஆனால் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்கின்றோம் என வெளிப்படையாக கூறிய இலங்கை தொழிலாளர் காங்கிரஸை இதில் பாராட்டலாம். தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கு 2018 ஆம் ஆண்டில் இடம்பெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலிலும் மாவட்டத்தில் எந்த சபையையும் கைப்பற்ற முடியாது போயிற்று. இம்முறை நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.காவை ஆட்சியமைக்க விடாது தடுத்து நிறுத்தியமையை சாணக்கியமான நகர்வு என்று கூற முடியாது. ஏனென்றால் தமது கொள்கைக்கு எதிராக செயற்பட்ட மேற்படி சபையின் உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்போவதாக ஏற்கனவே நுவரெலியா மாவட்ட தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீர ஆராச்சி தெரிவித்திருந்தமை முக்கிய விடயம்.   


Wednesday, May 7, 2025

 எதிரணியின்   பலகீனங்களை அம்பலப்படுத்திய மே தினம்..!


சர்வதேச  மே தினம் எதற்காக, யாருக்காக அனுஷ்டிக்கப்படுகின்றது என்ற கேள்வி இன்று அனைவர் மனதிலும் எழுந்துள்ளது.    மே தினத்தின் தாற்பரியங்களை மறைத்து    முழுக்க முழுக்க அரசியல் நிகழ்வாகவே உழைப்பாளர் தினத்தை மாற்றியமைத்த பெருமை இலங்கையின்  பாரம்பரிய கட்சிகளுக்கே உள்ளது.  ஆனால்  உழைக்கும் வர்க்கத்தினரின் தோழர்கள் என்றும் தொழிற்படையின் மூலமே  நாட்டை கட்டியெழுப்பலாம் என்ற கோஷங்களோடு ஆட்சியமைத்த தேசிய மக்கள் சக்தியும் இம்முறை மே தினத்தை அரசியல் நிகழ்வாகவும்  உள்ளூராட்சி  தேர்தலின் பிரசார களமாகவும் பயன்படுத்திக் கொண்டதையும் மறுக்க முடியாது.

 

இலட்சக்கணக்கானோரின் பிரசன்னத்துடன் காலி முகத்திடலை செந்நிறமாக்கிய தேசிய மக்கள் சக்தியானது இந்நாட்டின் உழைக்கும் வர்க்கத்தினரின் பிரச்சினைகளையும் அவர்களின் எதிர்கால சவால்கள் பற்றியும் காத்திரமாக எதையும் பேசவில்லை. ஆனால்  தமக்கு இன்னும் மக்கள் பலம் உள்ளது என்ற செய்தியை எதிரணியினருக்கு உணர்த்தி அவர்களை மக்கள் மத்தியில் மேலும் பலவீனமாக்கியுள்ளனர் என்று தான் கூற வேண்டியுள்ளது.

 அதே வேளை எதிர்க்கட்சிகளும் மே தினத்தின் தாற்பரியம் உணர்ந்து அதை அனுஷ்டிக்காது, ஆளும் கட்சியினருக்கு எதிரான அரசியல் கூட்டங்களாக  அதை  நடத்தி முடித்துள்ளன.  பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்திக்கு  தலைநகரில் தனது மே தின நிகழ்வை நடத்த முடியவில்லை. ஆரம்பத்தில் குருணாகலில்  மே தினத்தை நடத்துவதற்கான பேச்சுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தாலும் அது சாத்தியப்படவில்லை. இந்நிலையில், தொழிலாளர் தேசிய சங்கம், மலையக மக்கள் முன்னணி, ஜனநாயக மக்கள் முன்னணி ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்த தமிழ் முற்போக்குக் கூட்டணி தலவாக்கலையில் ஏற்பாடு செய்த மே தின நிகழ்விலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட ஏனைய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். உண்மையில்  தலவாக்கலை கூட்டம்  ஐக்கிய மக்கள் சக்தியினது மேதின கூட்டமா அல்லது தமிழ் முற்போக்குக் கூட்டணியுடையதா என்ற குழப்பம் மக்கள் மத்தியில் உள்ளது.

 இந்நிகழ்வில் பதுளை ,கண்டி, இரத்தினபுரி ஆகிய பகுதிகளிலிருந்து கணிசமான  ஆதரவாளர்கள் பஸ்களில் வருகை தந்து கூட்டத்தில்  கலந்து கொண்டிருந்தாலும் நுவரெலியா மாவட்ட மக்களின் பிரசன்னமே அதிகமாக இருந்தது. எதிரணி வரிசையில்  பொதுஜன பெரமுன மற்றும் சுதந்திர கட்சியினர் தனித்தனியாக  தலைநகரில் மே தின கட்டங்களை  ஏற்பாடு செய்திருந்தனர். எனினும் பிரதான எதிர்க்கட்சியான  ஐக்கிய மக்கள் சக்தியின் பலகீனம் இம் மேதினத்தில் நன்கு வெளிப்பட்டது எனலாம். எதிர்கட்சி  தலைவர் என்ற வகையில் எப்போதும்  உறுதியான அழுத்தமான கருத்துக்களை முன்வைக்காதவர்  என்ற குறைபாடு சஜித்துக்கு உள்ளது. தலவாக்கலை  மே தினத்திலும் அவ்வாறே அவரது உரை அமைந்தது.

 ‘ எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களித்து அரசாங்கத்துக்கு சிவப்பு எச்சரிக்கையை வழங்க அணி திரளுங்கள் ‘ என அவர் இங்கு பேசிக்கொண்டிருக்க, தலைநகரில் இலட்சக்கணக்கில்  திரண்ட  தேசிய மக்கள் சக்தியினர்  காலி முகத்திடலையே சிவப்பு நிறமாக்கி விட்டனர். இங்கு உரையாற்றிய  தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித்து தலைவர் திகாம்பரம் எம்.பி  ‘உள்ளூராட்சி சபைகளை கைப்பற்றுவதன் மூலம்  சஜித்தின் கரங்களைப் பலப்படுத்துவோம் ‘ என்றார். ஆக இப்போதைய நிலைமையில் உள்ளூராட்சி மன்றங்களை கைப்பற்றுவது கூட தமக்கு சவாலான இலக்கு என்பதை ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ள கூட்டணிகளும் விளங்கிக்கொண்டுள்ளன.

 இதே வேளை மலையகத்தின் பிரதான மற்றுமொரு கட்சியான  இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், பிரதேச ரீதியான  மே தின கூட்டங்களை ஏற்பாடு செய்து தமது ஆதரவாளர்களிடம் தேர்தல் பிரசாரங்களையே முன்னெடுத்திருந்தது. உள்ளூராட்சித் தேர்தல்களை  கவனத்திற்கொண்டே இம்முறை மே தின நிகழ்வுகளானது பிரதேச ரீதியாக முன்னெடுக்கப்படுகின்றது என இ.தொ.காவும் அறிவித்திருந்தமை முக்கிய விடயம்.

 ராஜபக்ச சகோதரர்களின் அடையாளமாக இருந்து அவர்களை உச்சத்துக்கு கொண்டு சென்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மே தினக் கூட்டம் நுகேகொட ஆனந்த சமரகோன் திறந்த வெளியரங்கில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு  தலைமை தாங்கிய நாமல் ராஜபக்வின் உரையும் அநுர அரசாங்கத்துக்கு எதிரானதாக இருந்தது மாத்திரமல்லாது, தனது தந்தை மகிந்த மீது அநுர அரசு சுமத்தியிருக்கும் குற்றச்சாட்டுகள் அனைத்திலிருந்தும் அவரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்போவதாக தனது குடும்ப அரசியல் பிரச்சினைகளையே மே தின மேடையில் பேசியிருந்தார்.

 இலங்கை தமிழரசுக் கட்சியின் மே தின நிகழ்வு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற நிலையில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் யாழ் மண்ணின் காணி ஆக்கிரமிப்பு பற்றி கருத்துத் தெரிவித்திருந்தார்.  ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை மீண்டும் மக்களுக்கு வழங்குவோம் என ஆட்சிக்கு வந்த அநுர அரசாங்கம் அதைச்செய்யாமல்  காணிகளை ஆக்கிரமித்து வருகின்றது. இந்நிலை தொடர்ந்தால் யாழ் மண்ணில் ஜனாதிபதி கால வைக்க முடியாத நிலையை ஏற்படுத்துவோம்’  என்று உரையாற்றியிருந்தார். ஆனால் அன்றைய தினமே அநுர அரசாங்கம் தெல்லிப்பழை மற்றும் பருத்தித்துறை பிரதேசத்தின் உயர் பாதுகாப்பு பகுதியில் அமைந்துள்ள  40 ஏக்கர் காணியை உத்தியோகபூர்வமாக விடுத்தித்திருந்தது. தமிழரசுக்கட்சி இப்படியெல்லாம் பேசும் எனத் தெரிந்து அரசாங்கம்  இப்படி  நடந்து கொள்கின்றதா அல்லது  காணி விடுவிப்பு அறிந்து வைத்திருந்து  சுமந்திரன் அவ்வாறு பேசினாரா என்பது கடவுளுக்கே வெளிச்சம்.

 எனினும் தேசிய மக்கள் சக்தியின் தலைநகர் மே தினக் கூட்டம் நாட்டு மக்களிடையே பேசுபொருளாகியுள்ளது. இத்தனை காலமும் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு அதிக எண்ணிக்கையான மக்களை ஒன்று திரட்டி மே தின கூட்டங்களை நடத்திய  மக்கள் விடுதலை முன்னணி,  முதன் முறையாக  அதிகாரத்தை கைப்பற்றிய பின்னர்  தேசிய மக்கள் சக்தியாக பரிணமித்து அதிக எண்ணிக்கையான மக்களை ஒன்று திரட்டி வெற்றிகரமான மே தினத்தை அனுஷ்டித்துள்ளது.  

 தற்போதைய அரசாங்கத்தை ‘எல் போர்ட்’ என வர்ணித்த ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சி மே தின கூட்டங்களை நடத்தவில்லை. அவர்களின்  அமைப்பாளர்கள்  உள்ளூராட்சி சபை வேட்பாளர்களுடன் பிரதேச ரீதியாக  மக்களிடம் சென்று தமது நிலைப்பாட்டை எடுத்துக் கூறினர். மேலும் தேசிய மக்கள் சக்தியின் நிர்வாகத்தை ஊடகங்களின் முன்பாக விமர்சித்தும் குறை கூறியும் வரும் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் தமது கட்சிகளின் ஊடாக மே தினத்தை நடத்தாத  அதே வேளை, வேறு கட்சிகளின்  மே தின நிகழ்வுகளிலும் பங்குகொள்ள வில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

 தேசிய மக்கள் சக்தியின் மே தின நிகழ்வில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிரணியினருக்கு மாத்திரமல்லாது நாட்டு மக்களுக்கும் ஒரு செய்தியைக் கூறியுள்ளார். தற்போது நாட்டில் அரசியல் இயக்கமாக இருப்பது நாம் மாத்திரமே என்று வலிறுத்திய அவர் நாட்டின் ஏனைய கட்சிகள் அனைத்தும் சிதறிப் போய்விட்டன என்றார். அதன் காரணமாகவே நாட்டின் எதிர்காலம் எங்கள் கைகளில் உள்ளது என்பதை அவர் நாட்டு மக்களுக்கு தைரியமாக அறிவித்திருந்தார். ஆட்சியிலிருக்கும் போது எதிரணி உறுப்பினர்களை தம்பக்கம் இழுத்து அவர்களுக்கான சலுகைகளை வழங்கி பிரித்தாளும் தந்திரங்களை முன்னெடுத்த  மகிந்த ராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின்  கட்சிகள் இன்று சிதறிப்போயுள்ளன. மே தின நிகழ்வுகளைக் கூட  நடத்த முடியாமல் அவை மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளன.

 தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்த பின்னர் நடத்திய முதலாவது மே தினத்தில்  மக்கள் இன்னும் தம்பக்கம் என்பதை வெளிப்படுத்திய அதே வேளை எதிரணியினரின் பலவீனத்தை அப்பட்டமாக மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தியுள்ளது என்று தான் கூற வேண்டும்.